Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                    04 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 26ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22

நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது.

ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.

ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன.

மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -   திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)  Mp3
=================================================================================
பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.

1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி
9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் இயேசு கூறியது: " கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 10: 13-16

யார்க்குக் கேடு?

நிகழ்வு

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: " நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் அவையே நமக்கு வினையாகிவிடும்." இதையொட்டி அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியாக அவர் சொல்லக்கூடியது:

" நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய அவருடைய அத்தை என்னை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் கூட்டிக்கொண்டு போனார். செருப்புத் தைக்கும் தொழிலாளி என்னிடம், " தம்பி உனக்கு என்ன மாதிரியான காலணி வேண்டும்...? சுற்றுக்கால் காலணிகளா...? (Round Toe Shoes) சதுரக்கால் காலணிகளா...? (Square Toe Shoes) என்று கேட்டார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். உடனே அவர் என்னிடம் " தம்பி உனக்கு என்ன மாதிரியான காலணி வேண்டும் என்பதை இரண்டு நாள்கள் கழித்துச் சொல்" என்றார். நானும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.

இரண்டு நாள்கள் கழித்து, செருப்புத் தைக்கும் தொழிலாளி என்னைக் கடைத் தெருவில் கண்டார். அப்பொழுதும் அவர் முன்பு கேட்ட அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டார். என்னால், எனக்கு என்ன மாதிரியான காலணிவேண்டும் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. அதனால் அன்றைக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஏமாற்றத்தோடு சென்றுவிட்டார்.

ஒருவாரம் கழித்து செருப்புத் தைக்கும் தொழிலாளியிடமிருந்து எனக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால், அந்தப் பெட்டியில் சதுரக் கால் காலணி ஒன்றும் சுற்றுக் கால் காலணி ஒன்றுமாக இரண்டு காலணிகள் இருந்தன. அப்பொழுதுதான் நான், ' எந்த மாதிரியான காலணியைச் செய்யவேண்டும் என்று செருப்புத் தைக்கும் தொழிலாளி இரண்டு முறை வாய்ப்புகள் கொடுத்த பின்னும் அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லையே' என்று என்னுடைய தவறை உணர்ந்து வருந்தினேன்.

நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தாதபோது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும் என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. நற்செய்தியில், கடவுள் கொடுத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தாத நகர்கள் எப்படியெல்லாம் அழிவினைச் சந்திக்கும் என்பது குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டும் பலன் தராதவர்கள்

நற்செய்தியில் இயேசு, கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகர்களை ' ஐயோ கேடு' என்று கடுமையாகச் சாடுகின்றார். இயேசு எதற்காக இந்த நகரில் இருந்தவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். இதில் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில், இந்த நகரில் இருந்தவர்கள் இயேசுவின் போதனையை அதிகமாகக் கேட்டு, அவர் செய்த நற்செயல்களை அதிகதிகமாகக் கண்டுணர்ந்தவர்கள்; அப்படியிருந்தும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமலும் மனம்மாறாமலும் இருந்தார்கள். யோவான் நற்செய்தியில் இடம்பெறுகின்ற, ' இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுப்படும் நூல்களை உலகமே கொள்ளாது' (யோவா 21: 25) என்ற இறைவார்த்தையின்படி பார்த்தால், இயேசு மேலே குறிப்பிடப்பட்ட நகர்களில் ஏராளமான நன்மைகளைச் செய்து, அதிகமாகப் போதித்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் கேட்டும் பார்த்தும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்ததால்தான், இயேசு அந்நகர்களில் இருந்தவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். மேலும் சோதோம் கொமோரா, தீர், சீதோன் போன்ற நகர்கட்கு ஏற்பட்ட அழிவை விட அதிகமான அழிவு ஏற்படும் என்று கூறுகின்றார் (தொநூ 19, எசே 26-28, எசா 23)

ஆண்டவருடைய சீடர்களைப் புறக்கணிப்பதன் வழியாக ஆண்டவரைப் புறக்கணிப்பவர்கள்

இயேசு அம்மூன்று நகர்களில் இருந்தவர்களைக் கடுமையாகச் சாடியதற்கும் அந்நகர்களில் இருந்தவர்கட்கு அதிகமான தண்டனையும் கிடைக்கும் என்று சொன்னதற்கும் காரணம், அவர்கள் இயேசுவால் அனுப்பப்பட்டவர்களைப் புறக்கணித்ததால் ஆகும். எப்படி தந்தைக் கடவுள் இயேசுவை அனுப்பினாரோ, அது போன்று இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்பினார் (யோவா 20:2). அப்படியிருக்கும்போது அந்த மூன்று நகர்களிலும் இருந்தவர்கள் இயேசுவின் சீடர்களைப் புறக்கணித்தும் அவர்கட்கு தங்கள் விருப்பம் போல் செய்ததும் இயேசு அவர்களை அவ்வாறு சாடுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தைகளையும் அவருடைய அடியார்களின் வார்த்தைகளையும் கேட்டு, அவற்றிற்கு ஏற்ப வாழ்ந்து, மிகுந்த கணிதருவது நல்லது.

சிந்தனை

' நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடர்களாய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கின்றது' (யோவா 15: 8) என்பார் இயேசு. ஆகையால் நாம், இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, மிகுந்த கனிந்து தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பாரூக்கு 1: 15-22

இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இஸ்ரயேல் மக்கள்


நிகழ்வு

கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர்க்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அவளுடைய தாயைப் போன்று மிகுந்த பக்தியுடையவளாக இருந்தாள். திடீரென்று ஒருநாள் அந்தச் சிறுமியின் தாய் இறந்துபோனாள். அப்பொழுது சிறுமிக்கு எட்டு வயது நடந்துகொண்டிருந்தது. இதற்குப் பின்பு அவள் தன் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலை வேளையில், சிறுமி தன் தந்தையிடம், " அப்பா! வாருங்கள் நாம் கோயிலுக்குப் போய்விட்டுவருவோம்... அங்கு நடைபெறும் மறைக்கல்வி வகுப்பில் இயேசுவைப் பற்றியும் புனிதர்களைப் பற்றியும் நல்ல நல்ல செய்திகளைச் சொல்லித் தருவார்கள்" என்றாள். " இல்லம்மா! அப்பா வாரம் முழுவதும் வேலைபார்த்து மிகவும் சோர்வாக இருக்கின்றேன்... இன்று ஒருநாள்தான் எனக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைத்திருக்கின்றது. அதனால் நீயே சிரமம் பார்க்காமல் கோயிலுக்குப் போய்க்கொள்" என்றார்.

தன்னுடைய தந்தை சொன்ன இவ்வார்த்தைகள் அந்தச் சிறுமிக்கு மிகவும் வருத்தத்தை தந்தன. " அம்மா இருந்தாள், துணைக்கு வருவாள். இப்பொழுது அவள் இல்லாததால்தான் உங்களைத் துணைக்கு அழைக்கின்றேன். நீங்களும் வரவில்லை என்றால், நான் யாரோடு கோயிலுக்குப் போவேன்...? சரி பரவாயில்லை... நானே தனியாகக் கோயிலுக்குப் போய்க்கொள்கின்றேன்" என்று சொல்லிவிட்டு, தனியாகக் கோயிலுக்குப் போனாள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. அப்பொழுதும் அவள், " அப்பா கோயிலுக்குப் போகலாமா...?" என்று கேட்டாள். அவரோ முன்பு சொன்ன, அதையே பதிலைச் சொன்னார். இதனால் அவள், " அப்பா! இனிமேல் நான் உங்களிடம் ' கோயிலுக்குப் போவோமா...?' என்று கேட்கவே மாட்டேன்... நானே போய்க்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கோயிலுக்குப் போனாள்.

ஆண்டுகள் வேகமாக உருண்டோடின. இப்பொழுது சிறுமி பெரிய பெண்ணாக வளர்ந்திருந்தாள்; ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். அவளுடைய தந்தையோ பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். என்றைக்கு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றாரோ, அன்றைக்கே அவர் தனிமையையும் வெறுமையையும் உணரத் தொடங்கினார். ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் அவர் தன்னுடைய மகளிடம், " அம்மா! நாமிருவரும் கோயிலுக்குப் போய்வரலாமா...? வீட்டுக்குள்ளே அடைந்துகிடப்பது எனக்கு ஒருமாதிரி இருக்கிறது" என்றார். உடனே அவருடைய மகள், " அப்பா! நான் எப்படிப்பட்ட வேலை பார்க்கின்றேன் என்று உங்கட்கு நன்றாகவே தெரியும்! வாரத்தில் ஆறு நாள்கள் வேலை பார்த்துவிட்டு, இன்னொருநாள்தான் ஓய்வெடுக்க நேரம் கிடைத்திருக்கின்றது. அதனால் நீங்களே கோயிலுக்குப் போய்க்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள்.

அப்பொழுது அவர்க்கு பழசெல்லாம் நினைவுக்கு வந்துபோயின. இவள் சிறுமியாக இருந்தபோது, இவளுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து இவளோடு கோயிலுக்குச் சென்றிருந்தால், இன்றைக்கு எனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காதே!' என்று மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த நிகழ்வில் வருகின்ற மகளின் சொல்கேட்டு நடக்காத தந்தையைப் போன்றுதான், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் சொல்கேட்டு நடக்காமல், மிகவும் துன்புற்றார்கள். அவர்கள் ஆண்டவரின் சொல்கேட்டு நடக்காமல் அடைந்த துன்பமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்க்கு நீதி உரியது

பாரூக்கு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர்க்கு எதிராகத் தவறுசெய்ததை எண்ணி வருந்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் வருந்துவதைக் குறித்து நாம் வாசிக்கின்றது, இரண்டு முதன்மையான செய்திகளை வாசித்து அறிகின்றோம். ஒன்று, ஆண்டவர்க்கு நீதி உரியது. இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஆண்டவருடைய வழிகள் நீதியானவை என்று சொல்லலாம். இதைத்தான் இணைச்சட்ட நூலில், " ஆண்டவர்தாம் வழிகள் அனைத்தும் நீதியானவை" என்று வாசிக்கின்றோம் (இச 32: 4). ஆண்டவரின் வழிகள் நீதியானவையாக இருக்கின்றபோது, இஸ்ரேயல் அவ்வழிகளில் நடந்தார்களா...? சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்கட்குத் தலைக்குனிவு உரியது

ஆண்டவர்க்கு நீதி உரியது; அவருடைய வழிகள் நீதியானவை என்றால், அந்த வழிகளில் இஸ்ரயேல் மக்கள் நடந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அவ்வழிகளில் நடக்காமலும் ஆண்டவர்க்குச் செவிசாய்க்காமலும் கீழ்ப்படிந்து நடக்காமலும் பாவம் செய்தார்கள். இதனால் அதற்கான தண்டனையையும் சாபத்தையும் அவர்கள் தங்கள்மேல் வருவித்துக் கொண்டார்கள். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; அவர் வழியில் நடக்கவேண்டியவர்கள் அவர் வழியில் நடக்காமல், பாவம் செய்தார்கள். இதனால் அவர்கள் அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்தார்கள்.

ஆகையால், நாம் இஸ்ரேயல் மக்களைப் போன்று கடவுளிடமிருந்து தண்டனையை அல்ல, ஆசியைப் பெறவேண்டுமெனில், அவர் குரல் கேட்டு நடக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது.

சிந்தனை

' நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகட்கு எதிரியும் உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்' (விப 23: 22) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் சொல்கேட்டு நடப்போம். அதன்வழியாக அவருடைய அருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!