Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      03 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 26ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4a, 5-6, 7b-12

அந்நாள்களில் மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர். திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.

அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்!ஆமென்!" என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.

ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்" என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை" என்று கூறினார்.

எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, "அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்" எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.

எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12


அக்காலத்தில் இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 10: 1-12

" இறையாட்சி நெருங்கிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்"

நிகழ்வு

இலண்டன் மாநகரில் இருந்த ஒரு பழமையான பங்கு அது. அந்தப் பங்கில் வயதான குருவானவர் ஒருவர் பங்குப் பணியாற்றி வந்தார். அவர்க்குக் கீழ் திருத்தொண்டர் ஒருவர் பணியாற்றி வந்தார்.

ஒருநாள் அந்த வயதான குருவானவர் திருப்பலிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது, அவரிடம் வந்த திருத்தொண்டர், " சுவாமி! உங்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும்... தற்போது பேசலாமா...?" என்றார். " தாராளாமாகப் பேசுங்கள்" என்றார் குருவானவர். " வேறொன்றும் இல்லை தந்தையே! கடந்த ஓராண்டு காலம் உங்களோடு சேர்ந்து நானும் பணியாற்றி வருகிறேன். எனக்குத் தெரிந்து ஒரே ஓர் இளைஞனைத் தவிர, வேறு யாரும் புதிதாக யாரும் மனம்மாறவில்லையே...? ஒருவேளை உங்களுடைய போதனை யாருடைய உள்ளத்தையும் தொடவில்லையா...?" என்றார் திருத்தொண்டார்.

குருவானவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுப் பேசத் தொடங்கினார். " என்னால் முடிந்த மட்டும் ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து, சிறப்பாகத்தான் பணிசெய்துகொண்டிருக்கின்றேன்... மக்களிடம் மனமாற்றம் நிகழாதது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆண்டவர்க்குத்தான் தெரியும்" என்றார். பின்னர் அவர் வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது என்று சொல்லி, அவரிடமிருந்து விடைபெற்றார்.

அன்றைக்கு வழிபாட்டை நடத்தியபோது குருவானவரிடம் அவ்வளவு உற்சாகமில்லை; மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். இதை அவருடைய போதனையால் ஈர்க்கப்பட்ட இளைஞன் பார்த்துக்கொண்டே இருந்தான். வழிபாடு முடிந்ததும், இளைஞன் அவரிடம் சென்று, " சுவாமி! உங்கட்கு என்னாவாயிற்று...? ஏன் இவ்வாறு சோர்வாகக் காணப்படுகின்றீர்கள்...?" என்று கேட்டான். குருவானவர் அவனிடம், திருத்தொண்டர் தன்னிடம் சொன்னதையெல்லாம் சொல்லிவிட்டு, " என்னால் பலரையும் ஆண்டவர்க்குள் கொண்டுவர (மனமாற்ற) முடியவில்லையே!" என்று மிகவும் வருத்தப்பட்டார் குருவானவர்

குருவானவர் இவ்வாறெல்லாம் பேசியது, அந்த இளைஞனுடைய கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவன் மெதுவாகப் பேசத் தொடங்கினான்: " சுவாமி! நான் வேண்டுமானால் உங்களைப் போன்று ஒரு குருவானவராக மாறட்டுமா...?" அந்த இளைஞன் சொன்ன வார்த்தைகள் குருவானவரின் நெஞ்சில் பாலை வார்த்தன. " தம்பி! நீங்கள் குருவானவராக மாறவேண்டாம்... ஒரு மறைப்பணியாளராக மாறுவாயா...?" என்று ஏக்கத்தோடு கேட்டார் குருவானவர். " சரி சுவாமி! நீங்கள் சொன்னதுபோன்றே நான் ஒரு மறைப்பணியாளராக ஆகுகிறேன்" என்றான்.

இதற்குப் பின்பு குருவானவர் அவனுக்கு ஆசி வழங்கி குருமடத்திற்கு அனுப்பி வைத்தார். அவன் குருமடத்தில் சேர்ந்து, நல்லமுறையில் படித்து வந்தான். அவன் குருமடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே குருவானவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து, அந்த இளைஞன் குருவாக மாறி, ஆப்ரிக்கக் கண்டத்திற்குக் சென்று ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கிறிஸ்துவுக்குக் கொண்டுவந்தான். மட்டுமல்லாமல், திருவிவிலியத்தை அவர்களுடைய சொந்த மொழியில் மொழிபெயர்த்து, கிறிஸ்துவை இன்னும் அறிந்துகொள்ள உதவிசெய்தான்.

இப்படி அந்த வயதான குருவானவரால் தொடப்பட்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்த இளைஞன்தான் மறைப்பணியாளரான ராபர்ட் மொப்பட் (Robert Moffat)

ஆண்டவர் இயேசுவைப் பற்றிய அல்லது இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றபோது இன்றைக்கு அல்ல, என்றைக்காவது ஒருநாள் அதற்கான பலன் கிடைக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் எழுபத்து இரண்டு சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். இப்பகுதி நமக்குச் சொல்லும் செய்தியென்ன என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்

தாம் போகவேண்டிய இடத்திற்கு தனக்கு முன்னம்

நற்செய்தியில் இயேசு எழுபத்து இரண்டு சீடர்களை தான் போகவேண்டிய இடங்கட்கு, தமக்கு முன்னம் அனுப்புகின்றார் இந்தச் சொற்றொடரில் வருகின்ற ' தாம் போகவேண்டிய' , ' தமக்கு முன்னம்' என்ற இரண்டு வார்த்தைகளும் நம்முடைய கவனத்திற்கு உரியவை. இயேசு தாம் போகவேண்டிய இடங்கட்கு, தனக்கு முன்பாகச் சீடர்களை அனுப்பினார் என்றால், அவர்கள் இயேசுவின் பணியை அவர் சார்பாகச் செய்யவேண்டும் என்ற உண்மையானது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் இயேசுவால் பணித்தளங்கட்கு அனுப்பப்பட்டவர்கள் காலத்தின் அருமை கருதி விரைவாகத் தங்களிடம் ஒப்படைக்கப்பட பணியினைச் செய்யவேண்டும். ஏனென்றால் அறுவடை மிகுதி; வேலையாட்களோ மிகவும் குறைவு. இதைவிட மிக முக்கியமான அம்சம், சீடர்கள் தங்கட்கு வரும் ஓநாய்கள் போன்ற சாவல்களைத் துணிவோடு எதிர்கொண்டு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும். இதற்காகவே இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார்.

ஆகையால், அன்று இயேசு தன் சீடர்களை அழைத்ததைப் போன்று, இன்று நம்மையும் அவருடைய நற்செய்தியை அறிவிக்க அழைக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அற்விக்க முன்வருவோம்.

சிந்தனை

' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்" (மத் 25: 23) என்பார் இயேசு. எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நற்செய்திப் பணி என்ற பொறுப்பில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நெகேமியா 8: 1-4a, 5-6, 7b-12

இறைவார்த்தை வாசிப்பும் நம்முடைய மகிழ்வும்

நிகழ்வு

காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்து வந்தவர் வனத்து அந்தோனியார் (251-356). ஒருசமயம் இவரைப் பார்ப்பதற்காக மெய்யியலார் ஒருவர் வந்தார். அவர் வனத்து அந்தோனியாரிடம், " இந்தக் காட்டுப் பகுதியில் வாசிப்பதற்குப் புத்தகங்களே கிடைக்காதே! அப்படியிருக்கையில் புத்தக வாசிப்பினால் கிடைக்கும் அலாதியான இன்பத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுமே!" என்றார்.

வனத்து அந்தோனியார் அவரிடம், " ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்! எனக்கு இங்கு மனிதர்கள் எழுதிய நூல்கள்தான் கிடைக்காதே ஒழிய, ஆண்டவர் எழுதிய திருநூலாகிய இயற்கை என் கண்முன்னால் விரிந்து கிடக்கின்றது. அதை நான் ஒவ்வொரு நாளும் வாசிக்கின்றேன்; வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அது குறித்துத் தியானித்து, ஆண்டவர் என்னோடு பேசுவதாக உணர்கின்றேன். அப்பொழுது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எதனாலும் தந்துவிட முடியாது என்று உறுதியாகக் கூறுகின்றேன்" என்றார். இதைக் கேட்டு அந்த மெய்யியலார் அப்படியே வியந்து போய் நின்றார்.

புனித வனத்து அந்தோனியர் அந்த மெய்யியலார்க்குச் சொன்னதுபோன்று, இறைவார்த்தையை வாசிப்பதிலும் அதனைத் தியானிப்பதிலும் ஏன், அதன்படி நடப்பதிலும் கிடைக்கின்ற மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை. இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தை வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் அதனால் கிடைக்கின்ற மகிழ்ச்சியையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருநூலைக் கொண்டுவந்து, வாசித்த எஸ்ரா

நெகேமியா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்று கூடுகின்றனர். பின்னர் அவர்கள் குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவிடம் மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு கேட்கின்றனர். அவரும் அவ்வாறே கொண்டு வந்து வாசிக்கின்றார்.

இதில் நாம் இரண்டு முக்கியமான அம்சங்களை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இஸ்ரயேல் மக்களிடம் இருந்த மோசேயின் திருநூல் அல்லது ஆண்டவரின் வார்த்தையைக் கேட்கவேண்டும் என்ற ஆர்வம். இன்றைக்குப் பலர்க்கு இறைவார்த்தை வாசிக்கவேண்டும் அல்லது வாசிக்கக் கேட்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. இறைவார்த்தையை வாசிக்கவேண்டும் ஒருவேளை வாசிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் மற்றவர் வாசிக்க கேட்கவாவது செய்யவேண்டும். இதிலுள்ள இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இறைவார்த்தையைக் கேட்க ஆர்வத்தோடு இருப்பவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தை வாசித்துக்காட்டி, அவர்களை ஆண்டவரின் வார்த்தையின் மேல் தாகம் கொள்ளச் செய்யவேண்டும். குரு எஸ்ரா இதனை மிகச் சிறப்பாகச் செய்கின்றார்.

திருநூலை வாசித்து விளக்கமளித்த லேவியர்கள்

குரு எஸ்ரா திருநூலை எடுத்து வாசித்த பின்பு, அவருகில் நின்றுகொண்டிருந்த ஏசுவா, பானி போன்ற லேவியர்கள் அதற்கு விளக்கம் அளிக்கத் தொடங்குகின்றார்கள். திருநூலை வாசித்துக் காட்டுவது மட்டும் போதாது, அதற்குச் சரியான, தெளிவான விளக்கத்தினை அளிக்கவேண்டும். இன்றைக்கு ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இறைவார்த்தையை தங்கட்கு ஏற்றாற்போல் விளக்கமளித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ' சாத்தான் வேதம் ஓதுக்கின்றது' என்ற கூற்றுக்கு வாழும் எடுத்துக்காட்டுகள் என்றால், அது மிகையில்லை.

மக்களை மகிழ்ந்திருக்கச் சொன்ன எஸ்ரா

இன்றைய இறைவார்த்தையின் நிறைவுப் பகுதியில், அதாவது குரு எஸ்ரா திருநூலை வாசிக்க, லேவியர்கள் அதற்கு விளக்கம் கொடுத்த பின்பு, மக்கள் அழத் தொடங்குகின்றார்கள். திருநூல் வாசிக்கக் கேட்டதும் மக்கள் தங்களுடைய இயலாமையை, குற்றத்தை நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் அழுகின்றார்கள். அப்பொழுது ஆளுநர் நெகேமியாவும் குரு எஸ்ராவும் விளக்கம் கொடுத்த லேவியர்களும் மக்களைப் பார்த்து, இது ஆண்டவரின் நாள். ஆதலால், நீங்கள் அழத் தேவையில்லை என்று கூறுகின்றார்கள். இறைவார்த்தை ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்குமே ஒழிய, வருத்தம் கொள்ள வைக்காது. குரு உட்பட ஏனையோர் மக்கட்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம், " நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவமை அளித்தன." (எரே 15: 16). ஆம் கடவுள் வார்த்தைகளைக் கேட்கின்றபோதும் அதன்படி நடக்கின்றபோதும் அவை நம்முடைய உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் உவகையும் தரும் என்பதுதான் உண்மை.

ஆதலால், நாம் இறைவார்த்தையை வாசித்து, அதன்படி வாழ முற்பட்டு, இறைவன் தருகின்ற ஆசியைப் பெற்றுக்கொள்ள முற்படுவோம்.

சிந்தனை

' ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன' (திபா 19: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மை மகிழ்விக்கின்ற ஆண்டவரின் நியமங்கள், அவருடைய வார்த்தையின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!