Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     02 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 26ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன். மன்னர் என்னைப் பார்த்து, " ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை" என்றார்.

நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, " மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?" என்றேன். அதற்கு மன்னர் என்னை நோக்கி, " உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, " நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்" என்று கூறினேன்.

அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, " உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?" என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.

மீண்டும் மன்னரைப் பார்த்து, " உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்" என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6ac) Mp3
=================================================================================
பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.

1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். 2 அங்கிருந்த அலரிச் செடிகள்மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். பல்லவி

3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். `சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். பல்லவி

4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! பல்லவி

6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
பிலி 3: 8-9

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62


அக்காலத்தில் இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, " நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

இயேசு அவரிடம், " நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, " என்னைப் பின்பற்றி வாரும்" என்றார்.

அவர், " முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, " இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.

வேறொருவரும், " ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரை நோக்கி, " கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 9: 57-62

இயேசுவின் சீடராக இருப்பதற்கான விலை என்ன?


நிகழ்வு

ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, கிறிஸ்தவர்கள்மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அப்படியிருந்தும் பாதாள அறை கோயில்களில் (Underground Church) வழிபாடு நடந்துகொண்டுதான் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது, குறிப்பிட்ட ஒரு பாதாள அறைக் கோயிலுக்கு மக்கள் ஒரே நேரத்தில் வராமல், சீரான இடைவெளியில் வந்த வண்ணமாக இருந்தார்கள். ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த இராணுவவீரர்கட்கு ஐயம் வராமல் இருக்கவே, அவர்கள் அவ்வாறு வந்தார்கள். பொழுது சாயும் வேளையில் இறைமக்களால் கோயில் முழுமையாக நிரம்பியது.

இதற்குப் பின்பு வழிபாடு தொடங்கியது. வழிபாட்டிற்கு வந்திருந்த இறைமக்கள் அனைவரும் பக்தியோடு கலந்துகொண்டார்கள். வழிபாடு நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, ஒருவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். அங்கு முகமூடி அணிந்திருந்த இரண்டுபேர் கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் வேகமாக உள்ளே வந்து, " யார்க்கெல்லாம் உயிர்மீது ஆசை இருக்கின்றதோ அவர்கள் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு இங்கிருந்து போகலாம்" என்றார்கள்.

உடனே ஒருசிலர் தங்களுடைய உயிருக்கு பயந்து, கிறிஸ்துவை மறுதலிக்க, துப்பாக்கி ஏந்திய அந்த இரண்டு முகமூடி அணிந்தவர்களும் அவர்களை வெளிவே விட்டார்கள். இன்னும் சிறிதுநேரம் கழித்து, கையில் துப்பாக்கி வைத்திருந்த அந்த இருவரும் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்கள். இன்னும் ஒருசிலர் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். " கடைசியாக ஒரு வாய்ப்புத் தருகின்றோம். யார்க்காவது உயிர்மீது ஆசையிருந்தால், அவர்கள் இப்பொழுதே கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு இங்கிருந்து வெளியேறலாம்" என்றார்கள் அந்த முகமூடி அணிந்த மனிதர்கள். அப்பொழுதும் ஒருசிலர் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இப்பொழுது அந்தப் பாதாள அறைக் கோயிலில் பாதிக்கும் குறைவான கிறிஸ்தவர்கள்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய உயிர் இன்னும் சிறிதுநேரத்தில் தங்களைவிட்டுப் பிரியப்போகிறது என சிறு அச்சம்கூட இல்லாமல் இருந்தார்கள். அப்பொழுது முகமூடி அணிந்திருந்த அந்த இரண்டு பேர்களும் தங்களுடைய முகமூடிகளை கழற்றினார்கள். அவர்கள் தாங்கள் அணிந்திருந்த முகமூடிகளைக் கழற்றிய பின்னர்தான் தெரிந்தது, அவர்கள் கோயிலுக்கு வழக்கமாக வருபவர்கள் என்று.

அப்பொழுது அவர்கள் இருவரும் அங்கிருந்த மக்களைப் பார்த்து உரத்த குரலில் பேசத் தொடங்கினார்கள். " யாரெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அதனால்தான் இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டோம்" என்றார்கள். அவர்கள் இருவரும் இவ்வாறு சொன்னதைக் கேட்டு வியந்து நின்றாகள்.

தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, கிறிஸ்துவை மறுதலிக்கமாட்டோம் என்று தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்த இவர்களல்லவா கிறிஸ்தவர்கள்! இன்றைய இறைவார்த்தை, இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் அவர்க்காக எதையும் இழக்கத் தயாராக வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சவால்களைத் தாங்கவேண்டும்

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற ஒருவர், இயேசு எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகச் சொல்கின்றார். மத்தேயு நற்செய்திப்படி இவர் ஒரு மறைநூல் அறிஞர் (மத் 8:19). அப்படிப்பட்டவர், ' இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றால் சொகுசாக இருக்கலாம்... பேரும் புகழோடும் இருக்கலாம்' என்ற எண்ணத்தோடு இயேசுவின் சீடராக விரும்புகின்றார். அவரிடம் இயேசு, " ....மானிடமகனுக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை" என்று சொன்னதும், இயேசுவைப் பின்தொடர்வதை நிறுத்தி விடுகின்றார். இதுபோன்ற மனிதர்கட்கு சீடத்துவ வாழ்வு என்றால், சொகுசான வாழ்வு என்ற எண்ணமானது இருந்துகொண்டிருக்கின்றது. இவர்கள், ' சீடத்துவ வாழ்வு, சவால்கள் நிறைந்த வாழ்வு' என்ற உண்மையை உணர்வது நல்லது

இயேசுவுக்கு முதன்மையான இடம் தரவேண்டும்

நற்செய்தியில் வருகின்ற இரண்டாவது மனிதரிடம் இயேசுவே முன்சென்று, " என்னைப் பின்தொடர்ந்து வா" என்கின்றார். இயேசு ஒருவரிடம் என்னைப் பின்தொடர்ந்து வா என்று சொல்வது எவ்வளவு பெரிய பேறு! அத்தகைய பேற்றினை இவரோ, " முதலில் நான் போய் என் தந்தையை அடக்க செய்துவிட்டு வர அனுமதியும்" என்று சொல்லி தட்டிக் கழித்துவிடுகின்றார். இயேசுவைப் பின்பற்றுகின்றவர் மற்ற எல்லாரையும்விட, எல்லாவற்றையும் விட இயேசுவுக்கு முதன்மையான இடம் தரவேண்டும் (லூக் 14: 26). அதை இயேசுவைப் பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் உணர்வது நல்லது.

திருப்பிப் பார்க்கக்கூடாது

நற்செய்தியில் வருகின்ற மூன்றாவது மனிதரிடம் இயேசு, " என்னைப் பின்தொடர்ந்து வா" என்று சொல்கின்றபோது, அவர், " முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெற்றுவர அனுமதியும்" என்கின்றார். இயேசுவின் சீடராக இருக்க விரும்பிய இவர், அவர்மீது கண்களைப் பதியவைத்து, முன்னோக்கிச் சென்றிருக்கவேண்டும். இவரோ இயேசுவின்மீது கண்களைப் பதிய வைக்காமல், வேறொன்றின் மீது கண்களைப் பதிய வைத்து, திரும்பிப் பார்க்கின்றார். அதனால் இயேசுவின் சீடராகாமல் போகின்றார். இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர் அவர்மீது கண்களைப் பதியவைத்து, முன்னோக்கிப் பயணப்படவேண்டும். அதுவே ஒரு சீடருக்கு அழகு.

சிந்தனை

இவ்வுலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை உண்டு. இயேசு சீடராக இருப்பதற்கும் ஒரு விலை கொடுத்தாகவேண்டும். அவ்விலை இயேசுவின் பொருட்டு நாம் சந்திக்கும் சவால்களும் இழப்புகளும் ஆகும். ஆகவே, இயேசுவின் பொருட்டு சவால்களையும் இழப்புகளையும் ஏற்றுக்கொள்ளத் துணிவோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான சீடராவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் வாசகம்

உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8

நெகேமியாவோடு இருந்த ஆண்டவரின் திருக்கை (அருள்கரம்)

நிகழ்வு

உரோமை மறையியல் பல்கலைக்கழகத்தில் பேராசியரராகப் பணியாற்றியவர் அருள்தந்தை கோங்கர் (Congar). பேராசிரியர் பணியை மிகச் சிறப்பான முறையில் செய்த இவர், மூப்பு காரணமாக அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

இவர் ஓய்வுபெற்ற அன்று மாலை, இவரைச் சந்திக்க இவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். அவர் அருள்தந்தை கோங்கரிடம், " அருள்தந்தை அவர்களே! உங்களுடைய பேராசிரியர் பணியை மிகச்சிறப்பான முறையில் செய்து, நிறைவு செய்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள். உங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் திட்டமென்ன...?" என்றார்.

அருள்தந்தை கோங்கர் ஒரு நிமிடம் யோசித்தார். " என்னுடைய எதிர்கால வாழ்க்கைத் திட்டமா...? என்னுடைய எதிர்கால வாழ்க்கைத் திட்டத்தை அமைப்பது என்னுடைய வேலையல்ல... அது இறைவனுடைய வேலை. இறைவன் எனக்கென்று என்ன திட்டம் வைத்திருக்கின்றாரோ, அத்திட்டத்தின்படி நான் செயல்படுவேன்" என்று உறுதியாகச் சொன்னார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்துபோன கோங்காரின் நண்பர், அவரை மனதார வாழ்த்திவிட்டுச் என்றார்.

பேராசிரியரும் அருள்தந்தையுமான கோங்கர் தன்னுடைய திட்டத்தின்படி நடக்காமல், இறைவனுடைய திட்டத்தின்படி நடக்க முயன்றது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அருள்தந்தை கோங்கரைப் போன்று, இறைவன் நம் ஒவ்வொருவர்க்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார். அந்தத் திட்டத்தின்படி நாம் நடக்க முயன்றால் பல நன்மைகள் பெருகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் திட்டத்தின் படி, அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்த நெகேமியாவைக் குறித்து வாசிக்கின்றோம். அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
.
தக்க காலத்திற்காகக் காத்திருந்த நெகேமியா

அர்த்தக்சஸ்தா என்ற மன்னரிடம் பணிபுரிந்து வந்தவர் நெகேமியா. இவர் ஆண்டவரின் திருநகராம் எருசலேம், பாபிலோனியர்கால் தகர்க்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வேதனையோடும் கலக்கத்தோடும் இருக்கின்றார். அப்பொழுது மன்னர் இவருடைய வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டபொழுது, இவர், " என்னுடைய மூதாதையரின் கல்லறைகள் இருக்கின்ற நகர் பாழ்பட்டும் அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டும் இருக்கின்றபோது என் முகம் வாடாமல் எப்படி இருக்கும்?" என்கின்றார்.

இங்கு நாம் ஒரு முக்கியமான செய்தியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், நெகேமியா எருசலேம் திருக்கோயிலையும் அதன் மதில்சுவர்களையும் கட்டி எழுப்பவேண்டும் என்று தீரா ஆவல் கொண்டிருந்தார். அந்த ஆவலை அல்லது விரும்பத்தை அவர் மன்னரிடம் உடனடியாக வெளிப்படுத்திவிடவில்லை; தக்க காலத்திற்காகக் காத்திருந்தார். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், நான்கு மாதங்கள் தன்னுடைய விருப்பத்தை மன்னரிடம் சொல்வதற்காகக் காத்திருந்தார். தக்க நேரம் வந்தபோதுதான் தன்னுடைய விருப்பத்தை மன்னரிடம் வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு அவர் எந்த நேரத்தில் என்ன பேசவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றார்.

தகுந்த விதத்தில் கேட்ட நெகேமியா

நெகேமியா நமக்கு இன்னொரு முக்கியமான செய்தியை எடுத்துரைக்கின்றார். அது என்னவெனில், ஒன்றை ஒருவரிடமிருந்து கேட்கின்றோம் அல்லது சொல்கின்றோம் என்றால், அதை எப்படிக் கேட்கவேண்டும், எப்படிச் சொல்லவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்ககவேண்டும்.

நெகேமியா, நான் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டப்போகிறேன், அதனால் என்னைப் போகவிடுங்கள் என்று மன்னரிடம் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் மன்னர் அவரைப் போகவிட்டிருக்கமாட்டார். ஆனால், நெகேமியா அப்படிக் கேட்காமல், தன்னுடைய மூதாதையர்களின் கல்லறைகள் இருக்கும் நகரைக் கட்டி எழுப்ப அனுமதி தாரும் என்று கேட்கின்றார். இதனால் மன்னரும் அவரைப் போகவிடுகின்றார்.

நிறைய நேரங்களில் நாம் ஒரு செய்தியை எப்படிச் சொல்லவேண்டும், ஒன்றை எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று தெரியாமல் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நெகேமியா, நாம் எப்படிக் கேட்கவேண்டும் என்றும் எப்படிப் பேசவேண்டும் என்றும் கற்றுத் தருகின்றார்.

ஆண்டவரின் அருளைப் பெற்றிருந்த நெகேமியா

நெகேமியா தன்னுடைய தனிப்பட்ட விரும்பத்தின்படி நடக்காமல், இறை விருப்பத்தின் படிதான் நடக்கின்றார் என்பதை அறியும் ஆண்டவர் அவரோடு இருக்கின்றார்; அவர் செய்த அனைத்துச் செயல்களிலும் தன்னுடைய திருக்கையால் வழிநடத்துகின்றார். இதனால் மன்னர் அவர் கேட்ட அனைத்தையும் தந்து, அவரை வழி அனுப்புகின்றார். நாமும் நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, இறைவனின் விருப்பத்தின் படி நடந்தால், ஆண்டவரின் திருக்கை அருள்கரம் நம்மோடு இருக்கும் என்பது உறுதி.

சிந்தனை

' உம்முடைய திருவுளம் நிறைவேற்ற இதோ வருகிறேன்' (எபி 10: 9) என்று சொல்லி இயேசு, ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றினார். நாமும் ஆண்டவரின் திருவுளம் நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!