Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      09  நவெம்பர்  
                                  இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.


இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12

அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார்.

இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும்.

ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 46: 1-2,3உ. 4-5. 7-8 (பல்லவி: 4)

பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3உ எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி

=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
நீங்கள் கடவுளுடைய கோவில்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9b-11, 16-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 குறி 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.

அப்போது அவருடைய சீடர்கள், "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார்.

அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?" என்று கேட்டார்கள்.

ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா (நவம்பர் 09)

நிகழ்வு

ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இந்தியத் திருநாட்டில் (?) நடைபெற்ற நிகழ்வு. சுக்யா என்ற சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவள். ஒருநாள் அவள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையானாள். அந்த நேரத்தில் அவளுடைய அண்டை வீட்டைச் சார்ந்தவர்கள், இந்தக் கொடிய நோய் நீங்குவதற்கு ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்தில் கொடுக்கப்படும் அர்ச்சனை மலரை எடுத்துவந்து இவளுடைய தலையில் வைக்கவேண்டும். அப்போதுதான் இவளுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்கள். அவர்களுடைய பேச்சு சரியெனப்படவே சுக்யாவின் தந்தை ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்திற்குப் புறப்பட்டார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. அது என்னவென்றால், அந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது, அப்படியே நுழைந்தால் அது தீட்டு என்று சொல்லப்பட்டது. சுக்யாயின் தந்தை எப்படியோ தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டார்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்த அவர் அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்தார். பின்னர் ஆலயத்தில் குரு கொடுத்துக்கொண்டிருந்த அர்ச்சனை மலரை வாங்குவதற்காகத் தன்னுடைய கையை நீட்டியபோது, பின்னாலிருந்து ஒரு கை அவரைத் தடுத்தது. அது யார் என்று அவர் திரும்பிப் பார்த்தபோது மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் சுக்யாவின் தந்தையிடம், "என்ன தைரியத்தில் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தாய்?. உன்னால் இந்த ஆலயமே தீட்டுப்பட்டுப் போய்விட்டது" என்று சொல்லி அவரை வெளியே போகச் சொன்னார். பின்னர் அவர் ஊரைக் கூட்டிஇ சுக்யாவின் தந்தைக்கு ஒருவார காலம் சிறைத்தண்டனையும் வாங்கித்தந்தார். சுக்யாவின் தந்தை ஒருவார காலம் சிறை தண்டனையை முடித்துக்கொண்டு வீட்டுத் திரும்பி வந்தபோது சுக்யா இறந்துபோய் இருந்தார். அப்போது அவர் ஆலயத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார்.

ஆலயம் - இறைவன் வாழும் இல்லம் - எல்லாருக்கும் சொந்தமானது. அதில் வேறுபாடு பார்ப்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்றாகும்.

இன்று நாம் நினைவுகூரும் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவானது ஆலயத்திற்கு உரிய சிறப்புப் பண்புகளை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அதனை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

வரலாற்றுப் பின்னணி

ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு தலைமை ஆலயம் (Cathedral)) உண்டு. ஆயர்தான் இதற்குத் தலைவராக இருப்பார். ஆனால் தலைமை ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை ஆலயமாக இருப்பதுதோ இலாத்தரன் பேராலயமாகும். இதற்குத் தலைவராக இருப்பவர் திருத்தந்தை அவர்கள் ஆவார். இவ்வாலமானது 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டி நோபிள் வழங்கியது. தொடக்க திருச்சபையில் ஆலயம் என எதுவும் கிடையாது. மக்கள் இல்லங்களில் கூடி ஜெபித்து வந்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடிக்கடி வேதகலாபனைகள் நடந்ததாலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென ஆலயம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இந்த நேரத்தில்தான் கான்ஸ்டாண்டி நோபிள் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரசாங்கத்தின் அரச மதமாக அறிவித்தான். அதன் நிமித்தமாக 313 ஆம் ஆண்டு அவன் தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றி, அதனை திருச்சபைக்குத் தந்தான். 324 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வஸ்டர் ஆலயத்தை அர்ச்சித்து அதனை உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

சிறுது காலத்திற்கு இந்த ஆலயம் திருமுழுக்கு யோவானின் பாதுகாவலுக்கு வைக்கப்பட்டது, பின்னர் நற்செய்தியாளர் தூய யோவானின் பாதுகாவலில்இ அவருடைய பெயரில் வைக்கப்பட்டது. அது இன்று வரை அவருடைய பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருத்தந்தை அங்குதான் இருந்தார். பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை அவிஞ்னோன் என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டு, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது இலாத்தரன் பேராலயமானது சிதிலமடைந்தது காணப்பட்டது. எனவே, திருத்தந்தை தங்குவதற்கு அது சரியான இடமில்லை என்று சொல்லி, திருத்தந்தை பதினோராம் கிரகோரி சாந்தா மரியா என்ற இடத்திற்குச் சென்றார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்தூஸ் என்பவரோ தன்னுடைய இடத்தை வத்திக்கானுக்கு மாற்றினார். எனவே, அன்றிலிருந்து இன்று வரை திருத்தந்தையர்கள் வத்திகானிலே தங்கி வருகிறார்கள். இலாத்தரன் பேராலயமோ தற்போது ஓர் அருங்காட்சியம் போன்று இருக்கின்றது.

இந்த பேராயலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. ஆண்டவர் இயேசு இறுதி இராவுணவு உண்ட மேசையும், திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும் இங்குதான் இருக்கின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


ஆலயம் எல்லா மக்களுக்கான இறைவேண்டலில் வீடு


"
ஆலயம் தொழுவது சாலமும் நன்று", "ஆலயம் இல்லாத ஊரில் குடியிருப்பது நல்லதன்று" போன்ற முதுமொழிகள் ஆலயம் நம்முடைய வாழ்வில் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவன் தங்கும் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கின்றோமா?, அதில் வழிபடும் நாம் தூய்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "மாசற்றவராய் நடப்போர், உளமார உண்மை பேசுபவர்; தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; அடுத்தவரைப் பழித்துரையார்; நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவோர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர் இவர்களே ஆண்டவரின் திருமலையில் குடியிருக்கத் தகுதிவுடைவர்" என்று. (திபா 15). நாம் இத்தகைய நெறிப்படி வாழ்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேல் சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி நடக்காதபோது இறைவனின் இல்லத்திற்குள் நுழைய தகுதி இல்லாமல் போய்விடுகின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும் ஆலயம் எல்லா மக்களுடைய வழிபாட்டிற்கும் உரியது (எசாயா 56:7). அதனை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியோ சொந்தம் கொண்டாடுவது கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது என்பதையும் நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும்.


தூய ஆவி வாழும் இல்லமாகிய மனிதர்களுக்கும் மதிப்புத் தரவேண்டும்


தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?, ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்." (3:16-17). ஆம், ஒவ்வொருவரும் தூய ஆவியார் வாழும் கோவில். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்து வாழவேண்டும். அப்போதுதான் இறைவன் வாழும் இல்லிடமாக நாம் மாறமுடியும். இல்லையென்றால் கடவுளில் சாபத்திற்குத் தான் நாம் உள்ளாகவேண்டி வரும். பல நேரங்களில், மனிதரால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்கும் நாம், இறைவனால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். எல்லாரிலும் எல்லாம் வல்ல இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவன் வாழும் இல்லத்திற்கு உரிய மரியாதை செலுத்துவோம், உயிருள்ள ஆலயங்களாகிய மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இலாத்தரன்  பேராலய நேர்ந்தளிப்பு விழா

"ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே, ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே"

இன்று அன்னையாம் திருச்சபை எல்லா ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாக இருக்கக்கூடிய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு பேராலயம் பொறுப்பில் இருக்கும். அந்த விதத்தில் பார்க்கும்போது உரோமை நகரின் ஆயராக இருக்கக்கூடிய திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேராலயம்தான் இந்த இலாத்தரன் பேராலயம்.

தொடக்கத் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் உரோமை அரசாங்கத்தால் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். எனவே கிறிஸ்தவர்கள் உரோமையர்களுக்குப் பயந்து இல்லங்களில் தங்களுடைய வழிபாடுகளைச் செய்துவந்தார்கள். அவர்களுக்கு என்று ஆலயங்கள் கிடையாது. என்றைக்கு உரோமையை ஆண்ட கான்ஸ்டாண்டிநோபுள் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தை தன்னுடைய தேசத்தின் மதமாக அறிவித்தானோ அன்றைக்கு ஆலயங்கள் பெருகத் தொடங்கியன. கான்ஸ்டாண்டிநோபுள் தான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதன் நிமித்தமாக தன்னுடைய அரண்மனையையே ஆலயமாகப் பயன்படுத்தத் தந்தான். அப்படி வந்ததுதான் இந்த இலாத்தரன் பேராலயம்.

இப்பேராலயம் 324 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நேர்ந்தளிக்கப்பட்து. தொடக்கத்தில் இப்பேராலயம் உலக மீட்பருக்கும், பின்னர் திருமுழுக்கு யோவானுக்கும், அதன்பின்னர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் திருந்தந்தையர்கள் அங்கேதான் தங்கியிருந்தார்கள். ஒருசில குழப்பங்களின் காரணமாக சில காலம் அவிஞ்னோன் என்ற இடத்தில் திருத்தந்தையர்கள் தங்க நேர்ந்தது. திருத்தந்தை பதினோராம் கிரஹோரியின் காலத்தில் அந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, உரோமை நகருக்கு அவர் வந்தபோது அங்கே இலாத்தரன் பேராலயம் சேதமடைந்திருப்பதைக் கண்டார். எனவே அவர் பேராலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினார். அதன்பிறகு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவர் இப்போது உள்ள வடிவத்தைக் கொண்டுவந்து நேர்ந்தளித்தார்.

இன்னும் ஒருசில காரணங்களால் இலாத்தரன் பேராலயம் மேலும் சிறப்புப் பெறுவதாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது உண்ணப் பயன்படுத்திய மேசை இங்கேதான் இருக்கின்றது. அதேபோன்று திருத்தூதரான தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் இங்கேதான் இருக்கின்றது. இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் "பொன் ஆலயம் - Golden Church" என்று அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பொதுவாக ஆலயம் என்று சொன்னால் (ஆ)ன்மாக்கள், ஆண்டவனில் (லயிக்க)க்கூடிய இடம் என்று சொல்வார்கள். இது உண்மை. ஆலயத்தில்தான் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்படுகின்றது. அங்கேதான் மனிதன் தன்னுடைய கவலையை மறந்து, அமைதியில் இளைப்பாறுகிறான். ஏனென்றால் ஆலயம் ஆண்டவரின் அருளும், இரக்கமும் பொங்கி வழியும் ஓர் இல்லிடமாக விளங்குகின்றது.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்" என்று படிக்கின்றோம். கோவிலிருந்து வரும் தண்ணீரை கடவுளின் அருளாக நாம் புரிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை "தந்தையின் இல்லம்" என்று அழைக்கின்றார். அதனால்தான் அவ்வாலயத்தில் வாணிபம் செய்தவர்களை எல்லாம் அவர் விரட்டி அடிக்கின்றார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலயத்தின் மதிப்பையும், பெருமையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் ஆலயம்தான் நம்முடைய வாழ்வில் ஆற்றலின் ஊற்று.

இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைகக்ப்படும் தூய தாமஸ் அக்வீனஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு. ஒருநாள் இரவு அவர் நப்லஸ் (Naples) என்று இடத்தில் இருந்த டொமினிக்கன் ஆலயத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது  அவருடைய உடலானது பூமியை விட்டு சற்று உயரத்தில் இருந்தது. அப்போது தற்செயலாக அங்கு வந்த ஆலயப் பணியாளர் ஒருவர் இதைக் கண்ணுற்று வியப்புள்ளாகி நின்றார். அவர் தொடர்ந்து என்ன நடக்கின்றது என்று கூர்ந்து கவனித்தார். அந்நேரத்தில் ஆண்டவர் இயேசு தாமஸ் அக்வீனசிடம் பேசத் தொடங்கினார், "

"அக்வீனாஸ் நீ திருச்சபைக்கு மிகப்பெரிய பங்களிப்பைத் தந்திருக்கிறாய் (Summa Theologiae). அதனால் உனக்கு நான் ஒரு பரிசினைத் தரப்போகிறேன். என்ன பரிசுவேண்டும் என்று கேள்,  நான் தருகிறேன்" என்றார். அதற்கு அவர், "ஆண்டவரே, எனக்கு உம்மைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார். அதன்பிறகு தாமஸ் அக்வினாஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதை நேரில் கண்ணுற்ற அந்த ஆலயப் பணியாளரே சாட்சி,.

கடவுளின் திருச்சன்னதியில் இருக்கும்போது நாம் அடையும் ஆறுதலும், மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் சொல்லமுடியாது என்பதற்கு மேல சொல்லப்பட்ட நிகழ்ச்சி சான்று. ஆகவே நாம் ஆண்டவரது அருளின் ஊற்றாக இருக்கும் ஆலயத்திற்கு தகுந்த மதிப்பளிக்க வேண்டும், அதனை சந்தைவெளி ஆக்கக்கூடாது என்பதுதான் இயேசு கூறவிரும்பும் செய்தியாக  இருக்கின்றது.

அடுத்ததாக தூய பவுல் கொரிந்தரியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவி வாழும் கோவில். எனவே சக மனிதருக்கு மதிப்பளிக்கின்ற ஒருவர் கடவுளுக்கு மதிப்பளிக்கிறார். அதேநேரத்தில் சக மனிதரை இழிவுபடுத்தும் ஒருவர் கடவுளையும் இழிவுபடுத்துகிறார் என்ற  உண்மையைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இறைவன் வாழும் ஆலயத்திற்கு, மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

தந்தியை கண்டுபிடித்தவர் (தந்தி கொடுப்பது இன்று வழக்கொழிந்து போய்விட்டது) சாமுவேல் மோர்ஸ் என்பவர்.

ஒருமுறை அவரிடத்தில் சாதாரண மனிதர் ஒருவர் அணுகிவந்து, "மிகப் பெரிய விஞ்ஞானியான உங்களுக்கு வாழ்க்கையில் துன்பம், கஷ்டம், கலக்கம் இவையெல்லாம் வருவதுண்டா?" என்று கேட்டார். அதற்கு அவர், "துன்பம் இல்லா வாழ்க்கை வாழ நான் என்ன கடவுளா?; எல்லாருடைய வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையிலும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் உண்டு" என்றார்.

உடனே வந்தவர் அவரிடம், "அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் என்னுடைய வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களில் - துன்பமான வேளையில் - கோவிலுக்குச் சென்று சிலமணி நேரம் உட்கார்ந்து ஜெபிப்பேன். அது எனக்கு ஆறுதலையும், வல்லமையையும் தரும்" என்றார்.

மிகப்பெரிய விஞ்ஞானியே கோவிலுக்குச் சென்று ஜெபித்தார் என்றால் சாதாரண மனிதர்களாகிய நாம் கோவிலின் முக்கியத்துவத்தை - ஜெபத்தின் முக்கியத்துவத்தை -உணர்ந்து வாழவேண்டும்.

இன்று திருச்சபையானது இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் (கி.பி 333 ஆம் ஆண்டுக்குப் பிறகு) கிறிஸ்தவ மதம் உரோமையில் அரசமதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு, அப்போது அரசராக இருந்த கான்ஸ்டன்டைன் திருமுழுக்கு பெற்றான். அவன் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் எழுந்தருளிய ஆலயம்தான் இலாத்தரன் பேராலயம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாலயம் உலகில் உள்ள ஆலயங்களுக்கும் தாய் ஆலயம் என்றும், திருத்தந்தையின் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. திருத்தந்தை இங்கே தான் தங்குகிறார். இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவையும் நடைபெற்றிருக்கிறது. பேதுரு மற்றும் யோவானின் தலையை வெள்ளிப்பாத்திரத்தில் இங்கேதான் வைத்திருக்கிறார்கள். அத்தோடு பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கேதான் இருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளைப் கொண்ட இப்பேராலயமானது மூன்றாம் செர்ஜியுஸ் என்ற திருத்தந்தையால் திருமுழுக்கு யோவானுக்கும், இரண்டாம் லூசியஸ் என்ற திருத்தந்தையால் நற்செய்தியாளர் யோவானுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. இது "மீட்பரின் பேராலயம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில் இன்றைய வாசங்கள் வழியாக இறைவன் நமக்குத்தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு நிறைவு செய்வோம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் "கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயும் இடத்தில் உயிர்கள் வாழும்; பலவகையான மரங்கள் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; கனிகள் குறையா" (எசே 47:9,12) என்று படிக்கின்றோம். ஆம், இறைவனின் ஆலயம் நமக்கு உயிர் வாழ்வதற்கான ஆற்றலையும், வல்லமையையும் தரும் பிறப்பிடமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகது. திருப்பாடல் 20:2 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய கடவுள் சீயோனிலிருந்து எருசலேம் திருக்கோவிலிருந்து - உனக்குத் துணை புரிவாராக" என்று. ஆக, இறைவனின் ஆலயம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அருளையும், ஆசிரையும் தரும் இல்லிடம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அடுத்ததாக, இறைவன் வாழும் திருக்கோவிலை நாம் தூய்மையாக வைத்திருக்கவேண்டியது நமது கடமையாகும். இதனை இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வாணிபம் செய்துகொண்டிருந்த மக்களை விரட்டி அடிக்கின்றார். "என் தந்தையின் இல்லத்தை கள்வர்கள் குகையாக மாற்றாதீர்கள்" என்று கடுஞ்சினம் கொள்கிறார். ஆலயம் எல்லா மக்களும் கூடி ஜெபிக்கக்கூடிய இடம். எனவே அதன் புனிதத் தன்மை பாதுக்காக்கப்படவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவருமே ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து, அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து வாழ்வோம்.

நிறைவாக கற்களால் கட்டப்பட்ட கோவில் மட்டுமல்ல, கடவுளால் கட்டப்பட்ட கோவிலாகிய மனிதர்களை நாம் மனிதமாண்போடு நடத்தவேண்டும் என்று இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் கடவுளின் கோவிலென்றும், தூய ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" என்கிறார் தூய பவுல் (1 கொரி 3:16). ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் உயிருள்ள ஆலயங்களாகிய சக மனிதர்களை மனிதர்களாக மதித்து, அவர்களை முழுமையாக அன்புசெய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் தன்னோடு வாழும் சக மனிதர்களை மதிக்காத, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கின்றோம். நாம் மனிதர்களை மனிதர்களாக மதிக்காததன் வெளிப்பாடுதான் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். ஒருவர் மற்றவருக்கு - அவர் இறைவனின் சாயலால் படைக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து - சேவை செய்து வாழவேண்டும்.

"மனிதனால் உணவை உண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது. பணத்தை சம்பாதிப்பது அதன்மூலம் அந்தஸ்தை சேர்ப்பதால் வாழ்விற்குப் பயனில்லை. வாழ்வு இவற்றைவிட அடுத்தவருக்கு சேவை புரிவதில் கிடைக்கும் மாபெரும் மகிழ்ச்சியில் அடங்கியிருக்கிறது" என்பார் எட்வர்ட் பாக் என்ற அறிஞர். ஆம், இது முற்றிலும் உண்மை. மற்றவருக்கு சேவை செய்துவாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மேற்கு வாங்க மாநிலத்தில் முசிராபாத் என்ற குக்கிராமம் உள்ளது. இங்கே உள்ள யாவருமே கல்வியறிவு அற்றவர்கள்; போதிய அடிப்படைவசதி இல்லாதவர்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயதே ஆனா பாபர்அலி என்ற மாணவன்தான் முதன்முதலில் இக்கிராமத்திலிருந்து பள்ளிக்கூடம் சென்று கல்வியறிவு பெற்றவன். தன்னுடைய வறுமையான சூழ்நிலையிலும், கல்விக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாத போதிலும் முயன்று கல்வியறிவு பெற்றான்.

இவன் செய்த மிகப்பெரிய காரியம் பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு தன் வயதை ஒத்த சிறுவர், சிறுமியருக்கு பள்ளியில் தான் கற்ற பாடத்தைச் சொல்லிக்கொடுத்தான். தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையிலே வந்த சிறுவர்கள் கூட்டம் இப்போது 800 மேல் வந்துகொண்டிருக்கிறது. அவனால் பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட குழந்தைகள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் பெற்றோர்களுக்கும் சொல்லிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாபர் அலி என்ற அந்த சிறுவனின் அளப்பெரிய செயலைப் பார்த்த பிபிசி என்ற சேனல் அவனுக்கு "இளையோருக்கான சிறந்த தலைமை ஆசிரியர்" என்ற விருதைக் கொடுத்திருக்கிறது. சிறுவன், தான் பெற்ற கல்வியை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதை பிறருக்கும் பயன்படுமாறு செய்தான்; நமக்கெல்லாம எடுத்துக் காட்டாக விளங்குகின்றான்.

நாம் ஒவ்வொருவருமே பிறரில் இறைவன் குடிக்கொண்டிருக்கிறார் என்ற மனநிலையில் வாழ்ந்தால் என்றும், எங்கும் ஆனந்தம் தான்.

ஆதலால் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறையருளின் பிறப்பிடமான கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்தி வாழ்வோம். அத்தோடு உயிருள்ள ஆலயங்களை மனித மாண்போடு நடத்துவோம். அவர்களுக்கு உதவி புரிவோம். இறையருள் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை -4
=================================================================================
இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா (நவம்பர் 09)

கோவில்
உலக மீட்பர் ஆலயம் எனப்பெயரிடப்பட்டு, திருமுழுக்கு யோவான் மற்றும் திருத்தூதர் யோவான் என்ற இரு யோவான்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.

இதுதான் கத்தோலிக்க திருஅவையின் தாய் ஆலயம். முதன்மை ஆலயம். உலகின் எல்லா ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம். திருத்தந்தை விசுவாச பிரகடனம் செய்யும் சிறப்பு இருக்கை இங்குதான் இருக்கிறது.

பண்டைக்கால உரோமையில் சுற்றுச்சுவர் இருந்து, அதில் 12 நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன. நான்கு முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான யோவான் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். இந்நுழைவாயில் வழியாக வரும் அனைவரும் இந்த ஆலயத்தைப் பார்க்காமல் உரோமிற்குள் செல்லவே முடியாத என்பது போல இதன் அமைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டு இடைவெளிகளில் இதில் பல பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும், காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த் துளியாக, வானிலிருந்து விழுந்து குட்டி நிலாவாக இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

கோவில் கட்டுவது என்பது மனிதர்களின் தொடக்க காலம் முதல் இருக்கிறது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனம்கூட கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தது எனவும், அதற்கான ஆதராங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைப்பதாகவும் ஜெர்மனியின் பான் நகர மியூசியத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லா இடத்திலும் கடவுளைப் பார்க்கலாம் என்பதெல்லாம் இன்று நாம் சொல்லிக் கொள்ளும் பொய்ச்சாக்கு. அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் போலிச்சாக்கு.
ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறதுதானே.
நாம் சாப்பிட்ட இடத்திலே என்றாவது பாத்திரம் கழுவுகிறோமா?
அல்லது
எல்லாம் என் வீடுதான் என்று சமையலறையில் நாம் குளிக்கிறோமா?
இல்லை.

கோவில் என்பது முதலில் ஒரு இடம். இடத்தை நாம் தூய்மை என்ற வார்த்தையைக் கொண்டே பிரிக்கிறோம். மாடுகள், நாய்கள், கோழிகள் வாழ்வதற்கான இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏன்? அவற்றின் தூய்மை நம் தூய்மையை விட குறைந்தது. (மாடு தூய்மை குறைவு என்று சொல்வது மோடி அரசில் தேசத்துரோகம் என்றும் கண்டிக்கப்படலாம்!) கடவுள் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவரின் தூய்மையைவிட நம் தூய்மை குறைந்தது. (அப்படியென்றால் கடவுளின் இல்லத்தில் வாழ்வோர் பெற்றிருக்க வேண்டிய தூய்மை அவர்கள்மேல் சுமத்தப்படும் பெரிய பொறுப்பு).
கோவில் - எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று:
அ. எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.
ஆ. கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும்.
இ. நம் வேர்களை மறக்கக் கூடாது - ஒவ்வொரு கோவிலும் நமக்கு முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற பாதச் சுவடு. அந்தச் சுவட்டில் ஏறி நின்றுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு கோடும் கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்குமான இணைப்புக் கோடு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
லாத்தரன் பேரலாயம்


நம் தாய்த்திருஅவையோடு இணைந்து லாத்தரன் பேரலாய நேர்ந்தளிப்புத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். உரோம் நகரில் அமைந்திருக்கும் இப்பேராலயம் நான்கு பாப்பிறை பேராலயங்களில் ஒன்றாகும். திருத்தந்தை அவர்கள் நம்பிக்கைக் கோட்பாடுகளை அறிவிக்கும் நாற்காலி இப்பேராலயத்தில்தான் உள்ளது. மேலும், இப்பேராலயமே உலகின் அனைத்து கிறிஸ்த ஆலயங்களின் தாய் என அழைக்கப்படுகின்றது.

வாசகங்கள் அனைத்தும் ஆலயங்களை மையமாகக் கொண்டுள்ளன.

முதல் வாசகத்தில் (எசே 47:1-2,8-9,12), எசேக்கியேல் இறைவாக்கினர், எருசலேம் கோவிலிலிருந்து புறப்படும் ஊற்றைக் காட்சியில் காண்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 3:9-11,16-17), புனித பவுல் கொரிந்த நகரத் திருச்சபையினரை, 'நீங்களே கடவுளின் ஆலயம்' என நினைவூட்டுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (யோவா 2:13-22), இயேசு எருசலேம் ஆலயத்தில் வீற்றிருந்த வியாபாரிகளை விரட்டி அடித்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்.

கடவுள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே. அப்புறம் எதுக்கு ஆலயம்? என்று சிலர் கேட்கலாம்.

ஆலயத்தால் - தூய்மை தீட்டு போன்ற வேறுபாட்டால் - சில இடங்களில் காணும் பிரிவினைகள் மற்றும் அடிமைத்தனத்தைப் பார்த்து, ஆலயமே வேண்டாம் எனக் கோபம் கொள்ளலாம் சிலர்.

புனித பூமி, உரோமை, லூர்து நகர் தொடங்கி நம்ம ஊர் திருத்தலங்கள் வரை அங்கு நிகழும் வியாபாராங்கள் சிலரை முகம் சுளிக்க வைக்கலாம்.

ஆலயம் - ஒரே நேரத்தில் பல உணர்வுகளை எழுப்ப வல்ல வார்த்தை இது.

ருடால்ஃப் ஆட்டோ என்ற ஜெர்மானிய சமய அறிஞர், நாம் கடவுள் அனுபவம் பெறும் இடம் ஆலயம் என்றும், ஆலயத்தில் விண்ணகமும், மண்ணகமும் கைகோர்க்கிறது என்று சொல்கிறார். மேலும், கடவுள் அனுபவத்தை 'நூமினஸ் அனுபவம்' என்கிறார். இந்த அனுபவத்தை அவர் இரண்டு வார்த்தைகளில் சொல்கின்றார்: 'மிஸ்தேரியும் த்ரமெந்தும்' ('பயமுறுத்தும் மறைபொருள்'), 'மிஸ்தேரியும் ஃபாஸினோசும்' ('ஈர்க்கும் மறைபொருள்').

புனித பவுலடியாரின் கூற்றுப்படியும், இயேசுவின் கூற்றுப்படியும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஆலயம் என்றால், நம்மிடமும் இந்த இரண்டு பண்புகள் உள்ளன: 'பயமுறுத்தும் மறைபொருள், 'ஈர்க்கும் மறைபொருள்.'


முதல் வாசகம் இவற்றைக் கடந்து இன்னும் இரண்டு பண்புகளை முன்வைக்கிறது: 'அற்புதம்' மற்றும் 'ஆசீர்வாதம்.' எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்படும் தண்ணீர் ஒரே நேரத்தில் 'அற்புதமாகவும்,' 'ஆசீர்வாதமாகவும்' இருக்கிறது. 'அற்புதம்' - ஏனெனில் இது பாலைநிலமான, மேடுபள்ளங்கள் நிறைந்த இடத்திலிருந்து புறப்படுகிறது. மேலும், கணுக்கால், முழங்கால், இடுப்பு என அதன் ஆழம் கூடிக்கொண்டே வருகிறது. 'ஆசீர்வாதம்' - ஏனெனில் இது பாயும் இடமெல்லாம் பசுமையும், செழுமையும், வளமையும் பிறக்கிறது.

பல நேரங்களில் நம்மைப் பற்றிய நம் புரிதல் ஆட்டோ குறிப்பிட்ட 'பயம்,' 'ஈர்ப்பு' என இரண்டு நிலைகளில் முடிந்துவிடுகின்றன. ஆனால், இவற்றைத் தாண்டி நாம் 'அற்புதம்,' 'ஆசீர்வாதம்' என்ற நிலைகளுக்குள் சென்றால் இன்னும் நலம்.

இரண்டாவதாக, இறைவன் நம் வாழ்வில் தரும் ஆசீர்வாதம் படிப்படியாக வளர்வதை நாம் உணர்கிறோம். கணுக்கால் அளவு தொடங்கிய அவரின் ஆசீர், முழங்கால், இடுப்பு என வளர்ந்து, ஒரு கட்டத்தில் நாம் நீந்திச் செல்லும் அளவுக்கு அபரிவிதமாகிறது. அந்த நீச்சலில் நாம் அப்படியே மிதக்க அவர் அப்படியே நம்மை நகர்த்திச் செல்கின்றார்.

இந்த மறையுண்மை நாம் அறிந்தால் நாம் என்றும் அடுத்தவரின் நலம் மட்டுமே நாடுவோம்.


- Rev. Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 6
=================================================================================
"மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்"


Christoper Notes என்னும் நூலில் இடம்பெறக் கூடிய ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் கடவுளைச் சந்தித்த சாத்தான் அவரைக் குறித்த தன்னுடைய ஆவலாதியை (முறையீடு) எடுத்துச் சொன்னது:

"நீர் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்கின்றீர். மீண்டும் மீண்டும் தவறு செய்யக்கூடியவர்கள் மனம் வருந்தி உம்மிடம் திரும்பி வரும்போது, நீர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர். ஆனால், ஒரே ஒரு பாவம் மட்டும் செய்த என்னை மன்னிக்கவில்லை.  அது ஏன்?"

கடவுள் மிகவும் பொறுமையாக சாத்தானிடம், "ஏனென்றால் நீ மனந்திருந்தவும் இல்லை, என்னிடம் பாவமன்னிப்பும் கேட்கவில்லை" என்றார்.

ஆம், மனந்திரும்பி தன்னிடம் திரும்பி வருகின்றவர்களை ஆண்டவர் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனம்மாறியவர்களால் விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். நாம் அதனைப் பற்றி இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு யூத சமுதாயத்தால் பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட வரிதண்டுவோர், விலைமகளிர், ஏழைகள், அனாதைகள் இவர்களோடு நல்லவிதமாய் பழகினார்; அவர்களோடு உறவாடினார்; கடவுளின் பேரன்பை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். இது பிடிக்காத பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் விமர்சித்தார்கள், "இவர் பாவிகளோடு விருந்துண்கிறார்" என்று. அப்போதுதான் இயேசு அவர்களுக்கு காணமல் போன ஆடு, திராக்மா மற்றும் ஊதாரி மைந்தனின் உவமையை எடுத்துச் சொல்கின்றார். இன்றைய நற்செய்தி வாசத்தில் முதல் இரண்டு உவமைகள் இடம் பெறுகின்றன. அந்த இரண்டு உவமைகளில் நேர்மையாளர்களைக் குறித்தல்ல, மனமாறிய பாவியைக் குறித்து விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது, இறைவன் பாவியின் மனமாற்றத்தை எந்தளவுக்கு விரும்புகின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.

பரிசேயர்கள் மண்ணின் மைதர்கள் (People of the Land) என்று கருதப்பட்ட மக்களை மிகவும் கீழ்த்தரமாகப் பார்த்தார்கள். அவர்ளோடு பேசுவதோ, பழகுவதோ மிகவும் தீட்டான காரியம் என்று நினைத்தார்கள், அது மட்டுமல்லால் அவர்களுடைய சாட்சியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட மக்கள்தான் மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவின் போதனையைக் கேட்க ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோ இயேசுவின் பேச்சில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றுதான் இருந்தார்கள். எனவே குற்றம் கண்டுபிடிப்பதையே தங்களுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் பார்த்துத்தான் இயேசு உவமைகளைச் சொல்கின்றார்.

லூக்கா நற்செய்தி பதினைந்தாம் அதிகாரம் "நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி " என்று அழைக்கபப்டுகின்றது. காரணம் இந்த அதிகாரத்தில் வரக்கூடிய மூன்று உவமைகள் கடவுளின் பேரன்பும் மன்னிப்பும் எந்தளவுக்கு உயர்ந்தவை என்பதை எடுத்துச் சொல்கின்றது.

இயேசு கூறும் காணாமல் போன ஆடு உவமையில் வரக்கூடிய ஆயனும், காணாமல் திராக்மா உவமையில் வரும் பெண்மணியும் தங்களிடம் இருந்த மற்றவற்றை விட்டுவிட்டு காணாமல் போனதைத் தேடி அழைக்கின்றார்கள். அவர்கள் அவற்றைக் கண்டுபிடித்ததும் மட்டிலா பெருமகிழ்ச்சி கொள்கின்றார்கள். இந்த உவமைகளைச் சொல்லிவிட்டு ஆண்டவர் இயேசு, "மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து உண்டாகும் விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" என்கின்றார். ஆம் ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அவருக்கு மட்டும் மகிழ்ச்சி கிடையாது, அவரைச் சார்ந்த அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஏன் கடவுளுக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது. அப்படியென்றால் பாவிகளின் மனந்திரும்புதலை ஆண்டவர் எந்தளவுக்கு எதிர்பார்க்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த உலகம் பாவிகளை, குற்றவாளிகளை இழிவானவர்களாகப் பார்க்கின்றது.  ஆனால் ஆண்டவராகிய கடவுள் அப்படி இல்லை. அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகிய இருக்கின்றார். எனவே, "நான் நேர்மையாளன், ஒரு பாவமும் செய்யாதவன், மற்றவர்கள் குற்றவாளிகள் என்று பிறரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம். ஏனென்றால், நம்முடைய கடவுள் பாவிகளை அன்பு செய்யும் கடவுள்.

எனவே, நாம் நம்முடைய உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம், பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுவதையும் விடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



மறையுரைச் சிந்தனை (நவம்பர் 09)

இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா

கோவில்
நாளை உரோமையின் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருநாளைக் கொண்டாடுகிறோம்.
உலக மீட்பர் ஆலயம் எனப்பெயரிடப்பட்டு, திருமுழுக்கு யோவான் மற்றும் திருத்தூதர் யோவான் என்ற இரு யோவான்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.
இதுதான் கத்தோலிக்க திருஅவையின் தாய் ஆலயம். முதன்மை ஆலயம். உலகின் எல்லா ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம். திருத்தந்தை விசுவாச பிரகடனம் செய்யும் சிறப்பு இருக்கை இங்குதான் இருக்கிறது.
பண்டைக்கால உரோமையில் சுற்றுச்சுவர் இருந்து, அதில் 12 நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன. நான்கு முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான யோவான் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். இந்நுழைவாயில் வழியாக வரும் அனைவரும் இந்த ஆலயத்தைப் பார்க்காமல் உரோமிற்குள் செல்லவே முடியாத என்பது போல இதன் அமைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டு இடைவெளிகளில் இதில் பல பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும், காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த் துளியாக, வானிலிருந்து விழுந்து குட்டி நிலாவாக இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

கோவில் கட்டுவது என்பது மனிதர்களின் தொடக்க காலம் முதல் இருக்கிறது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனம்கூட கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தது எனவும், அதற்கான ஆதராங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைப்பதாகவும் ஜெர்மனியின் பான் நகர மியூசியத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லா இடத்திலும் கடவுளைப் பார்க்கலாம் என்பதெல்லாம் இன்று நாம் சொல்லிக் கொள்ளும் பொய்ச்சாக்கு. அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் போலிச்சாக்கு.
ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறதுதானே.
நாம் சாப்பிட்ட இடத்திலே என்றாவது பாத்திரம் கழுவுகிறோமா?
அல்லது
எல்லாம் என் வீடுதான் என்று சமையலறையில் நாம் குளிக்கிறோமா?
இல்லை.

கோவில் என்பது முதலில் ஒரு இடம். இடத்தை நாம் தூய்மை என்ற வார்த்தையைக் கொண்டே பிரிக்கிறோம். மாடுகள், நாய்கள், கோழிகள் வாழ்வதற்கான இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏன்? அவற்றின் தூய்மை நம் தூய்மையை விட குறைந்தது. (மாடு தூய்மை குறைவு என்று சொல்வது மோடி அரசில் தேசத்துரோகம் என்றும் கண்டிக்கப்படலாம்!) கடவுள் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவரின் தூய்மையைவிட நம் தூய்மை குறைந்தது. (அப்படியென்றால் கடவுளின் இல்லத்தில் வாழ்வோர் பெற்றிருக்க வேண்டிய தூய்மை அவர்கள்மேல் சுமத்தப்படும் பெரிய பொறுப்பு).
கோவில் - எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று:
அ. எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.
ஆ. கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும்.
இ. நம் வேர்களை மறக்கக் கூடாது - ஒவ்வொரு கோவிலும் நமக்கு முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற பாதச் சுவடு. அந்தச் சுவட்டில் ஏறி நின்றுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு கோடும் கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்குமான இணைப்புக் கோடு.


=================================================================================
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

முன்னுரை
=================================================================================
பிரியமானவர்களே!

தாயாம் திருஅவையின் தாய் பேராலயம் என்று அழைக்கப்படுகின்ற, உரோமையில் உள்ள லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு நாளை, நினைவு கூர்ந்து கொண்டாட அழைக்கப்படுகின்றோம்.

இதன் மூலம் நம்முடைய ஒன்றிப்பை உறுதி செய்திட திருஅவை அழைக்கின்றது. ஒன்றினைந்த மக்களாக மன்றாடுவோம்.

இறைவனது பிரசன்னம் வெளிப்படும் இடமாக ஆலயம் அமைகின்றது என்றும், உயிர்வாழும் ஆலயமாக நம்மிலும், அந்த இறைவெளிப்பாட்டை உணர்ந்து, வாழும் வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும், பிறருக்கு அந்த இறைவனை வெளிக்காட்டும், சாட்சிகளாக இருந்திடவும் வரம் வேண்டுவோம். இறைவன் தம் ஆசீரால் நம்மை அர்ச்சித்து பலியின் பயனாக நம்மை புதுப்பிப்பாராக.

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 47:1-2,8-9,12)

பாபிலோனியரால் நாடு கடத்தப்பட்ட யூத மக்களின் வாழ்க்கையும் உவர்ப்பு நிலையிலிருந்து இனிய நிலைக்கு மாறும் என்னும் நம்பிக்கைச் செய்தியை இறைவாக்கினர் எசேக்கியேல் அறிவிக்கிறார். துன்பங்கள் பல அனுபவித்த மக்கள் இனிமேல் ஆறுதல் பெறுவர்; அன்பும் இரக்கமும் நிறைந்த கடவுள் நம்மை ஒருநாளும் கைவிடார் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்போம்.

 மன்றாட்டு

பிரசன்னமாகும் இறைவனே! திருஅவையில் உம்முடைய பிரசன்னததை கண்டு, பணியாளர்கள், அதனை எடுத்துச் சொல்லும் அருட்பணியாற்ற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பிரசன்னமாகும் இறைவனே! எல்லாவற்றிலும், எல்லாரிலும் உம்முடைய பிரசன்னத்தை எம் பாரத மக்கள் காணவும், அதனால் சக மனிதரை மதித்து, ஏற்று வாழவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பிரசன்னமாகும் இறைவனே! கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போல கோவிலுக்குள்ளும், வெளியேயும் உள்ள மனிதர்களில் உம் பிரசன்னத்தை கண்டு வாழ்த்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பிரசன்னமாகும் இறைவனே! ஓன்றுபட்ட திருஅவையை மனதிலே கொண்டு, திருஅவை முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் ஓத்துழைக்குமு; மனநிலை பெற்றவர்களாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பிரசன்னமாகும் இறைவனே! கோவிலில் இருந்து புறப்படும் அருளை நிறைவாக பெற்று மகிழவும், அதனை பிறரோடு பகிர்ந்து வாழவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!