Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      30  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 34ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்
=================================================================================


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாக இருப்போம்.

ஒரு அரசினர் பள்ளிக்கூடத்திற்கு வருகைதந்த கல்வி அலுவலர் ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த ஏழாம் வகுப்பிற்குச் சென்று, அங்குள்ள மாணவர்களைப் பார்வையிட்டார். அவர் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் உடனுக்குடன் பதில் சொல்லி, அவரை ஆச்சரியப்பட வைத்தார்கள்.

அவர்களுடைய இத்தகைய ஆற்றலைக் கண்டு மகிழ்ந்துபோன கல்வி அலுவலர் மாணவர்களிடம், "உங்களுக்கு நான் ஒரு போட்டியை வைக்கப்போகிறேன். அந்தப் போட்டி இதுதான். யார் ஒருவர் தான் அமர்ந்து படிக்கும் மேசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கிறாரோ, அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசினைக் கொடுப்பேன். ஆனால், நான் எப்போது, எந்த நேரத்தில் வந்து உங்களுக்குப் பார்வையிடுவேன் என்று சொல்ல மாட்டேன். நான் வரக்கூடிய நேரத்தில் யார், தான் அமர்ந்து படிக்கும் மேசையை சுத்தமாக வைத்திருக்கிறாரோ அவருக்குத்தான் அந்தப் பரிசு" என்றார். மாணவர்களும் அதற்குச் சரி என்று சொல்லிவிட்டு போட்டிக்குத் தயாரானார்கள்.

கல்வி அலுவலர் வகுப்பறையை விட்டு போனபின்பு, அந்த வகுப்பிலே, தான் இருக்கும் மேசையை எப்போதும் குப்பையாக, அசிங்க வைத்திருக்கும் மாணவன் ஒருவன் எழுந்து, "இந்தப் போட்டியில் நான்தான் பரிசு பெறப்போகின்றேன்." என்று சொன்னதும், மாணவர்கள் அனைவரும் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய அந்த மாணவன், "நான் சிரிப்பிற்காக இதைச் சொல்லவில்லை, நான் சொல்வது உண்மையே. இன்றிலிருந்து ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளன்றும் நான் இருக்கும் மேசையை சுத்தம் செய்வேன்" என்றான். அதற்கு அவனுக்கு அருகில் இருந்த மாணவன், "ஒருவேளை கல்வி அலுவலர் வாரத்தின் முதல் நாள் வராமல், ஏதோ ஒருநாள் வந்து, உன்னுடைய மேசை அழுக்காக இருப்பதைக் கண்டால், நீ என்ன செய்வாய்?" என்று கேட்டான். "நான் என்னுடைய மேசையை ஒவ்வொருநாளின் காலையிலும் சுத்தம் செய்வேன்" என்றான். அதைக் கேட்ட இன்னொரு மாணவன், "ஒருவேளை கல்வி அலுவலர் காலை நேரத்தில் வராமல் மதிய வேளையிலோ, அல்லது மாலை நேரத்திலோ வந்தால் அப்போது நீ என்ன செய்வாய்?" என்று கேட்டான். எந்த நேரத்தில் வருகின்றார் என்று தெரியாமல் இருந்தால், நான் எல்லா வேளையிலும், நான் இருக்கும் மேசையை சுத்தமாக வைத்திருப்பேன்" என்றான்.

அன்றிலிருந்தே அவன் தான் இருக்கும் மேசையை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தான். கல்வி அலுவலர் திடிரென்று ஒருநாள் அந்த வகுப்பறைக்கு வந்து பார்வையிட்டபோது அந்த மாணவன்தான் பரிசினைப் பெற்றான் என்று நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எப்போதும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் இதுதான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வின் சாராம்சமாகும். இன்றைய நற்செய்தியும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக எப்போதும் நாம் தயாராக இருக்கவேண்டும் என்றொரு செய்தியைத்தான் நமக்கு எடுத்துரைக்கின்றது

"எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதைக் நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கிவந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்..." என்ற இயேசுவின் வார்த்தைகள் மிகுந்த அச்சத்தைத் தருவதாக இருந்தாலும், ஆண்டவரின் நாளுக்கு முன்பாக எப்படி போர்களும் கலகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டு, தீமைகள் முற்றிலுமாக அழிக்கப்படுமோ அதுபோன்று ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையின் போதும் நடக்கும். இயேசுவின் வருகைக்கு முன்னதாக போர்களும், கலகங்களும் குழப்பங்களும் வெடிக்கலாம். ஆனால், ஆண்டவரின் வருகையின்போது அவையெல்லாம் சரியாக்கப்படும் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.

இந்த இடத்தில் ஆண்டவர் இயேசுவின் வருகையை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். ஆண்டவரின் வருகைகாக நாம் செய்யவேண்டியதெல்லாம் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான்.

பல நேரங்களில் ஆண்டவரின் வருகை எப்போதோ தானே வரப்போகின்றது, அதற்கு ஏன் நாம் இப்போதே அவரசப்படவேண்டும் என்று நாம் செய்யவேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்கின்றோம்; தள்ளிப் போடுகின்றோம். இப்படி எல்லாவற்றையும் தள்ளி தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தால், அதனால் பாதிக்கப்படப் போவது எண்ணமோ நாம்தான். ஆகையால், தெசலோனிக்கேயத் திருச்சபை மக்களைப் போன்று ஆண்டவரின் வருகை என்றைக்கோ ஒருநாள் வரப்போகின்றது என்று வீண் வேலையில் ஈடுபடாமல், இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்து எப்போதும் ஆயத்தமாகவும், தயாராகவும் இருப்போம். அப்போது தயார் நிலையில் இருக்கும் நம்மைக் காணும் இயேசு நம்மைக் குறித்து மகிழ்ச்சி அடைவார் என்பது உறுதி.

எனவே, ஆண்டவரின் வருகைக்காக நம்மையே தயார்படுத்திக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா

இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவருடைய வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்த இவரை ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக அழைகிறார். இயேசு அழைத்தவுடனே அந்திரேயா எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்.

விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அதில் உள்ளடக்கம்), "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை சுட்டிக்காட்டுகிறார். உடனே அந்திரேயா இயேசுவிடம், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்க, அவர் "வந்து பாரும்" என்று சொல்கிறார். ஆதலால் அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெறுகிறார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்கிறார்; அவரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார் ( யோவா 1:35-42)

விவிலியம் முழுமைக்கும் அந்திரேயா மக்களை ஆண்டவர் இயேசுவிடம் இயேசுவிடம் அழைத்து வருபவராக/ அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். பேதுருவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியது போன்று பலரையும் இயேசுவிடம் அறிமுகப்படுத்துகிறார். ஒருமுறை ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கு உணவிட நினைத்தபோது அந்திரேயா ஒரு சிறுவனைச் சுட்டிக்காட்டி, "இங்கே சிறுவன் ஒருவனிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன" என்று சொல்லி அவனை இயேசுவிடம் அறிமுகப்படுத்துகிறார்; மிகப்பெரிய அற்புதம் நிகழக் காரணமாக இருக்கின்றார் (யோவான் 6:9)

அதேபோன்று எருசலேம் நகரைச் சேர்ந்த கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண நினைத்தபோது அவர்கள் பிலிப்பிடம் வருகிறார்கள். பிலிப்போ அவர்களை அந்திரேயாவிடம் அழைத்துவருகிறார். அந்திரேயா அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகின்றார். இவ்வாறு அந்திரேயா மக்களை இயேசுவிடம் அழைத்து வந்து, அறிமுகப்படுத்துவதில் சிறந்தவராக விளங்கியதால் அவர் "Introducer அறிமுகம் செய்பவர்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு அந்திரேயா தன்னுடைய பெயருக்கு ஏற்ப மிகுந்த ஆற்றலுடன் கப்பதோசியா, கலாத்தியா, பித்தினியா, சின்ன ஆசியா, மாசிதோனியா போன்ற பல்வேறு இடங்களில் நற்செய்திப் பணிசெய்ததாக திருச்சபை மரபு சொல்கின்றது.

ஒருமுறை பாத்ராஸ் என்னும் இடத்தில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அந்நகரின் ஆளுநராக இருந்த ஏஜெடிஸ் என்பவரின் மனைவி மாக்ஸ்மில்லா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருப்பதை அறிந்தார். எனவே அந்திரேயா அவருடைய இடத்திற்குச் சென்று, அவரைக் குணப்படுத்தினார். உடனே அவர் கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஆளுநன் சினம்கொண்டு அந்திரேயாவிடம், "நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைப்பேன்" என்று பயமுறுத்தினான். ஆனால் புனிதரோ நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. இதனால் அவன் அவரைச் சிறையில் அடைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு அங்கு வந்த உரோமைப் படைவீரர்கள் பெருக்கல் வடிவில் இருந்த சிலுவையில் அவரை அறைந்து துன்புறுத்தினார்கள். அப்போதும் அவர் இரண்டு நாட்களுக்கு அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இறந்தார். அந்திரேயா மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த நாள் கி.பி.70 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30 ஆம் நாள்.

இது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய உடலை கான்ஸ்டான்டி நோபிளுக்கு கொண்டுவந்தார்கள். அன்று முதல் ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறாக அந்திரேயா தான் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்து, அவர்களைக் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து, மிகச் சிறந்த ஒரு மறைபணியாளராக விளங்கினார். தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதாகும். அந்திரேயா கடல் கடந்து, நாடு கடந்து எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார். அவரைப் போன்று நாமும் நற்செய்தியை அறிவிக்க முன்வர வேண்டும்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்பு பெறுவோர்" என்று. இன்றைய விழா நாயகரான தூய அந்திரேயா ஆண்டவர் இயேசுவை மெசியா என நம்பினார். அதனை எல்லா மக்களுக்கு அறிவித்தார். நாமும் அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவை நம்பி, அதனை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.

நமது நற்செய்தி அறிவிப்புப் பணி எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வாழ்ந்து வந்த யூதன் ஒருவன் தன்னுடைய மகனை இஸ்ரேயலுக்கு அனுப்பி யூத மதத்தையும், அதன் மரபுகளையும் கற்றுவருமாறு பணித்தான். அவனும் இஸ்ரயேலுக்குச் சென்று யூத மதத்தைப் பற்றி கற்றுக்கொள்ள புறப்பட்டான். இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. அதன்பின்னர் அவன் தன்னுடைய சொந்த நாடான அமெரிக்காவிற்கு திரும்பி வந்தான். யூதனாக அல்ல, ஒரு கிறிஸ்தவனாக.

இதைக் கண்ட அந்த இளைஞனுடைய தந்தைக்கு சரியான கோபம் வந்தது. "நான் உன்னை யூத மத்தைப் பற்றி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தால், நீயோ கிறிஸ்தவனாக மாறி வந்திருக்கிறாயே!. என்ன கோலம் என்று திட்டித்தீர்த்தார். தன்னுடைய ஆற்றாமையை தன்னுடைய யூத நண்பரிடம் கொட்டித்தீர்த்தார். அதற்கு அவருடைய நண்பர், "நீ உன்னுடைய மகனை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால், என்னுடைய மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்பாக யூத மதத்தைக் கற்றுக்கொள்ள அங்கே அனுப்பி வைத்தேன். அவனும் உன்னுடைய மகனைப் போன்று இன்றைக்கு ஒரு கிறிஸ்தவனாக மாறி நிற்கிறான்" என்று தன்னுடைய வேதனையை எடுத்துச் சொன்னார்.

இப்படி இரண்டு பேருமே ஏமாந்துபோனதை நினைத்து வருத்தப்பட்டார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு யூத ராபியிடம் தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னார்கள. அதற்கு அவர், "அட முட்டாள்களே, நீங்கள் உங்களுடைய மகன்களை இஸ்ரயேலுக்கு அனுப்புவதற்கு முன்பாக என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால் நாமும் உங்களைப் போன்று என்னுடைய மகனை இஸ்ரயேலுக்கு யூத மதம் பற்றி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தேன். ஆனால் அவனோ உங்களுடைய மகன்களைப் போன்று இப்போது ஒரு கிறிஸ்தவனாக மாறி நிற்கிறான்" என்று தன்னுடைய வேதனையைக் கொட்டித் தீர்த்தார். இதனால் அவர்கள் மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போது அவர்களில் ஒருவர், "நாம் இதை யாவே கடவுளிடம் சொல்லி முறையிடுவோம். அவர் நம்முடைய கூக்குரலுக்கு பதில்தருவார்" என்று சொல்ல, மற்ற இருவரும் அதனை ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த எல்லாவற்றையும் யாவே கடவுளிடம் எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவர் மிகவும் வருத்ததோடு, உங்களுக்கு ஒரு குறை என்றால் என்னிடம் வருவீர்கள். எனக்கு ஒரு குறைஎன்றால் நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன். உங்களைப் போன்று நானும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகன் இயேசுவை இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவனும் ஒரு கிறிஸ்தவனாக மாறிப்போனான்" என்றார். இதைக் கேட்டு அவர்கள் எதுவும் பேசாது நின்றார்கள்.

நற்செய்தி அறிவிப்புக்கு உள்ள ஆற்றல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

ஆண்டவர் இயேசு உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்" என்று சொன்னார். நாமும் தூய அந்திரேயாவைப் போன்று இயேசுவை பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர் அந்திரேயா விழா

இன்று திருச்சபையானது திருத்தூதரும், மறைசாட்சியுமான தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடுகின்றது.

இவர் திருத்தூதர் பேதுருவுக்கு அண்ணன். "வீர மனிதன்" என்று தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழ்ந்தவர். தொடக்கத்தில் இவர் திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்தார். அப்போது இயேசு கடந்துசெல்கிறபோது திருமுழுக்கு யோவான் அவரைப் பார்த்து, "இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று சுட்டிக்காட்டுகிறார். உடனே திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த அந்திரேயாவும், இன்னொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர்; அவரோடு தங்குகின்றனர்; இயேசுவே மெசியா எனக் கண்டுணர்ந்து கொள்கின்றனர். அந்திரேயாவோ தனது சகோதரன் பேதுருவிடம் சென்று "நாங்கள் மெசியாவைக் கண்டோம்" என்று சொல்லி, அவருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துகிறார். (யோவான் 1:35 41).

அதே போன்று கலிலேயாக் கடலோரமாய் நின்று பேதுருவும், இவரும் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாய் வரும் இயேசு, "என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று சொன்னபோது அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்து செல்கிறார்கள். இவ்வாறு பேதுரு உட்பட அந்திரேயா ஆண்டவர் அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கிறார்கள்

இயேசுவின் பணிவாழ்வின்போதும் அந்திரேயா ஒருசில இடங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் நற்செய்தியிலே வாசிக்கின்றோம். யோவான் நற்செய்தி 6:1-15 ல் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில் போதித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் பசியால் வாடுவதை உணர்ந்து, அவர்களுக்கு உணவிட நினைக்கிறார். அப்போது அந்திரேயாவோ, "இங்கே சிறுவனிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீண்டுகளும் இருக்கின்றன" என்று சொல்லி இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்.

ஒருமுறை கிரேக்கர்கள் இயேசுவைக் காணவேண்டும் என்று பிலிப்பிடம் வருகிறபோது, பிலிப்பு அவர்களை அந்திரேயாவிடம் அழைத்து வர, அவர் அவர்களை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக நற்செய்தி முழுவதும் மக்களை இயேசுவிடம் அழைத்துச்செல்லும் பணியை சிறப்பாக செய்கின்றார். பேதுருவையும் இவர் இயேசுவிடம் அழைத்துச் சென்றார் என்று மேலே வாசித்ததை இங்கே நினைவுபடுத்திகொள்வோம்.

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு (ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில் ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுவார். மேலும் இவரைப் பற்றிய செய்தி அந்திரேயாவின் பணி என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.

அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும், இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும் அந்த நூலிலே படிக்கின்றோம். சித்தியாவில் நற்செய்தி அறிவித்த அந்திரேயா பத்தாரஸ் என்ற இடத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். அங்கே ஆளுநராக இருந்தவன் ஏஜெரஸ். அவருடைய மனைவி மாக்சிமில்லா தீராத நோயினால் படுத்தபடுக்கையாய் கிடைந்தபோது அந்திரேயா அவரைக் குணப்படுத்துகிறார். இதனால் மனமாற்றம் அடைந்த அவர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். இது பிடிக்காத அவருடைய கணவன் அந்திரேயாவை சிலுவையில் அறைந்து கொலை செய்யத் தீர்மானித்தான்.

அந்திரேயாவை X வடிவில் இருந்த சிலுவையில் கொல்லத் திட்டமிட்டான் அந்நகரின் ஆளுநன். இதை அறிந்த அந்திரேயா "ஓ மாட்சிமை மிகுந்த சிலுவையே, உனக்காகத் தான் நான் இத்தனை நாள்கள் ஏங்கிக்கொண்டிருந்தேன்" என்று சொல்லி சிலுவைச் சாவை மிகத் துணிவோடு ஏற்றுக்கொண்டு கி.பி.70 ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி உயிர்துறந்தார்.
அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது வாழ்வு நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவர் இயேசுவை மெசியா என அறிந்துகொள்கிறார். அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதனை தன்னுடைய சகோதரனான பேதுருவுக்கும் எடுத்துரைத்து, அவரை இயேசுவிடம் அழைத்துக் கொண்டுவருகிறார்.

நாமும்கூட இயேசுவை மெசியா என ஏற்று, அதனை பிற மக்களுக்கும் அறிமுகம் செய்ய, அவர்களை நம்பிக்கையில் வளர்க்க அழைக்கப்படுகின்றோம். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் "இயேசுவே ஆண்டவர் என்று வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பி ஏற்றுக் கொள்வோர் மீட்கப்படுவார்" என்கிறார் தூய பவுலடியார். ஆக, நாம் ஒவ்வொருவரும் இயேசுவை மெசியா என ஏற்று, அவர் காட்டும் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.

அடுத்ததாக அந்திரேயாவை இயேசு அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான செல்வதைப் பற்றிக் கொள்கிறார். நாம் உலக செல்வத்திற்குப் பின்னாலா? அல்லது உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பின்னாலா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டவர் ஹென்றி நூவன். ஒருமுறை சிலர் அவருடைய எழுத்தாற்றலையும், திறமையையும் பார்த்துவிட்டு அவரை ஹார்வேட் பல்கலைக்கழகத்திலே பணியாற்றக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லி கனடாவில் உள்ள டொராண்டோ என்ற இடத்தில் இருக்கும் ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அருட்பணியாளராக பணியாற்றினார்.

தனக்கு பேரும், புகழும் வந்தாலும் ஆண்டவருக்காக, அவருடைய மக்களுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று சொன்ன ஹென்றி நூவனின் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது. அந்திரேயாவும் இயேசுவுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று எல்லாவற்றையும் துறந்துவாழ்ந்தார்.

ஆதலால் இவருடைய விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இயேசுவை மெசியா என ஏற்று, அவரை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆவோம். இறையருள் பெறுவோம்.

படிக்கட்டு



நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாள்.

இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அண்ணனா? தம்பியா? என்று தெரியவில்லை.

"நம்பிக்கை கொள்ளாமல் எப்படி மன்றாடுவார்கள்?

கேள்வியுறாமல் எப்படி நம்புவார்கள்?

அறிவிக்கப்படாமல் எப்படி கேள்வியுறுவார்கள்?

அனுப்பப்படாமல் எப்படி அறிவிப்பார்கள்?"

(காண் உரோ 10:9-18)

நாளை முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்தும் இலக்கிய நடையின் பெயர் "படிக்கட்டு" (Staircase Rhetoric). அதாவது, முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தை அடுத்த வாக்கியத்தின் இறுதி வாக்கியமாக இருக்கும். இது ஒரு வகையான பேச்சு நடை. இந்த நடையில் ஒருவர் பேசும்போது, பேசுபவரும் தான் பேச வேண்டியதை மறந்துவிடாமல் பேசுவார். கேட்பவரும் எளிதில் நினைவில் கொள்வார்.

நாங்கள் திருத்தொண்டராகும்போது நடைபெற்ற சடங்கிலும், ஆயர் எங்கள் கையில் விவிலியத்தைக் கொடுத்து இதே போல ஒரு படிக்கட்டு நடை வாக்கியத்தைச் சொல்வார்:

"வாசிப்பதை நம்பு. நம்புவதை போதி. போதிப்பதை வாழ்ந்துகாட்டு"

இதில் நடை "கண்ணாடியின் பிம்பம்போல" திரும்பி நிற்கிறது. ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருக்கிறது.

இவ்வகை நடையில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு வார்த்தை புரண்டாலும் அர்த்தம் கிடைக்காமல் போய்விடும்.

திருத்தூது பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சீடர்களின் பணி மட்டுமல்ல.

ஒவ்வொருவரும் படிக்கட்டு போல வரும் இந்தப் பணியில் நமக்கு உரிய அளவில் திருத்தூது பணி செய்வது அவசியம்.

"தீமைகளை விலக்கி, நன்மைகளைக் கற்றக்கொள்வது" என தனிநபர் வாழ்வு சார்ந்ததும் திருத்தூதுப்பணியே.

=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருத்தூதரான தூய அந்திரேயா (நவம்பர் 30)

நிகழ்வு

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அந்திரேயா கிரீஸில் உள்ள பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து வந்தார். அவர் அறிவித்த நற்செய்தியின் பலனாக நிறையப் பேர் மனமாறி கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றினார்கள்.

பத்ராஸ் என்ற நகரில் இருந்த ஆளுநன் ஏஜியுஸ் என்பவனுடைய மனைவி மாக்ஸிமில்லா என்பவரும் அந்திரேயா அறிவித்த நற்செய்தியினால் மனமாறி கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். இதைக் கேள்விப்பட்ட ஏஜியுஸ் சினம்கொண்டு அந்திரேயாவிடம், "நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விட்டுவிட்டு, என்னுடைய கடவுளுக்குத் தூபம் காட்டு, இல்லையென்றால் நீ சாவது உறுதி" என்றான். அவரோ எதற்கும் பயப்படாதவராய், "நான் எத்தனை இடர்கள் வந்தாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விடமாட்டேன். அதற்காக நான் என்னுடைய உயிரையும் இழக்கத் தயார்" என்றார். இதனால் ஆளுநன் அவரை X வடிவ சிலுவையில் அறைந்து கொன்றான். அந்திரேயாவின் உடலிலிருந்து மூன்று நாட்கள் உயிர் பிரியாமலே இருந்தது. அந்த மூன்று நாட்களும் அவர் அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக்கொண்டே இருந்தார். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவருடைய உடலிலிருந்து உயிர் பிரிந்தது. இறந்துபோன அவருடைய உடலை மாக்ஸிமில்லா எடுத்து கல்லறையில் அடக்கம் செய்தார்.

வாழ்க்கை வரலாறு

அந்திரேயா கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை யோனா, தாய் யோவன்னா என்பவர் ஆவார். இவருடைய சகோதரர்தான் பேதுரு. இவர் கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.

தொடக்கத்தில் இவர் திருமுழுக்கு யோவானின் சீடராகத் தான் இருந்தார். ஒருநாள் இயேசு வழியில் நடந்துபோய்க்கொண்டிருப்பதைப் பார்த்த திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (யோவான், அந்திரேயா), "இவரே கடவுளின் ஆட்டுகுட்டி" என்று சுட்டிக்காட்ட, அந்திரேயாவும் யோவானும் அவரைப் பின்தொடர்ந்து சென்று, "ரபி, நீர் எங்கே இருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அவரோ, "வந்து பாருங்கள்" என்று சொன்னதும், அந்திரேயாவும் யோவானும் அவரோடு தங்கி இறையனுபவம் பெற்றார்கள். பின்னர் அந்திரேயா தான் பெற்ற இறையனுபவத்தை தன்னுடைய சகோதரனாகிய பேதுருவிடம் சென்று சொல்லி, அவரை ஆண்டவர் இயேசுவிடம் கூட்டிவருகின்றார். இவ்வாறு அவர் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய பேதுருவை ஆண்டவர் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கும் பேறு பெறுகின்றார் (யோவா 1:35-42).

ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைக் கேட்க வந்த பெருந்திரளான மக்களுக்கு உணவு கொடுக்க நினைத்தபோது அந்திரேயாதான், "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கின்றான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்று சொல்லி அங்கிருந்த சிறுவனை அந்திரேயா இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார். அது மட்டுமல்லாமல் இயேசு மக்களின் பசியைப் போக்க, அந்திரேயா ஒரு தூண்டுகோலாக இருக்கின்றார் (யோவா 6:8-9). இன்னொரு சமயம் கிரேக்க மொழிபேசும் ஒருசிலர் இயேசுவைக் காண வந்தபோது, அந்திரேயாதான் அவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கின்றார். இவ்வாறு அந்திரேயா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களை இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கும் பணியினை சிறப்பாகச் செய்கின்றார்.

இயேசுவால் அழைக்கப்பட்ட திருதூதர்களில் அந்திரேயாதான் முதலானவர் என்றாலும், அவர் அதனை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அவர் தாழ்ச்சியோடுதான் ஆண்டவருக்குப் பணிசெய்து வந்தார். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அந்திரேயா சீத்திய மக்களிடம் சென்று நற்செய்தி அறிவித்ததாக வரலாற்று ஆசிரியரான யூசிபுஸ் என்பவர் கூறுவார். இன்னும் ஒருசிலர் மாசிதோனியா, கிரீஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகச் சொல்வர். கி.பி.60 ஆம் ஆண்டு நீரோ மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரீஸில் உள்ள பத்ராஸ் என்றும் இடத்தில் நற்செய்தி அறிவிக்கும்போதுதான் இவர் கொல்லப்பட்டார்.

இவ்வாறு அந்திரேயா தன்னுடைய வாழ்வாலும் போதனையாலும் மக்களை ஆண்டவர் இயேசுவிடம் கூட்டிவந்து சிறந்த ஒரு நற்செய்திப் பணியாளராய் வாழ்ந்தார். அந்திரேயாவின் கல்லறையில் இன்றைக்கும் நடைபெறும் புதுமைகளில் ஒன்று. அவருடைய கல்லறையில் ஏழை எளியவருக்குக் கொடுக்கப்படும் உணவின் அளவு பெருகுகின்றபோது, நல்ல மழை பெய்து, விளைச்சல் பெருகும். அது குறைகின்றபோது மழை குறைந்து, விளைச்சலும் குறையும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


நற்செய்திக்காக உயிரைத் தரத் துணிதல்


சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு பிரேசிலில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நற்செய்திப் பணியாற்றி வந்த குருவானவர் ஒருவர், ஒருநாள் மக்கள் அனைவரும் கூடி வந்த ஒரு நாளில், அவர்களிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார். அவருடைய கேள்வி இதுதான். "எதற்காக இயேசு மீனவர்களை தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்துகொண்டார்?". அதற்கு அவர்களில் ஒருவர் சொன்ன பதில் அவரை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. "நிலத்தில் ஒருவர் பயணப்பட்ட வழியில், அதே வழித்தடத்தில் இன்னொருவர் பயணம் செய்யமுடியும். பயணமும் மிக எளிதாக இருக்கும். ஆனால் கடலில் அப்படிக் கிடையாது. ஒருவர் பயணம் செய்த வழியில் இன்னொருவர் பயணம் செய்யமுடியாது; வழித்தடமும் அமைக்க முடியாது. ஆகையால், அவர்களாகவேதான் தங்களுக்கான வழித்தடங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்; பயணமும் அவ்வளவு எளிதாக இராது. இப்படி மீனவர்கள் இயல்பிலே ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால்தான், நற்செய்திப் பணிசெய்ய இத்தகையோர்தான் தேவை என்ற நோக்கத்தில் ஆண்டவர் இயேசு மீனவர்களைத் தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்துகொண்டார்" என்றார் அவர்.

ஆம் மீனவர்கள் இயல்பிலே ஆபத்துகளைத் தாங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பவர்கள். சீமோன் பேதுரு, யாக்கோபு இவர்கள் எல்லாம் ஆண்டவர் இயேசுவுக்காக எத்தனையோ ஆபத்துகளைச் சந்தித்தார்கள். அந்திரேயாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் கிரீஸில் நற்செய்தி அறிவித்தபோது பல்வேறு எதிர்ப்புகளை, ஆபத்துகளைச் சந்தித்தார். ஏன் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் தரத் துணிந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரைப் போன்று இயேசுவுக்காக தியாகங்களை மேற்கொள்ள, உயிரையும் துறக்கத் துணிகின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதனை நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்ட முயல்வோம்.


நாம் பெற்ற நற்செய்தியை/ நன்மைகளை பிறருக்கு அறிவிப்போம்


நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "கொடையாகப் பெற்றீர்கள், கொடையாக வழங்குங்கள்" என்று (மத் 10:8). அந்திரேயா தான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்ற இறையனுபவத்தை நற்செய்தியை தான் மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக அதனை தன்னுடைய சகோதரராகிய சீமோன் பேதுருவுக்கு அறிவித்து, அவரை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தார். இதுபோன்று பலரையும் அவர் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்தார். அவரைப் போன்று நாமும் இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவர்களை இயேசுவிடம் கொண்டு வந்து சேர்ப்பதே நம்முடைய தலையாய கடமையாகும்.

ஆகவே, திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரை போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கு அறிவிப்போம். அவர்களை இயேசுவிடத்தில் கொண்டுவந்து சேர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!