Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      27  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 34ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20

யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.

அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசன் தான் உண்டு வந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டான். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார். அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.

அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, "உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்'' என்றான்.

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது: "ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்கு தண்ணீரையும் மட்டுமே தாரும்.

அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்'' என்றார்.

அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது. ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ண வேண்டிய சிறப்புணவுக்கும் பருக வேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.

கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.

அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான்.

அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப் பாடல் - தானி(இ) 1: 29aஉ. 30-31. 32-33 (பல்லவி: 29b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

29ய எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. 29உ மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணை மீது நீர் வாழ்த்தப் பெறுவீராக. 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

அவர், "இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எல்லாவற்றையும் தந்த ஏழைக் கைம்பெண்!

புத்தரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு.

புத்தர்மேல் தங்களுக்கு இருந்த அன்பையும் பக்தியையும் வெளிக்காட்டும் விதமாக அவரோடு இருந்த பணக்கார பெண்சீடர்கள் விலையுயர்ந்த விளக்குகளை ஏற்றி, அவற்றை அவருடைய திருவடிகளில் காணிக்கையாகப் படைத்தார்கள். புத்தருக்கு ஓர் ஏழைப் பெண் சீடரும் இருந்தார். அவருக்கு புத்தர்மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் இருந்தது. அவருக்கும் ஏனைய சீடர்களைப் போன்று விலையுயர்ந்த விளக்கில் தீபம் ஏற்றி, அதனைக் காணிக்கையாகப் படைக்க ஆசைதான். ஆனால் அவரிடத்தில் போதுமான பணம் இல்லை. இதனால் அவர் கடினமாக உழைத்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு மண் விளக்கை வாங்கி,  அதில் எண்ணெய் ஊற்றி, திரியேற்றி புத்தருக்குக் காணிக்கையாகப் படைத்தார். புத்தரும் அதனை உள்ளன்போடு ஏற்றுக்கொண்டார்.

காணிக்கையாகப் படைக்கப்பட்ட எல்லா விளக்குகளும் இரவு நேரத்தில் நன்றாக எரிந்துகொண்டிருக்க, புத்தர் அவ்விடத்தை விட்டு அகன்று, தூங்கப் போனார்.

மறுநாள் காலையில் புத்தரின் சீடர்களில் ஒருவர் முந்திய நாள் இரவுவேளையில் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அங்கே விலையுயர்ந்த விளக்கு எல்லாம் அணைந்துபோக, மண் விளக்கில் ஏற்றிய தீபம் மட்டும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. இதனை அவர் புத்தரிடம் தெரிவித்தார். அதற்குப் புத்தர் அவரிடம் சொன்னார், "மற்றவர்கள் எல்லாம் தங்களுடைய அந்தஸ்தையும் கவுரவத்தையும் வெளிப்படுத்துவதற்காக விலையுயர்ந்த விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்தார்கள். அதனால் அது விரைவிலே அணைந்துபோனது. ஆனால், இந்த ஏழைச் சீடத்தியோ உள்ளன்போடு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் வைத்து மண்விளக்கு வாங்கி, அதில் தீபம் ஏற்றி, அதனைக் காணிக்கையாகப் படைத்தாள். அதனால்தான் அவளுடைய தீய அணையாமல் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றது".

அந்தஸ்த்தை வெளிபடுத்துவதற்காக காணிக்கை செலுத்துவதற்கும், அன்பை வெளிப்படுத்த காணிக்கை செலுத்துவதற்கும் நிறைய வித்தயாசம் இருக்கின்றது அல்லவா.

நற்செய்தி வாசகத்தில் இப்படித்தான் அன்போடும், தியாகத்தோடும் காணிக்கை செலுத்திய ஏழைக் கைம்பெண்ணை ஆண்டவர் இயேசு பாராட்டுகின்றார். ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை, ஏனையோரின் காணிக்கையைவிட எவ்வளவு உயர்ந்தது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

பரிசேயர்கள், சதுசேயர்கள் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர்  ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணிக்கை போடும் இடத்திற்கு முன்பாக அமர்கின்றார். அப்போது நிறையப் பேர் காணிக்கை செலுத்துகின்றார்கள். அவர்களோடு ஏழைக் கைம்பெண்ணும் காணிக்கை செலுத்துகின்றார். ஆனால் இயேசுவின் பார்வையில் ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கைத்தான் பெரிதாகப் பட்டது. அதனால்தான் இயேசு, "அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டார்கள். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்கிறார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை ஏனையோரின் காணிக்கைவிட சிறந்ததாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவருடைய தியாக மனநிலை அல்லது தியாகச் சிந்தனை. ஆலயத்தின் பல்வேறு தேவைகளுக்காக பதிமூன்று காணிக்கைப் பெட்டிகள் எருசலேம் திருக்கோவில் வைக்கப்பட்டிருக்கும். இதிலேதான் எல்லோரும் காணிக்கை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வாறு காணிக்கை போட்ட பணக்காரர்கள் மிகுதியான காணிக்கை போட்டார்கள். ஆனாலும் அது அவர்களுடைய வருமானத்தோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். ஆனால், ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையோ அப்படியில்லை. அவர் இரண்டு காசுகள்தான் காணிக்கையாக செலுத்தினார் என்றாலும், அது தன்னுடைய பிழைப்பிற்காக வைந்திருந்தது. அதனைக் கூட அவர் தியாக உள்ளத்தோடு காணிக்கையாக செலுத்தி, கடவுளுக்கு ஏற்றவர் ஆகின்றார்.

ஏழைக் கைம்பெண் ஆண்டவருக்கு ஏற்புடையவராக மாறியதற்கான இன்னொரு காரணம் அவர் காசை நம்பி அல்ல, கடவுளை நம்பி வாழ்ந்ததாகும். காணிக்கைப் பெட்டியில் மிகுதியாக காணிக்கை செலுத்தியவர்கள் எல்லாம், காசைத் தான் முழுமையாக நம்பி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த ஏழைக் கைம்பெண்ணோ ஆண்டவரை நம்பி வாழ்ந்தார். அதனால்தான் ஆண்டவர் தன்னைப் பார்த்துக்கொள்வார் என்று தன்னுடைய பிழைப்பிற்காக வைத்திருந்தவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றார். நாம் காசை நம்பி வாழ்கின்றோமா? கடவுளை நம்பி வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்கில் நாம் காசுதான் எல்லாம் என்று கடவுளை மறந்து வாழ்ந்த இலவோதிக்கேயா நகர மக்களைப் போன்று இருக்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் ஒருநாளும் கடவுளுக்கு உகந்தவர்கள் ஆகமுடியாது என்பது மட்டுமே உண்மை.

நாம் ஏழைக் கைம்பெண்ணைப் போன்று கடவுளை மட்டும் நம்பி வாழ்வோம், தியாக உள்ளத்தோடு கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!