Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      24  நவெம்பர் 2017  
                                                பொதுக்காலம் 33ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், "நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்" என்றார்கள்.

எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது.

அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.

மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   1 குறி 29: 10b. 11யb. 11cd-12a. 12b-d (பல்லவி: 13b)

பல்லவி: மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே.

10b எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி

11யb ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

11cd ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீர். 12a செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

12b-d நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.

அவர்களிடம், "என் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
என் இல்லம் இறைவேண்டலில் வீடு

அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைத் திருப்பலியின்போது பங்குத்தந்தை மக்களிடம், "அன்பார்ந்த இறைமக்களே! இன்று நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியையும் துற்செய்தியையும் சொல்ல இருக்கின்றேன். எதை முதலில் சொல்வது?" என்று கேட்டார்.

மக்கள் அனைவரும்,"முதலில் துற்செய்தி என்னவென்று சொல்லுங்கள்... அப்புறம் நற்செய்தி என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்கின்றோம்" என்றார்கள். பங்குத்தந்தை அவர்களிடம்,"நம்முடைய ஆலயம் மிகவும் பழையதாக இருக்கின்றது. ஆலயத்தின் முகப்பு சேதமடைந்து உள்ளது. ஆகையால், உடனடியாக நம் ஆலயத்தின் முகப்பையும் கூரையையும் சரி பார்க்கவேண்டும். இல்லையென்றால், அது இடிந்து விழுந்து, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்"என்றார். இதைக் கேட்ட இறைமக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பின்னர் இறைமக்கள் பங்குத்தந்தை அவர்களிடம்,"துற்செய்தியைச் சொல்லிவிட்டீர்கள். நற்செய்தி ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே அதைச் சொல்லுங்கள்" என்றார்கள். பங்குத் தந்தை அவர்களிடம், "இந்த செலவீனங்களை எல்லாம் சந்திப்பதற்கு  போதுமான பணம் இருக்கின்றது. அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள் என்பதே நற்செய்தி"என்றார்.

மக்கள் அனைவரும் இதைக் கேட்டு புன்னகை பூத்தார்கள். அப்போது பங்குத்தந்தை மீண்டுமாக மக்களைப் பார்த்துச் சொன்னார், "மறுபடியும் ஒரு துற்செய்தி. செலவீனங்களை எல்லாம் சந்திப்பதற்கு போதுமான பணம் இருப்பதாகச் சொன்னேனே. அவையெல்லாம் என்னிடத்தில் இல்லை. அவை உங்களுடைய சட்டைப் பையில் இருக்கின்றது"என்றார். பங்குத்தந்தையின் இவ்வார்த்தைகளுக்குப் பின்னால் ஆலயத்தில் மிகப்பெரிய நிசப்தம் நிலவியது.

ஆலயம் ஆண்டவர் வாழும் இல்லம், அதனை நல்லமுறையில் பரமாரிக்கவேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. ஆகையால், அதற்காக நாம் தாராளமாக நன்கொடைகளைத் தந்து உதவவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலை "கள்வர்கள் குகை அல்ல, மாறாக, அது ஆண்டவர் வாழும் இல்லம் என நிரூபித்துக்காட்டுகின்றார். இயேசு இதனை நிரூபித்துக்காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்தார் என்று இப்போது பார்ப்போம்.

இயேசு எருசலேமை அடைந்ததும், திருக்கோவிலுக்குள் நுழைகின்றார். ஆனால், அங்கே நடந்துகொண்டிருந்த காட்சிகள் அனைத்தும் அவரை அதிர்ச்சிகொள்ளச் செய்கின்றது. குறிப்பாக எருசலேம் திருகோவிலுக்குள் நடந்துகொண்டிருந்த வியாபாரம் இயேசுவை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்குகின்றது. எனவே, அவர் கயிறுகளால் சாட்டை பின்னி அவர்களை விரட்டி அடிக்கின்றார்.

எருசலேம் திருக்கோவிலில் அப்படி என்ன வியாபாரம் நடந்துகொண்டிருந்தது என அறிந்துகொள்வது மிகப் பொருத்தமானதாகும். எருசலேம் திருக்கோவிலில் இரண்டு விதமான மோசடி/ வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. ஒன்று நாணயம் மாற்றுதல் என்ற பெயரில் நடந்த வியாபாரம். பனிரெண்டு வயது நிரப்பிய ஒவ்வொரு யூதனும் கோவில் வரியாக அரை செக்கேல் செலுத்தவேண்டும். இதனை அவர்கள் மக்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் செலுத்த முடியாது. செக்கேலில்தான் செலுத்தவேண்டும். எனவே மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை செக்கேலுக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. இது மக்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நாணயமாற்றுவோர் இதனால் மிகப்பெரிய இலாபத்தை அடைத்தார்கள்.

எருசலேம் திருக்கோவிலில் நடந்த இன்னொரு வியாபாரம் ஆடு மாடுகள் விற்பதாகும். பொதுவாக ஆலயத்தில் பலிகொடுக்கப்படும் ஆடு மாடுகள் ஆலயத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும். ஆனால், ஆலய வழிபாட்டில் இருந்த குருக்கள் "ஆலயத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் ஆடு மாடுகள் குறைபாடுகள் உள்ளதாக இருக்கும். எனவே, ஆலயத்திற்கு உள்ளே விற்பனை செய்யப்படும் ஆடு மாடுகள்தான் குறையில்லாததாக இருக்கும். அவற்றைத்தான் வாங்கவேண்டும் என்று சொல்லி வந்தார்கள். பலி செலுத்துவதற்காக ஆலயத்திற்குள் விற்பனை செய்யப்பட்ட ஆடுமாடுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் இவற்றிற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் குரு (அன்னா) மிகப்பெரிய இலாபம் அடைந்தார். இதில் வேதனை என்னவென்றால் ஆலயத்தில் நடந்த விபாபாரம் அனைத்தும் புறவினத்தார் வழிபாடு செய்யும் இடத்திலே நடந்தது. அதனால் ஆண்டவர் இயேசு, ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை"என் இல்லம் இறைவேண்டலின் வீடு, அதை நீங்கள் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்று சொல்லி விரட்டியடிக்கின்றார்.

இயேசு கூறும் இரண்டு சொற்றொடர்களும் எசாயா (எசா 56:7) மற்றும் எரேமியாப் புத்தகத்தில் (எரே 7:11) இடம்பெறும் சொற்றொடர்கள்தான். ஆண்டவர் இயேசு அதனைச் சொல்லி, எருசலேம் திருக்கோவிலைத் தூய்மைப்படுத்த பயன்படுத்துகின்றார்.  ஆலயம் ஆன்மாக்கள் இறைவனில் இலகிக்கக்கூடிய இடம். அதனைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம்.

எனவே, ஆலயத்தின் தூய்மையைப் பேணுவோம். உயிருள்ள ஆலயங்களாக நாம் வாழுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
என் இல்லம் இறைவேன்டலின் வீடு

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டம் அவரது பேச்சை ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது கூட்டத்திலிருந்து எழுந்து ஒருவன் குறுக்கிட்டான், "சுவாமி! ஆண்டவனை நேரடியாக அடைந்துவிடலாமே; ஆலயம் - கோவில் - என்ற ஒன்று எதற்கு?"என்று கேட்டான். அப்போது விவேகானந்தர் அவனிடம், "எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர முடியுமா?" என்று கேட்டார். அவன் வெளியே போய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தான்.

அதைப் பார்த்து விவேகானந்தர், "உன்னிடம் தண்ணீர் தானே கொண்டுவரச் சொன்னேன், எதற்கு சொம்பையும் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாய்; சொம்பு இல்லாமல் உன்னால் தண்ணீர் கொண்டுவர முடியாதா?" என்று கேட்டார். அதற்கு அவன், "சொம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டுவர முடியும்?, அது முடியாது" என்று பதிலளித்தான்.

உடனே அவர் அவனிடம், "எப்படி சொம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டுவர முடியாதோ, அதுபோன்றுதான் கடவுளைக் காண ஓரிடம் தேவைப்படுகிறது. அந்த இடத்திற்குப் பெயர்தான் ஆலயம்" என்று முடித்தார். திரண்டிருந்த மக்கள்கூட்டம் விவேகானந்தரின் பதிலைக் கேட்டு, சத்தமாக தங்களுடைய கைகளைத் தட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது.

இறைவனைக் காண ஓரிடம் தேவைப்படும் என்று சொன்னால் அதுதான் கோவில். (கோ - கடவுள், வில்  - இல்லம் = கடவுள் வாழும் இல்லம்).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். ஏனென்றால் உலங்கெங்கும் பரவிக்கிடந்த யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்காவிழாக் கொண்டாட எருசலேம் திருக்கோவிலுக்கு வருவர். (இயேசுவும் இந்த பாஸ்காவிழாவில் கலந்துகொள்ளத்தான் எருசலேம் வந்தார் என்று யோவான் நற்செய்தியானது நமக்கு எதுத்துக்கூறுகிறது). அத்தகைய நேரங்களில் பலிசெலுத்த, நேர்ச்சை செலுத்த மக்களுக்குப் பொருட்கள் தேவைப்பட்டதன. இதனைப் பயன்படுத்தி கொண்ட வணிகர்கள் பொருட்களை எருசலேம் திருக்கோவிலிலே விற்றார்கள்; அதனைச் சந்தைவெளிபோல் ஆக்கினார்கள்; சாதாரண மக்களும், புறவினத்தாரும் ஜெபிப்பதற்கு மிகப்பெரிய இடையூறாய் இருந்தார்கள். இதனால்தான் இயேசு சாட்டை எடுத்து அவர்களை விரட்டி அடிக்கின்றார்; "என் இல்லம் இறைவேன்டலின் வீடு, அதை கள்வர் குகையாக்காதீர்கள்" என்று கோபம் கொள்கிறார்.

கோவிலானது யூதர்களின் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாடோடிகளைப் போன்று வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கைப் பேழையில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள். அதன்பிறகு சாலமோன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட எருசலேம் திருக்கோவிலில் கடவுள் உண்மையாக உறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள். பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டபோது இறைவன் வாழும் கோவிலைவிட்டுப் பிரிந்திருக்கிறோமே என்ற மனம் வருந்தி அழுதார்கள். திருப்பாடல் 137: 1 ல் வாசிக்கின்றோம், "பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சியோனை நினைத்து அழுதோம்" என்று. அந்தளவுக்கு அவர்கள் எருசலேம் திருக்கோவிலின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டு வாழ்ந்தார்கள். இதற்கு இயேசுவும் விதிவிலக்கல்ல. இயேசு எருசலேம் திருக்கோவிலை, "என் தந்தையின் இல்லம்"என்கிறார். (யோவான் 2: 16).

ஆக, கோவில் என்பது இறைவன் வாழும் இல்லம். இது இறைவேண்டலுக்கு மட்டுமே பயன்பட வேண்டுமே ஒழிய வாணிபம் செய்வதற்கு அல்ல என்பது இயேசுவின் ஆழமான புரிதல். இன்றைக்கு நாம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி வானுயர்ந்த கோவிலைக் கட்டிக் எழுப்புகிறோம். ஆனால் அதில் இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறோமா? அல்லது அதற்குரிய மரியாதையை, வணக்கத்தைச் செலுத்துகிறோமா என்பது சிந்தித்தப் பார்க்கவேண்டிய ஒன்று.

வானுயர்ந்த கோவிலைக் கட்டிவிட்டு வாடிநிற்கும் வறியவர்கள், எளியர்களைக் கண்டும், காணாதும் நாம் வாழ்ந்தால் அதனால் என்ன நன்மை நமக்குக் கிடைத்துவிடப் போகிறது. "நடமாகும் கோவிலுக்கு நன்மை ஒன்று செய்தால் அது நடமாடக் கோவிலுக்குப் போய்சேரும்"என்பார் திருமூலர்.

நாம் நம்மோடு வாழும் உயிருள்ள கோவிலுக்கு - நடமாடும் கோவிலுக்கு - நன்மை செய்து வாழுவோம். அதே வேளையில் இறைவன் குடியிருக்கும் கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்துவோம். இறையருள் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!