Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      23  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 33ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

அந்நாள்களில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.

மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, "நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், "மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்" என்று கூறினார்.

மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார்.

அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார்.

இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, "திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்" என்று உரத்த குரலில் கத்தினார்.

அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள். அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். பல்லவி

5 "பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது.

ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், "இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள்.

ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவரிடம் திரும்பி வருவோம், அழிவிலிருந்து விடுவிக்கப்படுவோம்

இரண்டு நண்பர்கள் ஓர் ஆற்றங்கரையில் நின்றுக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் ஒரு மூட்டையொன்று மிதந்து வருவது தெரிந்தது. அந்த மூட்டைக்குள் என்ன இருக்கும் என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்தனர். இருவரில் ஒருவனுக்கு அதில் ஏதேனும் விலை மதிப்புள்ள பொருள் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

உடனே கொஞ்சமும் யோசியாது ஆற்றினுள் தவ்வி நீந்திச்சென்று அந்த மூட்டையைப் பிடித்தான். அப்போதுதான் தெரிந்தது அது மூட்டையல்ல, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கரடி என்பது. அந்தக் கரடியும் உயிர் தப்பிக்கும் எண்ணத்தில் அவனை இறுகப் பிடித்துக்கொண்டது.

இதை அறியாத கரையில் இருந்த நண்பன், மூட்டையைக் கொண்டுவருவது சிரமமாக இருந்தால், அதை விட்டுவிடு. அதற்காக உயிரைப் பணயம் வைக்காதே என்றான். அதற்கு அவன் சொன்னான், மூட்டையை நான் பிடிக்கவில்லை. மூட்டை தான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது என்று.

விலையுயர்ந்த பொருள் என்று நினைத்து கரடியைப் பிடித்துக்கொண்டு அழுத மனிதனைப் போன்றுதான், நாமும் உலக காரியங்கள்தான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என நினைத்து அதனைப் பிடித்துக்கொண்டிருக்கின்றோம். உண்மை என்னவென்றால் உலக காரியங்கள் வரங்களை அல்ல சாபங்களையே தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்தபோது, அந்நகரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகின்றார். காரணம் அந்நகரம் தேடிவந்த கடவுளை மறந்துவிட்டு, உலக காரியங்களில் நாட்டம் கொள்ளத் தொடங்கியது. அதனால்தான் இயேசு அந்நகரைப் பார்த்து, இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்துகொள்ளக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும் அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீர் அறிந்துகொள்ளவில்லை என்கின்றார்.

நற்செய்தியாளர் யோவான் சொல்வது போன்று, அவர் (இயேசு) தமக்குரியவர்களிடம் வந்தார். ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). இது மிகவும் வேதனையான விஷயம். இயேசு மக்களுக்கு வாழ்வினைக் கொடையாக வழங்க வந்தார். ஆனால், மக்களோ அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். அப்படியிருந்தும் அவர் ஆண்டவரின் அன்பையும் அவருடைய நற்செய்தியையும் மக்களுக்குத் திரும்பத் திரும்ப எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார். மக்கள்தான் அதற்கு செவி சாய்க்காமல் போனார்கள்.

இயேசுவின் குரலுக்கு செவி சாய்க்காமலும் அவருடைய அன்பை உணர்ந்துகொள்ளாமலும் இருந்ததால் எருசலேம் நகர் கி.பி.70 ஆண்டில் உரோமையர்களால் தரைமட்டமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர் முழுவதும் கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்கள் இறந்து மடிந்தார்கள். நாம் இறைவார்த்தைக்கு செவிகொடுக்கமால், அவருடைய அன்பை உணராமல், நம்முடைய மனம்போன போக்கில் சென்றோம் என்றால் இதுபோன்ற அழிவுகளைச் சந்திப்பது உறுதி.

இத்தகைய அழிவுகளிலிருந்து நாம் நம்மையே காப்பாற்றிக்கொள்வதற்கு நாம் என்ன வேண்டும் என்பது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இறைவாக்கினர் ஆமோஸ் தன்னுடைய நூலில் கூறுவார், என்னை (ஆண்டவரைத்) தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள் என்று ( 5:4). ஆம், நாம் ஆண்டவரைத் தேடுகின்றபோது, அவருடைய வழியில் நடக்கின்றபோது, வாழ்வடைவது உறுதி.

பல நேரங்களில் உலக செல்வங்கள்தான் நமக்கு உண்மையான நிம்மதியைத் தரும், உண்மையான அமைதியைத் தரும் என்ற தவறான புரிதலில் இருந்துகொண்டு, அதன்படியே மாய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், மிகுதியான உடமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்று (லூக் 12:15). யோவான் நற்செய்தியில், என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவார் (யோவா 15: 5). ஆகவே, நாம் ஆண்டவரோடு இணைத்திருக்கபோது மட்டுமே வாழ்வைப் பெறமுடியும், ஏனைய காரியங்கள் நமக்கு வாழ்வைத் தராது என உணர்ந்து அதற்கேற்ப வாழவேண்டும்.

ஆகவே, நாம் கடவுளின் அன்பைப் புறக்கணித்து, அவரை விட்டு வெகுதொலைவில் சென்ற எருசலேம் நகர மக்கள் போன்று இல்லாமல், ஆண்டவரைத் தேடிச் செல்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மனம் மாறி, ஆண்டவரிடம் திரும்பி வருவோம்.

ஓர் ஊரில் துறவி ஒருவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். மக்களும் அவருடைய போதனையை ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அவ்விடத்திற்கு ஊரில் இருந்த பெரும் பணக்காரனின் மகன் வந்தான். அவன் தன்னிடம் பணம் இருக்கின்ற திமிரில் யாரையும் மதிப்பதில்லை; எப்போதும் எல்லாரிடமும் திமிராகவே பேசுவான். அப்படிப்பட்டவன் தன்னுடைய பணியாள் தனக்காகக் கொண்டுவந்த இருக்கையை துறவிக்கு முன்பாகப் போட்டு, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, துறவியை அவமரியாதை செய்தான். துறவியோ மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்திருந்தார்.

இதைக் கண்ட மக்களுக்கு உள்ளுக்குள் கோபமாய் வந்தது. ஆனால் தங்களுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த முடியாமல் அமைதி காத்தனர். துறவி அந்த திமிர் பிடித்தவனின் செய்கைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், எந்தவிதச் சலனமும் இல்லாமல் வழக்கம்போல போதித்துக்கொண்டிருந்தார்.

சிறுது நேரத்தில் துறவியின் போதனை முடிந்தது. எல்லாரும் தங்களுடைய வீட்டிற்குக் களைந்து சென்றனர். திமிர்பிடித்த அந்த மனிதனும் அங்கிருந்து சென்றான். அப்போது துறவியின் நலவிரும்பிகள் ஒருசிலர் அவரிடம் வந்து, எதற்காக அந்த திமிர்பிடித்த மனிதனுக்கு முன்பாக அமைதி காத்தீர்கள்; அவனைக் கடினமான வார்த்தைகளால் சாடியிருக்கலாமே என்று சொல்லி வருத்தப்பட்டனர். அதற்கு துறவி மிகவும் சாதாரணமாக, அவனை நான் கடினமான வார்த்தைகளால் திட்டியிருந்தால் பதிலுக்கு அவன் ஏதாவது செய்திருப்பான். ஆனால் நான் அமைதியாக இருந்ததால் இப்படிப்பட்ட ஒரு சாதுவுக்கு முன்பாக நான் இவ்வாறு நடந்துகொண்டேனே என்று மனம் வருந்தலாம் என்று சொல்லி முடித்தார்.

அடுத்த நாள் காலைவேளையில் துறவி தான் வழக்கமாகப் போதிக்கும் இடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த பணக்காரனின் மகன் முன்தினம் துறவி சொன்னது போலவே, துறவியின் காலில் விழுந்து தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டான்.

யாரையுமே மதிக்காமல் வாழ்ந்த திமிர்பிடித்தவன் துறவியின் கனிவான நடத்தையால், மனம் திரும்பினான் என்பதை இக்கதையானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் நகரைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுகிறார். விவிலியத்திலே இயேசு இரண்டு முறை அழுதார் என்று படிக்கின்றோம். ஒன்று யோவான் நற்செய்தி பதினோறாம் அதிகாரத்திலே தன்னுடைய நண்பன் லாசர் இறந்தபோது அழுகிரார். இன்றொன்று இன்றைய நற்செய்திப் பகுதி.

எருசலேம் நகரைப் பார்த்து இயேசு எதற்காக அழவேண்டும்? என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது அங்கே வாழ்ந்த மக்கள் கடவுளின் வழியைவிட்டு தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்தார்கள். இறைவனோ அவர்கள்மீது இரக்கம்கொண்டு அரசர்கள், நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் என்று அனுப்பினாலும் அவர்கள் வழக்கம்போல யாரையும் மதிக்காமல் வணங்காக் கழுத்தினராய் இருந்தார்கள். அதனால் இயேசு அவர்களின் நிலைகண்டு அந்நகருக்கு வரவிருக்கும் அழிவைக் கண்டு கண்ணீர்விட்டு அழுகிறார்.

இந்நற்செய்திப் பகுதி நமக்கு ஒருசில உணமைகளை எடுத்துரைக்கிறது. முதலாவதாக கடவுள் நமக்கு ஒவ்வொருநாளும் விடுக்கும் அழைப்பை ஏற்று மனம்மாறி, நேரிய வழியில் நடக்கவேண்டும். இல்லையென்றால் இறைவனின் தண்டனையைப் பெறுவது உறுதி. ஏனென்றால் எருசலேம் நகரானது எவ்வளவோ எச்சரிக்கைக்குப் பின்னாலும் மனம்மாறாது வாழ்ந்ததால் கி.பி.70 ஆம் ஆண்டு உரோமையர்களால் அழிக்கப்பட்டது. நாமும் மனம்மாறாது வாழும்போது இதுவே நமது முடிவாகும்.

இரண்டாவதாக தம்மைத் தேடிவரும் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து நல்வழியில் நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். நற்செய்தியில் இயேசு ஒரு தாயைப் போன்று இஸ்ரயேல் மக்களை அரவணைக்க நினைக்கிறார். ஆனால் அவர்களோ தங்கள் மனம்போன போக்கில் வாழ்கிறார்கள். இணைச்சட்ட நூல் 28:2 ல் வாசிக்கின்றோம், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தால், இந்த ஆசிகலெல்லாம் உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும் என்று.

ஆக நாம் மனமாறி இறைவனின் குரலுக்கு செவிகொடுத்து வாழ்வோம். இறையாசிர் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 இனி எல்லாம் சுகமே!

இயேசு அழுதார்



'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார்'

(காண் லூக் 19:41-44)

'புதிய உலகை தேடி போகிறேன்' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அதில் அழகான வரி ஒன்று உண்டு:

'தோளில் ஏறினாய் என்னை இன்னும் உயரமாக்கினாய்'

அதாவது, இறந்து தன் மகனைப் பிரிந்து செல்லும் தாய், தனக்கும் தன் மகனுக்கும் இருந்த உறவை சுருக்கிச் சொல்வதாகவும், இனி எல்லா நேரமும் அவனைக் காணப்போவதாகவும் பாடும் பிரியாவிடைப் பாடலே இது.

தன் குழந்தையை தோளில் ஏற்றுவது வழக்கமாக அப்பாக்களின் செயல்தான். ஆனால், இங்கே அதைத் தாய் செய்கிறாள். ஆக, அம்மையும், அப்பனுமாக இந்தக் குழந்தைக்கு இருந்திருக்கிறாள் தாய்.

தோளில் குழந்தை ஏறும்போது வழக்கமாக பாரம் தாங்காமல் கால்கள் தானாகவே வளையும். ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல், 'நீ என்மேல் ஏறி நின்றதால் என் உயரம் அதிகமானது' என்கிறாள் தாய்.

கவிஞரின் கற்பனைத் திறனுக்கு ஒரு சபாஷ்.

இங்கே தாயின் உயரம் மட்டுமல்ல. குழந்தையின் உயரமும் கூடத்தான் செய்கிறது.

ஒருவரின் வலி இருவரின் உயரத்தைக் கூட்டுகிறது.

நாம் வடிக்கும் கண்ணீர் கூட நம் இதயத்தின் நீட்சிதான். கண்ணீரின் வழியாக நம் இதயம் தன் உயரத்தை தானே கூட்டிக் கொள்கிறது. உள்ளுக்குள் தெரியாமல் இருக்கும் மென்மையை, கண்ணீர் எல்லாருக்கும் தெரியப்படுத்துகின்றது.

நாளைய நற்செய்தியில் எருசலேமுக்காக கண்ணீர் வடிக்கும் இயேசுவைப் பார்க்கின்றோம்.

எருசலேமின் கோவிலைப் பார்க்கின்ற இயேசு கண்ணீர் வடிக்கின்றார்.

எருசலேமின் கோவிலில்தான் யாவே இறைவனின் திருப்பெயர் உறைந்திருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். அதாவது, இறைவன் தங்களோடு இருந்தும், அமைதிக்கான வழியை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை!'

மக்களின் அறியாமையை முன்னிட்டு கடவுள் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆக, 'நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை' என்ற செய்தியை நாம் மற்றவர்களுக்கு எளிதாக சொல்லிவிடும் வழி கண்ணீர்.

இந்தக் கண்ணீர் துடைக்கப்படுவது எப்போது?

அடுத்தவர் புரிந்துகொள்ளப்படும்போது.

எருசலேம் இயேசுவின் கண்ணீரைத் துடைத்ததா?

இல்லை.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!