Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      22  நவெம்பர் 2017  
                                                பொதுக்காலம் 33ம் ஞாயிறு (தூய செசிலியா)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலகைப் படைத்தவரே உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்.

பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், "நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை" என்றார்.

தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, "உன் மூதாதையரின் பழக்க வழக்கங்களை நீ கைவிட்டு விட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறு கொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டு உனக்கு உயர்பதவி வழங்குவேன்" என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான்.

அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து அந்த இளைஞர் தம்மையே காத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார்.

ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், "மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; முன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக்காத்து வந்துள்ளேன்.

குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்து கொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்"" என்று சொல்லி ஊக்கமூட்டினார்.

தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: "எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்"" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 17: 1. 5-6. 8,15 (பல்லவி: 15a)

பல்லவி: நானோ விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28


அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள்.

அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.

அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்" என்று சொன்னார்.

அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, "இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை" என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார்.

பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, "ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்" என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்றார்.

இரண்டாம் பணியாளர் வந்து, "ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்" என்றார்.

அவர், "எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, "ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்" என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே" என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், "அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்" என்றார்.

அதற்கு அவர்கள், "ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே" என்றார்கள்.

அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

மேலும் அவர், "நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்" என்று சொன்னார்.""

இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தூய செசிலியா  (நவம்பர் 22)

நிகழ்வு

மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, மறைசாட்சியா க உயிர்நீத்த செசிலியாவின் உடல் ஸ்ரஸ்ட்டேவர் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய கல்லறை 1599 ஆம் ஆண்டு ஒரு சில காரணங்களுக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சைப்ரஸ் என்னும் மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அவருடைய உடல் அழியாமல், அப்போதுதான் இறந்ததுபோன்று இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். செசிலியா தன்னுடைய பாக்களால் இறைவனுக்கு மகிமை செலுத்தினாள், இறைவனும் செசிலியாவின் உடலை அழியாமல் காத்து மகிமைப்படுத்தினார்" என்று அனைவரும் அவரை வாயாரப் புகழ்ந்துகொண்டே சென்றார்கள்.

வாழ்க்கை வரலாறு

செசிலியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் தூய செசிலியாவின் திருப்பாடுகள் என்ற புத்தகம்தான். இதில் செசிலியா மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் உரோமையை ஆண்ட அலெக்ஸாண்டர் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

செசிலியா குழந்தைப் பருவத்திலிருந்தே தூய, மாசற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். தன்னுடைய கன்னிமை முழுவதையும் ஆண்டவருக்காக ஒப்புக் கொடுத்து வந்தார். இத்தகைய தருணத்தில்தான் இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பம் இல்லாமலே இவரை வலேரியான் என்ற இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். செசிலியாவோ வலேரியாரிடம், "நான் என்னுடைய உடலை எனது மணவாளனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையால் எந்தவிதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தரமாட்டேன்; என்னுடைய கற்பை எப்போதும் வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகின்றார்" என்றார். இதைக் கேட்ட வலேரியான், "உன்னுடைய கற்பை வானதூதர் காவல்காத்து வருகின்றாரா?, என்னால் நம்பமுடியவில்லையே" என்றான். அதற்கு செசிலியா, "இதெல்லாம் திருமுழுக்குப் பெற்றோரின் கண்களுக்கு மட்டுமே தெரியும், வேறு எவரது கண்களுக்கும் தெரியாது" என்றார்.

உடனே வலேரியான் அர்பன் (Urban) என்ற திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்குப் பெற்று வந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது செசிலியா தன்னுடைய அறையில் ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. செசிலியா சொன்னதுபோன்றே, அவருக்குப் பக்கத்தில் வானதூதர் நின்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வலேரியான் இறைவன்மீது முழுமையாக நம்பிக்கைகொண்டு வாழத்தொடங்கினான். அவனுடைய சகோதரனாகிய திபெர்தியுஸ் என்பவனும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினான்.

இச்செய்தி எப்படியோ உரோமை ஆளுநராகிய அல்மாக்கியுஸ் என்பவனுக்குத் தெரிந்தது. அவன் மாக்சிமஸ் என்ற தன்னுடைய படைத்தளபதியிடம் சொல்லி வலேரியானையும் திபெர்தியுசையும் கைதுசெய்து கொலை செய்யச் சொன்னான். அதன்படியே அவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு அல்மாகியுஸ் என்ற அந்த ஆளுநன் செசிலியாவிடம் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான். ஆனால் செசிலியாவோ, "நான் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதைப் பார்த்து சினம்கொண்ட ஆளுநன் தன்னுடைய படைவீரர் ஒருவனை அழைத்து, அவரைக் கொன்றுபோடச் சொன்னான். படைவீரனோ செசிலியாவின் கழுத்தில் வாளை இறக்கினான். அப்போது செசிலியாவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறியதே ஒழிய, அவருடைய உயிர் அவரை விட்டுப் போகவில்லை. அந்நேரத்திலும் அவர் தன்னுடைய இனிமை மிகு பாக்களால் இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார். ஏறக்குறைய மூன்று நாட்களுக்குப் பின்தான் அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டு நீங்கியது.

செசிலியா தன்னுடைய மறைசாட்சிய வாழ்வால், இனிமைமிகு பாக்களால் இறைவனுக்கு மகிமையும் புகழும் செலுத்தியவளாய் மாறினாள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திரு இசையின் பாதுகாவலியான தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் அவரைப் புகழ்வோம்


செசிலியா தன்னுடைய வாழ்வு முழுவதும் கடவுள் தனக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார், அதன்வழியாக அவருக்குப் பெருமை சேர்த்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் கடவுளைப் புகழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருப்பாடல் 9:11 ல் வாசிக்கின்றோம், "சீயோனில் தங்கியிருக்கும் அனைவரும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்!" என்று. நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் புகழ்ந்துபாடவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படும் வேண்டுகோளாக இருக்கின்றது.

முன்பொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் விறகுவெட்டி வெட்டி ஒருவன் இருந்தான். அவன் தான் வெட்டிய விறகை விற்று, அதிலிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்தான். ஆனாலும் அவன் அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப் புகழ்ந்துகொண்டே வந்தான். இறைவன் தனக்கு அன்றாடம் தரும் உணவிற்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக, மக்களுக்காகவும் அவன் இறைவனைப்புகழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது, மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. அவன் ஏறெடுத்துப்பார்த்தான். அப்போது ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள். உடனே அவன் அவர்களிடம் "நீங்கள் எல்லாம் யார்?" என்று கேட்டான். அதற்கு விறகு வெட்டி. "நாங்கள் கடவுளுடைய தூதர்கள்." என்றார்கள். அவன் மீண்டுமாக அவர்களிடம், "என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்?, நான் அப்படி ஒன்றும் கடவுளிடம் கேட்கவில்லையே" என்றான். "அதற்காகத் தான் கடவுள் உன்மீது மலர்களை தூவச்சொன்னார். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் மட்டும்தான் எதையும் கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. மாறாக இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றாய். எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப் பெருமைப்படுத்தினார்" என்றார்கள்.

நாம் இறைவனைப் புகழும்போது இறைவன் நமக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டே இருப்பார். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவனை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்போம் என்ற உறுதி எடுப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்?

ஒரு மாலைப் பொழுதில் தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் உலவிக்கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் ஒட்டகம் அவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையாகப் பதில்சொல்லும்.

அன்றைக்கும் அப்படித்தான். குட்டி ஒட்டகம் தாய் ஒட்டகத்தைப் பார்த்து "அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?" என்றது. "நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துகொண்டு, வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்க்கை திமிலைக் கொடுத்திருக்கு" என்றது தாய் ஒட்டகம்.

குட்டி ஒட்டகம் திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மற்ற மிருகங்களுக்கு அப்படி இல்லையே. அது ஏன்?". தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக்கொண்டு சொன்னது. "பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும். அப்போது சற்றென்று ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைனா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு".

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது, "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?". "அது கண்ணு... மணல்ல நடக்கும்போது நம் கால் மணல்ல புதையாம நடக்கத்தான்" பொறுமையாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம். "பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே, அது ஏன்? இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது, "பாலைவனத்தில் செடி கொடி எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?".

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு இலண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம இரண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கும்?". குட்டி ஒட்டகம் கேட்ட இந்தக் கேள்விக்கு தாய் ஒட்டகத்தால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆம், நாமும்கூட இந்த ஒட்டகங்களைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பெரிய திறமைகளைக் கொண்டிருந்தும், நம் திறமைகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக்கொண்டு தேவையில்லாத இடத்தில் பயனில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கூறிய மற்றெல்லா உவமைகளை விடவும் இந்த உவமை வரலாற்றில் நிகழ்ந்தவற்றோடு மிகவும் ஒத்துப் போகின்றனது. எப்படி என்றால், பெரிய ஏரோதுவின் இறப்புக்குப் பிறகு அவருடைய மூன்று மகன்களான அந்திப்பா, பிலிப் அர்கிலஸ் ஆகியோர் தங்களுக்கென்று குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு ஆண்டு வந்தார்கள். இதற்கிடையில் அற்கிலஸ் உரோமை நகருக்குச் சென்று, அங்கிருந்த உரோமை அரசனாகிய அகுஸ்துஸ் என்பவரிடம் தன்னை யூதேயாவிற்கு அரசனாக ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதற்கு யூதர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அவர்கள் அர்கிலசை அரசராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு மினா நாணய உவமைச் சொல்கின்றார்.

உவமையில் வரும் உயர்குடிமகன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து மினாக்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வாணிபம் செய்யச் சொல்லிவிட்டு, ஆட்சியுரிமை பெறப் போகின்றார். ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தபிறகு தன்னிடம் மினாக்களை பெற்றவர்களிடமிருந்து கணக்கைக் கேட்கின்றார். அவர்களில் இருவர் சரியாகக் கணக்கைக் கொடுக்க, கடைசியில் வரும் பணியாளர் பெற்ற மினாவை அப்படியே திரும்பக் கொடுக்கின்றார். இதனால் சினங்கொள்ளும் அவர், அந்தப் பணியாளருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கின்றார்.

இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, கடவுள் நம்மை நம்பி பொறுப்புகளை / திறமைகளை கொடுக்கின்றார் என்பதாகும். இரண்டு, கொடுத்த பொறுப்புகளுக்குக் கணக்குக் கேட்கின்றார் என்பதாகும். மூன்று, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகின்றோமோ அதனடிப்படையில் நமக்கு வெகுமதி வழங்கப்படும் என்தாகும். ஒருவேளை, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் திறம்படச் செய்திருந்தால் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்பது உறுதி.

எனவே, கடவுள் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை/ திறமைகளை நல்லவிதமாய் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்?

ஆங்கிலேய ஆட்சியில் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மவுண்பேட்டன் பிரபு அவர்கள். தனது சாதூயர்த்திற்கும், புத்திக்கூர்மைக்கும் பேர்போனவர். எப்படிப்பட்ட பிரச்சனையையும் தனது புத்திக்கூர்மையால் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக, அறிவுத்தெளிவோடு பதிலளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நின்று அவரை வாழ்த்திவிட்டு கேட்டார், " உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று.

அதற்கு அவர், "நான் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள்கூட விவசாயிகள்தான். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருப்பது என்னுடைய கடின உழைப்புதான். உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்" என்றார்.

அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அவரை வெகுவாக வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

ஒருமுறை ரஷ்ய அதிபர் லெனின் இவ்வாறு சொன்னார், "நாடு முன்னேறத் தேவையான மூன்று: உழைப்பு, கடின உழைப்பு, ஓயாத உழைப்பு இவைதான்" என்று. ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் கடுமையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா உவமையைக் குறித்துப் பேசுகிறார். (மத்தேயு நற்செய்தியில் இது தாலந்து உவமையாக வருகின்றது). உயிர்குடிமகன் ஒருவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்துவிட்டு தொலைதூரம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் கணக்குக் கேட்கிறபோது ஒருவன் பத்து மினாக்களையும், இன்னொருவன் ஐந்து மினாக்களையும் ஈட்டியதாக கொண்டுவந்து தருகிறான். கடைசியில் வந்தவனோ தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை கைகுட்டையில் முடிந்துவைத்து அப்படியே கொடுக்கிறான். இதனால் தலைவனுடைய சினத்துக்கு ஆளாகிறான்.

இங்கே மினா - தாலந்து - என்பதை கடவுள் நமக்குக் கொடுத்தாக திறமைகள், வாய்ப்பு, வசதிகள் என்பதாக புரிந்துகொள்ளலாம். கடவுள் யாரையுமே திறமையற்றவராகவோ அல்லது ஜடமாகவோ படைக்கவில்லை. அதை நாம் எசா 43:4 ல் வாசிக்கின்றோம், "என் (கடவுள்) பார்வையில் நீ விலையேற்றப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் திறமையானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள்.

ஆனால் பலர் இன்று தங்களிடம் இருக்கும் திறமையை உணராமல்; தங்களுடைய மதிப்பை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். "உன்னையே நீ அறிவாய்" என்பான் தத்துவஞானி சாக்ரடிஸ். நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் இருந்த திறமையை, உழைப்பைப் பயன்படுத்தி பத்து, ஐந்து மினாக்கள் முறையே ஈட்டினார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய தலைவரிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்கள். நாம் நமது திறமையை, உழைப்புப் பயன்படுத்தினால் என்றும் உயர்வுதான்.

அதேவேளையில் உழைக்காமல் சோம்பித்திரிவது என்பது கடவுளின் தண்டனைக்கு உரியதாக கருதப்படுகிறது. உவமையில் வரும் கடைசிப் பணியாளர் தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை வைத்து மேலும் செல்வம் ஈட்டாமல் கைகுட்டையில் பொதிந்து வைத்திருக்கிறான். அதனால் தலைவனின் சினத்திற்கு உள்ளாகிறான். நாமும்கூட பலவேளையில் உழைக்காமல், ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். "சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவர், அது நின்றாலும் ஓடினாலும் ஒன்றுதான்" என்பார் கூப்பர் என்ற அறிஞர். ஆம், சோம்பேறி ஒன்றுக்கும் உதவாதவன். அதனால் அவன் அழிவையே சந்திப்பான்.
ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். 

முந்தியின் முடிச்சு

"நான் என்ன முந்தியிலயா முடிச்சு வச்சிருக்கிறேன்!"

என் அய்யாமை லட்சுமி அம்மாவிடம் காசு கேட்கும்போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார். ஆனால், தன் முந்தியின் நுனி முடிச்சை அவிழ்த்துக் காசைக் கொடுத்துவிடுவார்.

அவர் காசை முடிந்து வைத்தே அவரின் முந்தி நுனி சுருக்கமாக இருக்கும். முந்தியில் முடிய வெட்கப்படும் சிலர் கைக்குட்டையில் முடிந்து அதைத் தங்களின் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள் - குறிப்பாக ஆண்கள். முந்தியில் நாணயங்களைத்தான் முடிய முடியும். நோட்டுக்களை முடிந்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. மேலும் உடலின் வியர்வையால் நோட்டுக்கள் நனைந்துவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
முந்தியின் முடிச்சு - ஒரு பாதுகாப்பு பெட்டகம்.

நெல்வயலில் இறங்குமுன் கழற்றப்படும் மெட்டி, கைவிரலின் மோதிரம், வீட்டுச் சாவி, புகையிலை, பாக்கு, பணம் என எல்லாம் முடியப்படுவது முந்தியில்தான்.

முந்தியின் முடிச்சு எளிதாக அவிழ்வதில்லை. மேலும், அவை நம் உடலை உரசிக்கொண்டே இருப்பதால் அவைகள் தவறவும் வாய்ப்பில்லை.

"உன் வீட்டுக்காரரை உன் முந்தியில் முடிசுசுக்கோ!" என்று தாய் தன் மகளுக்கு அறிவுரை கொடுப்பதும் இதனால்தான்.

மனிதர்கள் காசை சேகரித்து வைக்கத் தொடங்கியதின் முதற்படி இதுவாகத்தான் இருக்கும். முதலில் முந்தி, அடுத்து சுருக்குப் பை, அடுத்து பர்ஸ், அடுத்து ஏடிஎம் அட்டை என வளர்ந்து கொண்டிருக்கிறது.

முந்தியோடு நிறுத்திக் கொள்தல் பொருளாதாரத்தின் முதல்படியே.

அப்படி முந்தியோடு முடிந்து வைத்து, தன் பொருளாதார வளர்ச்சியை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:11-28) நாம் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் தாலந்து எடுத்துக்காட்டுக்கும் (25:14-30) மூன்று முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன:

1. மத்தேயு, "தாலந்து" என குறிப்பிடுவதை, லூக்கா "மினா" எனக் குறிப்பிடுகிறார். 60 மினாக்கள் சேர்ந்ததுதான் ஒரு தாலந்து.

2. மத்தேயுவில் மூன்று பேருக்கு, ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. லூக்காவில் பத்து பேருக்கு, ஆளுக்கு ஒன்று வீதம் பத்து மினாக்கள் கொடுக்கப்படுகின்றன.

3. மத்தேயுவில் மூன்றாம் நபர் தாலந்தை நிலத்தில் புதைக்கிறார். லூக்காவில் மூன்றாம் நபர் கைக்குட்டையில் முடிகிறார். மேலும் முதல் நபர் ஒன்றை பத்தாகவும், இரண்டாம் நபர் ஒன்றை ஐந்தாகவும் பெருக்குகின்றார். மற்ற ஏழுபேர் தங்கள் மினாக்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களில் எது இயேசு சொன்னது என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும், மூன்றாம் நபர் கண்டிக்கப்படுகிறார்.

எதற்காக? அவரின் சோம்பலுக்காகவும், அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பெருக்காததற்காகவும்.

டாடா மோட்டார்ஸ் விளம்பரத்தில் அழகாக ஒரு வரி வரும்:

"நமக்கு உள்ளிருந்து நம்மை இயக்குவதே நம்மை மேன்மையானவராக்குகிறது!"

அதாவது, நம் கைகளில் எத்தனை மினாக்கள் இருப்பதைப் பொறுத்து அல்ல நம் மேன்மை. மாறாக, அந்த மினாக்களைப் பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் இருக்கவும் வைக்கின்ற நம் உள்மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.

ரூபிக்ஸ் க்யூப் பார்த்திருப்பீர்கள்.

இதில் உள்ள நிறங்களை அந்தந்த பகுதியில் சரியாகச் சேர்க்க 43,252,003,274,489,856,000 வழிமுறைகள் உள்ளன.

ஒரு கையடக்க க்யூபே இத்தனை வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றால், கைக்குள் அடங்காத நம் மனித வாழ்க்கைக்கு எத்துணை வழிமுறைகள் இருக்கும்.

ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!