Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      21  நவெம்பர் 2017  
                                                  பொதுக்காலம் 33ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 18-31

அந்நாள்களில் தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதை விட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். உயிர்மேல் ஆசை இருப்பினும், திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல் தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.

சட்டத்திற்கு எதிரான அந்தப் பலி விருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது போல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக் கொண்டார்கள்.

இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும், அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய், உடனே தமது முடிவைத் தெரிவித்து, தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார்.

அவர் தொடர்ந்து, "இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில், தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் ஆகும்.

மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது.

ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்; மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச் செல்வேன்"" என்றார். இதெல்லாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.

சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது. அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, "நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக் கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்"" என்றார்.

இவ்வாறு எலயாசர் உயிர் துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 3: 1-2. 3-4. 5-7யb (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரே எனக்கு ஆதரவு.

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! 2 `கடவுள் அவனை விடுவிக்க மாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி

3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். பல்லவி

5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். 7யb ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்"" என்றார்.

அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்"" என்று முணுமுணுத்தனர்.

சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்"" என்று அவரிடம் கூறினார்.

இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்"" என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா


பொன்மொழி
பயணமாகும் திருச்சபையாகிய நாம் விண்ணகத்தை அடைவதற்கான படகுதான் அன்னை மரியா - தூய ஜெர்மானுஸ்.

இன்று நாம் மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். மகிழ்ச்சி மிகுந்த இந்த பொன்னாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதைச் சந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

வரலாற்றுப் பின்னணி

இஸ்ரயேலில் பிறந்த ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்பதைப் போன்று, பெண்தலைப்பேற்றை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறை இல்லை. ஆனாலும் மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் அவரை ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.

மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைப் பற்றியா செய்தி விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் இதைப் படிக்கின்றோம். மரியாவின் பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை. எனவே இருவரும் குழந்தைக்காக ஆண்டவரிடத்தில் இடைவிடாது வேண்டிவந்தார்கள். அதன் பயனாக அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியா பிறந்தார். எனவே இறையருளால் பிறந்த மரியாவை, அவருடைய பெற்றோர் அவருக்கு மூன்று வயது நடந்துகொண்டிருந்தபோது ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். இப்படித்தான் யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

543 ஆம் ஆண்டு ஜஸ்டினியன் என்ற மன்னன் மரியாவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தை நினைவுகூரும் வகையில் எருசலேமில் மரியாவுக்கென்று ஓர் ஆலயத்தைக் கட்டிஎழுப்பினான். அந்த ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது ஒரு விழாவாகக் கொடுக்கப்பட்டது. 1166 ஆம் ஆண்டு மனுவேல் கமீனஸ் என்பவரால் இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான ரலாற்றுக் குறிப்பு இருக்கின்றது. இப்படியாக பல்வேறு நபர்களால், பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவரால் உலகம் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழா நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாவ மாசின்றிப் பிறந்த மரியா, ஆண்டவர் இயேசு அவருடைய வயிற்றில் பிறக்க சிறந்த விதமாய் தயாரிக்கப்படுகின்றார், அதன் ஒரு படிதான் அவர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மரியா தன்னுடைய உள்ளத்தை/ உதிரத்தை எப்போதும் இறைவன் தாங்கும் இல்லிடமாகவே வைத்திருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


இறைவனுக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணித்தல்


மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, இறைவனுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து, இறைவனின் திருவுளமே தன்னுடைய திருவுளம் என உணர்ந்து வாழ்கின்றார். வானதூதர் கபிரியேல் அவரிடம் மங்கள வார்த்தை சொன்னபோதுகூட, "என்னுடைய விரும்பம் அல்ல, உம்முடைய விரும்பப்படியே ஆகட்டும்" என்கிறார். ஆகையால் இந்த விழா உணர்த்தும் மிக முக்கியமான செய்தியாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது கடவுளுக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்கவேண்டும் என்பதாகும். அரைகுறை மனதோடு அல்ல, முழுமையாய் நாம் இறைவனுக்கு நம்மையே அர்ப்பணிக்கவேண்டும்.

ஒர் ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக செல்வம் கொட்டிக்கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்லை. இந்த வாழ்க்கை வீண் என்று துறவறத்தில் இறங்கினான். எனவே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், பணம் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துகொண்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான். அப்போது துறவி மரத்தடியில உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்து விட்டு, "குருவே! இதுதான் என்னுடைய மொத்த சொத்தும். இவை அனைத்தையும் உமக்குத் தருகின்றேன... இனி இவை எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு துறவியின் அமைதியும், சந்தோஷமும் மட்டும் போதும்" என்றான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட துறவி, "இவை அனைத்தையும் பூரணமாக அர்ப்பணித்து விட்டாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆம் குருவே!" என்றான். இப்படி அவன் சொல்லி முடித்ததுதான் தாமதம், துறவி அந்த மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பிச்சார். அதைப் பார்த்ததும் செல்வந்தனுக்கு பேரதிர்ச்சி. போலித் துறவியாக இருப்பாரோ இவர், என நினைத்த அவன் துறவியைத் துரத்த ஆரம்பித்தான். துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் துறவி எல்லாத் தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்றார். அப்போது அந்த செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார், "என்ன பயந்துவிட்டாயா? இப்போதாவது உன் பூரண அர்ப்பணத்தையும் துறவையும் புரிந்து கொண்டாயா?, எல்லாவற்றையும் முழுமையாய் அர்ப்பணித்திருந்தாய் என்றால், என்பின்னால் இப்படி ஓடி வந்திருக்கமாட்டாய், என் பின்னால் ஓடியதிலிருந்தே தெரிகின்றது நீ இன்னும் துறவற வாழ்க்கைக்கு உன்னை முழுதாய் அர்ப்பணிக்கவில்லை என்று" என்று சொல்லிவிட்டு, "இந்தா உன் சொத்து மூட்டை, நீயே வைத்துக்கொள்" என்று சொல்லி அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்தார். துறவியின் வார்த்தைகளைக் கேட்ட செல்வந்தன் வருத்ததோடு வீடு சென்றான்.

முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்காத யாரும் துறவற வாழ்வுக்குத் தகுதியில்லை என்பதை இந்த கதை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.

ஆனால் மரியா அப்படியில்லை, அவர் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிறகு தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் அவருக்காகக் கொடுத்தார். எனவே, மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த விழாநாளில் நாமும் மரியாவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற, இறைவனுக்காக நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று"

"தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை" என்ற புகாருடன் ஒரு துறவியை தேடிப்போனார் இளைஞர் ஒருவர்.

"சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்" என்று துறவி அழைத்தார். இளைஞரும் துறவியைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது வழியில் மரமொன்றை இறுகக் கட்டிக்கொண்ட துறவி, "இந்தம் மரம் என்னை விடமாட்டேன் என்கிறது" என்று அலறி ஆர்ப்பாட்டம் செய்தார். அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். ஆனால் துறவியோ மரத்தை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டார்.

குழப்பமடைந்த இளைஞர் துறவியிடம், "இது என்ன குழந்தைத்தனமாக அல்லவா இருக்கின்றது. மரத்தை நீங்கள் பிடித்துக்கொண்டு, மரம் என்னை விடமாட்டேன் என்கிறது என்று சொல்கிறீர்களே?" என்றார். "மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களை கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்" என்றார் துறவி. அப்போதுதான் யார், எதைப் பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மை இளைஞருக்குத் தெளிவாக விளங்கியது.

பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவர் அல்லது பாவத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒருவர், தான் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராதவரை பாவத்திலிருந்து விடுபட முடியாது என்பது நிதர்சன உண்மை.

நற்செய்தி வாசகத்தில் பாவத்தில் வாழ்ந்துவந்த சக்கேயு, தான் பாவத்தில்தான் வாழ்ந்து வருகின்றோம் என்ற உண்மையை உணர்ந்த பின்பு மனமாற்றம் அடைகின்றார். சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு எத்துணை சிறப்பானது என்று இப்போது பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு பாடுகள் படுவதற்கு எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். அப்படி அவர் போகும் வழியில், எரிக்கோ நகர் வழியாகப் போகின்றார். அந்நகரானது வளம் கொழிக்கக்கூடிய ஒரு நகர். அப்படிப்பட்ட இடத்தில்தான் சக்கேயு என்னும் ஒருவர் இருக்கின்றார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.

சக்கேயுவைக் குறித்து அறிந்துகொள்ள முற்படும்போது மூன்று காரியங்களை அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

ஒன்று சக்கேயு மிகப் பெரிய செல்வந்தராக இருந்தும், மன அமைதி இல்லாமல் இருந்தார் என்பதாகும். சக்கேயுவிடம் ஏராளமான சொத்துக்கள், உடமைகள் இருந்தன. அப்படியிருந்தும் அவரிடம் மன நிம்மதி இல்லாமல் போனது துரதிஸ்டம்தான். யூதர்கள் வரிதண்டுபவர்களை நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு இணையாகக் கருதியதால், அவர்களோடு யாரும் பேசவும் இல்லை, பழகவும் இல்லை. இப்படி எல்லாராலும் தனிமைப்பட்ட வாழ்க்கையைத் தான் வரிதண்டுபவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்நேரத்தில்தான் வரிதண்டுபவர்களுக்குத்தான் தலைவராகிய சக்கேயு, "இயேசு பாவிகளையும் கைவிடப்பட்டவர்களையும் அரவணைக்கின்றார்; அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கின்றார் என்று கேள்விப்படுகின்றார்.

இரண்டு, சக்கேயு இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பார்க்கவும் விரும்புகின்றார். சக்கேயுவோ உயரம் அதிகமில்லாதவர்; மிகவும் குட்டையானவர். எனவே, கூட்டத்தோடு இருந்தால் இயேசுவைப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து, ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொள்கின்றார். அவ்வழியாக வரக்கூடிய இயேசு, சக்கேயு அத்திமரத்தின் மேலே இருந்துகொண்டு தன்னைப் பார்ப்பதற்காக ஆவல் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து, "சக்கேயு விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்கின்றார்.

மூன்று, தான் மனம்மாறிவிட்டேன் என்பதை செயலில் காட்டிய சக்கேயு. தன்னுடைய வீட்டில் இயேசு தங்கப் போகின்றார் என்று சொன்னதைக் கேட்டு சக்கேயு தான் உண்மையிலே மனமாறியவன் என்பதை மக்களுக்கு அறிவிக்கின்றார். "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன்" என்கின்றார். யூதர்களின் வழக்கத்தின் படி ஒருவர் மற்றவர்மீது பொய்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், அந்தப் பணத்தையும், அந்தப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதியையும் பாதிக்கப்பட்டவருக்குத் திரும்பிச் செலுத்தவேண்டும் (லேவி 6:5), ஆனால் சக்கேயுவோ உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகச் சொல்வதோடு மட்டுமல்லாமல், பொய்க்குற்றம் சுமத்தி கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திரும்பித் தந்துவிடுகிறேன் என்கின்றார். இவையெல்லாம் சக்கேயு முழுமையாக மனம் மாறி விட்டார் என்பதை எடுத்துக்கூறுகின்றது.

சக்கேயு இவ்வாறு சொன்னதைக் கேட்ட இயேசு, "இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கின்றார். அது மட்டுமல்லாமல் இழந்து போனதைத் தேடிமீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார் என்கின்றார். நாம் நம்முடைய பாவத்தை விட்டு முற்றிலுமாக மனந்திரும்பி வாழ்கின்றபோது இறைவனின் ஆசிரை அளவு கடந்த விதமாய் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. அதற்கு சக்கேயுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

எனவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்றிருக்கும் நாம், அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மனம் மாறுவோம், இறைவழியில் நடப்போம்

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களோடு பக்கத்து ஊருக்கு பயணமானார். அங்கே அன்பர் ஒருவர் அவர்களுக்கும், ஊர் மக்கள் எல்லாருக்கும் சேர்த்து உணவு கொடுப்பதால் தட்டும், டம்ளரையும் தவிர வேறு எதுவும் எடுத்துகொண்டு போகவில்லை. சீடர்களும் தங்களுக்கு உரிய தட்டையும், டம்ளரையும் தங்களோடு எடுத்துகொண்டு சென்றனர்.

நேரமானதால் இரவு அவர்கள் வழியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அப்போது எல்லாரும் தூங்கிகொண்டிருந்த நேரம் பார்த்து, திருடன் ஒருவன் குரு வைத்திருந்த தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடினான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த சீடர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். அதற்குள் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த குருவும் திருடனைத் துரத்திக்கொண்டு ஓடினார். "நாம்தான் திருடனுக்குப் பின்னால் ஓடுகிறோமே, எதற்காக குரு ஓடிவரவேண்டும். என்ன இருந்தாலும் குருவுக்கு இது ஆகாது என்று சொல்லிக்கொண்டே ஓடினார்கள்.

ஆனால் குரு அவர்களது பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல், அவர்களைவிட வேகமாக ஓடி திருடனைப் பிடித்தார். பின்னாலே வந்தே சீடர்கள் திருடனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் அவ்வூரில் வாழ்ந்த மிகப்பெரிய திருடன். குரு வைத்திருந்தது தங்கத்தட்டு என்று நினைத்துதான் அதைத் திருடினான் என்ற உண்மை அவனை விசாரித்தபிறகு தெரிந்தது.. அப்போது குரு திருடனைப் பார்த்து, "மகனே! அது தங்கத்தட்டு எல்லாம் ஒன்றும் கிடையாது. அது ஓட்டை விழுந்த பழைய தட்டு. மேலும் அப்படிப்பட்ட ஓட்டைத்தட்டை நீ தூக்கிக்கொண்டு போனால் அது உனக்குப் பயன்படாது என்பதற்காகத்தான் என்னிடம் இருந்த புதுத்தட்டை உன்னிடம் கொடுப்பதற்காக வந்தேன்" என்றார்.

குருவின் பேச்சைக் கேட்ட திருடன், "இப்படிப்பட்ட ஒரு மகானிடமா திருட வந்தோம் என்று தன்னுடைய தவறை உணர்ந்தான். அதன்பிறகு மனந்திரும்பி சீடராக வாழ்ந்துவந்தான். அன்போடும், கரிசனையோடும் ஒருவரிடம் நடந்துகொண்டால் எப்படிப்பட்ட தீயவனும் மனம்திருந்துவான் என்பதை இக்கதையானது நமக்கு அருமையாக விளக்குகின்றது.

நற்செய்தியில் சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு வரிதண்டுபவர்களுக்கு எல்லாம் தலைவன். வரிதண்டுபவர்கள் யூத மக்களால் "நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு இணையாக" சித்தரிக்கப்பட்டார்கள்; அவர்கள் மக்களால் பாவிகள் என்றே கருதப்பட்டார்கள்.. அதனால் சக்கேயு தன்னுடைய உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறான். இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் அவன், அவரை எப்படியாது பார்த்துவிடவேண்டும் என நினைக்கிறான்.

அவ்வேளையில் அந்த வழியாக வரும் இயேசு, "சக்கேயுவே இறங்கிவா, இன்று நான் உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்" என்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, "ஆண்டவரே! என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர்மீதாவது பொய்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறான். உடனே இயேசு அவரைப் பார்த்து, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கிறார்.

சக்கேயுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நாம் எப்படி மனமாற்றம் அடையவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. சக்கேயு முதலில் தன்னுடைய தவறை உணர்கிறான்; அதன்பின்னர் ஆண்டவரிடம் அறிக்கையிடுகிறான்.

த்திற்கான பரிகாரம் செய்கிறான். இனிமேல் இப்படிப்பட்ட தவறு செய்வதில்லை என்று உறுதியேற்று மனம்திருந்தி வாழ்கிறான். இயேசுவின் அன்பை விட்டுவிலகி வெகுதொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், நமது தவறை உணர்ந்து, அதை இறைவனிடம் அறிக்கையிட்டு மனம்திரும்பி வாழ்வோம்.

திருப்பாடல் 51:17 ல் வாசிக்கின்றோம், "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை". ஆம் ஆண்டவர் மனந்திரும்பி வரும் தன்னுடைய பிள்ளையை அன்போடு ஏற்றுகொள்கிறார்.

ஆதலால் மனந்திரும்பி வாழ்வோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
குட்டையாய்

"ஏனெனில் சக்கேயு குட்டையாய் இருந்தார்." (காண் லூக்கா 19:1-10)

குருமடத்தில் பயின்றபோது எப்போதெல்லாம் இந்த வாசகம் வாசிக்கக் கேட்பேனோ, அப்போதெல்லாம் ரொம்ப கூச்சமாக இருக்கும். "குட்டையாய்" இருத்தல் எனக்கு அப்போது பிடிக்கவில்லை. நான் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், இந்த வாசகம் வாசித்தபின் சாப்பாட்டு அறையில் சில "வளர்ந்தவர்கள்" என்னைப் பார்த்து, "இன்று உன்னுடைய வாசகம்" என்று கேலி செய்திருக்கிறார்கள். சிலர் என்னை "சக்கேயு" என்றும் அழைப்பார்கள்.

குட்டையாய் இருப்பது பற்றி இப்போது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படி வருத்தம் இல்லை என்று சொல்ல முடியும்?

பாலசந்தரின் "இரு கோடுகள்" தத்துவம்தான். ஒரு கவலையைவிட பெரிய கவலை வந்துவிட்டால் இந்த ஒரு கவலை சின்னதாகிப்போய்விடும்.

அப்படி என்ன இப்போ பெரிய கவலை என்று கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை.

நான் குட்டையாகப் பிறந்ததற்கு நான் பொறுப்பல்லவே.

ஜீன்களின் தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்?

சக்கேயுவும், இயேசுவும் ஒரே வயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும். குட்டையாய் இருந்தாலும் ஆளு ரொம்ப கறாரான ஆள். குட்டையாய் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப கறாரானவர்கள் என்பதற்கு வரலாறும் சான்று பகர்கிறது: நெப்போலியன், சார்லி சாப்ளின், ஹிட்லர், தொன் போஸ்கோ.

அவர் பெரிய புத்திசாலியாகவும் இருந்திருக்க வேண்டும். உரோமையர்களுக்கு கீழ் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.

இயேசுவைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறார்.

அதற்கான தடைகளை தானே வெல்கின்றார்.

இயேசுவைக் கண்டவுடன் மெய்மறந்து போகின்றார்.

பாதியைக் கொடுக்கிறேன். நாலு மடங்கு கொடுக்கிறேன். என அப்படியே எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கின்றார்.

சக்கேயுவின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

கடவுளுக்கு கொடுப்பது என்று சொல்வதைவிட, அவர் "அள்ளி வீசுகிறார்" என்றே சொல்வேன்.

நான் புனித நாடுகள் பயணத்தின்போது எரிக்கோவில் இருக்கும் சக்கேயு ஏறிய மரத்திற்குச் சென்றேன். அந்த இடத்தில் வளரும் மரம் இன்னும் குட்டையாகவே இருப்பது ஆச்சர்யம்.
குட்டையும், குட்டையும் சேர்ந்தது நிறைவான மீட்பிற்கு வழிவகுத்தது.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!