Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      20  நவெம்பர் 2017  
                                                  பொதுக்காலம் 33ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 10-15, 41-43, 54-57, 62-64

மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.

அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, "வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பலவகைக் கேடுகள் நேர்ந்துள்ளன" என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர். இது அவர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது.

உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான். வேற்றினத்தாருடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்; விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டு விட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லா வகைத் தீமைகளையும் செய்தார்கள்.

எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும் என்றும் அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர். இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டு முறைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தினர். நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.

எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மன்னனது கட்டளை. எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப் பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்; உணவுப் பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதை விட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதை விடச் சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 119: 53,61. 134,150. 155,158 (பல்லவி: 88)

பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது. 61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன். பல்லவி

134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன். 150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு. பல்லவி

155 தீயோர்க்கு மீட்பு வெகுதொலையில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை. 158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில் இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார்.

முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள்.

ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று இயேசு கேட்டார்.

அதற்கு அவர், "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.

இயேசு அவரிடம், "பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.

அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். அவரோ இன்னும் உரக்கக் கத்தினார்

குரு ஒருவர் மரண படுக்கையில் இருந்தார். அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். குரு மெல்ல அவனை அழைத்து, "சிஷ்யா ஏன் கவலைப்படுகிறாய்?  உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே". அதற்கு கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான், "குருதேவா! நீங்கள் கூறியபடி ஜெபம், தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?"

அணையும் ஜோதி பிரகாகமாக சுடர்விடும் என்பதை போல ஒளிமயமான  முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு. "கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன, .அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும்பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்" என கூறியபடி அவர் தன்னுடைய உயிரைத் துறந்தார்.

நாட்கள் சென்றன. தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை. தியானம், ஜெபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என்றுகூட எண்ணினான். குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.
சிஷயன் ஞானம் அடைந்தான்.

நாட்கள் சென்றன. சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர். மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான். அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்.

இன்னும் நாட்கள் சென்றன. தனது இறுதி காலத்தை அடைந்தான். தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான். "எனது பிரிய சிஷ்யா! எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்".

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யனுக்கு தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான். அதில் எழுதி இருந்த வாசகம் "இன்னொரு முறை முயற்சி செய்" என்பதாகும்.

ஆம், "இன்னொரு முயற்சி செய்" என்பது சாதாரண வசனம் கிடையாது. அது வெற்றியை அல்லது நம்முடைய இலக்கை நோக்கி முன்னெடுத்து வைக்கும் ஒரு அடியாகும். யாராரெல்லாம் இந்த தாரக மந்திரத்தை தங்களுடைய வாழ்க்கையில் ஏற்று நடக்கின்றார்களோ அவர்கள் தாங்கள் விரும்பியதை அடைவார்கள் என்பது உறுதி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பாடுகள் படுவதற்காக எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். அவரைப் புடைசூழ மக்கள்கூட்டம் சென்றுகொண்டிருக்கின்றது. இதற்கிடையில் இயேசு அவ்வழியாக வருகின்றார் என்பதைக் கேள்விப்படும் பார்வையற்ற ஒருவர், இயேசுவிடமிருந்து குணம் பெறுவதற்காக "தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்" என்று கத்துகின்றார். மக்கள்கூட்டம் அவரைப் பேசக்கூடாது என்று அதட்டியபோது அவர் இன்னும் உரக்கக் கத்துகின்றார். இறுதியில் பார்வையற்றவரின் குரல் இயேசுவுக்குக் கேட்க அவர் அம்மனிதரைத் தம்மிடம் வரவழைத்து அவருக்கு நலம் தருகின்றார்.

இந்த நிகழ்வில் வரும் பார்வையற்றவர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். மக்கள் கூட்டம் அவரை கத்தக்கூடாது என்று அதட்டியபோதும், பெருந்திரளான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு செல்கின்றார்களே, இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய குரல் இயேசுவுக்கு எப்படிக் கேட்கும் என்பதை எல்லாம் பற்றி கவலைகொள்ளாமல் விடாமுயற்சியோடு அவர் "தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்" என்று உரக்கக் கத்துகின்றார். அவருடைய விடாமுயற்சியும் இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் இறுதியில் அவருக்கு நலத்தைப் பெற்றுத் தருகின்றது.

பார்வையற்ற மனிதரிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார் என்பதும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டியதொன்றாக இருக்கின்றது. வழக்கமாக யூத இரபிக்கள் பயணத்தின்போது மக்களுக்குப் போதித்துக்கொண்டே செல்வார்கள். இயேசுவும் அப்படித்தான் மக்களுக்குப் போதித்துக்கொண்டே சென்றிருக்கவேண்டும். அந்நேரத்தில் பார்வையற்ற மனிதர்கள் அவரை உரக்கக் கத்தி அழைக்க, இயேசு தன்னுடைய போதனையை முடித்துக்கொண்டு அந்த பார்வையற்றவனை அழைத்து, அவனைக் குணப்படுத்துகின்றார். போதனைக்கும் வாழ்வுக்கும் தொடர்பிருக்கவேண்டும் என்பதை இயேசு தன்னுடைய வாழ்வால் நிரூபிக்கின்றார். இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தியதும் அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றதும் இன்னும் சிறப்பான ஒரு காரியமாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரிடத்தில் ஆழமான நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 நலமளிக்கும் நம்பிக்கை

அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள லைவ் ஒக் என்ற கிராமத்தில் ஆன் பெம்ப்ரி என்ற ஒரு தாய் தன்னுடைய மூன்று மகனோடு வாழ்ந்து வந்தாள். இளையவனாகிய ஆன்ட்ரூவைத்தவிர மற்ற இரண்டு மகன்களும் தன்னுடைய அம்மா செல்வதைக் கேட்டு நல்லபிள்ளையாக வளர்ந்துவந்தார்கள். ஆண்ட்ரூ மட்டும் எப்போதும் முரண்டு பிடிப்பவனாகும், எல்லாரோடும் சண்டை போடுபவனாகவும் வளர்ந்துவந்தான். இதனால் அவனுடைய தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள்.

தன்னுடைய பையன் வீட்டில்தான் இப்படி இருக்கிறான் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால் நல்லவனாக மாறிவிடுவான் என்ற எண்ணத்தில் அவனை அருகாமையிலிருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாள். ஆனால் அங்கேயும் யாரையாவது அடித்துவிடுகிறான், சண்டைபோட்டுவிடுகிறான் என்றே அவன் படித்த பள்ளித் தலைமையாசிரியர் புகார் கொடுத்தார். "தன்னுடைய மகன் இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டான்" என்று ஒவ்வொருமுறையும் அவனுக்காக பரிந்துபேசி, அவனை பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிக்கொண்டாள். அந்த நாட்களிலெல்லாம் அவள் தன்னுடைய மகன் நல்ல பையனாக மாறவேண்டும் என்று நம்பிக்கையோடு கடவுளிடத்தில் வேண்டினாள்.

ஒருநாள் அவனுடைய பள்ளிக்கூடத்திலிருந்து வந்த தலைமையாசிரியர், "உங்கள் பையன் பள்ளிக்கூடம் வந்து பலநாட்கள் ஆகிறது" என்று சொன்னதும், அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன்னுடைய பையன் தன்னிடத்தில் பள்ளிக்கூடம்தான் சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு, இப்படி பள்ளிக்கூடமே போகாமல் இருக்கிறானே, அப்படி என்னதான் செய்கிறான்" என்று அறிய முற்பட்டபோது அவன் தீய நண்பர்களோடு சேர்ந்து சூதாட்டம், குடி, திருட்டுவேலை போன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டுகொண்டாள். இவன் இங்கே இருந்தால் நல்லதல்ல, ஒரு மனநல ஆலோசனை மையத்தில் சிலமாதங்கள் வைத்து பார்த்துக் கொள்வோம் என்று அவனை மனநல ஆலோசனை மையத்தில் அனுமதித்தாள். அந்நாட்களில் எல்லாம் அவன் தன்னுடைய தாயோடு பேசுவதில்லை.

ஒருசில வாரச் சிகிச்சைக்குப்பின் அவன் இப்போது மனத்தெளிவு பெற்றிருந்தான். அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் அந்தத் தாயிடம், "உங்கள் மகன் இப்போது சரியாகிவிட்டான். அவனை நீங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம்" என்று சொன்னதும், அவள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

இது நடந்து ஓராண்டுக்கும் மேல் இருக்கும். ஒருநாள் அவன் தன்னுடைய தாயிடம், "அம்மா நான் இப்படி முற்றிலுமாக மாறுவதற்கு காரணம் நான் கண்ட ஒரு கனவுதான்" என்றான். "கனவா?" என்று ஆச்சர்யம் மேலிடக் கேட்டாள். "ஆம் அம்மா, எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நாட்களில் ஒருநாள் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் நான் வழியோரமாக போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவள் பார்ப்பதற்கு குண்டாய், அழகாய், வெள்ளை நிறத்தில் ஓர் ஆடை அணிந்திருந்தாள். அவள் என்னை அருகில் அழைத்தாள். நானும் அவள் அருகில் சென்றேன். அப்போது அவள் என்னிடம், "நீ போகும் பாதை சரியில்லை, தயவுசெய்து உன் வழியை மாற்றிக்கொள்" என்று சொன்னாள். அதற்குள் எனக்கு விழிப்பு வந்துவிட்டது. அன்றிலிருந்து நான் மனம்மாறி வாழ ஆரம்பித்தேன்" என்றான்.

இதைக் கேட்டதும் அந்தத் தாய், வீட்டுக்குள் சென்று ஒரு புகைப்படத்தை எடுத்துவந்து, அவனிடம் காட்டினாள். "கனவில் நீ கண்ட மூதாட்டி இவள்தானா?" என்று கேட்டாள். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அவன், "இந்த மூதாட்டியைத் தான் நான் என் கனவில் பார்த்தேன்" என்றான். உடனே அவள், "மகனே! இந்த மூதாட்டி வேறு யாருமல்ல உன்னுடைய பாட்டிதான், அதாவது என்னுடைய அம்மா. இறைவனிடம் உனக்காக நம்பிக்கையோடு மன்றாடினேன். அதனால்தான் கடவுள் உன்னுடைய பாட்டி வழியாக செயல்பட்டிருக்கிறார்; உண்மையில் கடவுள் மிகப் பெரியவர்" என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

நம்பிக்கையோடு வேண்டும்போது இறைவன் நிச்சயம் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு எரிக்கோவை நோக்கிக் சென்றுகொண்டிருக்கும்போது பார்வையற்ற ஒருவர், "நாசரேத்து இயேசுவே! தாவீதின் மகனே என்மீது இரங்கும்" என்று கத்துகிறார். மக்கள்கூட்டம் அவரை அதட்டினாலும், இயேசு தனக்கு குணம் தருவார் என்று விடாது, நம்பிக்கையோடு கத்துகிறார். அவரைப் பார்த்த இயேசு, அவரைக் குணப்படுத்துகிறார்.

இங்கே பார்வையற்ற அந்த மனிதரின் நம்பிக்கை அளப்பெரியது. நம்பிக்கைப் பயணத்தில் ஒருசிறு தடங்கல் வந்தாலும், அதனை அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் பார்வையற்ற அந்த மனிதர் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தாலும், அவர்கள் சத்தம் போடாதே என அதட்டினாலும், அவர் நம்பிக்கையோடு இயேசுவின் அருளை இறைஞ்சி நிற்கிறார். இறைவனின் அருளைப் பெறுகிறார்.

நம்மிடம் அம்மனிதரிடம் விளங்கிய நம்பிக்கை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். திபா 9:18 ல் வாசிக்கின்றோம், "எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போவதில்லை" என்று. "வெற்றிபெற வேண்டும் என்ற திடமான நம்பிக்கையே பாதி வெற்றியைத் தந்துவிடும்" என்பார் ஆபிரகாம் லிங்கன்.

ஆதலால் இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து வாழ்வோம். இறையருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

மீண்டும் பார்வை

"மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்!" (திபா 119:134)

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய வரலாற்றில் மிக சோகமான நாளாகக் கடந்து போனது.

பிரான்சு நகரின் பாரிசு நகரில் 8 இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்புக்களால் ஐரோப்பாவே கண்ணீருடன் நிற்கிறது.

இழந்த உயிர்கள். அவர்களுக்காக காத்திருக்கும் உறவுகள். காயம்பட்டவர்கள். கைகால் இழந்தவர்கள். உயிர். உடைமை. உறவு. இவ்வாறு பல இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு.

இறைவனின் பெயரால் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டது என்று நினைக்கும்போது இறைவன்மேல் கோபம் வருகிறது.

"ப்ரே ஃபார் ஃப்ரான்ஸ்"

இப்படி டுவிட்டரில் ஒரு ஹேஸ்டேக் வருகிறது.

எந்தக் கடவுளிடம் செபிக்க?

"உங்கள் பக்தர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!" என்று அல்லாவிடமா?

அல்லது "உங்கள் பக்தர்களைக் காப்பாற்றுங்கள்!" என்று இயேசுவிடமா?

யார் இவர்கள்? யார்மேல் இவர்களுக்குக் கோபம்? தங்களின் கோபத்தை ஒன்றுமறியாத மூன்றாம் நபரிடம் காட்டுவது என்ன நியாயம்? யாரைப் பயமுறுத்துவதாக நினைக்கிறார்கள்? இந்தப் பயமுறுத்தலால் இவர்கள் சாதித்துவிட்டது என்ன?

பழிக்குப் பழி என்றால், கண்ணுக்குக் கண் என்று எடுத்துக் கொண்டே போனால் வெறும் காலணிகள்தான் மிஞ்சும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்.

ஒவ்வொரு மனிதருக்குள் நடக்கும் போராட்டத்திற்கே விடைதெரியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்க, நம் சொந்த இனத்தை அழிக்க, அவர்களுக்கு எதிராக போராட நாம் ஏன் துணிய வேண்டும்?

"மனிதர் மனிதருக்குச் செய்யும் தீங்கு" பற்றி நாளைய திருப்பாடல் (119) நமக்குச் சொல்கிறது. மனித இனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பண்பு மனிதரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

நம் நாளைய செபம் "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்!" என்று நற்செய்தி வாசகத்தில் இருப்பதுபோல இருக்கட்டும்.

என் அருகில் இருப்பவரை நிறத்தை, மதத்தை, இனத்தை, மொழியைக் கடந்து என்னைப்போல ஒருவராக நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று கேட்போம்!

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!