Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வாசகங்கள்

 

     
          பொதுக்காலம்: 31ஆம் ஞாயிறு          
முதல் வாசகம்

திறமை வாய்ந்த பெண், தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.

அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல்  - திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)


பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
 

இரண்டாம் வாசகம்

திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

திருத்தூதர்பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல்திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

"எங்கும் அமைதி, ஆபத்து இல்லை" என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு
வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது.

ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4a,5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.

அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.

ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, "ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்" என்றார்.

அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, "ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்" என்றார்.

அவருடைய தலைவர் அவரிடம், "நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, "ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார்.

"எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்று அவர் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

மறையுரைச் சிந்தனை


திறமைகளைத் திறம்படப் பயன்படுத்துவோம்

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அந்த மூன்று மகன்களில் மூத்தவன் மரங்களை வளர்ப்பதில் கெட்டிக்காரன். இரண்டாமவன் ஆடுகளை வளர்ப்பதில் கெட்டிக்காரன். கடைசி மகனோ யாழ் மீட்டுவதில் கெட்டிக்காரனாக விளங்கினான். ஒருநாள் அரசன் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, தான் ஐந்தாண்டு காலம் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாகவும், அந்த ஐந்தாண்டுகளில் மக்களை நன்றாகப் பராமரிக்கும்படியாகும் கேட்டுக்கொண்டுவிட்டு புறப்பட்டார்.

அரசர் போனபிறகு அவருடைய மூன்று மகன்களும் நாட்டு மக்களை சில மாதங்களுக்கு சிறப்பாக நடத்தினார்கள். அந்நாட்டில் குளில்காலம் வரத் தொடங்கியது. அவ்வாண்டு குளிரானது மற்ற ஆண்டுகளில் ஏற்பட்ட குளிரையும்விட சற்றுக்கூடுதலாக இருந்தது. அதனால் மக்கள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றார்கள். ஒருசிலர் இளவரசர்களிடம் வந்து, உதவிகேட்டு நின்றனர். அப்போது மரங்களை வளர்ப்பதில் கெட்டிக்காரனாக இருந்த மூத்தமகனோ தான் வளர்த்த மரங்களை எல்லாம் வெட்டித்தந்து, அவற்றை வைத்து குளிர்காய்ந்து கொள்ளும்படியாகச் சொல்லி அனுப்பிவைத்தான். இதனால் குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அந்நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே, மக்கள் உணவிற்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்போது மக்கள் இளவரசர்களைச் சந்தித்து, தங்களுடைய பிரச்னைக்கு தீர்வு சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது ஆடுகளை வளர்ப்பதில் கெட்டிக்காரனாகிய இரண்டாம் மகனோ தான் வளர்த்த ஆயிரக்கணக்கான ஆடுகளை அடித்து, உணவாக உட்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். இதனால் மக்கள் ஓராளவு ஆறுதல் அடைந்தார்கள். இருந்தாலும் மக்களிடம் துயரமும், கவலையும் போகவில்லை. இதைக் கண்ணுற்ற யாழ் இசை மீட்டுவதில் வல்லவனாகிய இளைய மகனோ, அவர்களின் துயரத்தை போக்க நினைக்காமல், அவர்களோடு சேர்ந்து அழுதுதீர்த்தான். இதனால் நாட்டு மக்களில் நிறையப் பேர் தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துவைக்க ஆளில்லையே என்று சொல்லி நாட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டார்கள்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அரசர் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பி வந்தார். அவர் நாட்டைப் பார்த்தபோது மக்களெல்லாம் முகத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தார்கள். அப்போது அவர் தன்னுடைய மூன்று மகன்களிடம் காரணத்தைக் கேட்க, எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்போது அவர் அவர்களிடம், "இத்துன்பத்தைப் போக்க நீங்கள் ஏதாவது செய்தீர்களா?" என்று கேட்க, மூத்த மகன், "தந்தையே! நான் வளர்த்த மரங்களை எல்லாம் வெட்டி, மக்களது குளிரைப் போக்கினேன்" என்றான். இரண்டாம் மகனோ, "நான், இத்தனை ஆண்டுகளும் வளர்த்த ஆடுகளை எல்லாம் அடித்து, மக்களுக்கு உணவு கொடுத்தேன்" என்றான். எதுவும் பேசாதிருந்த இளைய மகனைப் பார்த்து தந்தை, "மகனே! நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார். அதற்கு அவன், "மக்களுடைய துயரம் என்னை வாட்டவே, நான் அவர்களோடு சேர்ந்து அழுதேன்" என்றான். உடனே அரசர் அவனிடம், "மகனே உனக்குத் தான் யாழ் மீட்டத் தெரியுமே, இதை வைத்து மக்களை சந்தோசப்படுத்தியிருக்கலாமே" என்றார். அதற்கு அவன் எதுவும் பேசாதிருந்தான்.

பின்னர் அரசர் அவனிடம், "சரி மகனே! இப்போதாவது நீ யாழிசை மீட்டி மக்களை மகிழ்ச்சிப்படுத்து" என்றார். அவன் தன்னுடைய அறைக்குச் சென்று யாழை எடுத்துக்கொண்டு வந்து மீட்டத் தொடங்கினான். ஆனால் இத்தனை ஆண்டுகளும் அவன் யாழினை மீட்டாததால், அவனால் யாழை சரியாக மீட்ட முடியவில்லை. அவன் தன்னுடைய நிலையை நினைத்து வெட்கித் தலைகுனிந்து நின்றான். அப்போது அரசர் அவரிடம், "நீ இத்தனை ஆண்டுகளும் யாழினை - உன்னிடமிருந்த திறமையை சரியாகப் -பயன்படுத்தாததினால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நிறைய மக்கள் நம்முடைய நாட்டிலிருந்து வெளியே கிளம்பியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற்க் காரணம் நீதான்" என்று சொல்லி அவனை சிறையில் அடைத்தார்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை - தாலந்துகளை - சரியாகப் பயன்படுத்தாதபோது இளையமகனுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை : கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளைத் திறம்படப் பயன்படுத்துவோம் என்பதாகும். எனவே, நாம் எப்படி திறமைகளை திறம்படப் பயன்படுத்தப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமை நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். இவ்வுவமை நமக்கு உணர்த்தும் முதலாவது பாடம்: கடவுள் எல்லாரையும் ஏதாவது ஒரு திறமையால் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதாகும். உவமையில் ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஒரு தாலந்து என்பது ஆறாயிரம் தெனாரியத்திற்குச் சமம். ஒரு தெனாரியம் என்பது ஒருநாள் கூலி) ஆகவே, இங்கே திறமையில்லாதவர் என்று யாருமில்லை. வேறுவிதமாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுளின் படைப்பில் யாருமே ஜடமோ அல்லது ஒன்றுமில்லாதவர் கிடையாது. திறமையைப் பயன்படுத்தாத மனிதர் வேண்டுமானால் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் திறமையில்லாதவர் என்று யாருமே இருக்க முடியாது. ஏனென்றால், நாம் அனைவரும் கடவுளது பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்; மதிப்பு மிக்கவர்கள் (எசா 43:4), ஆகையால் நாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

இவ்வுவமை நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம்: நாம் ஒவ்வொருவரும் தனிதன்மையானவர்கள் (Unique) என்பதாகும். எப்படியென்றால் இந்த உவமையில் வரக்கூடிய பணியாளர்களில் ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துகொண்டு கடவுள் நம்மை ஏற்றத்தாழ்வோடு படைத்திருக்கிறார் என்று பொருள்கொள்ளக்கூடாது, மாறாக ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட கொடைகளில், வாழ்கின்ற வாழ்க்கையில் தனித்தன்மையாக இருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே தூய ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கின்றார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள்கொடைகளையும் அளிக்கிறார்" என்று ( 1 கொரி 12: 8-11). ஆகவே, தூய ஆவியார் அல்லது கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கொடையை வழங்கியிருக்கிறார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டோம் என்றால், அடுத்தவரைக் குறித்து பொறாமை கொள்ளமாட்டோம். அடுத்தவரை கடவுளை என்னைவிட அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார் எனக் காழ்புணர்ச்சி கொள்ளமாட்டோம்.

நிறைய நேரங்களில் ஒவ்வொருவரும் தனிதன்மையானர்; வித்தியாசமானவர் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாததால்தான் பல்வேறு குழப்பங்கள், போட்டிகளும், கட்சி மனப்பான்மையும் ஏற்படுகின்றன. காயின் ஆபேலை தன்னைவிட அவன் தனித்தன்மையானவன் என்று உணர்ந்திருந்தால் ஆபேலைக் கொலைசெய்திருக்க மாட்டான். அதேபோன்று தாவீதும் தானும் தனித்தன்மையானவர்கள் என்று சவுல் உணர்ந்திருந்தால், சவுல் தாவீதைக் கொள்வதற்கு சூழ்ச்சி செய்திருக்கமாட்டான். ஆகையால், ஒவ்வொருவருமே நான் மற்றவரைவிட தனித்தன்மையானவன், வித்தியாசமானவன் என்பதை உணராததினால்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள். எனவே நாம் "ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர" என்பதை உணர்ந்து வாழ்வோம்.

இறுதியாக இவ்வுவமை உணர்த்தும் செய்தி: ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட திறமையை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து ஆகும். உவமையில் ஐந்து தாலந்து பெற்றவரும், இரண்டு தாலந்து பெற்றவரும் முறையே மேலும் ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து ஈட்டுகிறார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தில் குழிதோண்டி புதைத்து வைக்கிறார். அதனால் தலைவர் ஐந்து தாலந்து பெற்றவரையும், இரண்டு தாலந்து பெற்றவரையும் பாராட்டி, அவர்களுக்கு நல்ல பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். ஆனால் தனக்குக் கொடுப்பட்ட ஒரு தாலந்தை சரியாகப் பயன்படுத்தாத அந்த பணியாளரை வதைப்பவர்களிடம் அனுப்பி வைக்கிறார். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை, தாலந்துகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது நம்முடைய வாழ்வும் தாழ்வும் என்று சொன்னால் அது மிகையாகது.

நிறைய நேரங்களில் கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளை சரிவரப் பயன்படுத்தாத பாவிகளாகவே இருக்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சோம்பேறித் தனமும், உழைக்க மனமில்லாத மந்தத்தன்மையுமே ஆகும். "சோம்பல் ஒருவரைத் தூங்கிக்கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்" என்கிறது நீதிமொழிகள் புத்தகம் (19:15). ஆம், சோம்பேறித்தனம் நம்மை உழைக்கவிடாது; உழைக்காமலே உயரவேண்டும் என்று நினைக்கச் செய்யும், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் ஒரு கதை.

ஒருநாள் முல்லா சந்தைகூடும் இடத்தில் நின்றுகொண்டு, சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்த மக்களைப் பார்த்து, "அன்பார்ந்த நண்பர்களே, உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அருள்கூர்ந்து சற்று நில்லுங்கள்" என்று உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.

"நண்பர்களே, கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து, சுகபோக வாழ்வுவாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம், நான் அதற்கு வழி சொல்லுகிறேன். என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர், அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்" என்றார் முல்லா. அநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள். "முல்லா! உழைக்காமல் சுகபோக வாழ்வுவாழ என்ன வழி?, தயவு செய்து கூறுங்கள்" என்று மக்கள் கூச்சலிட்டனர். முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். "என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே" என்று மக்கள் கேட்டனர்.

"நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை, போய் வருகிறேன்" என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதை வேடிக்கையாக இருந்தாலும், அது உணர்த்தும் உண்மை ஆழமானது. நாம் உழைக்காமல் உயர நினைக்கிறோம். அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் இந்த கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை - தாலந்துகளை - மண்ணுக்குள் குழிதோண்டி புதைக்காமல், அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவோம், அதன்வழியாக ஆண்டவர் வரும் நாளில் (இரண்டாம் வாசகம்) அவரிடமிருந்து நல்ல வெகுமதியைப் பெறுவோம்.

 

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா