Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      18  நவெம்பர் 2017  
                                                  பொதுக்காலம் 32ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.

உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.

செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர்,"நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."

பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?"" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முயற்சி திருவினையாக்கும்

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலையடிவாரக் கிராமத்தில் கார்முகில், வணங்காமுடி என்ற இணைபிரியா தோழர்கள் இருவர் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் சோம்பேறியாக சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடும் சுறுசுறுப்பாகவும் எந்த வேலையையும் மிக அழகாக செய்து முடிக்க கூடியவன்.

ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஓர் இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் ஒரு கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக்காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கலப் பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம், எனக்கு பிள்ளை குட்டிகளென்று யாரும் கிடையாது. எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று, அந்தப் புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார்.

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம். இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம" என்று கூறினான். அதற்கு வணங்காமுடி "புதையலை கண்டறியத்தானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைத்தனம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் "உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது" என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல், அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான்.

பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியைத் தொடங்கினான். வழியில் ஒரு கடைக்காரரிடம் மலையில் இருக்கும் கோயிலை பற்றி விசாரித்தான். அதற்கு அந்த கடைக்காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும், அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார்.
அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது. ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் "மலையில் கோயிலை உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான். அதற்கு அந்த சிறுவன் "ஓ நன்றாக தெரியுமே.. வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்" என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான்.

கோவிலுக்குச் சென்ற அவன், அதற்கு எதிரே இருந்த அரசமரத்தின் அடியில் குழி தோண்டினான். இறுதியில் புதையலையும் கண்டுகொண்டான்.

தன்னம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு மலைமீது ஏறியதன் பலனாக அந்த புதையல் வணன்காமுடிக்குக் கிடைத்தது. ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுகோ எதுவும் கிடைக்காமல் போனது. தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஒரு செயலைச் செய்தால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனந்தளராமல் இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு நேர்மையற்ற நடுவர், கைம்பெண் உவமையைச் சொல்கிறார். நடுவரோ யாருக்கும் ஏன் கடவுளுக்குக் கூட பயப்படாதவர். நிச்சயம் அவர் ஒரு உரோமை அரசாங்கத்தின் நடுவராகவே இருந்திருக்க வேண்டும். யூத நடுவர்கள் அப்படி கடவுல்க்குப் பயப்படாமல் இருக்கமாட்டார்கள். அவரிடத்திலிருந்து நீதி கிடைக்கவேண்டும் என்று யாதொரு துணையும் இல்லாத கைம்பெண் போராடுகின்றார். நேர்மையற்ற நடுவர் யாருக்கும் பயப்படதவராக இருந்தாலும், அக்கைம்பெண்ணின் தொல்லையின் பொருட்டு அவர் அவருக்கு நீதியை வழங்குகின்றார்.

இந்த உவமையைச் சொல்லிவிட்டு இயேசு, "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ" என்கின்றார். இறைவன் தன் மக்கள்மீது பேரன்பு கொண்டிருப்பவர். அவர் தம்மிடத்தில் மனந்தளராது மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயம் செவிகொடுப்பார் என்பதே உண்மை.

எனவே, நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் மனந்தளராது மன்றாடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"என் இல்லம் இறைவேண்டலின் வீடு"

பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார். அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக் குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்:

"ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட மிகக்குறைவு.

மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர் வியாபாரி,      "இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை, எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை" என்றார்.

இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.

ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும், தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும் நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும், மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது. எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும், (யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும், ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து, அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள் அவரிடம், "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு  நீ கோவில் கட்டவேண்டாம்" என்கிறார். (1குறி: 22:8)

எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின் காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி, அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், "இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக".

ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார், "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு" என்று  (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள் ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர் இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார். ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல" என்பதை எண்பிக்கின்றார்.

இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி" என்பார்கள்.

எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


"He who doesnot go to church in bad weather will go to hell when it is fair"


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

பீகார் மாநிலம் பாகலூர் என்ற குக்கிராமம். இங்கே இருக்கக்கூடிய மக்கள் நிலமில்லாத பரம ஏழைகள். வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் ஐம்பது கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கக்கூடிய பக்கத்து ஊருக்குத்தான் செல்லவேண்டும். இதனால் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் பக்கத்துக்கு ஊருக்குச் செல்வதற்கான இன்னொரு வழியும் இருந்தது. அது இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் மலைக்கு உள்ளே இருந்த குறுகலான பாதை. சிலநேரங்களில் இதன்வழியாக போகமுனைவோர் உடலில் சிராப்புகளோடும், காயங்களோடுதான் திரும்பிவருவர். அரசாங்கத்திடம் ஊர் மக்கள் மலைப்பாதையை விரிவுபடுத்தவேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் கேட்கப்படாமலே போனது. இதனால் ஊர்மக்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

இவ்வேளையில் அவ்வூரில் இருந்த தஷ்ரத் மஞ்சி என்ற மனிதன் ஒவ்வொருநாளும் வேலைக்குச் சென்றுவிட்டு, உடம்பில் காயங்களோடும், சிராப்புகளோடும் வந்த தன்னுடைய மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து, "ஏன் நாமே இந்த மலையை உடைத்து பாதையை உண்டாக்கக்கூடாது" என்று சிந்தித்தான். ஊர் மக்களுக்காக அல்லாது தன்னுடைய மனைவிக்காகவே மலையில் முதலில் பாதையமைக்க முடிவெடுத்தான்.

1960 ஆம் ஆண்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினான். அப்போது ஊர் மக்களெல்லாம் அவனது செயலைப் பார்த்துக் கேலிசெய்தனர். ஆனால் அவன் தான் எடுத்த முயற்சியில் விடாமுயற்சியோடு உழைத்தான். இதற்கிடையில் ஒருநாள் அவனுடைய மனைவி மலைப்பாதையில் சென்றபோது ஒரு பாறாங்கல் அவள்மீது விழுந்து, அந்த இடத்திலே அவள் இறந்துபோனாள். "யாருக்காக இந்த மலையை உடைக்க ஆரம்பித்தோமோ அவளே இறந்துவிட்டாளே" என்று அவன் மனம்வருந்தி அழுதான்.

ஆனால் தான்கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்ததால் மலையை உடைத்து, பாதை அமைக்கும் வேளையில் மும்முரமாக இறங்கினான். அவனுடைய இடைவிடாத முயற்சியின் பலனால் 1982 ஆம் ஆம் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் 30 அடி அகலமுள்ள ஒரு பாதை உருவானது. தனது மனைவிக்காக தொடங்கிய முயற்சி ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படுவதை எண்ணி அவன் மிகவும் சந்தொசப்படான். மக்களும் தஷ்ரத் மஞ்சி என்ற அந்த மனிதனின் செயலை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

விடாமுயற்சியோடு செயல்படும்போது எப்படிப்பட்ட காரியமும் சாத்தியப்படும் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விடாமுயற்சியோடு ஜெபித்தால், இறைவனின் வேண்டினால் அவர் நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்பதை கைம்பெண்ணும், நேர்மையற்ற நடுவரும் என்ற உவமையின் வாயிலாக அழகுபட எடுத்துக் கூறுகின்றார். உவமையில் வரும் நடுவர் கடவுளுக்கும் அஞ்சாதவர், மக்களையும் மதிக்காதவர். அப்படிப்பட்ட நடுவரே, கைம்பெண்ணின் விடாமுயற்சியால் - நச்சரிப்பால் - அவருக்கு தீர்ப்பு வழங்கினார் என்று சொன்னால், கடவுள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை நோக்கி அல்லும், பகலும் மன்றாடும்போது அதற்கு செவிசாக்காமல் போவாரோ? என்கிறார் இயேசு.

நாம் ஒவ்வொரும் இடைவிடாது, தொடர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக இருகின்றது. ஆனால் பலநேரங்களில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இறைவனின் ஜெபித்துவிட்டு, கடவுள் என்னுடைய ஜெபத்தை கேட்கவில்லை என்று வேதனைப்படுகின்றோம். தானியேல் புத்தகம் 6:16 ல் வாசிக்கின்றோம், "நீ இடைவிடாது வழிபடும் கடவுள் உன்னை விடுவிப்பாராக" என்று. 1 தெச 5:17 ல் "இடைவிடாது இறைவனிடம் மன்றாடுங்கள்" என்று படிக்கின்றோம்.

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அதன் வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

"கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் இவையே வெற்றிக்கு அடிப்படை" - கார்லைஸ். -

தொந்தரவு


ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தும் தன் தாயிடம், "டுவெண்டி ஃபோர் அவர்ஸ் சதா ட்ரபுள் குடுத்துகிட்டே இருக்க நீ!" என்று கடிந்து கொள்வார் எம்.ஆர். ராதா.

தொந்தரவு

ஒருவர் மற்றவருக்குச் செய்வது. இது நடக்கு இருவர் அல்லது இருவருக்கு மேல் அவசியம். எனக்கு நானே தொந்தரவு கொடுக்க முடியுமா? முடியாது. அடுத்தவர்தான் கொடுக்க முடியும். அல்லது நான்தான் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும்.

ஒரு புள்ளியில் தொடங்கும் வேலை மற்றொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்தலை மற்றவர் இடைநிறுத்தினால் அதற்குப் பெயர் தொந்தரவு.

ஆங்கிலத்தில் "disturb" என்கிறோம். இதன் இலத்தீன் மூலம் "dis-turbare". Turbain என்பது ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் dis-turb.


சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை.

உதாரணத்திற்கு, இப்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்யும் கனமழை. இந்தக் கனமழையினால் நம் பயணம், பணி தடைபடுகிறது. ஆனால், இது தவிர்க்க முடியாத தொந்தரவு.

சில தொந்தரவுகள் தவிர்க்க கூடியவை.

நாம் படிக்கும் இடத்தின் அருகில் "செல்லாத்தா, செல்ல மாரியாத்தா" என்று லவுட் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொந்தரவை தவிர்க்க நான் என் அறையின் கதவுகளை அடைக்கலாம். அல்லது வேறு இடத்திற்கு நானே மாறிச் செல்லலாம்.

சில தொந்தரவுகள் நாமாக ஏற்படுத்திக் கொள்பவவை.

முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது, ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் ஆன் செய்து வைத்து அந்த ஸ்க்ரீனில் ஒரு கண், கணிணி ஸ்க்ரீனில் மறு கண் என இருப்பது.

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 18:1-8) தொந்தரவு கொடுக்கும் ஒரு கைம்பெண்ணைப் பார்க்கிறோம். யாருக்குக் கொடுக்கிறார்? நீதியற்ற நடுவருக்கு. எதற்காக? தனக்கு நீதி வேண்டி.

இந்த நடுவர் "கடவுளுக்கும் அஞ்சுவதில்லை", "மனிதரையும் மதிப்பதில்லை".

இருந்தாலும் தொந்தரவின் பொருட்டு அடிபணிகிறார்.

இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும்.

இந்தப் பெண் தன்னிடம் ஒன்றுமில்லாத ஒருநிலையில், தன் கையறுநிலையில் நடுவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

இந்தப் பெண்ணின் நம்பிக்கை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்தப்படும் ஒருவன் தன் தலையை முட்டிக்கொண்டு மூச்சுக்காற்றுக்கு வெளியே வருவானே அப்படியிருக்கிறது.

தொந்தரவும் நல்லதே!
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!