Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      17  நவெம்பர் 2017  
                                                  பொதுக்காலம் 32ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்.

அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம். இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 1a)

பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தும்.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.

அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.

லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்."

அவர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?" என்று கேட்டார்கள்.

அவர் அவர்களிடம், "பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்" என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மானிட மகனின் வருகை எப்போது, எப்படி இருக்கும்?

முன்பொரு காலத்தில் சீனாவில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தீவிர இசைப்பிரியன். அவனுடைய அரசசபையில் எப்போதும் இசைக் கச்சேரிகள் நடந்தவண்ணமாக இருக்கும். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இசைக்குழுக்கள் வந்து, அரசனுக்கு முன்பாக இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி, ஏராளமான பரிசுகள் பெற்றுச் சென்றார்கள்.

அந்நாட்டில் சோம்பேறி ஒருவன் இருந்தான். அவன் நோகாமல் பணம் சம்பாதிக்க நினைத்தான். எனவே அவன் அரசசபையில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்துகின்ற இசைக்குழு ஒன்றில் புல்லாங்குழல் வாசிப்பவன் போன்று சேர்ந்து, அரசசபையில் புல்லாங்குழல் மீட்டுவது போன்று பாவ்லா காட்டிக்கொண்டு, பணம் சம்பாதித்து வந்தான். இசைக் கலைஞர்கள் கூட்டமாக இசைக்கருவிகளை மீட்டியதால், அவன் புல்லாங்குழல் வாசிப்பது போன்று வெறுமென வாயை மட்டும் அசைத்துக் கொண்டு எல்லாரையும் ஏமாற்றிவந்தான்.

அந்த சோம்பேறியின் ஏமாற்று வேலை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஒருநாள் அரசன் சேர்ந்து இசைக்கருவிகளை வாசித்துவந்த  இசைக் கலைஞர்களை தனித்தனியாக வாசிக்கச் சொன்னான். இதைக் கேட்ட சோம்பேறிக்கு குலைநடுங்கிப் போனது. "புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாத நாம், தனியாக வாசித்தால் நம்முடைய ஏமாற்று வேலை தெரிந்துவிடுமே" என்று பயந்து, அவன் தற்கொலை செய்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டான்.

சோம்பேறி உயிருக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அரசன் இறந்த அவனுடைய உடலைக் கழுவில் ஏற்றி கழுகுகளுக்கு இரையாக்கினான்.

இது உண்மையோ அல்லது கற்பனைக் கதையோ தெரியவில்லை. ஆனால், இது நமக்குச் சொல்லும் உண்மை மிக ஆழமானது. இந்த உலகத்தில் நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம். ஆனால், மறுவுலகத்தில் கடவுளை ஏமாற்ற முடியாது, அவர் வழங்கும் தீர்ப்பிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை  இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்த்தில் ஆண்டவர் இயேசு மானிட மகனுடைய வருகையின்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தத... மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்" என்கிறார் இயேசு. மானிட மகன் வெளிப்படும் நாளில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப் படும் என்பதுதான் இயேசு கூறும் செய்தியாக இருக்கின்றது.

மானிட மகன் எப்போது வெளிப்படுவார், இயேசு கூறுபவை அனைத்தும் எப்போது நிகழும் என்பது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைக்கு பல போலி போதகர்கள் கூறுவதுபோன்று அவருடைய வருகை இன்றோ நாளையோ அல்ல, அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால், அது நிச்சயம் நிகழும். ஆகவே, அதற்காக நம்மையே நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். திருடன் எப்போது வருவான் என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். அவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது போன்றுதான் மானிடம் மகனுடைய வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதற்காக நாம் நம்முடைய தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

மானிட மகனுடைய வருகையின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லும்போது இயேசு, "அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பார். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்" என்கிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது?. இதைக் குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்கின்றபோது, "நாம் நல்லவர்களோடு சேர்ந்து இருந்தாலும், நாம் நல்லவர்களாக இல்லாதபட்சத்தில் இறுதித் தீர்ப்பின்போது இறைவனால் கைவிடப்படுவோம் என்று சொல்வார்கள். நம்முடைய மீட்புக்கும், நாம் வீடுபேறு அடைவதற்கும் நாம்தான் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமே ஒழிய, நல்லவரோடு இருந்தாலே போதுமானது என நினைக்கக்கூடாது. அப்படி நாம் இருக்கும்போது நல்லவர் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படுவார். நாம் கைநெகிழப் படுவோம்.

ஆகவே, நாம் இறைவனுக்கு முன்பாகவும்  மானிட மகனுக்கு முன்பாகவும் நிற்பதற்கு தகுதியிள்ளவர்கள்தானா என்று பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அதற்கு  ஏற்றாற்போல் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை நாம் இறைவனுக்கு முன்பாக நிற்பதற்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றோம் என்று உணரும் பட்சத்தில், நம்மையே நாம் தகுதிபடுத்திக் கொள்வது சாலச் சிறந்த ஒன்றாகும்.

எனவே, எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய மானிட மகனுடைய வருகைக்கு நம்மையே தயாரித்துக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தன் உயிரை இழக்கும் எவரும் அதை காத்துக்கொள்வார்

சுவாமி சின்மயானந்தா தன்னுடைய "Life and Meditation" என்று புத்தகத்திலே கூப்பிடும் நிகழ்ச்சி இது.

பெருநகர் ஒன்றிலே வாழ்ந்த பெண்மணி ஒருத்தி பக்கத்துத் தெருவிலே நடந்த தனது உறவுக்காரப் பையனின் திருமண நிகழ்ச்சிக்கு தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையை தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு சென்றாள். திருமண நிகழ்ச்சி முடிய இரண்டு மூன்று மணி நேரங்கள் ஆனதால் கொஞ்சம் மெதுவாகவே வந்தாள்.

அவள் வீட்டுக்குத் திரும்பிய நேரம், அவள் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டத்திற்கு முன்பாக ஒரே கூட்டம். என்ன நடக்கிறது என்று ஒரு நிமிடம் வேடிக்கை பார்த்தாள். அங்கே தீயணைப்பு படையினர் கட்டடத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்துக் கொண்டிருந்தனர்.

அப்படியே செய்வதறியாது திகைத்து நின்றாள். திடிரெண்டு ஆவேசம் கொண்டவளாய் "ஐயோ! என்னுடைய குழந்தைக்கு என்ன ஆச்சோ" என்று அலறியடித்துக்கொண்டு உள்ளே ஓடினாள். அங்கே இருந்த தீயணைப்புப் படைவீரர்களும், மக்களும் அவளை எவ்வளவோ தடுத்தும், அவள் அவர்களது பிடியிருந்த திமிறிக்கொண்டு உள்ளே ஓடினாள். ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பின் தன்னுடைய உடலில் எந்த ஒரு தீக்காயமும் இல்லாமல் குழந்தையைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு ஆட்களுக்கு ஒரே ஆச்சர்யம், "ரொம்பவும் பயப்படுகிற பெண்மணி நீ, அப்படி இருக்கும்போது உன்னால் எப்படி இவ்வளவு பெரிய தீவிபத்திற்கு உள்ளே சென்று, உன்னுடைய குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது" என்று அவர்கள் கேட்டதற்கு, அவள், "என்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்காக என்னுடைய உயிரையும் நான் துச்சமாக நினைத்தான். அதனால் ஒரு ஆவேசம் என்னுள் பிறந்தது. அது என்னுடைய குழந்தையைக் காப்பாற்றுவதற்கு துணைபுரிந்தது" என்றாள்.

எவர் ஒருவர் தன்னுடைய உயிரை துச்சமாக நினைத்து, பிறருக்காக சாகத் துணிகிறார்களோ அவர்களை சாவு ஒருபோதும் தீண்டாது என்பதை இந்நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறுதிநாளில் என்னவெல்லாம் நடக்கும் என்று குறிப்பிடும்போது சொல்கிறார், "தன் உயிரைக் காத்துக்கொள்ளும் எவரும் அதை இழந்துவிடுகிறார், மாறாக தன் உயிரை இழக்கும் எவரும் அதை காத்துக்கொள்கிறார்". என்று. நற்செய்திகாக - தனக்காக - உயிரை இழக்கத் துணியும் எவரும் அழியாத வாழ்வு பெறுவர் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் சொல்வார்கள், "தான் உண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று வாழ்பவர்கள் இருந்தும் இறந்தவர்கள்தான். மாறாக பிறருக்காக வாழும் எவரும் இறந்தும் உயிர்வாழ்கிறார்கள்" என்று. இது உண்மை. பாரதிகூட "இந்தியா" என்ற பத்திரிகையில் ஒருமுறை இவ்வாறு எழுதியிருந்தார், "எவன் ஒருவன் பொதுமக்களுக்கு வந்த சுகதுக்கங்களும், கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுபவிக்கிறானோ, எவன் ஒருவன் இந்தத் துன்பங்களை அனுபவிப்பதன் பொருட்டுத் தன்உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறானோ அவனே மக்கள் தலைவன்" என்று.

ஆக, இயேசுவின் சீடனாக, மக்கள் தலைவனாக இருக்கும் ஒவ்வொருவரும் பிறருக்காக தன்னையே - தன்னுடைய உயிரையே - இழக்கத் தயாராக இருக்கவேண்டும். அப்படி வாழ்பவர்கள்தான் அழியா வாழ்வு பெறுவார்கள்; அவர்கள் இந்த மண்ணுலகத்தை விட்டுப் பிரிந்தாலும், மக்களால் என்றும் நினைவு கூர்ந்து கொண்டாடப் படுவார்கள்.

கோதுமைமணி மண்ணில் விழுந்து மடியும்போதுதான் மிகுந்த பலன்தரும். ஆதலால் பிறருக்காக இயேசுவைப் போன்று தன்னையே இழக்கும் மக்களாவோம். முடிவில்லா வாழ்வு பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!