Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      16  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 32ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஞானம் - என்றுமுள்ள ஒளியின் சுடர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 - 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் - எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.

ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.

ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்.

ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானம் - கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 119: 89,90. 91,130. 135,175 (பல்லவி: 89a)

பல்லவி: ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. 90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. பல்லவி

91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

135 உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். 175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது.

ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், "இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!" என்பார்கள்.

ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்."
"

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது"

இறையியலாளரும் மறைபோதகரும் மருத்துவருமான ஹென்றி நௌவேன் (Henry Nouwen) கனடாவில் உள்ள டொரண்டோவில் இருந்த சமயத்தில், தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் உணர்வற்றுக் கிடந்த ஆடம் என்ற இளைஞனுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

ஆடமிற்கு உடலில் உயிர் இருந்ததே ஒழிய, அவனால் நடக்கமுடியாது, பேச முடியாது, எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட இளைஞனுக்காக ஹென்றி நௌவேன் அதிக நேரம் எடுத்துக்கொண்டு அவனைக் குளிக்க வைப்பதும், அவனுக்கு ஆடை அணிவிப்பதும், தலைசீவி விடுவதும் இன்னும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் அவனுக்குச் செய்து வந்தார்.

இதைப் பார்த்த ஹென்றி நௌவேனின் நலவிரும்பிகள் சிலர் அவரிடம், "உங்களுக்கு இருக்கின்ற பணிகளுக்கு மத்தியில், எதற்காக அந்த இளைஞனோடு இவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள். அதனை வேறொரு காரியத்திற்காக பயனுள்ள விதத்தில் செலவழிக்கலாமே" என்று சொன்னார்கள். ஹென்றி நௌவேன் அவர்களிடம், "ஆடம் என்ற இந்த இளைஞனுக்கு சிகிச்சை அளித்து வருவதனால் பயனடைவது இந்த இளைஞன் மட்டும் கிடையாது. நானும்தான். எப்படியென்றால், நான் இந்த இளைஞனை அப்படியே ஏற்றுக்கொள்வதன் வழியாக, கடவுள் நம்மை எப்படி முழுமையாக ஏற்றுகொள்கின்றார் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அது மட்டுமல்லாமல், இந்த இளைஞனுக்கு நான் இத்தகைய சேவையைச் செய்வதன் வழியாக கடவுளுக்கே சேவை செய்கின்ற மனநிறைவு எனக்குக் கிடைக்கின்றது" என்றார்.

ஹென்றி நௌவேன் ஆடம் என்ற இளைஞரிடமும் ஏன், சந்தித்த ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்துகொண்டு செயல்பட்டது நம்முடைய  பாராட்டுக்குரியதாக இருக்கின்றது. கடவுளும் அவருடைய ஆட்சியையும் எங்கோ இல்லை, அது நம்மிடையே, நம் மத்தியில்தான் இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம், "இறையாட்சி எப்போது வரும்?" என்று கேட்கின்றார். இயேசு அவரிடம், "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது" என்கிறார்.

இயேசு தன்னிடம் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்ட பரிசேயருக்குக் கூறிய பதிலை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, நாம் செய்கின்ற இரக்கச் செயல்கள், அன்புப் பணிகள் இவற்றின் வழியாக இறையாட்சி நம் நடுவே செயல்படுகின்றது என புரிந்துகொள்ளலாம்.

இறையாட்சி என்பது என்ன? இறைவன் நமக்கெல்லாம் அரசராகவும் தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வதுதான் இறையாட்சி ஆகும். இறைவன் ஆட்சி செய்கின்றபோது எல்லாரும் எல்லா நலன்களையும் ஆசிரையும் பெறுவார்கள்; யாருக்கும் எந்தவொரு குறையும் இருக்காது. மனிதர்களாகிய நாம் ஒருவர் மற்றவருக்கு அன்போடும் இரக்கத்தோடும் பணிசெயகின்றபோது இறையாட்சி நம் நடுவே செயல்படும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், வேதனை என்னவென்றால் இறையாட்சி என்றால் ஏதோ நம்முடைய கண்களுக்குப் புலப்படாத ஒன்று என்று நினைத்துக்கொண்டு, நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை மதிக்காமல், அவர்களை அன்பு செய்யாமல் இருக்கின்றோம். இதனால், சாத்தானின் ஆட்சி இந்த உலகத்தில் பரவ நாமே காரணமாகிப் போய்விடுகின்றோம். ஆகவே, ஒருவர் மற்றவரில் இறைவன் குடிக்கொண்டிருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து,  அவர்களை அன்புசெய்து, அதன்வழியாக இறையாட்சி இந்த மண்ணில் நிலவ, நம் நடுவே செயல்பட நாம் பாடுபட வேண்டும்.

"இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது" என்ற இயேசுவின் வார்த்தையை இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கும்போது "இறையாட்சி" என்றால் வேறொன்றுமில்லை அது இயேசுவே என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். இயேசுதான் இறையாட்சியை இந்த மண்ணகத்தில் நிலைநாட்டும் வல்லமை கொண்டவர். ஆனால், அவர் யாரென மக்கள் புரிந்துகொள்ளாமல், அவருக்கு எதிராகச் செயல்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவர்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11) என்ற நற்செய்தியாளர் யோவானின் வார்த்தைகள் மிகுந்த வேதனை நிறைந்த வார்த்தைகள். ஆகையால், இயேசுதான் இறையாட்சி, அவர் வழியாகத்தான் இறையாட்சி இந்த மண்ணகத்தில் நிலைநிறுத்த முடியும் என்பதை உணர்ந்து அவருக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும்.

எனவே, நம் நடுவே செயல்படும் இயேசுவை - இறையாட்சியை - அறிந்துகொள்வோம். ஒருவர் மற்றவருக்கு சேவை செய்து வாழ்வோம், அதன்வழியாக இறையாட்சியை இந்த மண்ணில் நிலவச் செய்வோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறையாட்சி நம் நடுவே

செல்வந்தர் ஒருவர் தன்னுடைய மூன்று மகன்களுக்கும் சொத்தை சரிசமமாகப் பிரித்துக்கொடுத்தார். அப்படி இருந்தும் ஒரே ஒரு வைர மோதிரம் மீதம் இருந்தது. அதை யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தவர், தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, சில நாட்களுக்கு தொலைதூரப் பயணம் செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

அவர்கள் மூவரும் தந்தை தங்களுக்குச் சொன்னவாறே தொலைதூரப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பிவந்தனர். அப்போது அவர் மூத்தவனைப் பார்த்து, "தொலைதூரப் பயணம் செய்தநாட்களில் ஏதாவது நன்மையான காரியம் செய்தாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "நண்பன் ஒருவர் என்னிடத்தில் தன்னுடைய சொத்துகளை எல்லாம் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ஒப்படைத்துச் சென்றார். நான் நினைத்திருந்தால் அதை என் பெயருக்கு மாற்றியிருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யாமல், அதைப் பத்திரமாக அவரிடம் திருப்பிக்கொடுத்தேன்" என்றான். தந்தை அவனுடைய செயலை நன்று என்று பாராட்டினார்.

அடுத்ததாக இரண்டாமவன் வந்து, "நான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையைக் காப்பாற்றி, கரையில் சேர்த்தேன்" என்றான். தந்தை அவனையும் வெகுவாகப் பாராட்டி, அவனை அவனுக்கு உரிய இருக்கையில் போய் அமரச் சொன்னார்.

இறுதியாக இளையவன் தந்தையின் முன்பாக வந்து, "ஒருநாள் நான் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய பரம எதிரி ஒரு பாறையில் படுத்துத் தூங்கிகொண்டிருந்தான். கொஞ்சம் விட்டிருந்தால்கூட அவன் தூக்கத்தில் பாறையிலிருந்து விழுந்து செத்துப்போயிருப்பான். ஆனால் நான் அவனை எழுப்பிவிட்டு, அவனது உயிரைக் காப்பாற்றினேன்" என்றான்.

உடனே தந்தை, "இளையவனுக்குத் தான் இந்த மோதிரத்தைத் தரப்போறேன்" என்று சொல்லி, அந்த வைரமோதிரத்தை அவனுக்குக் கொடுத்தார். தொடர்ந்து அவர் அவர்களிடம் சொன்னார், "மூத்தவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளை தானே அபகரித்துக் கொள்ளாமல், அதனை அப்படியே தனது நண்பனிடம் திருப்பிக் கொடுத்தான். இது அவனுடைய நேர்மையான உள்ளத்தைக் காட்டுகிறது. நேர்மையான மனிதர்களை இன்றைக்கும் அங்கொன்றும், இங்கொன்றும் பார்க்கலாம் என்றார். அடுத்து இரண்டாமவனைப் பற்றிச் சொல்லும்போது சொன்னார், "ஆபத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு உதவும் மனிதர்களையும் இன்று ஆங்காங்கே பார்க்கலாம்; அவர்கள் ஏதோ ஒரு உள்ளுணர்வால் செயல்படுகிறார்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார், "இளையவன் தனது பரம எதிரிக்கும் உதவி செய்து, அவனது உயிரைக் காப்பாற்றி இருக்கிறான். எது எங்கேயும் காணமுடியாத ஒன்று" என்று சொல்லி அவனது செயலே உயர்ந்தது என்று வெகுவாகப் பாராட்டினார்.

பகைவருக்கும், தம்மை வெறுப்பவருக்கும் நன்மை செய்வதுதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது; அப்படி வாழும்போது இறையாட்சி இந்த மண்ணில் மலரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம், "இறையாட்சி எப்போது வரும்?" என்று கேட்கிறபோது அவர், "அது கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது; மாறாக இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது" என்கிறார். உண்மையான அன்பும், கரிசனையும், பகைவரை மன்னிக்கும் தயாளமும், நேர்மையும், அமைதியும் எங்கே செழித்தோங்குகிறதோ அங்கே இறையாட்சி - இறைவனின் ஆட்சி - செயல்படுகிறது என்பதுதான் இயேசுவின் போதனையானாக இருக்கின்றது.

எசாயா புத்தகம் 11 ஆம் அதிகாரம் 6 முதல் 9 ஆம் வரை உள்ள வசனங்களில் ஆண்டவரின் ஆட்சியின்போது (இறைவனின் ஆட்சியின் போது) எப்படியெல்லாம் இருக்கும் என்பது பற்றிச் சொல்லப்படுகின்றது. "ஓநாய், செம்மறியாட்டுக் குட்டியோடு படுத்திருக்கும்.. சிங்கமும், கன்றும், கொழுத்த காளையும் கூடி வாழும்; அவற்றை பச்சிளம் குழந்தை வழிநடத்திச் செல்லும்" என்று படிக்கின்றோம். ஆம், ஒற்றுமையும், உறவும், அமைதியும் இருக்கும் இடம்தான் இறைவன் ஆட்சி செய்யும் இடம்.

உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் 14:17 ல் வாசிக்கின்றோம், "இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்று. தொடர்ந்து 1 கொரி 4:20 ல் பவுலடியார் சொல்வார், "இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில் இருக்கிறது" என்று. ஆக, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமூகத்தில் அன்பை, மன்னிப்பை, நீதியை, சமுத்துவத்தை, சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்து வாழும்போது இறையாட்சி நம் நடுவே செயல்படும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆதலால் இறையாட்சி இம்மண்ணில் செயல்பட, இறைவழியில் நடப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!