|
|
15 நவெம்பர் 2017 |
|
| பொதுக்காலம் 32ம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக்
கொள்ளுங்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11
மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்து
கொள்ளுங்கள்; உலகின் கடையெல்லை வரை நீதி வழங்குவோரே, கற்றுக்
கொள்ளுங்கள். திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப்
பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.
ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே
உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச்
சோதித்து அறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. அவரது
அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு
வழங்கவில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; கடவுளின்
திருவுளப்படி நடக்கவில்லை. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல்
வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.
எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை
வன்மையாகத் தண்டிப்பார். அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி
நடுங்க மாட்டார்; உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்க
மாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே;
எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவரும் அவரே. அவர் வலியோரிடம்
கண்டிப்பான கணக்குக் கேட்பார்.
எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறி
பிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்; தூய்மையானவற்றைத்
தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக்
கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.
எனவே என் சொற்கள்மீது நாட்டங்கொள்ளுங்கள்; ஏக்கங்கொள்ளுங்கள்.
நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 82: 3-4. 6-7 (பல்லவி:
8a)
பல்லவி: கடவுளே, உலகில் எழுந்தருளும், நீதியை நிலைநாட்டும்.
3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமை
யுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும்
வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு
விடுதலை அளியுங்கள்! பல்லவி
6 "நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.
7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர்
போல வீழ்வீர்கள்" என்றேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 5: 18
அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய
திருவுளம் இதுவே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய
உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய,
சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு
வந்து, தூரத்தில் நின்றுகொண்டே,
"ஐயா! இயேசுவே, எங்களுக்கு
இரங்கும்"" என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம்
காண்பியுங்கள்" என்றார்.
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய்
நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு
உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம்
திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு
நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து,
"பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா?
மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய
உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக்
காணோமே!" என்றார்.
பின்பு அவரிடம்,
"எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு
நலமளித்தது"" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
நன்றி நிறைந்த நெஞ்சத்தினராக
வாழ்வோம்
உரோமையில் மக்கள் அடிமைகளாக இருந்த காலம் அது. ஓர் அடிமை தன்
முதலாளியை விட்டுத் தப்பி காட்டுக்குள் ஒடிவிட்டான். அவன்
காட்டில் இருந்தபோது, ஒரு புலி நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில்
வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல்,
அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது.
அதைப் பிடுங்கி எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய
புலி காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்திற்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப்
பிடித்து, அக்கால வழக்கத்தின்படி அவனுக்கு மரணதண்டனை கொடுக்க
ஏற்பாடு செய்தார்கள். ஒரு புலி அல்லது சிங்கத்தைப் பல நாட்கள்
பட்டினி போட்டு, மரணதண்டனைக்குள்ளானவன்மீது அதை ஏவிவிட்டு, அவனைக்
கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல, அந்த அடிமை மீது புலியை ஏவினார்கள். புலி வேகமாக அவனை
நோக்குப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி
நின்று அவனை உற்றுப் பார்த்தது. முன்னொரு காலத்தில் தன் காலில்
குத்திய முல்லை எடுத்துவிட்டவன் அவன் என்பதை அறிந்ததும், அப்படியே
நின்றவிட்டது. அடிமையும் அந்தப் புலியை அடையாளம் கண்டுகொண்டு
அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும்
அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
புலி ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை
எல்லாருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்
அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, புலியையும்
காட்டில் கொண்டு போய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
அடிமை தனக்குச் செய்த நன்மைக்கு நன்றியாக அவனைக் கொல்லாமல்
விட்டது என்பது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இப்படி உயிரனங்கள்,
விலங்குகள் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக
இருக்கும்போது மனிதர்களாகிய நாம் நன்றி கெட்டவர்களாக இருப்பது
மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிப் பயணப்பட்டுக்
கொண்டிருக்கும்போது பத்துத் தொழுநோயாளர்கள் அவரை எதிர்கொண்டு
வந்து, தங்கள்மீது இரங்குமாறு அவரைக் கெஞ்சிக் கேட்கின்றார்கள்.
அந்த பத்துத் தொழுநோயாளர்களில் ஒருவர் சமாரியர். இயேசு அவர்களிடம்,
"நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்கிறார்.
அவர்களும் இயேசு சொன்னவாறு எருசலேம் திருக்கோவிலை நோக்கிப்
போகும்போது வழியிலே அவர்களுடைய நோய் நீங்கியதை உணர்கிறார்கள்.
அதிலே ஒருவர் (சமாரியர்) தன்னுடைய நோய் நீங்கியதற்குக் காரணமாக
இருந்த இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். அப்போது இயேசு
அவரிடம், "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது
பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர
வேறு எவரும் திரும்பி வரக் காணோமே" என்கின்றார்.
லூக்கா நற்செய்தியில் மட்டும் இடம் பெறும் இந்த நிகழ்வு நமது
ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. யூதர்கள் சமாரியர்களோடு
பேசுவதில்லை, பழகுவதில்லை. யூதர்கள் சமாரியர்களை விலங்கினும்
கீழாகப் பார்த்தார்கள். அப்படியிருக்கும்போது தொழுநோய் பீடித்த
தருணத்தில் அவர்கள் ஒன்றாக இருந்தது மிகவும் வியப்புக்குரியதாக
இருக்கின்றது. நன்றாக இருக்கும் தருணங்களில் தங்கள் குலப்பெருமை
பேசிவிட்டு, மோசமாக இருக்கும் தருங்களில் அனைவரும் சமம் என்று
போலி சமத்துவம் பேசும் போலி சமத்துவவாதிகளைத்தான் இது நமக்கு
நினைவுபடுத்துகின்றது.
தொழுநோயால் பீடிக்கப்பட்ட அந்த பத்துப்பேரும் மிகுந்த மன வேதனைக்கும்
உடல் வேதனைக்கும் உள்ளாகியிருக்கவேண்டும். ஏனென்றால், இஸ்ரயேலில்
தொழுநோயாளர்களின் நிலை மிக மோசமானது (லேவி 13: 45 -46). அவர்கள்
ஊருக்கு வெளியே தனியாக இருக்கவேண்டும். யாராவது அவர்கள் இருக்கும்
இடம்நோக்கி வந்தால் "தீட்டு தீட்டு" என்று கத்தவேண்டும். இப்படிப்பட்ட
கொடிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்களை
ஆண்டவர் இயேசு குணப்படுத்தியபோது அவர்களில் சமாரியரைத் தவிர ஏனையோர்
நன்றி மறந்தவர்களாய் மாறிவிடுகின்றார்கள். அதனால்தான் இயேசு
சமரியாரின் செயலைப் பாராட்டுவிட்டு, ஏனையோரின் நிலைகண்டு
மிகுந்த வேதனையடைகின்றார்.
பல நேரங்களில் நாமும் கூட கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தவர்களாக,
நன்றியுணர்வு இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். திருப்பாடல்
ஆசிரியர் கூறுகின்றார், "என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய
கனிவான செயல்களை மறவாதே என்று. (திபா 103:2).
எனவே, நாம் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக
இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
நன்றி
மறப்பது நன்றன்று
ஈசாப் கதை இது: பசியோடு இருந்த ஓநாய் ஒன்று, மரத்தடியில்
செத்துக்கிடந்த கழுதையை வேகவேகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
பசிமயக்கமோ என்னவோ, அவசர, அவசரமாகச் சாப்பிட்டதில் கழுதையின்
எலும்பு ஒன்று ஓநாயின் தொண்டையில் மாட்டிகொண்டது. அதனால் வலி
பொறுக்காமல் ஓநாய் துள்ளியது.
அந்நேரத்தில் அந்த வழியாக நாரை ஒன்று வந்தது. அதைப்பார்த்த ஓநாய்,
"நாரையாரே! இங்கே வாருங்கள், என்னுடைய தொண்டையில் முள் ஒன்று
மாட்டிக்கொண்டுவிட்டது. அதை எடுத்துவிட்டால் தக்க சன்மானம் உங்களுக்குத்
தருவேன்" என்று வாக்களித்தது. தொடக்கத்தில் பயந்த நாரை, ஓநாய்
சன்மானம் கொடுக்க இருப்பதை நினைத்துக்கொண்டு, அதன் தொண்டையில்
இருந்த முள்ளை தன்னுடைய கூரிய அலகால் வெளியே எடுத்துவிட்டது.
முள் வெளியே வந்ததும் ஓநாய்க்கு ஒரே சந்தோசம். அப்போது நாரை,
தனக்கு உரிய சன்மானத்தைத் தருமாறு ஓநாயைக் கேட்டது. அதற்கு
அந்த ஓநாய், "சன்மானமா?! அதுதான் ஏற்கனவே தந்துவிட்டேனே!"
என்றது. அது "எப்போது" என்று கேட்டதற்கு ஓநாய், "என்னுடைய
வாயினுள் அலகை விட்டுப்பார்த்த உன்னை, அப்படியே உயிரோடு
விட்டிருக்கிறேனே, அதுதான் நான் உனக்குத் தந்த சன்மானம்" என்று
சொல்லி அதை அனுப்பிவிட்டது.
நாரையோ நன்றிகெட்ட ஓநாயின் செயலை எண்ணி வருந்திக்கொண்டு
தன்னுடைய இடத்திற்குச் சென்றது.
இது கற்பனைக் கதையாக இருந்தாலும் செய்த நன்றியை மறந்து,
நன்றிகெட்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை
இக்கதையானது அருமையாக எடுத்துக்கூறுகிறது. "எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற
மகற்கு" என்பான் அய்யன் வள்ளுவன். ஆம், நன்றி மறந்தவர்க்கு
ஒருபோதும் வாழ்வில்லை என்பது திருவள்ளுவரின் கருத்து.
இன்றைய நற்செய்திவாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு நாம்
ஒவ்வொருவருமே நன்றியுணர்வுள்ள மக்களாக வாழ அழைக்கின்றார்.
இயேசு எருசலேம் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது
பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகிவந்து, தங்களைக்
குணமாக்கும்படி கேட்கின்றனர். அதற்கு இயேசு, "நீங்கள் போய்
கோவிலில் உள்ள குருக்களிடம் காட்டுங்கள்" என்கிறார். அதன்படி
அவர்கள் கோவிலுக்குப் போகிறபோதே அவர்களது நோய் நீங்கியதை
உணர்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் (சமாரியர்) இயேசுவிடம்
வந்து, தன்னுடைய நோய் நீங்கியதற்கு நன்றி சொல்கிறார். இயேசுவோ
அவரிடம், "பத்துப்பேரின் நோய் நீங்கவில்லையா? ஆண்டவரைப்
போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு யாரையும் காணோமே"
என்று வருந்துகிறார்.
இங்கே இறைவன் நம்மிடமிருந்து நன்றி எதிர்பார்க்கிறார்
என்பதல்ல, மாறாக நாம் எந்தளவுக்கு பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு
நன்றிவுணர்வு உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதே சிந்தித்துப்
பார்க்கவேண்டிய ஒரு காரியம்.
"நன்றிமிக்கவர் உள்ளம், இறைவன் வாழும் உள்ளம்" என்பார்கள்
சான்றோர் பெருமக்கள். திருப்பாடல்கள் முழுவதுமே இறைவனைப்
போற்றிப் புகழப் பாடப்பட்ட பாக்களே! "இறையன்பரே! ஆண்டவரைப்
புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைத்து நன்றி கூறுங்கள்"
என்பார் திருப்பாடல் ஆசிரியர் (திபா 30: 4). நாம் ஒவ்வோருமே
இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட எல்லாவிதமான கொடைகளுக்காக
இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்பதே இறைவார்த்தை நமக்குத்
தரும் செய்தி.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் இறைவனிடம் அது வேண்டும், இது
வேண்டும் என்று மன்றாட்டுகளையும், வேண்டுதல்களையும் எழுப்பிப்
பழக்கப்பட்டுவிட்ட நாம் அவருக்கு நன்றி சொல்ல
மறந்துவிடுகின்றோம்.
ஆதலால் நன்மையின் பிறப்பிடமான இறைவனிடமிருந்து நாம் பெற்ற
நம்மைகளுக்கு நன்றிவுள்ளவர்களாக வாழ்வோம். இறையருள் நிறைவாய்
பெறுவோம். |
|