Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      14  நவெம்பர் 2017  
                                  பொதுக்காலம் 32ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் இருந்தவர்கள் அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 - 3: 9

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.

ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள்.

நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.

கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார்.

கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.

ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர்மீது இருக்கும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 34: 1-2. 15-16. 17-18 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், "நீர் உடனே வந்து உணவருந்த அமரும்" என்று உங்களில் எவராவது சொல்வாரா?

மாறாக, "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்" என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கடமையைச் செய், பலனை எதிர்பாக்காதே

வறிய குடும்பத்தில் பிறந்தாலும், நன்றாகப் படிக்கும் சிறுவன் அவன். தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து, அவற்றைத் தலையில் சுமந்து விற்று, அதில் வரும் வருமானத்தில் குடும்பமும் படிப்பும் நடந்தது. காலையில் தெருத் தெருவாகச் சுற்றி விற்றுவிட்டு, அவசரமாக பள்ளிக்கூடம் ஓடுவான். ஒருநாள் அப்படி பசியோடு பக்கத்து ஊரில் காய்கறிகளை விற்கும்போது, அவனால் நடக்கவே முடியவில்லை. வெட்கத்தைவிட்டு ஏதாவது ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த வீட்டின் கதவைத் தட்ட, திறந்தது ஒரு இளம்பெண்.

அவளைப் பார்த்ததும் வெட்கத்தில் குரல் வர மறுத்தது. சாப்பாடு கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டு, "கொஞ்சம் தண்ணீர்"என்றான். அவனது முகத்தில் பசியின் ரேகையைப் பார்த்த பெண், உள்ளே கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். பதிலுக்கு அவன் காய்கறிகள் தர, அவள் மறுத்தாள். "பசியோடு வரும் யாருக்கும் பிரதிபலன் கருதாமல் உணவிடுவது என் கடமை"என்றாள்.

வருடங்கள் உருண்டோட, அவன் இப்போது பக்கத்து நகரத்தில் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர். ஒருநாள் விசித்திரமான நோயோடு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தாள். அவள் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று மற்ற மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். விஷயம் அவன் காதுக்கு வந்தது. அவளது ஊரைக் கேட்டதும் அவனுக்குள் பொறி தட்டியது. ஓடிப்போய் பார்த்தான். ஆமாம், அவனுக்கு உணவிட்ட அதே பெண்தான் அந்த நோயாளி. தனிப்பட்ட கவனம் எடுத்து அவளைத் தேற்றினான். நம்பமுடியாத அதிசயமாக அவள் பிழைத்தாள். ஆனாலும் அவளுக்குக் கவலை. பெரிய மருத்துவர் தனிப்பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தந்ததால், கட்டணம் நிறைய வருமே. எப்படித் தருவது என்று.

மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சமயத்தில் அவளுக்கு பில் வந்தது. "சிகிச்சைக்கான தொகையை, நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு சாப்பாடு போட்டு செலுத்திவிட்டீர்கள்"என்று எழுதியிருந்த பெரிய மருத்துவரை இப்போது அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது.

நாம் ஒவ்வொருவரும் பிரதிபலன் பாராமல் உதவி செய்யவேண்டும். அப்படி நாம் செய்கின்ற உதவிக்கு இறைவன் ஒருநாள் நிச்சயம் வெகுமதி தருவார் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொல்கின்றார். அதற்கு அவர் சொல்லக்கூடிய விளக்கம் மிகவும் அழகானது. "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், "நீ உடனே வந்து உணவருந்த அமரும்" என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடுக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்" என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைத் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள்"என்கிறார் இயேசு.

இயேசுவின் இவ்வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் நிறைய நேரங்களில் பலனை எதிர்பார்த்தே ஒன்றைச் செய்கின்றோம். இவருக்கு இதைச் செய்தால், பின்னாளில் அவர் நமக்கு உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்போடும், எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலனை எதிர்பார்த்தும் தான் ஒன்றைச் செய்கின்றோம். இதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. அது என்னவென்றால், ஒன்றை எதிர்பார்த்து ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது, அவர் அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அல்லது நமக்கு விசுவாசமாக இல்லாமல் போய்விட்டால் அவரை நன்றிகெட்டவர் என்று இழிவாகப் பேசுகின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கின்றபோது வருவதில்லை. அதனால்தான் இயேசு "நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத் தான் செய்தோம் எனச் சொல்லுங்கள்"என்கின்றார்.

"தர்மம் செய்யும்போது கூட வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்" என்றுதான் இயேசு சொல்கின்றார் (மத் 6:3)

ஆகவே, நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் பலனை எதிர்பார்க்காமல் செய்வோம், இறைவனின் அதிமிக மகிமைக்கே செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 என் கடன் பணிசெய்து கிடப்பது

மகான் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞன் ஒருவன் ஒரு மரத்திற்குக் கீழே மிகவும் சோகமாக அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் மகான் அவன் அருகே சென்று, காரணத்தைக் கேட்டார். அதற்கு அவன், "என் நண்பன் ஒருவன் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டுக் கிடந்தான். நேற்றைய தினத்தில் அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போகவே, மருத்துவமையில் சேர்த்து, அருகாமையிலே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டேன். இப்போதுதான் என் வீடு திரும்பினேன்" என்றான்.

உடனே மகான், "நல்ல காரியம் செய்திருக்கிறாய். உன்னுடைய நண்பன் விரைவில் குணமடைந்துவிடுவான்; நீ ஒன்றும் கவலைப்படாதே"என்று அவனைத் தேற்றினார். ஆனால் அப்போதும் அவன் சோகமாக இருப்பதைப் பார்த்த மகான் அவனிடம், "நீ உன் நண்பனுக்கு உதவிசெய்யும்போது என்ன நினைத்துக்கொண்டு செய்தாய்?"என்று வினவினார். அவன் மறுமொழியாக, "என்னுடைய நண்பனுக்கு எவ்வளவு உதவிகள் செய்கிறோம், இதேபோன்று நாம் கஷ்டப்படும்போது நமக்கு உதவி செய்வானா?"என்ற எண்ணத்தோடுதான் செய்தேன்"என்று பதிலளித்தான்.

அதற்கு அந்த மகான், "இதுதான் நீ செய்த மிகப்பெரிய தவறு. நான் என்னுடைய நண்பனுக்கு உதவி செய்வதுபோல, அவனும் எனக்கு உதவி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான் நீ உதவி செய்திருக்கிறாய். ஒருவேளை அவன், நீ செய்த உதவியைவிட குறைவாகச் செய்தால் "நான் அவனுக்கு உதவிசெய்த அளவுக்கு அவன் எனக்கு உதவி செய்யவில்லையே" என்று குறைபட்டுக்கொள்வாய். இது உண்மையான நட்பிற்கு இலக்கணம் அல்ல"என்று சொல்லி முடித்துவிட்டு, "எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்யப்படும் உதவிதான் உண்மையா உதவியாகும்"என்றுசொல்லி முடித்தார்.

இதைக் கேட்ட அந்த இளைஞன் மனத்தெளிவு பெற்று, மகிழ்வோடு தன் வழியில் சென்றான்.

எதையும் எதிர்பார்த்து, பிறர் நம்மைப் பாராட்டவேண்டும் எனச் செய்யப்படும் உதவி உண்மையான உதவியாகாது, மாறாக பிரதிபலன் பார்க்காமல் செய்யப்படும் உதவியே உண்மையான உதவியாகும் என்பதை இக்கதையானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, வீட்டில் வேலைபார்க்கும் வேலையாள், வீட்டுத் தலைவன் தன்னைப் பாராட்டுவான் என்றோ, சன்மானம் தருவான் என்றோ வேலைபார்ப்பதில்லை. மாறாக அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடுதான் வேலைப் பார்ப்பான். அதேபோன்றுதான் இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவருமே கடமையுணர்வோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யவேண்டும்" என்கிறார்.

1கொரி9:16 ல் பவுலடியார் கூறுவார், "நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும், அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் எது எனது கடமையாக இருக்கின்றது"என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.

ஆதலால் நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருந்தாலும் சரி, பிற சமூகமாற்றுப் பணியாக இருந்தாலும் சரி, எந்த பணியாக இருந்தாலும் நாம் கடமை உணர்வோடு செய்யவேண்டும். பிறருடைய பாராட்டைப் பெறுவதற்காகவோ அல்லது எதிர்பார்ப்போடு செய்வதோ உண்மையான பணியாகாது. "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே"என்பர். நாம் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மனநிலையில் பணிகளைச் செய்வோம்.

அத்தோடு "கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியோடு செய்யவில்லை என்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது"என்ற நெப்போலியன் ஹில் என்ற அறிஞரின் வார்த்தைகளுக்கு இணங்க நாம் எத்தகைய பணியாக இருந்தாலும் அதனை கடமையுணர்வோடு, மகிழ்வோடு செய்வோம். அப்போது இறைவனும் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து வழி நடத்துவார்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!