Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      13  நவெம்பர் 2017  
                                 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்.

அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.

ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!

"ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 69: 29-30. 32-33. 35-36 (பல்லவி: 13cd)

பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நிபந்தனையின்றி மன்னியுங்கள்"


இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அப்பொழுது டைம் பத்திரிக்கையின் (Time Magazine) ஆசிரியர் போப் பிசர் (Bob Piser) என்பவர் கர்தினால் ஓட்டவியானியைப் (Ottaviani) பற்றி "பழமைவாதி", "திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகபெரும் தடையாக இருப்பவர்" என்றெல்லாம் விமர்சித்து எழுதியிருந்தார். கர்தினால் ஓட்டவியானி அவர்களோ  அதைக் குறித்து எல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை.

இதற்கிடையில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முதல் அமர்வு முடிந்து இரண்டாம் அமர்வு நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் உரோமை நகரில் நடந்துகொண்டிருந்தன. அந்நேரத்தில் கர்தினால் ஓட்டவியானியை பத்திரிகையில் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த போப் பிசர் உரோமை நகருக்கு வந்து, கர்தினால் ஓட்டவியானிடம் பேட்டி எடுத்து, அதனை பத்திரிக்கையில் வெளியிட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்த நினைத்தார். அதற்காக  அவர் கர்தினாலின் செயலரைச் சந்தித்து, பேட்டி எடுப்பதற்கான அனுமதி கேட்டார். கர்தினாலின் செயலரும், கர்தினாலிடம் இந்த செய்தியைச் சொல்ல, அவர் மறுப்பேதும் சொல்லாமல் பேட்டிக்கு சம்மதித்தார். தன்னைப் பேட்டி எடுக்க வந்திருப்பவர், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருப்பவர் என்பது கர்தினாலுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருந்தாலும் அவர் அந்தப் பேட்டிக்கு சம்மதித்தார்.

கர்தினாலைப் பேட்டி எடுப்பதற்காக போப் பிசர் வரவேற்பறையில் இருந்தார். சிறுது நேரத்தில் கர்தினால் ஓட்டவியானி அங்கு வந்தார். பின்னர் அவர் போப் பிசரிடம், "மதிப்பிற்குரிய போப் பிசர் அவர்களே! நீங்கள் என்னைப் பற்றி ஏராளமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்... உங்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விளைகின்றேன். நான் நீங்கள் குறிப்பிடுவது போன்று பழமைவாதியும் கிடையாது, திருச்சபையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவனும் கிடையாது. மாறாக, திருச்சபையின் வளர்ச்சியில் எப்போதும் அக்கறைகொள்ளக் கூடியவன்... என்னைப் பற்றித் தவறாக எழுதிக்கொண்டிருக்கும் உங்களை என்றைக்கோ நான் மன்னித்துவிட்டேன். இப்போது நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்.

கர்தினால் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, போப் பிசரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. "உங்களைக் குறித்து இப்படியெல்லாம் தவறாக எழுதிய என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அவர் கர்தினாலின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கேட்டார். கரத்தினாலும் அவரை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

தன்னைப் பற்றி தவறாக எழுதி வந்த பத்திரிக்கையாளரை மன்னித்த கர்தினால் ஓட்டவியானி நம்முடைய பாராட்டுக்குரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழுமுறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்" என்கிறார். லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இவ்வார்த்தைகளுக்கும் ஒத்தமை நற்செய்தி நூல்களுள் ஒன்றான மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் (மத் 18: 21- 35) இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மத்தேயு நற்செய்தியில் பேதுருதான் இயேசுவிடம், "என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்தால், நான் அவனை எத்தனைமுறை மன்னிப்பது?" என்று கேட்பார். லூக்கா நற்செய்தியிலோ இயேசுவே அவ்வார்த்தைகளை உதிர்ப்பதாக இருக்கின்றது. எப்படி இருந்தாலும் நாம் மன்னிப்பதில் தாரளமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இயேசுவின் விரும்பமாக இருக்கின்றது.

மன்னித்து வாழ்வதற்கு இயேசு எதற்கு இவ்வளவு அழுத்தம் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். விடுதலைப் பயண நூல் 34:7 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவர் ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்" என்று. ஆம், கடவுள் நம்முடைய குற்றங்களை எல்லாம் மன்னிப்பவராக இருக்கின்றபோது நாமும்  மற்றவர் நமக்கெதிராகச் செய்யும் குற்றங்களை மன்னிக்கவேண்டும். அப்படியில்லாமல் இருந்தால், நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது (மத் 18:35) என்பது உண்மையாக இருக்கின்றது. மன்னித்து வாழ்வது பிறருக்கு மட்டும் நன்மை பயப்பதில்லை, நமக்கும் அது நன்மை பயக்கின்றது. அதனால்தான் இயேசு, ஒருவர் மற்றவரை நிபந்தனை இன்றி மன்னிக்கச் சொல்கின்றார்.

எனவே, இயேசுவின் வழியின் நடக்கின்ற நாம் மற்றவருடைய குற்றங்களை மன்னிப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!