Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      12  நவெம்பர் 2017  
                                 
==================================================================================
முதல் வாசகம்
==================================================================================
ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு.

அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
==============================================================================
பதிலுரைப் பாடல் -  திபா 63: 1. 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1b)
==================================================================================
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். 7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி
==================================================================================
இரண்டாம் வாசகம்

==================================================================================
இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம்.

அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
==================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
==================================================================================
மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
======================================================================================
நற்செய்தி வாசகம்
=============================================================================================
விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: "விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்" என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள" என்றார்கள்.

முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது" என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார்.

ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும" என்றார்கள்.

அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாத" என்றார்.

எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

==================================================================================
மறையுரைச் சிந்தனை
==================================================================================
விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள்

இளைஞன் ஒருவன் ஒருநாள் புத்தரைச் சந்தித்து அவரிடமிருந்து ஆசிபெற வந்தான். அவன் புத்தரது முகத்தைப் பார்த்தவுடன், அவரது முகத்திலிருந்து வெளிப்பட்ட அருளில் அப்படியே மெய்மறந்து நின்றான்.

பிறகு அவன் புத்தரைப் பார்த்து, நீங்கள் கடவுளா? என்று கேட்டான். அதற்கு அவர், இல்லை என்று பதிலளித்தார். அவன் மீண்டுமாக, அப்படியானால் நீங்கள் வானதூதரா? என்று கேட்டான். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளித்தார். அவன் விடாமல் புத்தரிடம், ஒருவேளை நீங்கள் இறைவாக்கினராக இருப்பீர்களோ? என்று கேட்டுப் பார்த்தான். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளித்தார். அவன் சற்று பொறுமை இழந்தவனாய், நீங்கள் கடவுளுமில்லை, வானதூதருமில்லை, ஏன், இறைவாக்கினர்கூட இல்லை. அப்படியானால் நீங்கள் யார்? என்று கேட்டார்.

அதற்கு புத்தர் மிகவும் சாந்தமாக, நான் விழிப்பாய் இருப்பவன்
(I am Awake) என்று பதிலளித்தார்.

பொதுக்காலம் முப்பத்தி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள் என்பதாகும். எனவே, நாம் அதனைக் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மானிடமகனது வருகை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நிகழலாம். ஆதலால் விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள் என்கிறார். அதற்காக அவர் சொல்லும் உவமைதான் பத்துக் கன்னியர்கள் உவமை.

ஏறக்குறைய யூதப் பின்னணியில், யூதர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்து மானிட மகனது வருகைக்கு நாம் எப்படித் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை நமக்கு போதிக்கின்றார். யூதர்களுடைய வழக்கப்படி மணமகளின் தோழியர் மணமகனை வரவேற்று அவரோடு மணமகள் வீட்டில் நுழைய மாலைவேளையில் காத்திருப்பர். மணமகன் காலம் தாழ்த்தி இரவில் கூட வந்து சேரலாம். இதையெல்லாம் சரியாகக் கணித்து மணமகளின் தோழியர் தயார் நிலையில் இருக்கவேண்டும். ஏனெனில் மணமகன் வரும் நேரம் தெரியாது. இரவில் தேவைப்படும் விளக்குகள், எண்ணெய் போன்றவை தயாராக இருக்கவேண்டும். ஆகவே அவர்கள் மணமகனை வரவேற்பதில் முன்யோசனையோடும், விவேகத்தோடும் செயல்படவேண்டும். அப்படிச் செயல்படாதவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. மணமகனின் வருகையைப் போன்று மானிடமகனின் வருகையும் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டத் தான் நாம் விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று ஆண்டவர் இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

நாம் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விழிப்பாய் இருத்தல் என்றால் தூங்காமல் இருப்பதா என்றால் நிச்சயமாக இல்லை. விழிப்பாய் இருத்தல் என்பது எதற்கும் தயாராக இருப்பது ஆகும். ஓட்டப்பந்தயத்தில் ஓடக் காத்துக்கொண்டிருக்கும் வீரர், நடுவர் எப்போது விசில் அடிப்பார் எனக் காத்துக்கொண்டிருக்கிறாரோ, அதுபோன்று நாமும் ஆண்டவருடைய வருகை எப்போதுமேண்டுமானாலும் வரலாம் என எதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஆகவே, எப்போது வேண்டுமானாலும் நிகழ இருக்கும் அந்த ஆண்டவரின் வருகைக்காக நாம் என்ன செய்யவேடும் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டிய முதலாவது காரியம்: நாம் நமது பொறுப்புகளை கடமைகளை, செய்யவேண்டியதை அவ்வப்போதே செய்வதாகும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றால் இறுதியில் நஷ்டப்படப்போவது என்னமோ நாமாகத்தான் இருக்கும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் ஐந்து அறிவிலிகளோ மணமகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுகூடத் தெரியாமல், விளக்குகளை எரிய வைக்க போதிய எண்ணெய் இல்லாமல் இருக்கிறார்கள். திடிரென்று மணமகன் வரும்போது போதிய எண்ணெய் இல்லாததால், அவர்கள் மணமகனோடு திருமண மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஆகவே, நாம் செய்யவேண்டிய காரியத்தை அவ்வப்போதே செய்யப் பழகுவோம்.

எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையோடு வாழக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் என்ன என்பதை விளக்கச் சொல்லப்படும் ஒரு வேடிக்கையான கதை.

ஒருமுறை வெள்ளைக்காரன், அரேபின், இந்தியன் என மூவர் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைத்தது. மூவரும் அதை பங்கு போட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு மிகச்சின்ன அல்வா துண்டு அது!
அதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு, இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு. என்று தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவை பகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்தார்கள். முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பித்தான் நேற்றிரவு என் கனவிலே கடவுள் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார் என்றான். அடுத்து, அரேபியன் தான் கண்ட கனவைச் சொன்னான்: நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்.

கடைசியாக இந்தியன் பேச ஆரம்பித்தான். நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாள்! எதிரிலேயே இவ்வளவு இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு, கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு! என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னான். மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க, உள்ளே அல்வாவைக் காணோம்!

இந்த கதை சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போது, அந்த வேலையை நாம் தள்ளிப்போடவே கூடாது! அப்படித் தள்ளிப்போட்டால் அதனால் பாதிக்கப்படுவது நாம்தான். ஆகவே, நாம் செய்யவேண்டியதை, காலம்தாழ்த்தாமல், உடனுக்குடன் செய்வோம்.

இரண்டாவதாக ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டியது, அவரை ஞானத்தைத் - தேடுவதாகும். சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஞானத்தை தேடுவதை குறித்துப் படிக்கின்றோம். ஞானம் என்பது வேறொன்றும் கிடையாது அது இறைவன்தான். இறைவன் எப்படி மங்காத ஒளியாக இருக்கிறாரோ, அதுபோன்று ஞானமும் ஒளிமிக்கதாக இருக்கின்றது. அத்தகைய ஞானத்தை இறைவனைத் தேடினோம் என்றால் அதைக் கண்டடைந்து கொள்வோம் என்பது உறுதி (6:12). இன்றைக்கு மனிதர்களாகிய நாம் எதையெதையோ தேடி, அவற்றிற்குப் பின்னால் நம்முடைய வாழ்வையே தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானத்தை, இறைவனைத் தேடிச்சொல்லும்போது இறையாசிரை, கவலையிலிருந்து விடுதலையைப் பெறுவோம் என்பது கண்கூடு (சஞா 6:15), ஆகவே, நாம் ஆண்டவரின் வருகைக்கு நம்மையே நாம் தயார் செய்ய ஞானத்தை இறைவனைத் - தேடிச் செல்வோம்.

நிறைவாக ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டியது: நம்பிக்கையோடு இருப்பதாகும். நற்செய்தி வாசகத்தில் மணமகனை வரவேற்பதற்காக மணமகளின் தோழியர் எரியும் விளக்குகளுடன் காத்திருந்தனர் என்று படிக்கின்றோம். இந்த எரியும் விளக்குங்கள்தான் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை. ஆண்டவர் இயேசு நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள் அவர் தரும் ஆசிரைப் பெற்றுக்கொள்வார்கள். அதைவிடுத்து நம்பிக்கையற்று வாழும்போதும் அதற்குரிய வெகுமதியை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புவோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரை கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆகையால், இறைவன்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு எல்லா ஆசிரைத் தரும் என்பது உறுதி.

இன்றைக்கு நாம் இறைவனில், நம்மில் அயலாரில் நம்பிக்கை வைத்து வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்பினால் அதற்கான பலன் உண்டு என்பதற்குச் சொல்லப்படும் ஒரு கதை.

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். இது எப்போது நடந்தது? என்று கேட்டான். அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.

அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான். என நினைத்தான். அதனால் அவன் முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்!

நம்பிக்கையோடு வாழ்ந்தால் எல்லா நன்மைகளும் கைகூடி வரும் என்பது எவ்வளவு உண்மை. ஆகவே ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கும் நாம், ஆயத்தமாகவும், நம்பிக்கையோடும் இருப்போம். அவர் ஒருவரை மட்டும் தேடிச்சென்று அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!