Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      10  நவெம்பர் 2017  
                                 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21

என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன்.

நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன். அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.

ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள இடமுண்டு.

பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன்.

இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது.

ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், "தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 98: 1. 2-3ய. 3b-4 (பல்லவி: 2b )

பல்லவி: பிற இனத்தார் கண் முன்னே ஆண்டவர் மீட்பை வெளிப்படுத்தினார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்" என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.

முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்" என்றார்.

வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார்.

பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூடை கோதுமை" என்றார்.

அவர், "இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்" என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.

ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை
=================================================================================
ஓய்வுநாளில் நீர்க்கோவை நோயாளி குணம் பெறல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியில் இருக்கும் ஓர் ஆற்றங்கரையில் பெரியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போகவேண்டும் என்ற நோக்ககத்தோடு இருந்தார். ஆனால், அவர் தனியாளாய் இருந்ததாலும், வயதானவராக இருந்ததாலும் ஆற்றைக் கடந்துபோக அவர் மிகவும் யோசித்தார். ஆற்றில் தண்ணீர் வேறு அதிகமாகப் போய்க்கொண்டிருந்தது.

அந்நேரத்தில் தொலைவில் வீரர்கள் குதிரைகள் வருகின்ற சத்தம் கேட்டது. சரி, இந்தக் குதிரைகளில் வரக்கூடிய யாராவது ஒரு வீரரிடம் உதவி கேட்டு மறுகரைக்குச் சென்றுவிடலாம் அவர் யோசித்துக்கொண்டிருந்தார். தொலைவில் வந்துகொண்டிருந்த குதிரைகள் அருகே வரத் தொடங்கின. ஒன்று இரண்டு மூன்று என்று குதிரை வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆற்றைக் கடந்து போனார்கள். ஆனால் யாரிடமும் அவர் உதவி கேட்கவில்லை.

கடைசியில் ஒரு குதிரை வீரர் வந்தார். அவரிடம் பெரியவர், "என்னை மறுகரைக்குக் கூட்டிக்கொண்டு போகமுடியுமா?... ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகின்றது, வயது வேறு எனக்கு அதிகமாகிவிட்டது" என்றார். அந்தக் குதிரை வீரரும் பெரியவரைக் குதிரையில் ஏற்றிக்கொண்டு மறுகரையில் அல்ல, அவர் எந்த இடத்திற்குப் போகவேண்டுமோ அந்த இடத்தில் கொண்டு போய்விட்டார். பெரியவரை அவருடைய இல்லத்தில் இறங்கிவிட்டதும் அவர் அந்த பெரியவரிடத்தில் கேட்டார், "எனக்கு முன்பாக நிறைய வீரர்கள் குதிரையில் போனார்கள். ஆனால், அவர்களிடம் எல்லாம் உதவி கேட்காமல், என்னிடத்தில் மட்டும் ஏன் உதவி கேட்டீர்கள்" என்று கேட்டார். "குதிரையில் வந்த எல்லா வீரர்களுடைய கண்களையும் நான் உற்றுப் பார்த்தேன். யாராவது எனக்கு உதவி செய்வார்களா? என்று. ஆனால், உங்களைத் தவிர ஏனையோர் யாவருமே என்னைக் கண்டுகொள்ளக்கூடவில்லை. நீங்கள்தான் என்னை ஏறெடுத்துப் பார்த்தீர்கள். உங்களுடைய கண்களில் உதவி செய்யக்கூடிய மனநிலை நிரம்பி வழிந்தது. அதனால்தான் உங்களிடத்தில் உதவி கேட்டேன்" என்றார்.

பெரியவருக்கு உதவிய அந்தக் குதிரை வீரர் வேறு யாரும் கிடையாது முன்னாள் அமெரிக்க அதிபராகிய தாமஸ் ஜெபர்சன் என்பவரே ஆவார்.

இந்த உலகத்தில் இருக்கின்ற நிறைய மனிதர்கள்  நம்முடைய உதவியை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நாம்தான் அவர்களைக் கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றோம் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் தேவையில் இருந்த, உதவி தேவைப்பட்ட நீர்கோவை நோயாளியை கண்டும் காணாமல் செல்லாமல், ஆண்டவர் இயேசு உதவி செய்து, அவருடைய நோயைக் குணப்படுத்துவதைக் குறித்துப் படிக்கின்றோம். இயேசு செய்த இந்த அற்புதச் செயல் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அது எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது என்று பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு ஓய்வுநாள் ஒன்றில் பரிசேயர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இயேசு உணவருந்தச் சென்றது சாதாரண நாள் கிடையாது, ஓய்வுநாள் என்பதை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். உணவருந்தச் செல்லும் இடத்தில் இயேசு நீர்க்கோவை நோயாளி ஒருவர் இருப்பதைக் காண்கிறார். இயேசு அவரைக் கண்டதை அறிந்த பரிசேயர்கள் அவர் அவருக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், "ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?" என்று கேட்கின்றார். அவர்கள் அமைதியாய் இருப்பதைப் பார்த்த இயேசு நோயாளியை குணமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கிக் கூறுகின்றார், "உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனைத் தூக்கிவிட மாட்டாரா?" என்று.

நோய்வைப்ப்பட்டுக் கிடந்த மனிதருக்கு ஒரு உதவியும் செய்யாத பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்கள், இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தப் போகிறார் என்று தெரிந்ததும் அவரிடம் குற்றம் காணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

நம்மில் நிறையப் பேர் இப்படித்தான் தாங்களும் எந்தவொரு நன்மையும் செய்யாமல், உதவி செய்கின்றவர்களிடம் குற்றம் காணத் தொடங்கிவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நாம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நற்காரியங்களைத் தேவையில் இருக்கின்ற மனிதர்களுக்குச் செய்யவேண்டும் என்பதைத் தான் இயேசுவின் வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பல நேரங்களில் அடுத்தவர் என்ன சொல்வாரோ, அவர் என்ன நினைப்பாரோ என்று நினைத்துதான், செய்ய நினைக்கின்ற உதவிகளையும் செய்யாமல் விட்டுவிடுகின்றோம். இந்நிலை நம்மிடத்திலிருந்து மாறவேண்டும். ஆண்டவர் இயேசுவைப் போன்று எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்து கொண்டே இருக்கவேண்டும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நமக்கு வரும் இடர்பாடுகளைக் கண்டு கலங்காமல், தொடர்ந்து இறைப்பணியைச் செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!