Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      07  நவெம்பர் 2017  
                                 
=============================================================================================
முதல் வாசகம்
=============================================================================================
ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-16a

சகோதரர் சகோதரிகளே! நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம்.

இறைவாக்கு உரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக்கொடுப்போர் கற்றுக்கொடுப்பதிலும, ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=============================================================================================

 
பதிலுரைப் பாடல் -   திபா 131: 1. 2. 3

பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு. பல்லவி


==================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28

அல்லேலூயா! அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்! என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

======================================================================================
நற்செய்தி வாசகம்
=============================================================================================
 எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24

அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார்.

இயேசு அவரிடம் கூறியது: "ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, "வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது" என்று சொன்னார்.

அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

முதலில் ஒருவர், "வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார்.

"நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார்

வேறொருவர். "எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது" என்றார் மற்றொருவர்.

பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.

வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், "நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்" என்றார்.

பின்பு பணியாளர், "தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது" என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, "நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்"  என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=============================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=============================================================================================
அனைத்திற்கும் மேலாக ஆண்டவருடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்!

இங்கிலாந்து நாட்டின் அதிபரான வின்ஸ்டன் சர்ச்சில் ஒருநாள் லண்டனில் இருந்த தன்னுடைய நண்பருடைய வீட்டிற்கு மதிய விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து முடிந்து நண்பரோடு ஒருசில முக்கியமான காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. அவர் சற்றென்று கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் ஐந்து மணி முப்பது வினாடிகள் ஆகியிருந்து. மாலை ஆறுமணிக்கு அவர் பிபிசி வானொலி நிலையத்தில் உரையாற்றவேண்டி இருந்தது. நடந்து சென்றால் அரைமணி நேரத்திற்குள் வானொலி நிலையத்திற்குச் செல்வது என்பது இயலாத ஒன்று. எனவே, அவர் ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி, அதில் வானொலி நிலையத்திற்குச் செல்லத் திட்டமிட்டார். (வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அவருக்கென்று வாகனம் கிடையாது என்பது இன்னொரு செய்தி).

அவர் நண்பருடைய வீட்டிலிருந்து வெளியே வந்து, பக்கத்தில் வாடகைக் கார் வைத்திருந்தவரிடம், "பிபிசி வானொலி நிலையத்திற்கு என்னைக் கொண்டு செல்ல முடியுமா?" என்று கேட்டார். அந்த வாகன ஒட்டியயோ அதற்கு முன்னதாக வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்திராதவர். அவர் அவரிடம், "நான் ஆறு மணிக்குள் வீட்டுக்குச் சென்று, ஆறு மணிக்கு வானொலியில் ஒளிபரப்பப்படுகின்ற வின்சென்ட் சர்ச்சிலின் உரையைக் கேட்கவேண்டும்" என்றார்.

வாகன ஒட்டி இப்படிச் சொன்னதைக் கேட்ட வின்சென்ட் சுர்ச்சில் தனக்கு இப்படி ஒரு இரசிகனா என்று வியந்துபோய் நின்றார். அதே நேரத்தில் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவன் உண்மையிலே தனக்குத் தீவிர இரசிகனா என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். "தம்பி! உனக்கு இன்னும் அதிகமாகப் பணம் தருகின்றேன். என்னை வானொலி நிலையத்தில் மட்டும் கொண்டுபோய் விட்டுவிடு" என்றார். பணத்தைப் பார்த்த வாகன ஒட்டி, "வின்சென்ட் சர்ச்சில் என்றால் பெரிய இவரா.... இன்றைக்கு ஒருநாள் அவருடைய பேச்சைக் கேட்காவிட்டால் என்ன குடிமூழ்கியா போய்விடப் போகின்றது" என்றார்.

வாகன ஓட்டி இப்படிச் சொன்னதைக் கேட்டு வின்சென்ட் சர்ச்சிலுக்கு மயக்கம் வராத குறைதான். பணம் கிடைத்தால் எது வேண்டுமானாலும் செய்யத் துணிகின்ற மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக இருகின்றார்கள் என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுள் ஒருவர், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்று சொல்ல, இயேசு அவருக்கு ஓர் உவமையைச் சொல்கின்றார்.

இயேசு சொல்லக் கூடிய உவமையில் வரும் அரசர் பெரிய விருந்தொன்று படைக்கின்றார். அந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானவர்களை அழைக்கின்றார். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ சாக்குப் போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் இருந்துவிடுகின்றார்கள். எனவே, இதைக் கேட்டு சினம்கொண்ட அரசன் வீதியோரங்களில் இருக்கின்ற ஏழைகள், அனாதைகள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் அரசர்தான் கடவுள். அவர் தன்னுடைய மகிமையில் பங்கு கொள்வதற்காக, விருந்தில் கலந்து கொள்வதற்காக முதலில் யூதர்களை அழைக்கின்றார். யூதர்கள் கடவுள் கொடுத்த அழைப்பை மறுத்து வேறு வேலைக்குச் சென்றதால், கடவுள் புறவினத்தாரையும் பாவிகளையும் விருந்துக்கு அழைக்கின்றார். இயேசு இந்த உவமையின் வழியாக யூதர்கள் கடவுள் கொடுத்த வாய்ப்பினை இழந்து போனதையும், புறவினத்தார் அந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டதையும் எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுவதன்வழியாக யூதர்கள் மட்டுமே கடவுள் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்துப் போடுகின்றார்.

அரசன் கொடுத்த அழைப்பை மறுத்து, விருந்தில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள் சொல்லக்கூடிய சாக்குப் போக்கு நம்முடைய சிந்தனைக்குரியதாக இருகின்றது. முதலாமவன், "நான் வயல் வாங்கி இருக்கின்றேன்" என்று சொல்கிறான். இவன் வேலை வேலை என்று அலைந்து, கடவுளை மறந்துபோனவர்களைச் சுட்டிக் காட்டுபவனாக இருக்கின்றான். இரண்டாமவன், "நான் புதிதாக ஐந்து ஏற்மாடுகள் வாங்கியிருக்கின்றேன். அதனால் என்னால் மாறமுடியாது" என்று சொல்கின்றான். ஐந்து மாடுகள் ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எனவே, இவன் புலன் இன்பங்களுக்கு அடிமையாகி கடவுளை மறந்துபோனவர்களைக் குறிப்பவனாக இருக்கின்றேன். மூன்றாமவன், "எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று, என்னால் வரமுடியாது" என்கின்றான். இவன் கடவுளை மறந்து, மனித உறவுகளை நம்பி வாழ்பவனைக் குறிப்பவனாக இருக்கின்றான். இப்படிப்பவர்கள் எல்லாம் இறைவன் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.

இயேசு சொல்வார், "அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்று (மத் 6:33).

நாம் அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=============================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=============================================================================================
அனைத்திற்கும் மேலாக இறைவனைப் தேடுவோம்.

குருநாதர் சிவானந்தார். மிகப்பெரிய ஞானி. இருநூறு நூல்களுக்கும் மேல் எழுதிய ஓர் அறிஞரும் கூட.
ஒருமுறை அவரிடத்தில் ஒர் இளைஞன் வந்து, "குருவே! நீங்கள் நிறைய தத்துவங்களைப் பேசி இருக்கிறீர்கள். ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் நான் எதைப் பின்பற்றுவது, ஒரே குழப்பாக இருக்கிறது" என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். அதற்கு குரு, "என்னுடைய போதனைகளை இரண்டு வார்த்தைகளில் சொல்கிறேன் கவனமாகக் கேள்" என்று சொல்லிவிட்டு, "பிரித்தல், சேர்த்தல்" என்றார்.

வந்தவன் அதைக்கேட்டு குழம்பிப்போனான். அப்போது அவர், "உலக இச்சைகளிலிருந்து பிரிந்து சென்று, இறைவனோடு சேர்த்தல்" என்று விளக்கமளித்தார். இதைக் கேட்ட அந்த இளைஞன் குருவிற்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு" என்பார் அய்யன் திருவள்ளுவர். உலக செல்வங்களிலிருந்து நம்மையே நாம் விடுவிடுத்துக் கொண்டு, உண்மைச் செல்வமாகிய கடவுளைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இக்குறளின் விளக்கமாக இருக்கின்றது. மேலே சொல்லப்பட்ட கதையும்கூட நாம் உலக செல்வங்களைத் துறந்து, இறைவனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை வழங்குகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை பெரிய விருந்து ஒன்றுக்கு ஒப்பிடுகின்றார். அரசன் ஒருவன் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றான். அவ்விருந்துக்கு ஏற்கனவே தான் அழைப்பு விடுத்திருந்தோரை அழைக்கின்றான். ஆனால் அவர்களில் ஒருவர் வயலுக்குச் செல்லவேண்டும் என்றும், இன்னொருவன் "புதிதாக வாங்கி இருக்கும் ஐந்து மாடுகளை மேய்க்கவேண்டும்" என்றும், வேறொருவன் "இப்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது" என்று சொல்லி போக மறுத்துவிடுகிறார்கள். இதனால் சினம்கொண்ட அந்த அரசன் சாதாரண வறியோரையும், எளியோரையும் விருந்துக்கு அழைக்கின்றார்.

இங்கே சிந்தித்துப் பார்க்கவேண்டிய காரியம், இறைவனின் இறையாட்சியில் பங்குகொள்வது, யாருக்குமே கிடைக்காத பேறு. ஆனால் நாமோ அதனை சாதாரண காரியங்களுக்காகத் தட்டிக் கழிக்கின்றோம். திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்ற ஒருவன், "நான் வயலுக்குப் போகவேண்டும்" என்று சொல்கிறான். வயல் என்பது உணவு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உணவுக்காக, அடிப்படைத் தேவைகளுக்காக நம்முடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்துவிட்டு, இறைவனை மறந்தவர்களாக மாறிவிடுகின்றோம். இயேசு சொல்லும் பணக்காரன், ஏழை லாசர் உவமையில் பணக்காரன் எப்போதுமே அறுசுவை உணவுஉண்டு கொழுத்துப்போய் இருக்கிறான். அதனாலே அவன் அழிவைச் சந்திக்கிறான்.

அடுத்ததாக இயேசு கூறும் இந்த உவமையில் ஒருவன், "புதிதாக ஐந்து மாடுகளை வாங்கி இருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன்" என்று சொல்கிறான். ஐந்து மாடுகள் என்பது நமது ஐந்து புலன்களைக் குறிக்கின்றது. இன்றைக்கு மனிதர்கள் புலனடக்கம் இல்லாமல் கண்களாலும், காதுகளாலும், தவறு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது உடலே இறைவன் கொடுத்த பிச்சை என்பதை மறந்து நமது மனம் போன போக்கில் வாழுந்துகொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் ஆசைப் பட்டு, அதனை அடையமுடியாமல் தவிக்கின்றோம்.
"கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழைநீர் இறங்காததுபோல, நன்னெறிப் பண்புள்ள மனதிலும் ஆசைகள் நுழையவே முடியாது" என்பார் புத்தர். நமது புலன்களை - உடலை - ஆசைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து இறைவனிடம் கையளிப்போம். இறைவன் நம்மை ஆளட்டும்.

மேலும் இந்த உவமையில் ஒருவன், "எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று, அதனால் என்னால் வரமுடியாது" என்கிறான். திருமணம் என்பது நமது உறவுகளைச் சுட்டிக்காட்டுகிறது. மத் 10:37 ல் இயேசு கூறுவார், "என்னைவிடத் தன் தாய் தந்தையிடமோ, சகோதர, சகோதரிகளிடமோ அன்பு செலுத்துவோர் என் சீடராக இருக்க முடியாது" என்று. ஆகையால் இயேசுவைத் தவிர வேறு யாருக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறவர், அவருடைய சீடராக இருக்க முடியாது என்பதே இங்கே உணர்த்தப்படும் செய்தி.

எனவே இயேசு தரும் இறையாட்சி என்னும் விருந்தில் கலந்துகொள்ள இறைவனுக்கு நமது வாழ்வில் முதலிடம் கொடுத்து வாழ்வோம். அப்படி வாழும்போது இறைவன் நம்மை நிறைவாய் அசிர்வதிப்பார். இறையருள் நிரம்பத் தருவார்


=============================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=============================================================================================


இனி எல்லாம் சுகமே!

மூணு க்ரூப்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 14:15-24) திருமண விருந்து உவமை பற்றிய எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த உவமையை மாற்கு மற்றும் மத்தேயுவும் தங்கள் நற்செய்திகளில் பதிவு செய்திருந்தாலும், லூக்காவின் பதிவு கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

திருமண விருந்து ரெடி ஆயிடுச்சி. "நாங்க ரெடி, நீங்க ரெடியா"னு கேட்டு தன் வேலைக்காரர்களை அனுப்புகிறார் அரசன்.

மூணு க்ரூப் மூணுவிதமான பதில்களைச் சொல்றாங்க:

அ. நான் வயல் வாங்கியிருக்கிறேன். கண்டிப்பாய் போய் பார்க்கணும்.
ஆ. நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அவைகளை ஓட்டிப் பார்க்கணும்.
இ. எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று. என்னால் வர முடியாது.

மூணாவது காரணம்தான் கொஞ்சம் கிலுகிலுப்பாக இருக்கு. மற்ற ரெண்டு பேரும் ஒர்க்க"லிக்ஸ் ஃபெல்லோஸ்.

இந்த அரசன் தன் விருந்துக்கு வேறு ஆட்களை அழைத்துக் கொள்கிறான்.

மத்தேயு நற்செய்தி அரசன் கொஞ்சம் கோபக்காரன். விருந்துக்கு அழைத்து வராதவர்களை கொன்றும் விடுகிறான்.

சரி. இப்போ அரசனுக்கு ஒரு கேள்வி.

ஏங்கஇ நீங்க கூப்பிட்டா நாங்க அப்படியே ஓடி வரணுமா? எங்க வயல், எங்க மாடுகள், எங்க மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு. அப்படி என்ன ஸ்பெசலா விருந்து வைக்கிறீங்க?

இப்படித்தான் இந்த மூன்று குழுவினரும் நினைத்திருப்பார்கள்.

அரசன் கூப்பிட்டால் போகணுமா என்றால் போகணும்தான்.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 12:5-16) ஒரு வசனம் என்னை ரொம்ப தொட்டது:

"விடாமுயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்."

நேற்று எங்கள் பங்கிற்குத் திருப்பலிக்கு வந்த பிரேசில் நாட்டு அருட்பணியாளர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன், "இதோ! இவரைப் போல, இந்த வயதினர் மூன்றுபேர்தான் நேற்று குருத்துவத்தை விட்டு விலகிப்போயினர் என் மறைமாவட்டத்தில்!" என்றார். சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார், "அந்த மூவரும் மிகவும் திறமைசாலிகள். தங்கள் பங்குகளில் நன்றாகப் பணியாற்றியவர்கள். தங்கள் பங்குகளில் இருந்து மூன்று பெண்களோடு போய்விட்டனர். இன்று தங்களின் இளமை, அவர்களின் இளமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஆனால் நாளை அவர்கள் "நோஸ்டால்ஜிக்காக" (அதாவது, "அங்கேயே இருந்திருக்கலாம்" என்று எண்ணும் மனநிலை) மாறிவிடுவார்கள்" என்றார்.

திருமண விருந்துக்குப் போகாமல் வயலுக்குப் போனவரும், ஏர் பிடிக்கப் போனவரும், துணைவியோடு இருந்தவரும் ஒருவேளை நோஸ்டால்ஜிக்காக மாறியிருப்பார்களோ? "திருமண விருந்துக்கே போயிருக்கலாம்!" என்று அவர்கள் நினைத்து இப்போது வயலினின்று, வீட்டினின்று திரும்பினாலும், மண்டபத்தில் இடமில்லையே. அவர்கள் எங்கே போவார்கள்?

அருள்பணிநிலை ஒரு மலர்ப்படுக்கை அல்ல என்று நான் படிக்கும்போது அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். படுக்கை என்ன, பாதையில்கூட இங்கு மலர்கள் இல்லை.

"கடவுள் கூப்பிட்டுத்தானே போனாய் நீ!" என்று அடிக்கடி மற்றவர்கள் என்னிடம் சொல்வார்கள். ஆனால் எங்களைக் கூப்பிடுபவர்கள் மனிதர்களே. நாங்களாகத்தான் கடவுள் எங்களை அழைப்பதாக நம்பிக் கொள்கிறோம். இறுதிவரை கடவுளின் குரலைக் கேட்காமலேயே அவரின் குரலை எல்லாவற்றிலும் கேட்பதாக நாங்கள் நம்பிக் கொள்கிறோம். அந்த நம்பிக்கையிலேயே எங்கள் வாழ்வை நகர்த்தி விடுகிறோம். "அருட்பணியாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்", "கோயில் பூனை பயம் அறியாது" என்றும் சொல்வார்கள். "நான் கேட்டால் கடவுள் தருவார்" என்று நான் நம்புவதில்லைதான். ஆனால் "அவரின் குரல் கேட்டு நான் வந்தேன்" என்ற நம்பிக்கையில் நாங்கள் குறைவதில்லை.

அருள்நிலையில் எங்கள் பயணம் தொடக்கத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நாட்கள் நகர, நகர, தொடக்கத்தில் இருந்த வேகம் குறைகிறது. உடல் நோய், மனதில் தோன்றும் வெறுமை, என்ன பணி செய்தாலும் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிற மக்கள். ஒரு கட்டத்தில் பயணத்தை முடித்துக்கொள்வோமா என்றும் எண்ணவைத்து விடுகிறது.

பவுல் சொல்வதுதான் இன்று தேவை: விடாமுயற்சி. ஆர்வமிக்க உள்ளம். இந்த இரண்டும் இருந்தால்தான் ஆண்டவருக்குப் பணி செய்ய முடியும்.

அ. வேகமாக விருந்துக்குப் போய்விட்டு, அங்கே பாதியில் எழும்பி வருவதை விட விருந்துக்குச் செல்லாமல் இருப்பது மேல்.

ஆ. ஒருவேளை விருந்துக்குப் போக முடியாவிட்டால், "போயிருக்கலாமே!" என்று நடக்காததை நினைத்து ஏங்குவதும் தவறு.

இ. விருந்திலிருந்து பாதியில் எழும்பிப் போனவர்களை கொஞ்சம் இரக்கத்தோடும் நாம் பார்க்கலாமே

இறையாட்சியை விருந்துக்கு ஒப்பிட்டார் இயேசு. கடவுள் நம்மை ஒரு விருந்துக்கு அழைக்கிறார். அவருடைய கொடைகளைத் தாராள உள்ளம் கொண்டு நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். விருந்துக்கு ஒருவரை அழைப்பது அவருடைய பசியை ஆற்றுவதற்கு உணவு கொடுப்பதற்கு மட்டுமல்ல, அழைக்கப்பட்டவரோடு உரையாடி, அவரோடு நமக்குள்ள நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கும் விருந்து ஒரு சிறந்த தருணமாகிறது. எனவேதான் இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் என்பது தலைசிறந்த பண்பாகக் கருதப்பட்டது. கடவுள் வழங்கும் விருந்து உண்மையிலேயே ஒரு "பெரிய விருந்து" (லூக்கா 14:16). அதற்கு அழைக்கப்படுவோர் மிகப் பலர்; அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவும் உயர்ந்த தரமானது. எனவே, இப்பெருவிருந்தில் கலந்துகொள்ளச் செல்வோர் மன மகிழ்ச்சியோடு போவார்கள், நிறைவாக உண்டு இன்புறுவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு நேர்மாறான நிலையைத்தான் பார்க்கிறோம். அழைக்கப்பட்டோர் எல்லாரும் "ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்" (லூக்கா 14:18). புதிதாத வயல் வாங்கிய மனிதர் தம் சொத்து நல்ல நிலையில் உளதா எனப் பார்க்க விரும்புகிறார்; புதிதாக ஏர்மாடுகள் வாங்கியவரும் அவற்றை ஓட்டிப்பார்க்க விரும்புகிறார்; புதிதாக மணம் செய்தவர் குடும்பக் காரியங்களைக் கவனிக்க விரும்புகிறார். விருந்திற்குக் கட்டாயம் போக வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் மட்டுமே சாக்குப்போக்குகள் காட்டாமல் விருந்தில் கலந்துகொள்ளச் செல்வார்கள். வேறு எந்தக் கடமையும் விருந்திற்குப் போகின்ற கடமையைவிட மேலானதல்ல என்று முடிவுசெய்தால் மட்டுமே நாம் கடவுள் அளிக்கின்ற விருந்தில் பங்கேற்க எவ்விதத் தயக்கமுமின்றிச் செல்வோம்.

சாக்குப்போக்குச் சொல்வது மனித இயல்பு. சிலர் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்குச் சாக்குப்போக்குச் சொல்வர். வேறு சிலர் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அவை அனைத்தையும் நன்முறையில் நிறைவேற்ற இயலாதபோது ஒருசில பொறுப்புகளை முதன்மைப்படுத்தி அவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு வேறு பொறுப்புகளைப் பெரிதாகக் கருதாமல் விட்டுவிடுவார்கள். இயேசு விடுக்கின்ற அழைப்பு கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்பதே. இந்த அழைப்புக்குச் செவிமடுப்பது நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் என நாம் தீர்மானித்துவிட்டால் வேறு எந்தப் பொறுப்பும் நம் கவனத்தை முழுமையாக ஆட்கொள்ள இயலாது. கடவுளின் அழைப்பை ஏற்று, அவர் படைக்கின்ற விருந்தில் பங்கேற்பதே நம் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!