Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      06  நவெம்பர் 2017  
                                 
=============================================================================================
முதல் வாசகம்
=============================================================================================
இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே! கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்.

அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.

ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!

"ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=============================================================================================

 
பதிலுரைப் பாடல் -  திபா 69: 29-30. 32-33. 35-36 (பல்லவி: 13)

பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி


==================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 31b-32

அல்லேலூயா! அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

======================================================================================
நற்செய்தி வாசகம்
=============================================================================================
 நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=============================================================================================
மறையுரைச் சிந்தனை
=============================================================================================
ஏழை எளியவருக்கு உணவு கொடுங்கள்!

கடந்த 125 ஆண்டுகளாக அணையாத அடுப்புடன் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கின்றது சென்னை பார்க் டவுனில் உள்ள அன்னதான சமாஜம். அதை யார் தொடங்கினார், எப்படி அது தொடங்கப்பட்டது என்பதற்கான வரலாறு இது.

1863 ஆம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் முகலுார் கன்னையா என்பவர். ஒவ்வொருநாளும் அவர் பள்ளிக்கூடத்திற்கு போய்வரும்போது வழியில் பல ஏழைகள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்தார். அப்போது அவர் "வேலை கிடைத்ததும் இவர்களுக்கு சம்பளத்தில் இருந்து ஏதாவது செய்யவேண்டும்" என்று எண்ணினார். அதுபோலவே அவருக்கு வேலை கிடைத்ததும் முதல் சம்பளத்தில் இருந்து நாலானாவை ஒதுக்கினார். தன்னைப்போலவே எண்ணம் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கூட்டாக சேர்த்துக்கொள்ளலாம் என அலுவலகத்தில் அழைப்பு விடுத்தார். நண்பர்களும் அவரது அழைப்பை ஏற்று காலாணா முதல் ஒரு அணாவரை அவருக்குக் கொடுத்து உதவியதால் மூன்று ரூபாய்கும் மேல் அவருக்குக் கிடைத்தது. (அந்தக் காலத்தில் மூன்று ரூபாய் என்றால் மிகப்பெரிய தொகை)

தனக்குக் கிடைத்த பணத்தை வைத்துகொண்டு ஓர் உணவகத்தில் பேசி 12 பெரியவர்களுக்கும் 6 சிறியவர்களுக்கும் (இதில் உடல் ஊனமுற்றவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கு முதலிடம்) ஒரு மாதம் சாப்பாடு போடுவதற்கு ஏற்பாடு செய்தார், அப்படி ஏற்பாடு செய்து சாப்பாடு போட்ட முதல் நாள் 1889 ஆம் ஆண்டு மார்ச் 1ந்தேதி ஆகும். நாளாக நாளாக கன்னையா ஒரு வேளை சாப்பாடை இரு வேளையாக்கினார், அன்போடு அவர்களுடன் பழகினார், நண்பர்கள் உறவினர்களிடம் பணம் கேட்டு வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போனார். ஒரு வருடத்தில் இப்படி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 300 ஆகியது.

இவர்கள் உட்கார்ந்து சாப்பிட இடமில்லாமல் தவிப்பதை பார்த்த அப்போதைய திவான் பகதுார் லார்ட் கிருஷ்ணன் என்பவர் பார்க் டவுனில் இருந்த தன்னுடைய இரண்டு மாடிக் கட்டத்தைத் தானமாகத் தந்தார். இப்படியாக கடந்த 125 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கின்றது சென்னை அன்னதான சமாஜம்.

"நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதர, சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர்" என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதாக இருக்கின்றது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு.

இன்றைக்கு மனிதர்கள் விருந்து கொடுக்கும்போது, அது எல்லாருக்கும் தெரியவேண்டும், பெரிய பெரிய மனிதர்களை எல்லாம் அழைத்து சமுதாயத்தில் தானும் உயர்ந்தவன் என்று நிரூபிப்பதற்காக வேண்டும் என்று போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ இதற்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு போதனைத் தருகின்றார். பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் விருந்துக்கான கைம்மாறு இந்த மண்ணுலகத்திலே கிடைத்துவிடும், மாறாக ஏழைகளுக்கு கொடுக்கப்படும் விருந்துக்கான கைம்மாறு விண்ணகத்தில் கிடைக்கும் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது. நாம் மனிதர்களிடமிருந்து கைம்மாறு பெறப் போகின்றோமா அல்லது இறைவனிடமிருந்து கைம்மாறு பெறப் போகின்றோமா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஒருசிலர் மனிதர்கள் கடமைக்காகக் கொடுப்பார்கள். அரசாங்கத்திற்கு வரிசெலுத்தும்போது எப்படி கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகக் கொடுக்கின்றார்களோ அதுபோன்று இவர்கள் கொடுக்கின்றபோது இருக்கும். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய பெயர் விளங்குவதற்காகக் கொடுப்பார்கள். இது சுயநலத்தின் வெளிப்பாடுதானே தவிர வேறொன்றும். மற்றும் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் கொடுப்பதை யாருக்கும் தெரியாமல் கொடுப்பார்கள், வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாத மாதிரி இவர்கள் கொடுக்கின்றபோது இருக்கும். இவர்களுடைய இயல்பே பிறருக்குக் கொடுப்பது. இவர்கள் மற்றவர்களுடைய பாராட்டுக்காகவோ புகழ்சிக்காகவோ அலைவதில்லை. இப்படிப்பட்டவர்களாக நாம் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் விரும்பமாக இருக்கின்றது. யாருக்கும் தெரியாமல் ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவுபவர்களுக்கு நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது அதற்கான கைமாறு கிடைக்கும் என்கின்றார் இயேசு.

ஆகவே, விளம்பரத்திற்காகவோ, பெயர் புகழ் விளங்குவதற்காகவோ கொடுக்காமல் யாருக்கும் தெரியாமல் கொடுப்போம், அதுவும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறைவன் நமக்குத் தரும் கைம்மாறை நிறைவாகப் பெற்றுக்கொள்வோம
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!