Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      04  நவெம்பர் 2017  
                                 

முதல் வாசகம்

யூதர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 11-12, 25-29

சகோதரர் சகோதரிகளே! கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை. நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன்இ பென்யமின் குலத்தினன். தாம் முன்பே தேர்ந்துகொண்ட மக்களைக் கடவுள் தள்ளிவிடவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது. அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று. அவர்கள் தவறியதால் உலகம் அருள் வளமுற்றது; அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில்தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர். பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; "சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்; யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார். நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்; அவர்களுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள். ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 94: 12-13a. 14-15. 17-18 (பல்லவி: 14,)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; 13ய அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர். பல்லவி

17 ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்! 18 "என் அடி சறுக்குகின்றது" என்று நான் சொன்னபோதுஇ ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 29ab

அல்லேலூயா! அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
 ================================================================================
 
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், "இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.

அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், "நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை
=================================================================================
மேன்மையடைய தாழ்ச்சியே வழி!

உரோமை அரசாங்கத்தின் தன்னிகரில்லாத அரசராக விளங்கியவர் சார்லேமக்னே (742 -814) என்பவர். அவருடைய அரசபையில் ரொனால்டு என்பவர்  மந்திரியாக இருந்தார்.

ஒருநாள் ரொனால்டும் அவரோடு சேர்ந்து ஒருசில படைவீரர்களும் காட்டுவழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சரசென்ஸ் நாட்டைச் சார்ந்த படைவீரர்கள் சிலர் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ரொனால்டும் அவருடைய படைவீரர்களும் நிலைகுலைந்து போனார்கள்.

ரொனால்டிடம் ஒலிவன்ட் என்ற ஒருவகையான எக்காளம் இருந்தது. அதனை எடுத்து ஊதினால் முப்பது கிலோமீட்டர் பரப்பளவுக்குக் கேட்கும். ரொனால்டோடு இருந்த படைவீரர் ஒருவர் அவரிடம், "மந்திரியாரே! உங்களிடம் இருக்கும் எக்காளத்தை எடுத்து ஊதினால், அந்த சத்தம் கேட்டு நம்முடைய மன்னர் இங்கே வந்து,  நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி விடுவார் அல்லவா. அதனால் விரைவாக அந்த எக்காளத்தை எடுத்து ஊதுங்கள்" என்றார். ஆனால் ரொனால்டோ எக்காளத்தை எடுத்து ஊதவில்லை, "நான் எவ்வளவு பெரிய ஆள், என்னால் மன்னரிடம் எல்லாம் உதவி கேட்க முடியாது" என்று மிக ஆணவத்தோடு அந்தப் படைவீரரிடம் பதில் சொல்லிவிட்டு, தன்னால் முடிந்த மட்டும் எதிரிகளோடு சண்டையிட்டார்.

எதிரிகளின் தாக்குதலை ரொனால்டாலும் அவருடைய படைவீரர்களும் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவர்கள் செத்து மடிந்தார்கள். இனிமேலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ரொனால்ட் எக்காளத்தை எடுத்து ஊதினார். அந்த சத்தம் கேட்டு மந்திரிக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த மன்னர் சார்லேமக்னே தன்னுடைய படைவீரர்களோடு சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் மந்திரி ரொனால்டும் அவரோடு சேர்ந்து படைவீரர்களும் எதிரியின் தாக்குதலில் மடிந்து போய் கிடந்தார்கள்.

ரொனால்ட் முன்னமே எக்காளத்தை ஊதி, தன்னையும் படைவீரர்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அவரிடம் இருந்த தான் என்ற ஆணவம் "நான் எப்படி மன்னரிடம் உதவி கேட்பது" என்ற வெற்றுக் கவுரவம் மந்திரியாரின் உயிரையும் படைவீரர்களின் உயிரையும் பறித்துக்கொண்டது. ஒருவேளை ரொனால்ட் மிகவும் தாழ்ச்சியோடு எக்காளத்தை ஊதி மன்னரை உதவிக்கு அழைத்திருந்தால் அனைவருமே காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்பது உறுதி.

நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய "தான் என்ற ஆணவம்" எவ்வளவு பெரிய அழிவை நமக்குக் கொண்டு வந்து தருகின்றது என்பதை இந்த நிகழ்வு மிக வேதனையோடு பதிவு செய்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அப்போது விருந்துக்கு வந்திருந்த நிறையப் பேர் பந்தியில் முதன்மையான இடங்களைப் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். இதனைக் கவனித்த இயேசு அவர்களிடம், "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், "இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்" என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது போய் கடைசி இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்... இவ்வாறு தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" என்கிறார்.

நிறைய நேரங்களில் நாம் மற்றவர்கள் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும், பாராட்டவேண்டும் என்று ஆணவத்தோடு நடந்து கொள்கின்றோம். அப்படி நாம் நடந்து கொள்கின்றபோது சிறுமைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகின்றோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. மாறாக, உள்ளத்தில் நாம் தாழ்ச்சியோடு வாழ்கின்றபோது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுகின்றோம். இது முற்றிலும் உண்மை.

இறைவனின் ஆசிரை, அருளை நமக்குப் பெற்றுத் தருகின்ற தாழ்ச்சியை நம்முடைய உள்ளத்தில் எப்படி வளர்த்துக்கொள்வது என்று இப்போது பார்ப்போம்.

ஒருவர் தம்மைப் பற்றி முழுமையாக அறிய முற்படும்போது உள்ளத்தில் தன்னாலேயே தாழ்ச்சி வளரும் என்பது நிதர்சனம். தான் ஒன்றுமில்லை, பெரும்பாவி, ஒன்றும் அறியாதவன் என்று ஒருவர் தன்னைப் பற்றி எப்போது முழுமையாகத் தெரிந்துகொள்கின்றாரோ அப்போது அவர் தாழ்ச்சியுள்ளவராக மாறுவது உறுதி. அடுத்ததாக, எவர் ஒருவர் தம்மை நிறைவானவராகிய கடவுளோடு தம்மைக் ஒப்பிட்டுப் பார்க்கின்றாரோ அவரும் தாழ்ச்சியுள்ளவராக மாறிவிடுவார். எப்படியென்றால் உன்னத இறைவனோடு ஒருவர் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருக்கு முன்னால் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்வர். அப்போது இயல்பாகவே அவரிடத்தில் தாழ்ச்சி வளரும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் அவர் நமக்குப் போதித்த தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!