Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4,11 - 21: 2

வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு.

வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்; பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்; இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

பின்பு நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை; அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதும் இல்லை. அவர்கள் மீண்டும் உயிர் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.

பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன்.

அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்துவைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு. வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.

பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  84: 2. 3. 4-5a, 7a (பல்லவி: திவெ 21: 3)
=================================================================================
 பல்லவி: இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். 5a உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். 7a அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

எந்த மனிதரின் வார்த்தையும் ஒழிந்து போவது கிடையாது.

ஒன்று நல்ல மரம் நல்ல கனி தரும். கெட்டமரமோ கெட்ட கனித் தரும்.

அதுபோல நல்ல மனிதரின் வார்த்தையோ நல்ல பலன் கொடுக்கும். தீய மனிதரின் வார்த்தையோ தீமையான விளைவினை ஏற்படுத்தும். மனிதரின் வாழ்வினில் இது நடைமுறைத் தான்.

மழையைப் போல இறைவார்த்தையும் பலன் கொடுக்கும் என ஏசாயாவில் கூறியுள்ளார்.

நம்பி அந்த வார்த்தைகளை வாசித்து, யோசித்து, அசை போட்டு வாழ்வாக்குவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அழியா இறைவனின் வார்த்தைகள்

பதினெட்டாம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய சிந்தனையாளர் வால்டர் (1694 1778). இவர் மிகச் சிறந்த எழுத்தாளர், தத்துவவாதி, நாடக ஆசிரியர், விமர்சகர்.

வால்டர் ஒரு நாத்திகவாதியும்கூட, கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே பறைசாற்றி வந்தார். ஒருநாள் இவர் தன்னுடைய கிறிஸ்தவ நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், "கிறிஸ்தவ மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் திருவிவிலியம் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் அழிந்துபோய்விடும். ஏனென்றால் அது எல்லா காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் எழுதப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே எழுப்பட்ட நூல். என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்டு அவருடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கு சரியான கோபம் வந்தது. இருந்தாலும் இந்த ஆளுடன் எதற்கு தேவையில்லாமல் விவாதம் செய்யவேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டார்கள்.

காலம் உருண்டோடியாது. விவிலியம் குறுகிய காலத்திலேயே மக்களுடைய பயன்பாட்டிலிருந்து அழிந்துபோய்விடும் என்று யார் சொன்னாரோ அவருடைய இல்லமே விவிலியத்தை சேமித்து வைக்கும் ஒரு பாதுகாப்புப் பெட்டகமாக உருவாகியது. ஆம், வால்ட்டர் என்ற அந்த சிந்தனையாளரின் இறப்புக்குப் பிறகு, அவருடைய இல்லத்தை பிரான்சு நாட்டில் இயங்கி வரும் "Bible Association" என்றதொரு இயக்கம் விவிலியத்தை பாதுகாத்து வைக்கும் ஓர் இல்லிடமாக மாற்றியது.

இன்றைக்கு உலகத்தில் எத்தனை பேர் வால்டரின் கருத்துகளைச் சிந்தித்து, அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விவிலியமோ இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மக்களால் வாசிக்கப்பட்டு, வாழ்வாக்கப்படும் ஒரு நூலாக இருக்கின்றது. காரணம் விவிலியம் மனிதரால் எழுப்பட்ட ஒரு சாதாரண நூல் கிடையாது. மாறாக அது தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட ஒரு வாழ்வளிக்கும் நூல் ஆகும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உலக முடிவு பற்றியும், மானிட மகனின் வருகையையும் பற்றி பேசிவிட்டுக் கூறுவார், "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் (கடவுளின் வார்த்தைகள்) ஒழியவே மாட்டா" என்று. ஆம், இறைவனின் வார்த்த்கைகளுக்கு இறைவனைப் போன்று அழிவே இல்லை.

இன்றைக்கு உலகத்தில் நிகழ்ந்த எத்தனையோ மாற்றங்களுக்கு, புரட்சிகளுக்கு விவிலியம் ஆதாரமாக இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாது. இலத்தின் அமெரிக்க நாடுகள் விவிலியத்தின் துணைகொண்டு தங்களுடைய நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள் என்பது நாம் அறியாத ஒன்றல்ல. காரணம் விவிலியம் வாழ்வுதரும் வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது (யோவா 6:68). மனிதரின் வார்த்தைகள் ஒருவரைக் கொல்லும், ஒருவரைக் காயப்படும். ஆனால் இறைவனின் வார்த்த்கைகள் அப்படிக் கிடையாது. அது எப்போதும் நலம்தரும் மருந்தாகவே, ஆற்றலைத் தரும் அருமருந்தாக இருக்கின்றது. எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவார்த்தைக்கு உள்ள மகத்துவத்தை உணர்ந்து கொண்டு செயல்படவேண்டும்.

"ஒரு கையில் செய்தித்தாள் இருக்கட்டும், மறுகையில் விவிலியம் இருக்கட்டும்" என்பார் விலிலிய ஆய்வாளர் காலர் பார்த் என்பவர். ஆம், நம்முடைய வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக, சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வாழ்வாக அமைய வேண்டுமென்றால் நம்முடைய கையில் செய்தித்தாள் மட்டும் போதாது விவிலியமும் இருக்கவேண்டும்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அமெரிக்க வீரன் ஒருவன் தென்கடல் தீவில் (South Sea Island) பணியாற்றிக்கொண்டிருந்தான். அதிலுள்ள ஓர் ஆதிவாசி, தான் பொன்போல் போற்றிப் பாதுகாத்து வந்த திருநூலின் பழம்பிரதியை அந்த அமெரிக்க வீரனிடம் காட்டி, "இது எங்கள் மாபெரும் சொத்து" எனப் பெருமிதத்துடன் கூறினான்.

அதற்கு அந்த அமெரிக்க வீரன், "நாங்கள் இந்த பழமையை மூட நம்பிக்கையை என்றைக்கோ கடந்து சென்றுவிட்டோம்" என்று ஆணவத்தோடும், அலட்சியத்தோடும் பதிலளித்தான். உடனே அந்த ஆதிவாசி, "நாங்கள் அந்த நிலைக்கு இன்னும் தாழ்ந்துவிடவில்லை" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான், "நாங்களும் வேதாகமத்தை பழங்கதைகளாகக் கருதியிருந்தால், நீ இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டாய், இங்கே வந்த நாளே, நீ எங்களுக்கு உணவாகியிருப்பாய்" என்றான்.

இந்த பதிலைக் கேட்டு அமெரிக்க வீரன் அதிர்ச்சிக்கு உள்ளாகி நின்றான். விவிலியம் மக்களின் வாழ்வில் எந்தளவுக்கு மாற்றத்தை கொண்டுவந்திருகிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு போதும்.

ஆதலால் கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவார்த்தையின் வல்லமையை, அமரத்தன்மையை உணர்ந்து, அதனை நாம் அனுதினமும் வாசித்து வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

"The Bible is alive, it speaks to me; it has feet, it runs after me; it has hands, it lays hold of me." Martin Luther.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோனாலும் ஆண்டவருடைய வார்த்தைகள் ஒழியவே ஒழியா"

ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி நடந்தபோது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவை கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய தொடக்கக் காலகட்டத்தில், உரோமையர்கள் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றியவர்களைச் சித்ரவதை செய்தததைவிடவும் மிகவும் மோசமாக இருந்தது. நற்செய்தி அறிவிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான குருக்கள் நடுவீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்; ஆயிரக்காணக்கானோர் சைபீரியா தீவுக்கு நாடுகடத்தப்பட்டு மிக மோசமாக சித்ரவதை செய்யப்பட்டனர்கள். இதனால் கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று தெரிந்தால், தங்களுடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று பயந்து, கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

இவற்றுக்கு மத்தியில், ஒருசில குருக்கள் ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு எப்படிக் கொண்டு செல்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் பயனாக, அவர்களுக்கு ஒரு யோசனை பிறந்தது. ரஷ்யர்கள் குழந்தைகள்மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்கள், அவர்களுக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே, அந்தக் குழந்தைகளின் மூலமாக ஆண்டவரின் நற்செய்தியை மக்களிடத்தில் கொண்டுசெல்ல முடிவுசெய்தார்கள்.

எனவே, அவர்கள் கிறிஸ்தவக் குடும்பங்களில் இருந்த 6 வயதிலிருந்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அண்டர்கிரவுண்ட் சர்சஸ் எனப்படும் பாதாள அறை ஆலயங்களுக்கு வரச்சொல்லி, அவர்களிடத்தில் அச்சடிக்கப்பட்ட சிறு சிறு விவிலியங்களைக் கொடுத்து, அவற்றை மக்களிடத்தில் விநியோக்கிச் சொன்னார்கள். அந்தக் குழந்தைகளும் தங்களிடம் கொடுக்கப்பட்ட விவிலியங்களை விநியோக்கித்தார்கள். குழந்தைகள் இவ்வாறு செய்தது யாருக்கும் எந்தவொரு சந்தேகத்தையும் தரவில்லை. காவலுக்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த படைவீரர்கள்கூட குழந்தைகள் தங்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டு அவர்களுக்கு சாக்லேட்களும் இனிப்புகளும் கொடுத்து அனுப்பினார்கள்.

இவ்வாறு கிறிஸ்தவத்தை ரஷ்யாவிலிருந்து கூண்டோடு அழிந்துவிடவேண்டும் என ஆட்சியாளர்கள் கங்கணம் கட்டிகொண்டிருந்தபோது, குழந்தைகள் வழியாக ஆண்டவருடைய நற்செய்தி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆண்டவருடைய வார்த்தைக்கு, அவருடைய நற்செய்திக்கு அழிவே இல்லை என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேமிற்கு நேர இருந்த அழிவினைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது, விண்ணும் மண்ணும் அ(ஒ)ழிந்துபோனாலும் என் வார்த்தைகள் அ(ஒ)ழியவே (அ)ஒழியா" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளை சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பதற்கு முன்பாக, இவ்வார்த்தைகள் எத்தகைய சூழலில் பேசப்பட்டவை என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு கிறிஸ்து எருசலேமிற்கு வந்தபோது, அந்நகருக்கு நிகழவிருந்த அழிவினை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார். 'இப்போதுகூட அமைதிக்கான வழியை நாடவில்லையே!' என்று ஒரு தாய்க்குரிய வாஞ்சையோடு மிகவும் வருந்துகிறார். பின்னர் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கு வாணிபம் செய்தவர்களை விரட்டி அடிக்கின்றார். இப்படி எல்லாவிதத்திலும் சீரழிந்து போயிருக்கும் எருசலேம் நகர், ஒருநாள் அழிக்கப்படும் என்கின்றார். எருசலேம் அழிக்கப்பட்டதற்கு ஒரே காரணம், அது கடவுளையும் அவருடைய அடியார்களையும் புறக்கணித்து வாழ்ந்ததுதான். அதனால்தான் அது அழிவுறும் என்று சொல்கின்றார். நாமும் கடவுளை மறந்து, அவருடைய வழியில் நடக்காது, நம்முடைய விருப்பம் போன்று நடக்கின்றபோது அழிவுறுவது உறுதி.

எருசலேமின் அழிவைப் பேசுவிட்டு, எல்லாம் ஒழிந்து போனாலும் என்னுடைய வார்த்தைகள் ஒழியவே ஒழிய என்கின்றார். இந்த உலகமும் அதில் இருக்கின்ற எல்லாமும் ஒருநாள் அழிந்துவிடும். காரணம் அவை இயல்பிலே அழிவுறக்கூடியவை. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் அப்படியல்ல, அவை, அவரைப் போன்றே இறவாத்தன்மையை கொண்டவை. ஏனென்றில் யோவான் நற்செய்தி 1:1 ல் படிப்பதுபோல, வாக்கு தொடக்கத்திலே இருந்து, அது கடவுளாகவும் கடவுளோடும் இருந்தது. அப்படித் தொடக்கத்தில் இருந்த வாக்குக்கு எப்படி அழிவு வரும்?. ஒருபோதும் அழிவு என்பதே கிடையாது என்பதுதான் உண்மை.

இப்படிப்பட்ட அழியாகத் தன்மைகொண்ட வார்த்தைக்கு நாம் செவிமடுத்து, அதன்படி நடக்கின்றோமா? என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இன்றைக்கு இருக்கின்ற பலரைப் போன்று, அன்று இஸ்ரயேல் மக்கள் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கவில்லை, அதனால் அழிந்துபோனார்கள். மாறாக, நாம் அவர்களைப் போன்று இல்லாமல், இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தோம் என்றால், நிலைவாழ்வினை பெறுவது உறுதி.

இறைவாக்கினர் ஆமோஸ் கூறுவார், "ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வீர்கள்" (ஆமோ 5:4) என்று. நாம், ஆண்டவரைத் தேடி, அழியாத அவருடைய வார்த்தையின் படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!