Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   29  நவம்பர் 2018  
                                                பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18:1-2, 21-23; 19: 1-3,9a

சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: "வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்."

பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: "பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது." இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன்.

அது பின்வருமாறு முழங்கியது: "அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்."

மீண்டும் அந்த மக்கள், "அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது" என்றார்கள்.

அந்த வானதூதர் என்னிடம், " ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது" என்று கூறினார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  100: 1-2. 3. 4. 5 (பல்லவி: திவெ 19: 9a)
=================================================================================
 பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும்.

மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"அப்போது யூதாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்"

2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற மதக் கலவரத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், ஜாலேஸ்பட் (Jalespate) என்ற நகரில் இருந்த லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற மதவெறியனை யாரோ ஒரு மர்ம நபர் கொன்றுபோட்டுவிட்டார். அவனைக் கொன்றது கிறிஸ்தவர்கள்தான் என நினைத்துகொண்டு இந்து மத வெறியர்கள் கந்தமால் மாவட்டம் முழுவதும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டார்கள்.

ஆகஸ்ட் 24 ஆம் நாள், அதாவது லக்ஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்ட மறுதினம், அவனுடைய உடலை வானகத்தில் தூக்கிக்கொண்டு, அவனுடைய சொந்த ஊரான ரைக்காவில் (Raika) புதைக்க வைத்தார்கள். வரும் வழியெங்கும் அவர்கள், எங்கெல்லாம் கிறிஸ்தவர்களுடைய வீடுகள், கடைகள், ஆலயங்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் தீக்கிரையாக்கிப் போட்டுக்கொண்டு வந்தார்கள்; கண்ணில் பட்ட கிறிஸ்தவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

மாலை 6 மணிக்கு லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் உடல் ரைக்காவை வந்தடைந்தது. அவனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டு, அங்கிருந்த கிறிஸ்தவ இல்லங்களையும் அவர்களுடைய கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தத் தொடங்கினார்கள். ரைக்காவில் மிகப்பெரிய தேவாலயம் ஒன்று இருந்தது. அதற்குள்ளே புகுந்த மதவெறியர்கள், அங்கிருந்த நற்கருணைப் பேழையையும் சிரூபங்களையும் உடைத்துப் போட்டு ஆலயத்திற்குத் தீ வைத்தார்கள்.

இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்து ரைக்காவில் இருந்த கிறிஸ்தவர்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துகொண்டார்கள். ஆனால் ரைக்காவில் பள்ளிக்கூடமும் விடுதியும் அனாதை இல்லமும் நடத்தி வந்த தூய வின்சென்ட் தே பவுல் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் (Daughters of charity of St. Vincent de paul) விடுதியில் உள்ள பிள்ளைகளையும் அனாதைகளையும் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் காட்டுக்குள் ஓடி, தப்பித்துக்கொள்வது நல்லதல்ல என்று, மடத்திற்குள்ளாகவே இருந்து, நற்கருணை ஆண்டவரிடம் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக அவர்களை பயம் அதிகமாகத் தொற்றிக்கொண்டது. அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக உருக்கமாக வேண்டி வந்தார்கள்.

இரவு 12 மணி இருக்கும். மதவெறிக் குப்பல் கன்னியர் மடத்தில் உள்ள கன்னியர்களைப் பிடித்துக் கொல்வதற்காக கொலை வெறியோடு கன்னியர் மடத்தின் வாசலை நெருங்கியது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன், "கதவின் வெளிப்பக்கம் பூட்டுப்போட்டிருக்கிறது, அதனால் உள்ளே யாரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை, எல்லாரும் பயந்து ஓடிவிட்டார்கள் என நினைக்கிறேன்" என்றான். அவன் சொன்னதை மற்றவர்கள் ஆமோதிப்பதுபோல், "ஆமாம், அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். அதனால் திரும்பி விடுவோம்" என்று திரும்பிப் போனார்கள். எல்லாவற்றையும் சிற்றாலயத்தினுள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த அருட்சகோதர்கள், "நற்கருணை ஆண்டவர்தான் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்" என்று அவருக்கு செலுத்தித் தொடங்கினார்கள்.

உயிருக்கு ஆபத்து வந்த வேளையில், ரைக்காவில் இருந்த அருட்சகோதரிகள் நற்கருணை ஆண்டவரின் துணையை நாடியதால் காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி, உண்மையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நகருக்கு நேர இருந்த அழிவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அப்படிக் குறிப்பிடும் அவர் சொல்லக்கூடிய, "யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்" என்ற வார்த்தையை மட்டும் நம்முடைய இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரையும் அவருடைய வழிகளையும் புறக்கணித்ததால், அவர்கள் அழிவினைச் சந்திப்பார்கள் என்று இயேசு எடுத்துச் சொல்கின்றார். அப்படிச் சொல்லும்போது, "யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நடுவில் உள்ளவப்ர்கள் வெளியேறட்டும்" என்கின்றார். இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு, யாராரெல்லாம் யூதேயாவின் மீதான உரோமையர்களின் படையெடுப்பின்போது மலைகளுக்குத் தப்பி ஓடினார்களோ, அவர்களெல்லாம் உயிர்பிழைத்தார்கள். அப்படி மலைகளுக்குத் தப்பி ஓடாமல், நகரில் இருந்தவர்கள் எல்லாம் உரோமையர்களால் கொன்றொழிக்கப்பட்டார்கள். இது யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேப்புஸ் சொல்லக்கூடிய செய்தி.

இங்கே மலை என்று இயேசு குறிப்பிடுவதை, எல்லாம் வல்ல இறைவன் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அருட்சகோதரிகள் போன்று, யாராரெல்லாம் இறைவனிடம் தஞ்சம் அடைகின்றாரோ அவர்கள் எல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். அப்படி இறைவனிடம் தஞ்சம் அடையாமல், அவருடைய வார்த்தையைக் கேட்டு நடக்காதவர்கள் அழிவைச் சந்திப்பார்கள் என்பது உறுதி.

ஆகவே, நாம் நம்முடைய வாழ்வில் இறைவனே தஞ்சமெனக் கொள்வோம்; அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மானிட மகனின் வருகை

முன்பொரு காலத்தில் ஈரான் நாட்டை சுல்தான் முகமது இப்ன் டாட் என்பவன் ஆண்டுவந்தான். ஈரான் நாட்டில் அவனுடைய ஆட்சிக் காலமானது பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

அவன் சுற்றிலும் உள்ள நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, அவற்றின்மீது வெற்றிகொண்டு, அவற்றை தன்னுடைய நாட்டோடு சேர்த்துக்கொண்டான். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு நல்லதொரு ஆட்சியையும் வழங்கினான். அவனுடைய ஆட்சியில் மக்கள் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழ்ந்துவந்தார்கள்.

வேதனை என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு பொற்கால ஆட்சியை வழங்கிய சுல்தான் முகமது இப்ன் டாட் குறைந்த வயதிலே இறந்துபோனான். இதனால் மக்கள் மத்தியில் அவன் மீண்டுமாக வருவான், எல்லா நாடுகளின்மீதும் படையெடுத்து சென்று அவற்றைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவான் என்ற நம்பிக்கை தோன்றியது. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக குசன் (Kuchan) என்ற இடத்தில் இருக்கும் மசூதிக்கு முன்பாக ஒரு குதிரை எப்போதுமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சுல்தான் மீண்டுமாக வரும்நாளில் அவன் அந்த குதிரையில் ஏறிச்சென்றுதான் மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்குவான் என்றதொரு நம்பிக்கை இன்றைக்கும் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்பும் சுல்தான் முகமது இப்ன் டாட் மீண்டுமாக உயிர்பெற்று வரவே இல்லை. ஆனாலும் அவருடைய அடியார்கள் அவருடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுல்தான் முகமது இப்ன் டாட்டின் வருகை சாத்தியமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது உண்மையிலும் உண்மையான ஒன்று. அதற்கு இயேசுவின் வார்த்தைகளே நமக்குச் சான்றாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உலக முடிவு பற்றியும், அதன் நிறைவாக மானிட மகனின் இரண்டாம் வருகையையும் பற்றி எடுத்துரைக்கின்றார். திருவெளிப்பாடு நூலில் வரும் மொழிநடையைப் போன்று இருக்கும் லூக்கா நற்செய்தியின் இப்பகுதி படிப்பதற்கு சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், ஓர் உண்மையை நமக்குத் தெளிவாக விளக்குகின்றது. அது வேறொன்றும் இல்லை. மானிட மகனது இரண்டாம் வருகைதான்.

ஆண்டவரின் நாள் வருவதற்கு முன்பாக மண்ணுலகில் போர்களும், குழப்பங்களும் ஏற்படும் என்பது யூதர்களின் ஆழமான நம்பிக்கையாக இருந்தது. இத்தகைய ஒரு கருத்து விவிலியத்தின் பல இடங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக இறைவாக்கினர் மலாக்கி புத்தகத்தில் இதைத் தெளிவாக வாசிக்கின்றோம், "இதோ சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும். ஆனால் ஆண்டவர் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம்தரும் மருந்து இருக்கும்..." (மலா 4:1-2).

இத்தகைய ஒரு சிந்தனையை உள்வாங்கிக்கொண்ட லூக்கா நற்செய்தியாளர் மானிட மகனது இரண்டாம் வருகையைப் பற்றி எழுதும்போது அதனை அப்படியே எழுதுகின்றார்.

இப்போது மானிடம் மகனது வருகைக்காக நாம் என்ன செய்யப்போகிறோம் அல்லது நம்மையே நாம் எப்படித் தயாரிக்கப் போகிறோம் என்பதுதான் நமக்கு முன்னால் உள்ள கேள்வியாக இருக்கின்றது. மானிட மகனது வருகையைப் பற்றி குறிப்பிடும் இயேசு எப்போது நிகழும் என்பதைப் பற்றி குறிப்பிடவில்லை (மத் 25: 13). எனவே ஆண்டவரின் வருகைக்காக விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருப்பதன் வழியாக நாம் அவரது வருகையை அர்த்தமுள்ளதாக்கலாம்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகம் 13: 9,11 ஆகிய வசனங்களில் படிக்கின்றோம், "இதோ ஆண்டவரின் நாள் வருகின்றது; கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருந்து பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது... (அந்நாளில்) உலகை அதன் தீச்செயலுக்காகவும், தீயோரை அவர்தம் கொடுஞ்செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்" என்று வாசிக்கின்றோம்.

எனவே ஆண்டவரின் நாள் தீயோருக்கும், கொடியவர்களுக்கும் அழிவின் நாள் என்பது கண்கூடு. அதேநேரத்தில் நல்லவர்களுக்கும், ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கும் அது விடுதலையின் நாள், மகிழ்ச்சியின் நாள். ஆதலால் நாம் ஆண்டவரின் நாளைக் குறித்து, அல்லது மானிட மகனின் வருகையக்

குறித்து பயந்து தவிக்காமல், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (லூக் 21:20-28) - நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்

எருசலேம் அழிவைப் பற்றி இயேசு முன்மொழிவதன் தொடர்ச்சியை இன்றைய நற்செய்திப் பகுதியில் வாசிக்கின்றோம். இயேசு இறந்து உயிர்த்த 40 ஆண்டுகளுக்குப் பின் எருசலேம் நகரம் போரில் அழியத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. ஆக, நற்செய்தியாளர்கள் தங்கள் கண்முன் நிகழ்ந்த நிகழ்வுகளை இயேசுவே இறைவாக்காக உரைத்ததாக எழுதியிருக்கலாம் என்பது பல ஆசிரியர்களின் கருத்து. ஏனெனில், போர் ஏற்படுத்தும் குழப்பம், தாக்கம், இழப்பு, கண்ணீர், பரிதாபம் அனைத்தையும் மிகவும் துல்லியமாகப் பதிவு செய்கின்றனர் நற்செய்தியாளர்கள் - குறிப்பாக, லூக்கா: 'கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை ... கூரான வாள் ... சிறை ... குழப்பம் ... அச்சம் ... மயக்கம்.'

மேலும், கிறிஸ்தவர்கள் 'பருஸியா' என்று சொல்லப்படும் இரண்டாம் வருகை மிக அருகில் இருந்ததாக எண்ணினர். ஆகையால்தான், 'கதிரவன் நிலாவில் அடையாளம், வான்வெளிக் கோள்கள் அதிர்தல்' என்று உருவகமாக உலக முடிவை அறிவிக்கின்றனர் நற்செய்தியாளர்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கோளை இப்போது படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கும். இந்நேரம் அமெரிக்காவின் அப்பொல்லா-இரண்டு உண்மையிலேயே நிலவிற்குச் சென்றதா என இரஷ்யா ஆராய்ந்து கொண்டிருக்கும். கதிரவன், நிலா, விண்மீன், வான்வெளிக் கோள்கள் என அனைத்தும் இன்று மனிதர்களின் ஆராய்ச்சிப் பொருள்களாகிவிட்டன.

இன்னொரு பக்கம், இயேசு, லூக்கா, நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நீங்கள், நான் என எல்லாவற்றிற்கும் அழியாத சாட்சிகள் யார் என்றால் இந்த கதிரவன், நிலா, விண்மீன்கள், மற்றும் கோள்கள்தாம் - 'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா!'

இவை எல்லாம் நடக்குமா?

'இவை எல்லாம் நடக்குமா? நடக்காதா?' என்பது கேள்வி அல்ல.

மாறாக, இவை நடக்கும் போது எப்படி இருக்க வேண்டும்? என்பதுதான் கேள்வி.

'தலைநிமிர்ந்து நில்லுங்கள்'

இது ஒரு படைவீரர் சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கும் போர்வீரர் தயார்நிலையில் இருக்கிறார். விழித்திருக்கிறார். கூர்ந்து கவனிக்கிறார்.

ஆக, அந்த நாளை எதிர்கொள்ள 'தயார்நிலை,' 'விழிப்பு,' 'கூர்ந்து கவனித்தல்' அவசியம்.

இன்று நம் வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கு - காய்ச்சல் போன்ற நோயில் தொடங்கி, மது போன்ற பழக்கங்கள் வரை - காரணம், நாம் தலைநிமிர்ந்து நில்லாததே.

நாம் தலை சாய்ந்து அல்லது தலை கவிழ்ந்து கிடக்கும்போதுதான் எளிதாக விழுந்துவிடுகிறோம். நம் பார்வை குறுகி, நாம் சரியாகப் பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, தலைநிமிர்ந்து நாம் சும்மா நின்றாலே நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை நம்மை தழுவிக்கொள்ளும். தன் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர் எதையும், யாரையும் எதிர்கொள்ள முடியும் - அது மானிடமகனின் வருகையாக இருந்தாலும்.

- Rev. Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!