Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன்.

அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: "கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.

ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)
=================================================================================
 பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.

1 ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

வளர்ச்சி காணும் உலகில் மன உறுதி குறைந்து வருவதாலேயே தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருகின்றது. மனஉறுp குறைந்து வருவதற்கு காரணம் பாதுகாப்பு இல்லாத சூழலே காரணமாகின்றது. மனிதர்கள் அறிவிலில் வளாந்து, மருத்துவத்தில் உயர்ந்து, படிப்பு பட்டங்களில் கொடிகட்டி பறந்து உறவுககளில் உண்மையை தொலைத்து, தெய்வ நம்பிக்கையில் பின்தங்கி நிற்பதுவே மனஉறுதி குறைவுக்கான காரணமாகின்றது.

மனஉறுதி தெய்வ நம்பிக்கையாலும் நல்ல உறவுகளாலும் நிறைவாக பெற்றுக் கொள்ள முடியும்.

இதனைத் தவிர பணம், படிப்பு, பட்டம், பதவி போன்ற எதுவுமே தந்திட இயலாது.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் மனவுறுதியோடு இருந்து, உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்"

ஜான் ஒகில்வி (John Ogilvie), இயேசுவின் சபையைச் சார்ந்த மறைசாட்சியான இவர், 1579 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் சிறுவயது முதலே குருவாக மாறவேண்டும், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆவல்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஜான் ஒகில்வி, 1599 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து, 1610 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு ஜான் ஒகில்வி, கிளாஸ்கெள, எடின்பர்க் போன்ற பகுதிகளுக்குச் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அங்கிருந்த மக்களுக்கு மிக வல்லமையோடு அறிவிக்கத் தொடங்கினார். இவர் அறிவித்த நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு, பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். இது அங்கிருந்த ஆட்சியாளர்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியது. ஜான் ஒகில்வி அறிவிக்கின்ற நற்செய்தியினால் எங்கே எல்லாரும் கிறிஸ்தவ மதத்திற்குப் போய்விடுவார்களோ என பயந்து, அவரை சிறைப் பிடித்து பலவாறு சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள்.

"புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு வந்தவர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லும், நாங்கள் உம்மைக் கொல்லாமல் விட்டுவிடுவோம்" என்று அவரிடத்தில் வஞ்சகமாகப் பேசினார்கள். அதற்கு அவர் சம்மதிக்காததால், அவருடைய நகத்தை ஊசியால் குத்தினார்கள், கால்களில் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அடித்தார்கள், அவர் தூங்காமல் இருக்க அவருடைய விழிகளில் பழுக்கக் காய்ச்சிய திரவத்தை ஊற்றினார்கள். இப்படி பல்வேறு விதங்களில் அவர்கள் அவரைச் சித்திரவதைப் படுத்தினாலும் எதற்கும் அவர் அடிபணியாமல், தன்னுடைய விசுவாசத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இதற்குப் பின்பு அவர்கள் அவரைக் கழுமரத்தில் ஏற்றினார்கள். அப்போதுகூட அவர் தன்னுடைய விசுவாசத்தில் சிறிதளவுகூட பிறழவில்லை. அவர் கழுமரத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பாக, சிறிது நேரம் அமைதியாகச் ஜெபித்துவிட்டு, தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலை யாருக்காவது பயன்படும் என்று அதனை, சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் வீசினார். அது கிறிஸ்துவின் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் மீது விழுந்தது. அதை அவர் மிகவும் பத்திரமாக வைத்துக்கொண்டு, பின்னாளில் அவர் புனித வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

ஜான் ஒகில்வி கொல்லப்பட்டதற்குப் பின்பு, அவருடைய மரணத்தை நேரடியாகக் கண்டு பலர் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர். எத்தனையோ துன்பங்களையும் சித்ரவதைகளையும் சந்தித்தபோதும் ஜான் ஒகில்வி, விசுவாசத்தில் உறுதியாக இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் நிகழப்போகிற சித்ரவதைகளையும் சிலுவைகளையும் அவமானங்களையும் பற்றிப் பேசுகின்றார். நற்செய்தியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது.

ஒன்று. இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு ஏற்படப்போகிற துன்பங்கள் உண்டு. தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயேசு, தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எத்தகைய துன்பங்களை எல்லாம் தங்கிக்கொள்ளவேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் அதே வலியுறுத்திக்கூறுகின்றார். நீங்கள் யூத சங்கங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்; கடுமையாக சித்ரவதை செய்யப்படுவீர்கள்; எல்லாருக்கும் முன்பாக தன்னைக் குறித்து சான்றுபகரவேண்டும் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். ஆகையால், இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்கள் கட்டாயம் சிலுவைகளை தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

இரண்டு, சீடர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்கள் வெறும் துன்பங்கள் மட்டுமல்ல, அவை இயேசுவை மாட்சிப்படுத்த கிடைத்த வாய்ப்புகள். இயேசு, தன்னுடைய சீடர்கள் பட இருக்கின்ற துன்பங்கள் யாவற்றையும் பட்டியலிட்டுவிட்டுச் சொல்வார், "எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்" என்று. ஆகையால், இயேசுவின் பொருட்டு, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களை நினைத்து வருத்தம் கொள்ளாமல், அவற்றின் மூலம் நாம் இயேசுவுக்கு சான்று பகரலாம் என உணர்ந்து செயல்படுதல் நல்லது.

மூன்று, சீடர்கள் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தாலும், அவர்களோடு இறைவனின் துணை எப்போதும் இருக்கும். நற்செய்திக்காக இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றோமா? இத்தகைய சூழ்நிலையில், இறைவன் நம்மோடு இருப்பாரா? என்றால் ஆம் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது. "உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாவே விழாது. ஆகவே, எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து பணிசெய்யுங்கள்" என்று தன்னுடைய சீடர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகின்றார்.

எனவே, இயேசுவின் சீடர்களாக இருக்கின்ற நாம், எதிர்வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல், மனவுறுதியோடு நற்செய்திப் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மனவுறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புனிதர், போஹேமியன் சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுபவர் ஜான் ஹஸ் (John Huss) என்பவர். இவர் பவேரியா இடத்தில் மறைபோதகப் பணியைச் செய்ததற்காக 1415 ஆம் ஆண்டு உயிரோடு தீயிலிட்டுக் கொழுத்தப்பட்டவர்.

அவ்வாறு அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக கயவர்கள் சிலர், சாத்தான்களின் உருவப்படம் பொறித்த கிரீடத்தை அவருடைய தலையில் பொருத்தி அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர், "என் ஆண்டவராகிய இயேசுவே தனக்குப் பொருத்தப்பட்ட முன்கிரீடத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார். அவரே அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது நான் இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தடங்கல் இருக்கிறது" என்று அந்த கிரீடத்தை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் அந்த கயவர்கள் ஜான் ஹசின் கழுத்தில் ஒரு பாரமான மரத்தைக் கட்டி, "நீ மட்டும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விட்டுவிட்டால், உன்னைக்கொல்லாமல் விட்டுவிடுவோம்" என்று பயமுறுத்திப் பார்த்தனர். அப்போது அவர், "என்னை நீங்கள் கொன்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி, நான் என்னுடைய ஆண்டவர் இயேசுவை ஒருநாளும் மறுதலிக்க மாட்டேன். அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்காமல் இருக்கமாட்டேன்" என்று தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார்.
இறுதியல் அவர்கள் ஜான் ஹசை தீயிலிட்டு கொன்றுபோட்டார்கள். அவரோ, "ஆண்டவர் இயேசுதான் உண்மையான இறைவன்" என்று பாடிக்கொண்டே உயிர்துறந்தார்.

எத்தனை அச்சுறுத்தல், துன்பங்கள் வந்தாலும் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்த ஹான் ஹசின் சாட்சிய வாழ்வு உண்மையிலே நமக்கு மிகப்பெரிய மடமாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறுதி நாட்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்கிறபோது தன்னைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துன்பம் வரும் என்பதை இவ்வாறு எடுத்துக்கூறுகிறார், "அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். என் பெயரின் பொருட்டு அரசர்களிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்... நீங்கள் மனவுறுதியோடு உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்".

இயேசுவின் சீடர்கள் யாவரும் நற்செய்தி அறிவிப்பில் வரும் துன்பங்களையும், சவால்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவருடைய அறிவுரையாக இருக்கின்றது. எனக்கு துன்பங்கள் வேண்டாம், சிலுவைகள் வேண்டாம், பாடுகள் வேண்டாம் என்று சொல்லும் எவரும் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.

நற்செய்தி அறிவிப்பில் வரும் துன்பங்களை எடுத்துச் சொன்ன இயேசு, அதில் இருக்கும் கடவுளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் நமக்குச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. "உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள். உங்களுள் சிலரைக் கொள்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்" என்று சொல்லும் இயேசு, "இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது" என்கிறார். இதுதான் கடவுள் தன்னுடைய அடியார்களுக்குத் தரும் பாதுகாப்பும், நம்பிக்கையுமாக இருக்கின்றது.

விவிலியத்தில் பல இடங்களில் இதுபோன்ற ஆறுதலான வார்த்தையையும், பாதுகாப்பையும் இறைவன் தன்னுடைய அடியார்களுக்குத் தருவதை வாசிக்க முடிகிறது. ஆண்டவராகிய கடவுள் மோசேயை இஸ்ரயேல் மக்களை வழிநடத்த அழைத்தபோது அவரோ, "ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில் எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்" என்கிறார். அதற்கு ஆண்டவர் அவரிடம், "இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேசவேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்று சொல்லி அவரைத் திடப்படுத்தி அனுப்பி வைக்கிறார். (விப 4: 10-12)

ஆண்டவர் எரேமியா இறைவாக்கினரை தன்னுடைய பணிக்காக அழைக்கும்போது அவர், என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே" என்று சொல்கிறார். உடனே கடவுள் அவரைப் பார்த்து, "சிறுபிள்ளை நான்" என்று சொல்லாதே, யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடம் சொல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகிறேனோ அவற்றை சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" ( எரே 1: 6-9) என்கிறார்.

எனவே, கடவுள் தன்னுடைய அடியார்களுக்குச் செய்யும் நன்மை அளப்பெரியது. ஆதலால், கடவுளின் பராமரிப்பை உணர்ந்தவர்களாய் துணிவுடன் நற்செய்தி அறிவிப்போம். எதிர்வரும் சவால்களை எதிர்த்து நிற்போம். இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!