Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   23  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11

சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, "கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்" என்றது.

நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன்.

அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.

உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.

"பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்" என்று எனக்குச் சொல்லப் பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  119: 14,24. 72,103. 111,131 (பல்லவி: 103a)
=================================================================================
 பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன. பல்லவி

72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. 103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. பல்லவி

111 உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. 131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், " `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

கோவிலைப் பார்த்து அழுதார், இன்று கோவிலை கள்வர் குகையாக்குகிறீர்கள் என்று அறச்சினத்தோடு விரட்டியடிக்கின்றார்.

அறச்சினம் இன்று காலத்தின் கட்டாயம்.

அது இல்லாது போவதாலேயே, அக்கிரமங்களும், வன்முறைகளும் அதிகரித்து நிற்கின்றது.

அறச்சினம் நம்முடைய மண்ணுக்கே உரிய பாணியில் அறவழியில் எடுத்துச் செல்ல முன்வருவோமேயானால், நாடு செழிப்படையும், நானிலம் சிறக்கும், நல்லது விளையும்.

 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என் இல்லம் இறைவேண்டலில் வீடு, நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கினீர்கள்"

திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் (Leo XIII) திரு அவையை நன்முறையில் வழிநடத்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு துறவுமடத்தின் சிற்றாலயமானது கவனிப்பாறற்றும் பராமரிப்பு இன்றியும் பாழடைந்தும் காணப்படுகின்றது என்று எழுதப்பட்டிருந்தது. துறவுமடத்திற்கு உள்ளே இருக்கின்ற சிற்றாலயத்தை யாராவது கவனிக்காமல் வைத்திருப்பார்களா?, இது ஏதோ பொய்யாகப் புனையப்பட்ட கடிதமாக இருக்கும் என்றுதான் முதலில் அவர் நினைத்தார். பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், குறிப்பிட்ட அந்த சிற்றாலயம் எப்படித்தான் இருக்கின்றது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அந்த துறவுமடத்தை நோக்கி இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்றார்.

துறவுமடத்தை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் சிற்றாலயத்திற்குச் சென்றார். சிற்றாலயத்தைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவருக்கு வந்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறே சிற்றலாயமானது எங்கு பார்த்தாலும் ஒரே தூசியும் நூலாம்படையுமாக இருந்தது. ஆலயத்தின் சுவர்கள் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டன. இதைப் பார்த்த திருத்தந்தைக்கு கண்ணீர் தாரைதாரையாக வந்தது. அந்தக் கண்ணீரோடு, அங்கிருந்த இருக்கையில் (Pew) முழந்தாள் படியிட்டு வேண்டினார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த திருத்தந்தை துறவுமடத்தில் இருந்த துறவிகளைச் சந்தித்தார். திருத்தந்தையின் திடீர் வருகை அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் அவர்களைப் பார்த்து, "சிற்றாலயத்தை எதற்கு இப்படி பராமரிக்காமல் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களோ சரியான பதில் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பற்றிக் குறை கூறத் தொடங்கினார்கள். .

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சிறுதுநேரம் கழித்து, அவர்களிடமிருந்து விடைபெற்றார். அப்போது துறவுமடத்தின் தலைவர் திருத்தந்தையைப் பார்த்து, "திருத்தந்தை அவர்களே! நீங்கள் உரோமையிலிருந்து எங்களுடைய துறவுமடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்ததன் நினைவாக, ஏதாவது ஒன்றை எங்களுக்குத் தந்துவிட்டுப் போங்கள்" என்றார். "வந்ததன் நினைவாக ஏதாவது தரவேண்டுமா... நீங்கள் சிற்றாலயத்தின் உள்ளே போங்கள். அங்கே ஓர் இருக்கையில் ஒரு வசனம் எழுதப்பட்டிருக்கும் அதுதான் நான் உங்களுக்குத் தரும் நினைவுப் பரிசாகவும்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

திருத்தந்தை வெளியே சென்றதும், துறவிகள் யாவரும் சிற்றாலயத்தை நோக்கி விரைந்து சென்று, ஒவ்வொரு இருக்கையாகப் பார்த்தார்கள். ஓர் இருக்கையில், "உம் இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னைப் பற்றி எரித்துவிட்டது" (திபா 69:9) என்ற வசனமானது பொறிக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே திருந்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்துவிட்டு, அங்கிருந்த துறவிகள் யாவரும் நாம் சிற்றாலயத்தை சரியாகப் பாராமரிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அவர் இவ்வாறு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று பேசத் தொடங்கினார்கள். இதற்குப் பின்பு அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிற்றாலயத்தை தூய்மைபடுத்தி, அதில் வழிபாடு சரியாக நடக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.

ஆலயம் என்பது ஆண்டவன் உறைகின்ற இடம். அதனை தூய்மையாக வைத்திருப்பதும் அதற்குண்டான மரியாதை செலுத்துவதும் நமக்குண்டான தலையாய கடமையாகும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கு வாணிபம் செய்பவர்களை விரட்டி அடிக்கின்றார். எருசலேம் திருக்கோவிலானது எல்லா மக்களும் வழிபடக் கூடிய ஓரிடம். அதில் புறவினத்து மக்கள் வழிபடுகின்ற பகுதியில் வாணிபம் நடந்ததால், இயேசு அங்கு வாணிபம் செய்தவர்களை விரட்டியடிக்கின்றார்; என் இல்லம் இறைவேண்டலின் வீடு, நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்று கடுமையாகச் சாடுகின்றார்.

கள்வர் குகை என்பது கள்வர்கள் தாங்கள் வழிப்பறி செய்ததை மறைத்துக் கொள்வதற்கும் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்குமான ஓர் இடம். மக்களுக்கு முன்பாக தங்களை நேர்மையாளர்களைப் போன்று காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் பொய்யும் புரட்டுமாக இருந்த பரிசேயர்கள், எருசலேம் ஆலயத்தை தங்களுடைய தவறுகளை எல்லாம் மறைத்துக்கொள்வதற்கான ஓர் இடமாகப் பார்த்ததால்தான் இயேசு அதனைக் கள்வர்கள் குகையாக மாற்றிவிட்டீர்கள் என்று சாடுகின்றார்.

ஆலயம் ஆண்டவருடைய பிரசன்னம் தங்கியிருக்கக்கூடிய இடம், புனிதமான இடம், எல்லா மக்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய இடம். இதனைப் பாழ்படுத்துவதும் 'இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்' அதனால் இவர்கள் இங்கே வழிபடக்கூடாது என்று சொல்வதும் இறைவனுக்கு ஏற்றதாக இராது. அப்படி நாம் நடக்கின்ற பட்சத்தில் இறைவனின் சீற்றம் நம்மை விட்டு அகலாது என்பது மாறாத உண்மை.

ஆகவே, ஆலயத்தில் ஆண்டவர் உறைந்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து, அதற்குண்டான மதிப்பினைத் தருவோம். ஆலயத்தில் வேறுபாடு காட்டாது, அனைவரும் ஆண்டவரின் மக்கள் என்ற மனநிலையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 "என் இல்லம் இறைவேண்டலின் வீடு"

பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார். அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக் குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்:

"ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட மிகக்குறைவு.

மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர் வியாபாரி, "இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை, எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை" என்றார். இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.

ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும், தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும் நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும், மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.
தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது. எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும், (யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும், ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து, அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள் அவரிடம், "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்டவேண்டாம்" என்கிறார். (1குறி: 22:8)

எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின் காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி, அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், "இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக".

ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார், "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு" என்று (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள் ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர் இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார். ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல" என்பதை எண்பிக்கின்றார்.

இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி" என்பார்கள்.

எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
"He who doesnot go to church in bad weather will go to hell when it is fair".

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!