Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 1-10

சகோதரர் சகோதரிகளே, அரியணையில் வீற்றிருந்தவரது வலக் கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப்பெற்று மூடப்பட்டிருந்தது. "முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?" என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன். நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை. சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.

அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்றுவிட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்துவிடுவார்" என்று கூறினார்.

அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.

ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக் கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.

அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கிண்ணங்களும் வைத்திருந்தார்கள்.

இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: "ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா:149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: திவெ 5: 10)
=================================================================================
 பல்லவி: ஆட்சியுரிமை பெற்ற குருக்களாய் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும்.

அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

கோவிலைப் பார்த்து அழுதார்.

அமைதியின் வழியை அறியாதவர்களைப் பார்த்து அழுகின்றார்.

இவருக்கு பெயர் அமைதியின் மன்னர்.

கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும், உயிர் வாழும் ஆலயங்களாக இருக்கும் நாமாக இருந்தாலும், நாம் அமைதியின் தூதுவர்களாக வாழ்ந்திடல் வேண்டும். அமைதியை விதைப்பவர்களாக வாழும் போதே நாம் சாட்சிகளாக வாழுகின்றோம் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே!

அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். அவர்களே அமைதியை காண்பார்கள்.

கள்ளவர் குகையாக மாற்றப்பட்ட ஆலயத்தை கண்டவர் அமைதியை தொலைத்தார் என்று யோவான் கூறுகின்றார்.  யோ 02:13

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை"

அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்தாம் வகுப்புப் படித்து வந்த டோனி, ஞாயிறு மறைக்கல்வி வகுப்பு முடிந்து, வீட்டிற்குத் தனியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பாலத்தில் அமர்ந்திருந்த ஒருசில இளைஞர்கள் டோனியை இடைமறித்து, "டேய் தம்பி! இங்க வாடா" என்று கூப்பிட்டார்கள். டோனிக்கு உள்ளுக்குள் பயம். எதற்கு இவர்கள் அழைக்கிறார்கள்?, என்னை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்று பயந்துகொண்டே போனான்.

"எங்கே போயிட்டு வார?" என்றான் கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன். டோனியோ நடுங்குக்கொண்டே, "நானா... ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக்குப் போயிட்டு வாரேன்" என்றான். "அப்படியா! அங்கு என்ன சொல்லித் தந்தார்கள்?" என்றான் வேறொரு இளைஞன். "அங்கேயா... கடவுளைப் பற்றிச் சொல்லித் தருவார்கள்" என்றான் டோனி. "சரி... நான் உனக்கு பத்து ரூபாய் தருகிறேன். நீ எனக்கு கடவுள் எங்கிருக்கிறார் என்பதை மட்டும் காட்டு" என்றான் அந்த இளைஞன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த டோனி, தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர்கள் முன்பாக நீட்டி, "நீங்கள் எனக்கு கடவுள் எங்கு இல்லை என்பதை மட்டும் காட்டுங்கள், நான் உங்களுக்கு நூறுரூபாய் தருகிறேன்" என்றான். டோனி இவ்வாறு கேட்டதற்கு, அந்த இளைஞர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால் டோனி அவர்களிடமிருந்து மிக வேகமாக வந்துவிட்டான்.

ஆம், கடவுள் இல்லாத இடம் எதுவும் உண்டா? நிச்சயமாக இல்லை. அவர் எல்லா இடத்திலும் இருக்கின்றார். அது மட்டுமல்லாமல், அவர் தன் மக்களை ஒவ்வொரு நாளும் தேடி வருகின்றார். இன்றைய இறைவார்த்தையானது நம்மைத் தேடிவருகின்ற கடவுளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கின்றோம்? என்பது பற்றியதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நகரை நோக்கி வருகின்றார். அவர் அந்நகரை நெருங்கி வந்ததும், கோவிலைக் காண்கிறார். அதைக் கண்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார். இயேசு கிறிஸ்து இரண்டுமுறை அழுததாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்கின்றன. ஒன்று இலாசரின் இறப்பில் (யோவா 11:35), இன்னொன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில். இயேசு எதற்காக எருசலேம் கோவிலைக் கண்டதும் அழுதார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இஸ்ரயேல் மக்களை இறைவன்பக்கம் கொண்டுவருவதற்கு பலமுறை இறைவாக்கினர்கள், இறையடியார்கள் அனுப்பப்பட்டார்கள். அப்படி அனுப்பப்பட்டவர்களை எல்லாம் அவர்கள் புறக்கணித்தார்கள், ஒருசிலரை அவமதித்தார்கள், இன்னும் ஒருசிலரை கொலைசெய்தார்கள். இப்படிப் பலமுறை இறைவன் தன்னுடைய மக்களை தன் பக்கம் சேர்ப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனதால், இயேசு அவர்களுக்கு நேர இருந்த அழிவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றார். மேலும் "உன்னிடம் கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை" என்கின்றார்.

இயேசு சொன்னதைப் போன்று கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமையர்கள் எருசலேம் மீது படையெடுத்து வந்து, அந்நகரைத் தரைமட்டமாக்கி, எருசலேம் திருக்கோவிலை அழித்துப் போட்டார்கள். அது மட்டுமல்லாமல், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்து, பலரையும் நாடு கடத்திச் சென்றார்கள். இதற்கு ஒரே காரணம் அவர்கள் தங்களைத் தேடிவந்த இறைவனைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான். யோவான் நற்செய்தி 1:11 ல் வாசிப்பது போல, "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆம், இயேசு இஸ்ரயேல் மக்களைத் தேடிவந்தபோது, அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக, அவர்கள் அவருக்கு தங்கள் மனம்போன்று செய்தார்கள். அதனாலேயே அவர்கள் அழிவினைச் சந்தித்தார்கள்.

நாம் நம்மோடு இருக்கின்ற இறைவனை அறிந்துகொள்கின்றோமா? நம்மைத் தேடி வருகின்ற இறைவனைக் கண்டுகொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் இஸ்ரயேல் மக்களைப் போன்று, இறைவன் நம்மைத் தேடிவருவதை அறிந்துகொள்ளாமல், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை மாற்றி, நம்மைத் தேடிவருகின்ற இறைவனை அறிந்து, அவருடைய வார்த்தைகளின் படி நடப்பது எப்போது?.

ஆகவே, நம்மைத் தேடிவருகின்ற இறைவனை அறிந்து, அவருடைய வார்த்தைகளின் படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 கடவுள் தேடிவருவதை உணராத மக்கள் அழிவைச் சந்திப்பார்கள்.

அந்தப் பிரதேசம் முழுக்க அந்த மகானின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் உள்ள சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.

ஒருநாள் தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச் சந்தித்துவிடவேண்டும் என்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து மகானின் இருப்பிடம் அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைக்காரர் வரவேற்றார். "நான் அந்த மகானைப் பார்க்கவேண்டும்" என்று அவர் வேலைக்காரரிடம் சொன்னார். அதற்கு அந்த வேலைக்காரர், "கொஞ்ச நேரம் பொறுங்கள். மகான் வெளியே போயிருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார்" என்றார்.

வேலைக்காரர் சொன்னதற்கு இணங்கி, அந்த மனிதரும் பொறுமையோடு காத்திருந்தார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வேலைக்காரர் தனக்குத் தெரிந்த ஞான உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொன்னார். அவரும் அதனைப் பொறுமையோடு கேட்டார். வேலைக்காரர் சொன்ன நேரம் தாண்டியும் மகான் அங்கு வரவேயில்லை. இதனால் பொறுமையிழந்த கிராமவாசி "நான் எப்பொழுதுதான் மகானைப் பார்க்க முடியும்" என்று கேட்டார். அதற்கு அவர், "நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்" என்று சொன்னார்.

மேலும் "நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள மகானாக - இறைவனாக - நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலமாகத் தீர்த்துவிடலாம்" என்று வேலைக்காரனாய் வந்த மகான் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு வியந்துபோய் நின்றார் அந்த கிராமத்தார்.

கடவுள் பல வகைகளில் நம்மிடத்தில் பேசுகிறார்; நம்மைத் தேடிவருகின்றார். நாம்தான் அவரை உணராதவர்களாக இருக்கும் என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, எருசலேம் நகர் வாழ் மக்களின் நிலையை எண்ணி, அவர்களுக்கு நிகழப்போகும் அழிவை எண்ணி கண்ணீர்விட்டு அழுகிறார். ஏனென்றால் அவர்கள் கடவுளும், கடவுள் அனுப்பிய தூதர்களும் தேடிவருவதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஓர் அழிவு நேர்ந்தது.

இஸ்ரயேல் மக்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள்; அவரால் அதிகதிகமாக அன்புசெய்யப்பட்ட மக்கள். ஆனால் அதற்கு ஈடாக இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம் பதிலன்பு காட்டவில்லை. மாறாக அவர்கள் உண்மையான கடவுளைவிட்டே வெகு தொலைவில் போனார்கள், பொய்தெய்வத்தை வழிபட்டார்கள். அப்படியிருந்தாலும் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த நீதித்தலைவர்களையும், இறைவாக்கினர்களையும் அனுப்பினார். ஆனால் அவர்கள் திருந்தவேயில்லை.

இறுதியாக கடவுள் தன்னுடைய ஒரே மகனையும் அவர்களிடத்தில் அனுப்பிவைத்தார். அவர்களோ அவரைப் புறக்கணித்தார்கள்; சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அதனால்தான் இஸ்ரயேல் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தார்கள்.

இன்றைக்கும்கூட கடவுள் நம்மைத் தேடிவருகிறார். நம்மத்தியிலே பல்வேறு மனிதர்கள் வழியாகச் செயல்படுகிறார். ஆனால் நாம்தான் அதனை உணராதவர்களாக இருக்கின்றோம். இந்த வேளையில் உண்மையான கடவுளாம் ஆண்டவாகிய இயேசுவை அறிந்து, அவர் வழியில் நடப்பதுதான் நமக்கு முன்னால் உள்ள சவாலாக இருக்கின்றது.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 10: 9 ல் வாசிக்கின்றோம், "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" என்று. ஆகவே நாம் இயேசுவே ஆண்டவர், அவரே நமது மீட்பர் என உணர்ந்துக்கொண்டு அவர்காட்டும் வழியில் நடக்கும்போது நாம் மீட்புப் பெறுவோம் என்பது உறுதி.

யூதர்கள், ஆண்டவர் இயேசு தங்களோடு இருந்ததையும், தங்களோடு பணியாற்றியதையும் கூட அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்து, இழிவுபடுத்தினார்கள். அத்தகைய தவற்றினை நாமும் செய்கின்றபோது கடவுளின் சாபத்திற்கும், தண்டனைக்கும் உரியவர்களாகின்றோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

லூக்கா நற்செய்தி 1:68 ல் வாசிக்கின்றோம், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தார்" என்று. நாம் நம்மைத் தேடிவரும் இறைவனை அறிந்துகொள்வோம். அவர் காட்டும் வழியில் நடந்து அவருக்கு உகந்த மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

"வாழ்க்கையில் இறங்கு முகம் ஏற்படுவதை ஒருவர் தவிர்க்க விரும்பினால் அவர் ஏறுமுகத்தில் இருக்கும்போது தீவிரமாகச் செயல்படுவதுதான் மிகச் சிறந்த வழி விவேகானந்தர்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
தேனைப் போல்

'அது என் வாயில் தேனைப் போல் இனித்தது.
ஆனால், அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.'
(காண். திவெ 10:8-11
ஆண்டவரின் ஏட்டுச்சுருளை திண்ணுமாறு பணிக்கப்படுகின்றார் யோவான்.
அது எப்படிங்க சுருளை திங்க முடியும்?
பேப்பரை சாப்பிட முடியுமா?
இங்தான் ஒரு சிம்பலிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது:
வாய் என்பது நாம் பேசும் வார்த்தைகளின் பிறப்பிடம்.
ஆனால், வயிறு என்பது யூத மரபில் உணர்வுகளின் பிறப்பிடம்.
அதாவது, நான் உங்களைப் பார்த்து, 'ஐ லவ் யு' என்று சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம்.
இந்த வார்த்தைகளின் பிறப்பிடம் வாய்.
ஆனால், அன்பு என்ற உணர்வின் பிறப்பிடம் வயிறு.
பல நேரங்களில் வாயில் இனிப்பது வயிற்றில் கசக்கும்.
அதாவது, எல்லார்ட்டயும் ரொம்ப எளிதா 'ஐ லவ் யு' அப்படின்னு சொல்லிட முடியும்.
ஆனால், எல்லாரிடமும் ஒரே மாதிரி அன்பு உணர்வைக் காட்டும்போது, அல்லது காட்ட இயலாதபோது அது வயிற்றில் கசக்கிறது. அதாவது, அது உணர்வாக வர மறுக்கிறது.
நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 119) இறைவனின் திருச்சட்டம் இனிப்பதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார்.
அந்த இனிமை உதட்டிலும், வயிற்றிலும் இருந்தால் நலமே.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
பாடகர் குழுவினர் பாதுகாவலி தூய செசிலியம்மாள் நினைவு இன்று, வழிபாட்டு பாடகர் குழுவைச் சார்ந்த அனைவரையும் அன்புடனே வாழ்த்துகின்றோம். பாராட்டுகின்றோம். நன்றி பாராட்டுகின்றோம்.

செசிலியம்மாள் வதைக்கப்பட்டப் பின்னரும், இறைவனை புகழ்ந்தவாறு மூன்று நாட்கள், உயிரோடு இருந்து மரித்தார்கள் என்று வரலாறு சொல்லுகின்றது.

எத்தகைய நிலையில் நம் வாழ்வு இருந்தாலும், நாம் எத்தகைய தன்மையினராக வாழ்ந்தாலும், இறைவனை போற்ற, புகழ கடமைப்பட்டவர்கள், என்பதனை உணர்ந்து நாம் அதனை செய்ய முன்வருகின்ற போது, இறைவாக்கினருக்குரிய கைம்மாறு, தூதர்களுக்குரிய கைம்மாறு, திருத்தூதர்களுக்குரிய கைம்மாறு எல்லாம் தந்து நம்மை ஆசீர்வதிப்பேன் என்ற வாக்குறுதி தந்துள்ளார். பாடிப் புகழ்ந்து துதிப்போம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!