Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   21  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 4: 1-11

சகோதரர் சகோதரிகளே, நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம் போல முழங்கியது: "இவ்விடத்திற்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்" என்றது.

உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவரது தோற்றம் படிகக் கல் போலும் மாணிக்கம் போலும் இருந்தது. மரகதம் போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள்.

அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள். அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே. அரியணை முன் பளிங்கையொத்த தெளிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது. நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன. முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன.

அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.

இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன; உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன. "தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே" என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன.

அரியணையில் வீற்றிருப்பவரை, என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம், இருபத்து நான்கு மூப்பர்கள் அரியணையில் வீற்றிருந்தவர் முன் விழுந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள்.

தங்கள் பொன் முடிகளை அரியணை முன் வைத்து, "எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன" என்று பாடினார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  150: 1-2. 3-4. 5-6 (பல்லவி: திவெ 4: 8b)
=================================================================================
பல்லவி: தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவர்.

1 தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! பல்லவி

3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். 4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! பல்லவி

5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள். "கலீர்' எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! 6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள்.

அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.

அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, "இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார்.

பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, "ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்' என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்றார்.

இரண்டாம் பணியாளர் வந்து, "ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்' என்றார்.

அவர், "எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, "ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், "அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்' என்றார்.

அதற்கு அவர்கள், "ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே' என்றார்கள். அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.

மேலும் அவர், "நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்' என்று சொன்னார்." இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'.

கடந்த ஞாயிறு பலியில் வாசிக்க கேட்ட உவமை. ஆனால் அது மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்தது. இன்று அதே உவமை சற்றே வித்தியாசத்தோடு லூக்கா எழுதியபடி வாசிக்க பார்க்கின்றோம்.

இவர் கூற்றின்படி பத்து பேரை அழைத்து, சரி சமமாக ஆளுக்கு ஓன்று என கொடுத்ததாகப் பார்க்கின்றோம்.

முடிவில் கூறப்பட்ட செய்தி ஓன்றாகவே இருக்கின்றது.

உள்ளவருக்கு கொடுக்கப்படும். அவர் நிறைவு பெறுவார். இல்லாதவரிடமிருந்து உள்ளதாக கருதப்படுவதும் எடுக்கப்படும்.

உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இவை போன்ற பல காரியங்கள் உள்ளவருக்கு மேலும் மேலும் உயர வாய்ப்பு தரப்படும். ஆற்றல், திறமை, அறிவு போன்றவையிருந்தும் அதனை முறையாக பயன்படுத்தாதவர்களிடமிருந்து இவையெடுக்கப்படும். நிலைமை பரிதாபமாகும். இருப்பதை கொண்டு நிறைவு கொண்டு, அதனை வைத்து தன்னம்பிக்கையோடு, முயற்சிக்கும் போது, உழைப்பின் முழுபலனையும் காணலாம்.

 


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கடவுள் கொடுத்த திறமையை சரியான முறையில் பயன்படுத்துவோம்

புனித ஜெரோம் (340-425) யூசிபஸ் என்ற பணக்காரத் தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகளில் பாண்டித்துவம் பெற்றவர். சிசரோ, பிளேட்டோ போன்றோரின் நூல்களைப் படித்துவிட்டு, தன்னை அவர்களுடைய சீடராகவே நினைத்து வாழ்ந்தவர்.

ஒருநாள் அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து இறுதித் தீர்ப்புக்காக மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே இருந்த நடுவர் அவரிடம், "நீ யார்? என்று கேட்டார். அதற்கு அவர், "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று பதிலளித்தார். உடனே அந்த நடுவர், "நீ ஒரு சரியான பொய்யன்; சிசரோ மற்றும் பிளேட்டோ போன்றோரின் போதனைகளைப் படித்துவிட்டு, அவர்கள் காட்டிய வழியில் நடந்துவிட்டு, நான் ஒரு கிறிஸ்தவன் என்று நீ எப்படிச் சொல்லலாம்" என்றார். அதற்கு அவர், "ஐயா என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், இனிமேலும் நான் இப்படிச் செய்யமாட்டேன். கடவுள் எனக்கு கொடுத்திருக்கும் திறமைகளை கடவுளுடைய மகிமைக்காகவே பயன்படுத்துவேன்" என்றார்.

அதற்குள் அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஒரு கணம் யோசித்துப் பார்த்தார். சிசரோ, பிளேட்டோ போன்றோரின் போதனைகளைப் படிப்பதை விட்டுவிட்டு, தன்னிடம் இருந்த திறமை அனைத்தையும் பயன்படுத்தி, ஹீப்ரு மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டு நூல்களை இலத்தின் மொழிக்கு (The Vulgate) மொழிபெயர்த்தார்.

அதோடு மட்டுமல்லாமல் விவிலியம் முழுமைக்கும் விளக்கவுரையினை எழுதினார். திருச்சபையின் கொள்கைகளுக்கு எதிராகப் பரவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து, திருச்சபைக் காப்பாற்றினார். இவ்வாறு தூய ஜெரோம் எரோனிமுஸ் கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளை கடவுளின் மகிமைக்காகவே பயன்படுத்தினார்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை நல்லமுறையில் கடவுளின் மகிமைக்காகப் பயன்படுத்தவேண்டும் என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையைப் பற்றிப் பேசுகிறார். உவமையில் தலைவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து, எல்லாருக்கும் ஒன்றுபோல் மினாக்களைக் கொடுத்துவிட்டு நெடும்பயணம் செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் திரும்பிவந்தபோது தன்னிடம் மினாக்களைப் பெற்ற பணியாளர்களிடமிருந்து கணக்குக் கேட்கிறார். முதலில் வந்த இரண்டு பணியாளர்கள் சரியாக கணக்குக் கொடுக்க, கடைசியில் வந்த பணியாளரோ சரியான முறையில் கணக்குக் கொடுக்காமல் போகவே, அதாவது அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட திறமையைப் பயன்படுத்தாமல் அவர் தலைவரிடமிருந்து தண்டனையைப் பெறுகின்றார்.

இந்த உவமை நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறது. அதில் முதலாவதாக கடவுளின் படைப்பில் நாம் அனைவரும் சமமானவர்களே என்பதே ஆகும். இதே பகுதியை மத்தேயு நற்செய்தியில் படித்துப் பார்க்கும்போது ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் என்று கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் லூக்கா நற்செய்தியிலோ எல்லாருக்கும் ஒன்றுபோல், சமமாக கொடுக்கப்பட்டிருக்கும். இது கடவுளின் படிப்பில் நாம் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை பறைசாற்றுவதாக இருக்கின்றது. ஆகவே, சமுதாயத்தில் நான் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன் என்ற பேதைமையை வளர்க்கமால் அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வோடு வாழ்வோம்.

இந்த உவமை நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை, வாய்ப்பு வசதிகளை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் என்பதாகும். "ஒரு மனிதரின் உயர்வும், தாழ்வும் அவருடைய உழைப்பால் அன்றி, சாத்திரத்தாலோ அல்லது அவர் சார்ந்திருக்கின்ற மதத்தாலோ அல்ல" என்பார் தந்தை பெரியார். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்கள் தலைவர் தங்களுக்குக் கொடுத்த மினாக்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் அவர் தலைவரால் பாராட்டப்படுகிறார்கள். அதே நேரத்தில் கடைசியில் வந்த பணியாளரோ, தலைவர் கொடுத்த மினாவை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. அதனால் தண்டனையைப் பெறுகின்றார். நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமையை சரியான முறையில் பயன்படுத்தாதபோது கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுகின்றோம் என்பது உறுதி.

மத்தேயு நற்செய்தி 5:16 ல் வாசிக்கின்றோம், "உங்கள் ஒளி மனிதன் முன் ஒளிர்க. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் என்று.

நமது திறமைகள் எல்லாருக்கும் பயன்படும்படி செய்வோம். அதன்வழியாக இறைவனுக்கு பேரும், புகழும் சேர்த்து இறையருளைப் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 பொறுப்புள்ளவர்களாக பணியாளர்களாய் வாழ்வோம்!

மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. ஒருநாள் இரவு நெப்போலியன் தன்னுடைய படைகளைப் பார்ப்பதற்காக இராணுவ உடையில் சென்றார்.

அப்போது ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்த காவலர் இராணுவ உடையில் வந்திருப்பது நெப்போலியன்தான் என்று அறியாமல் அவரைத் தடுத்து நிறுத்தினார். உடனே நெப்போலியன் தன்னை வெளியே காட்டிக்கொள்ளாமல், "நான் படைகளைப் பார்க்கவேண்டும். தயதுசெய்து என்னை அனுமதியுங்கள்" என்றார். அதற்கு அந்தக் காவலர், "நீ இராணுவ வீரராக இரு, யாராக வேண்டுமானாலும் இரு. இந்த நேரத்தில் யாரும் படையைப் பார்க்க அனுமதியில்லை. இப்படித்தான் எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. மீறி நீ உள்ளே சென்றாய் எனில், என்னுடைய கையில் இருக்கின்ற துப்பாக்கியால் உன்னை ஒரே போடு போட்டுவிடுவேன்" என்றார்.

இதைக் கேட்டு மிரண்டு போன நெப்போலியன் வேறெதுவும் பேசாமல் திரும்பிச் சென்றார். மறுநாள் காலையில் தனக்குக் கொடுப்பட்ட பொறுப்பில் மிகவும் நேர்மையாய், உண்மையாய் நடந்துகொண்ட அந்தக் காவலரைக் கூப்பிட்டு அவரை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமல்லாமல் அவருக்கு இராணுவத்தில் மிக உயர்ந்த பொறுப்பினைக் கொடுத்தார்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளில் நேர்மையாய், உண்மையாய் நடந்துகொள்கின்றபோது, அதற்கான கைம்மாறு நிச்சயம் கிடைக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினாக்கள் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்வதன் பின்னணி என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது. இயேசு எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். யூதர்களோ, இயேசு எருசலேம் சென்றதும் அங்கிருக்கின்ற உரோமையரின் ஆட்சியைக் கவிழ்த்துப் போட்டு, தன்னுடைய ஆட்சியை நிறுவப்போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதனை நற்செய்தியில் வருகின்ற, இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள் என்ற வரியிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

தான் எதற்காக இந்த மண்ணுலகத்திற்கு வந்தேன், தன்னுடைய பணி என்ன என்பதைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்த யூதர்கள் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும், தான் எதற்காக இந்த மண்ணுலகத்திற்கு வந்தேன் என்பதை தெரிந்துகொள்வதற்குமே இயேசு இந்த உவமையைச் சொல்கின்றார். இயேசு கூறும் இந்த உவமையானது, யூதர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகவும். கிமு, 4 ஆம் ஆண்டில், பெரிய ஏரோது இறக்கின்ற தருவாயில், தன்னுடைய நான்கு மகனையும் அழைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆளுகைக்குக் கீழ் இருந்த ஒவ்வொரு பகுதியை பிரித்துக் கொடுத்தான். அப்படி பிரித்துக் கொடுக்கும்போது அர்கிலஸ் (Archelaus) என்பவனுக்கு யூதாவைப் பிரித்துக் கொடுத்தான். ஆனால், யூதாவில் இருந்தவர்களோ அர்கிலசை அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் உரோமைக்குச் சென்று, தங்களுடைய கருத்தை பெரிய சட்டாம்பியான உரோமை அரசாங்கத்திடம் எடுத்துச் சொன்னார்கள். இதனால் உரோமை அரசாங்கம் அர்கிலசுக்கு அரசன் என்ற பட்டம் கொடுக்காமல், பெயருக்கு ஒரு அரசனாக வைத்திருந்தது.

இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டவராகத்தான் இயேசு மினாக்கள் உவமையைச் சொல்கின்றார். இயேசு கூறும் இந்த உவமையில் மூன்றுவிதமான மனிதர்கள் வருகின்றனர். முதலாவது வைகையினர் கொடுப்பட்ட பொறுப்புகளில் உண்மையாய், நேர்மையாய் இருந்தவர்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மினாக்களைக் கொண்டு மேலும் பத்து, ஐந்து என்று மினாக்களை ஈட்டியவர்கள் இந்த வகையினர்தான். இவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையுள்ளவர்களாக இருந்ததால் உயர் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.

உவமையில் வருகின்ற இரண்டாவது வகையினர், கொடுப்பப்பட்ட பொறுப்புகளை சரிவரச் செய்யாதவர்(கள்). தலைவர் கொடுத்த மினாவை, நிலத்தைத் தோண்டி புதைத்து வைத்தவரை இந்த வகையில்தான் சேர்க்கவேண்டும். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரிவரச் செய்யாயதவர் தண்டிக்கப்பட வேண்டியவர். உவமையில் அப்படித்தான் அவர் தண்டிக்கப்படுகின்றார்.

உவமையில் வருகின்ற மூன்றாவது பிரிவினர் அரசனை ஏற்க விருப்ப மில்லாதவர்கள். இவர்கள் உவமையின் முதலிலும் கடைசியிலும் வருகின்றார்கள். இவர்களை இயேசு கொண்டுவந்த இறையாட்சியை விரும்பாமல், அவர்மீது வெறுப்பை உமிழ்ந்த பரிசேயக் கூட்டத்தோடு ஒப்பிடலாம். தனக்குப் பிடிக்காதவர்களை அரசன் எப்படி, பிடித்துக் கொன்றுபோட்டானோ, அதுபோன்று இயேசு அறிவித்த நற்செய்திக்கு செவிமடுக்காமல் வாழ்ந்த யூதர்கள் கிபி 70 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. இந்த மூன்று வகையினரில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இறைவன் நமக்குக் கொடுத்திருகின்ற பொறுப்புகளை சோம்பேறித்தனமாக தட்டிக் கழிக்காமல், அதற்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

அர்ப்பணத் திருநாள்

'அந்த மரம் மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது. அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான். அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான். அதன் மேல் அவன் உணவு சமைக்கிறான். இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான். பின்னர் குளிர்காய்ந்து, 'வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!' என்று சொல்லிக் கொள்கிறான். எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி, 'நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்' என்று மன்றாடுகிறான்.' (எசாயா 44:15-17)

எமில் டர்கெய்ம் என்னும் சமூகவியலார் எழுதிய 'கடவுள் தோன்றிய கதை' என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு சில இடத்தை, ஒரு சில பொருளை, ஒரு சில நபரை நாம் தூயவர் என்று உயர்த்தி வைக்கிறோம்.

இந்தத் தூய்மை அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு எங்கிருந்து வருகின்றன?
அவைகள் அல்லது அவர்கள் அந்தத் தூய்மையை தன்னகத்தே கொண்டிருக்கிறார்களா? அல்லது மனித மனத்தில் தோன்றும் 'உணர்வினால்' அவைகள் அல்லது அவர்கள் தூயவர்களாகத் தெரிகின்றார்களா?

பொருட்களை நாம் நகர்த்துகிறோம். ஆனால் சில நேரங்களில் பொருட்கள் நம்மை நகர்த்துகின்றன - சிலுவை, பைபிள், ஓஸ்தி, நற்கருணைப் பெட்டி, மாதா சுரூபம், தீர்த்தம் - இவைகள் நம்மை நகர்த்தக் காரணம் என்ன?

வேற்று தெய்வங்களை உருவாக்குபவர்களை நையாண்டி செய்யும் எசாயா மேற்காணும் உருவகத்தைப் படைக்கின்றார். இந்த உருவகத்தில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. என்ன உண்மை? ஒரே மரம் தான். அந்த மரத்தின் ஒரு பகுதியை நெருப்பு மூட்டி குளிர்காயவும், அடுத்த பகுதியை இறைச்சி சமைக்கவும், அடுத்த பகுதியை சிலை செய்யவும் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலை மட்டும் திடீரென மதிப்பு பெறுவது எப்படி?

நாளை தூய கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருநாளைக் கொண்டாடுகிறோம். யூத மரபில் பெண் குழந்தைகளை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது கிடையாது. இருந்தாலும் விவிலியத்திற்குள் வராத 'யாக்கோபின் நற்செய்தி' என்ற திரைமறைவு நற்செய்தியில், சுவக்கீன், அன்னம்மாள் தங்கள் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுத்தார்கள் என்றும், பெற்றெடுத்த மகளை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக்கினார் என்றும், தான் 'வயதுக்கு வரும் வரை' மரியாள் அங்கே வளர்ந்தார் என்றும் இந்த நற்செய்தி குறிப்பிடுகிறது.

'முதியவர் குழந்தை பெறுதல்' அல்லது 'குழந்தைப் பேறு இல்லாதவர் குழந்தை பெறுதல்' என்பது விவிலியத்தில் வழங்கப்பெறும் ஒரு இலக்கிய நடை. நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன், வரலாற்று நூல்களில் வரும் சாமுவேல் எல்லாம் இப்படிப் பிறந்தவர்கள்தாம். ஆக, மரியாளின் பிறப்பையும் இந்த இலக்கிய நடையில் யாக்கோபு எழுதியிருக்கலாம்.

மரியாளை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது அவருக்கு முக்கியமோ என்னவோ, அது நமக்கும், நம் கிறிஸ்தவத்திற்கும் முக்கியம்.

அதாவது, அவர் எல்லாரையும் போல இருந்தாலும், கொஞ்சம் உயர்த்தப்பட்டு தூய்மையான இடத்தில் அவரை நாம் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் தூய்மையான கடவுள் அவரிடம் பிறந்தார் என்ற லாஜிக் சரியாக வரும்.

ஆக, தூய்மை என்பது மனிதர்களாகிய நாம் ஒரு பொருளுக்கும், ஒரு நபருக்கும் கொடுப்பது. இதற்கு எதிர்ப்பதமாக தீட்டு என்பதை பொருட்களுக்கும், நபர்களுக்கும் கொடுப்பது நாம்தான். இதை நாம் தனிநபராகச் செய்வதில்லை. நாம் சார்ந்திருக்கும் குழுதான் செய்கிறது. 'கிறிஸ்தவர்கள்' என்ற குழுவில் நாம் இருப்பதால் பைபிள் நமக்கு புனித நூலாக இருக்கிறது. இதுவே நாம் 'இந்துக்கள்' அல்லது 'இசுலாமியர்கள்' என்னும் குழுவில் இருந்தால் நாம் 'கீதை' அல்லது 'குரானைத்தான்' புனித நூல் என்று சொல்வோம். ஆக, எந்த நூலும் புனிதம் என்றும் தீட்டு என்றும் இல்லை. நாம் எந்த தளத்தில் நிற்கிறோமோ, அதுதான் புனிதம்-தீட்டை நிர்ணயம் செய்கிறது.

அப்படியென்றால் இயல்பாகவே தூய்மை, தீட்டு என்பது பொருட்களில், நபரில் இல்லையா? - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் இருக்கிறதா? என்பது போல ஒரு போட்டியை வைத்தால்தான் சரியாகும்.

நிற்க.

நாளை நாம் கொண்டாடும் மரியாளின் அர்ப்பணத் திருநாள் சொல்வது என்ன?

நாம் கடவுளுக்கென ஒன்றை அல்லது ஒருவரைத் தள்ளி வைக்கும்போது, அவர் அதை அல்லது அவரைப் புனிதப்படுத்தி நமக்கே தருகின்றார்.

நாம் அன்றாடம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியிலும் இதைப் பார்க்கலாம்: நாம் கொடுக்கும் அப்ப, ரசத்தை கடவுள் நமக்கே தன் திருமகனின் உடல், இரத்தம் என்று கொடுத்துவிடுகிறாரே.

Fr. Yesu, Madurai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு

மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா (நவம்பர் 21)


இன்று திருச்சபையானது அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைக் குறித்த செய்திகள் விவிலியத்தில் இல்லாவிட்டாலும்கூட திருச்சபை மரபுகளில், குறிப்பாக யாக்கோபு நற்செய்தியில் இதைப் பற்றி தெளிவான கருத்துகள் இருக்கின்றன.

மரியாளின் பெற்றோர்களான சுவக்கீன், அன்னமாள் இவர்களுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை. ஆனாலும் அவர்கள் கடவுள்மீது கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையினால் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடி வந்தார்கள். அவர்களுடைய ஜெபத்திற்கு இறைவன் ஒருநாள் பதிலளித்தார். ஆம், கடவுள் அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியாவைக் குழந்தையாகத் தந்தார்.

கடவுள் தங்களுக்கு இந்த முதிர்ந்த வயதில் குழந்தைப் பாக்கியம் தந்ததை நினைத்து அவர்கள் மரியாவை கோவிலிலே காணிக்கையாக ஒப்புக்கொடுகிறார்கள். மரியாள் இளம்பெண் ஆகும்வரை அங்கேயே இருந்து பணிசெய்தாள். இதுதான் யாக்கோபின் நற்செய்தி என்ற அந்த நூலிலே காணக்கிடக்கிறது.

கி.பி.543 ஆம் ஆண்டு முதலாம் ஐன்ஸ்டீனியன் என்ற மன்னன் எருசலேம் திருக்கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் சிதைந்து இருப்பதை கண்டான். அதனை அவன் சீரமைத்து மரியாளுக்கு ஒப்புக்கொடுத்தான். கி.பி. 1585 ஆம் ஆண்டு அன்று திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் சிக்தூஸ் என்பவர் இவ்விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். இவ்வாறு மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இந்த விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்களின் வழியாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பாடல் என்பது இறைவனுக்கு முற்றிலும் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்பது; கலாத்தியார் 2:20 ல் பவுலடியார் கூறுவது போல, "வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்ற மனப்பான்மையில் வாழ்வது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ஒரு அடிமை போன்று ஆண்டவருக்காகவே வாழ்வது.

மரியாள் கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் "என்னுடைய விருப்பம் அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்று இறைத்திட்டத்தின் படி வாழ்கின்றார். அதற்காக எப்படிப்பட்ட இன்னலையும் சந்திக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "யார் என்னுடைய தாய், சகோதரர்கள்?" என்று கேட்டுவிட்டுச் சொல்வார், "விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே என்னுடைய தாயும், சகோதர சகோதரிகளும் ஆவார்" என்கிறார். அந்தவகையில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்லாமல், இறைத்திருவுளத்தின்படி நடந்ததனாலும் இயேசுவுக்கு தாயாகிறார்.

இறைத்திருவுளத்தின்படி நடத்தல் என்றால் என்ன? இறைவனின் விரும்பம் என்ன என்பதை அறிந்து, அவருக்கு மட்டுமே பணிசெய்து வாழ்வதுதான் இறைத்திட்டதின் படி நடப்பதாகும்.

தில்லியிலே ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக சூஃபி ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகச்சிறந்த கவிஞர், பாடகரும்கூட. மக்கள் அவருடைய கவிதையைக் கேட்டு மெய்மறந்து நிற்பார்கள். அந்தளவுக்கு திறமையானவர். ஒருநாள் ஞானியைப் பற்றி கேள்விப்படும் அரசன், அவரிடம் சென்று, "என்னைப் பற்றி கவிதை பாடினால் உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்" என்றான். அதற்கு அந்த ஞானி, "ஆண்டவனைப் பாடல் பாடும் இந்த நாவால் அற்ப மானிடப் பதராகிய உன்னைப் பற்றியெல்லாம் பாட முடியாது" என்று சொல்லி மறுத்துவிட்டார்.

உடனே அரசன் தன்னுடைய உடைவாளை எடுத்த சூஃபி ஞானியின் தலையை ஒரு சீவு சீவினான். தலை கீழே தரையில் விழுந்தது. ஆனாலும் உடலில் இருந்த பலத்தால் அந்த ஞானி கீழே கிடந்த தன்னுடைய தலையை எடுத்துக்கொண்டு தான் வாழும் கோவிலுக்குச் சென்று அங்கே மரித்தார் என்பது ஒரு நிகழ்வு. மக்கள் இன்றைக்கும் அவருடைய கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு வருகிறார்கள்.

ஆண்டவனுக்கு மட்டுமே அடிபணிவேன், வேறு யாருக்கும் அல்ல" என்று சொல்லி தன்னுடைய இன்னுயிரை ஈந்த அந்த சூஃபி ஞானியின் செயல் பாராட்டுக்குரியது.

இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் மரியாவைப் போன்று இறைவனுக்கு மட்டுமே பணிசெய்வேன், அவரது திட்டத்தின் படி மட்டுமே நடப்பேன் என்று உறுதி ஏற்போம். அதன்விழியாக இறையருள் பெறுவோம்.

மரியாள் பயணமாகும் திருச்சபை என்ற ஓடத்தை விண்ணகம் என்ற துறைமுகத்திற்குள் கூட்டிச் சேர்பவள் புனித ஜெர்மானுஸ்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!