Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
  யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 1-6, 14-22

யோவான் என்னும் எனக்கு ஆண்டவர் கூறியது: சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: "கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன்.

நீ பெயர் அளவில்தான் உயிரோடு இருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய். எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.

நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய். ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே. வெற்றி பெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.

கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை" என நீ சொல்லிக்கொள்ளுகிறாய்.

ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை. ஆகவே, நீ செல்வம் பெறும் பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும் பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.

நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு. இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன். கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  15: 2-3. 4. 5 (பல்லவி: திவெ 3: 21)
=================================================================================
பல்லவி: வெற்றி பெறுவோருக்கு அரியணையில் வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

2 மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். பல்லவி

4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 01 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.

இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.

ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார்.

இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.

அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர்.

சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார்.

இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு. இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

சக்கேயு வாழ்வில் ஆமற்கண்ட வாக்கு நிறைவேறுகிறதைப் பார்க்கின்றோம். அவரது அழைப்புக்கு செவிமடுத்தால், எவ்வளவோ நலம். காலம் தாழ்த்தாமல் செவிமடுப்போம். பிறரையும் செவிமடுக்கச் செய்வோம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று"

இன்றைய தேதியில், ஆயிரக்கணக்கானோருக்கு தன்னம்பிக்கையையும் வாழ்விற்கான வழிகாட்டலையும் வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர் லார்ரி. இவர் ஒரு காலத்தில் பயங்கரமான வழிப்பறிக் கொள்ளையர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.

ஒருசமயம் இவர் ஒரு கொள்ளை வழக்கில் ஈடுபட்டார் என்பதற்காக நீதிமன்றம் இவருக்கு பதினைந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. பதினைந்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், இவ்வளவு ஆண்டுகள் சிறையில் 'சும்மா நேரத்தைப் போக்குவதா?' என்று அவர் தீவிரமாக யோசித்தார். இந்த சமயத்தில் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவருக்கு விவிலியத்தையும் ஜேம்ஸ் ஆலன் எழுதிய 'As a Man thinketh' என்ற புத்தகத்தையும் இன்னொரு ஒருசில புத்தகங்களையும் படிக்கக் கொடுத்தார்கள்.

இவற்றையெல்லாம் படித்துப் பார்த்த அவர் தன்னுடைய தவற்றுக்காக பெரிதும் வருந்தினார். இத்தனை ஆண்டுகளும் தான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையே அல்ல என்பதை உணர்ந்த அவர், புதிய மனிதாய் மாறி, புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். இது மட்டுமல்லாமல், சிறையில் இருந்த பலரும் மனமாறி புதியதொரு வாழ்க்கை வாழக் காரணமாக இருந்தார். இதனால் சிறையில் இருந்த அதிகாரிகள் இவருடைய நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்துவிட்டு இவரை தண்டனைக் காலம் முடிவதற்கும் முன்பாகவே இவரை சிறையிலிருந்து விடுவித்தனர். இதற்குப் பின்பு இவர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு இன்றைக்கு உலகம் போற்றும் மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக விளங்கி வருகின்றார்.

பயங்கரக் கொள்ளைக்காராக இருந்து, உலகப் போற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறியிருக்கின்ற லார்ரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில் சக்கேயுவினுடைய மனமாற்றத்தைக் குறித்துப் படிக்கின்றோம். சக்கேயு என்றால் 'நேர்மையாளர்' என்பது பொருள். ஆனால் அவரோ தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழாமல், பாவ வழியிலே வாழ்ந்துவருகின்றார். தான் வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததல்ல என்பதை நன்கு உணர்ந்த சக்கேயு, அதிலிருந்து வெளிவர நினைக்கின்றார். இந்த சமயத்தில்தான் அவர், பாவிகளையும் ஆதரவற்றோரையும் அன்போடு ஏற்றுக்கொள்கின்ற இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்படுகின்றார். எனவே அவரை எப்படியாவது பார்த்து, தன்னுடைய வாழ்விற்கான வழியை, நிம்மதியைக் கண்டுகொள்ளலாம் என்று நினைக்கின்றார்.

இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று விரும்பிய சக்கேயுவுக்கு இயேசுவைப் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் அவர் மிகவும் குள்ளமாக இருந்தார். அதே நேரத்தில் இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், இயேசுவுக்கு முன்பாக ஓடி ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கின்றார். செல்வம் படைத்தவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுடைய நிலையிலிருந்து இறங்கி வருவது கிடையாது. ஆனால் சக்கேயு தான் ஒரு செல்வந்தன், வரிதண்டுபவர்களுக்குத் தலைவன் என்றெல்லாம் நினைக்காமல் தன்னுடைய 'சுய கவுரவத்தை' விட்டுவிட்டு, சிறுவனைப் போன்று காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கின்றார். இவ்வாறு சக்கேயு, இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆர்வமாக இருக்கின்றார்.

இந்நிலையில், சக்கேயு தன்னைப் பார்ப்பதாற்கு மிகவும் துடிப்பாககவும் ஆர்வமாகவும் இருப்பதை அறிகின்ற இயேசு, அவரை மேலிருந்து கீழே இறங்கி வரச் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல், "இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்று சொல்கின்றார். 'நான் இயேசுவைப் பார்க்கத்தானே வந்தேன், அவரோ என்னுடைய வீட்டில் தங்க வருவதாகச் சொல்கிறாரே', 'அடித்தது பம்பர் பரிசு' என்பது போல், சக்கேயு, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர்மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்குமடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறன்" என்கின்றார்.

சக்கேயு இயேசுவிடத்த்தில் சொன்ன இந்த பாவப் பரிகாரங்கள், மோசேயின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் மிக அதிகம் (லேவி 6:1-7; விப 22:1). சக்கேயு இப்படி முற்றிலும் மனந்திரும்பி, புதிய மனிதனாக மாறிவிட்டார் என்பதை உணர்ந்த இயேசு, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கின்றார்.

இயேசு இந்த உலகத்தில் பாவிகளைத் தேடித்தான் வந்தார். ஆனால், பாவியான சக்கேயு இயேசுவைத் தேடிவந்ததனால், இயேசு அவரிடம் 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கின்றார். ஆகையால், பாவ வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் மனம் திரும்பி இயேசுவிடம் வருகின்றபோது, அங்கே மீட்பு உண்டாகிறது என்பதுதான் அர்த்தமாக இருக்கின்றது.

எனவே, ஆண்டவரின் அன்பை உணராமல், தீய வழியில் நடக்கும் நாம், அவருடைய அன்பை உணர்ந்தவர்களால் அவரை நாடிவருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மனமாற்றமும், மீட்பும்

தாமஸ் மோர்டன் என்பவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த ஓர் ஆன்மீக எழுத்தாளர், துறவியும்கூட. இவருடைய இளமைப் பருவம் மிகவும் வேதனை நிரம்பியது. தன்னுடைய பதினாறாவது வயதிலேயே இவர் பெற்றோரை இழந்தார். அதன்பிறகு இவருடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிப்போனது. இருபதாவது வயதை அடைந்தபோது இவர் பொதுவுடைமைக் கொள்கைகளின்மீது அதிகமான நாட்டம்கொண்டு, கடவுளை முற்றிலும் மறந்து தன்னுடைய மனம்போன போக்கில் வாழத் தொடங்கினார்.

ஒருநாள் இவர் ஐரோப்பா நாடுகளில் பயணம் செய்துவிட்டு, தன்னுடைய அறையை அடைந்தபோது ஒருவிதமான குற்றவுணர்வை உணர்ந்தார். தான் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சரியானதில்லை, அது கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை என அறிந்து தன்னுடைய தவற்றிற்காக மனம்வருந்தி அழுத்தார்.

அந்நேரத்தில் அவர்மீது ஒருவிதமான ஒளிபாய்ந்தது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் அவர் தன்னை மறந்து ஜெபிக்கத் தொடங்கினார். ஜெபித்தார், பொழுது புலரும் மட்டும் ஜெபித்தார். இறுதியில் புதுமனிதனாகப் பிறந்தார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையே முற்றிலுமாக மாறிப்போனது. தான் தவறான முறையில் சேகரித்த செல்வத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து துறவியானார். அதன்பின்னர் அவர் எழுதிய நூல்தான் "The Seven Story Mountain" என்ற புத்தகம். மேலே வந்த நிகழ்வும் இந்த புத்தகத்தில்தான் அடங்கியிருக்கிறது. இந்தப் புத்தகம் இதுவரைக்கும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ நிலையை உணர்ந்து இறைவனிடம் திரும்பிவரவேண்டும் என்றுதான் மேலே உள்ள நிகழ்வு நமக்குக் சுட்டிக்காட்டுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் யூத சமூகத்தால் மிகப்பெரிய பாவி என்று கருதப்பட்ட சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வைக் குறித்துப் படிக்கின்றோம்.

சக்கேயு சாதாரண ஒரு வரிதண்டுபவர் மட்டும் கிடையாது. அவர் வரிதண்டுவோருக்கெல்லாம் தலைவர். அப்படியென்றால் அவர் ஏராளமான மக்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் உள்ளாகியிருக்க வேண்டும்; மக்களைச் சுரண்டி வாழ்கிறவர் என்ற அவப்பெயருக்கும் உள்ளாகியிருக்கவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பாவி என்று முத்திரை குத்தப்பட்டு சமூகத்தால் தனிமைப்பட்டிருக்கவும் வேண்டும். இப்படி பல்வேறுபட்ட துன்பங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் உள்ளானதால்தான் அவர் பாவிகளை அன்போடு அரவணைக்கும் ஆண்டவர் இயேசுவைச் சந்திக்கும் ஆவல்கொள்கிறார். இயேசுவும் சக்கேயுவின் நிலையைப் புரிந்துகொண்டவராய் அவருடைய வீட்டில் தங்குவதாக வாக்களிக்கிறார்.

இயேசுவிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு பதிலை சிறிதும் எதிர்ப்பார்த்திராத சக்கேயு, "ஆண்டவரே! என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர்மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார்.

திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குக் கொடுக்கும்போது மக்களைப் பார்த்துச்சொல்வார், "நீங்கள் மனமாறிவிட்டீர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்" என்று (மத் 3:8). அத்தகைய வார்த்தைகள் சக்கேயுவின் வாழ்வில் நிறைவேறுவதை நாம் பார்க்கின்றோம். ஏனென்றால், சக்கேயு தான் மனமாறிவிட்டேன் என்பதை வெறுமனே வார்த்தைகளில் மட்டும் காட்டவில்லை, அதனை தன்னுடைய வாழ்விலும் காட்டினார். அதன்வெளிப்பாடுதான் இந்த அறிக்கை. சக்கேயுவிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுணர்ந்த இயேசு, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்கிறார்.

சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு நமக்கு ஒருசில பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதில் முதலாவது பாவ வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையை உணர்ந்து மனமாறவேண்டும் என்பதாகும்.

விவிலியம் முழுமைக்கும், கடவுள் தன்னுடைய மக்கள் மனமாறி தன்னிடம் திரும்பிவரவேண்டும் என்றே விரும்புகிறார். திருவெளிப்பாடு நூல் 2:5 ல் வாசிக்கின்றோம், "ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப் பார்; மனமாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்; நீ மனம்மாறத் தவறினால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்" என்று. ஆகவே, பாவ வாழ்வு ஒவ்வொருவரும் தங்களுடைய பாவ வாழ்வை உணர்ந்து மனம்மாறவேண்டும்.

அடுத்ததாக இந்த நிகழ்வு உணர்த்தும் உண்மை. இறைவன் பாவிகளைத் தேடிவருகிறார் என்பதாகும். சக்கேயு ஆண்டவர் இயேசுவைக் காணும் ஆவல்தான் கொண்டார். ஆனால் இயேசுவோ ஒருபடி மேலே போய், அவரைத் தேடிச்சென்று அவருக்கு மீட்பினைத் தருகிறார்.

எனவே நம்மைத் தேடிவரும் கடவுளிடம் (லூக் 7:15) நமது பாவ நிலையை அறிக்கையிட்டு மனம்மாறுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!