Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   19  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 33ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 1-4; 2: 1-5ய

சகோதரர் சகோதரிகளே, இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வான தூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார்.

இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

"எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: "தமது வலக் கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழு பொன் விளக்குத் தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின் பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  1: 1-2. 3. 4,6 (பல்லவி: திவெ 2: 7b)
=================================================================================
 பல்லவி: வாழ்வு தரும் மரத்தின் கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில் இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள்.

ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

அவர் நெருங்கி வந்ததும், "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று இயேசு கேட்டார்.

அதற்கு அவர், "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார். இயேசு அவரிடம், "பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.

அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்.

முதலில் என்று கூறிப்பிடுவது, தொடக்க நிலை. இது சிலருக்கு திவ்விய நற்கருணை பெற்றதாக இருக்கலாம், சிலருக்கு திருமுழுக்கு பெற்ற நாளாக இருக்கலாம். அன்றைக்கு நம்மிடம் இருந்த உற்சாகம், ஆர்வம், அன்பு ஏன் வளர வளர குறைகின்றது. வளரும் போது பலது நம்மோடு வளருகின்றது. படிப்பு, பதவி, கேள்விகள், ஆணவம், அகந்தை, அசட்டை இப்படிப் பல. இதனால் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பு குறைவுபடுகின்றது.

இதனை உணர்ந்து, மனம் மாறவும், பழைய நிலையின் கிறிஸ்துவை அன்பு செய்யவும் அழைக்கப்படுகின்றோம். உணர்வோம், திருந்துவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று"

அந்த நகரில் பீட்டர் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய காரில் நகரத்தைவிட்டு வெளியே சென்றான். ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவன் கூகுல் மேப்பில் தேடினான். அதற்குள் அவனுடைய கார் தவறுதலாக ஒரு சேற்றுப் பள்ளத்தில் இறங்கிவிட்டது. காருக்கு ஒன்றும் சேதமில்லை. ஆனாலும் காரின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொண்டது. அவன் எவ்வளவோ முயன்றும்கூட அவனால் சேற்றிலிருந்து காரை எடுக்கமுடியவில்லை. இதனால் அவன் பக்கத்தில் இருந்த பண்ணைக்குச் சென்று உதவி கேட்டான்.

பண்ணையிலிருந்து வெளியே வந்த ஒரு விவசாயி காரைப் பார்த்துவிட்டு, "என் ஜாக் இந்த வேலையை எளிதாகச் செய்துவிடுவான்" என்றார். பின்னர் அவர் அருகில் கட்டியிருந்த தனது கோவேறு கழுதையைக் காண்பித்தார். பீட்டருக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என்பதற்காக விவசாயினுடைய கழுதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விவசாயி தனது கோவேறு கழுதையைக் கூட்டி வந்தார். அதைக் காருக்குப் பின்னால் கட்டினார்.

பின்பு விவசாயி, "பிளாக்கி நன்றாக இழு!, ராக்கி நன்றாக இழு!, டாமி நன்றாக இழு!" என்று மீண்டும் மீண்டும் கத்தினார். கடைசியாக, "ஜாக்! வேகமாக இழு!" என்று கத்தினார். உடனே அந்த கோவேறுக் கழுதை காரை ஒரே இழுப்பில் வெளியே கொண்டு வந்துவிட்டது. பீட்டருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. தன்னுடைய காரை சேற்றுப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்து சேர்த்ததற்காக விவசாயிக்கு நன்றி கூறினார். ஆனால் அவருக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.

பீட்டர் விவசாயியைப் பார்த்துக் கேட்டார், "முதலில் பிளாக்கி, ராக்கி, டாமி என்று வேறு வேறு பெயர்களைச் சொல்லி இழுக்கச் சொன்னீர்கள். கடைசியாக ஜாக்கியின் பெயரைச் சொல்லி இழுக்கச் சொன்னீர்களே, ஏன்?". விவசாயி மெல்ல சிரித்துக்கொண்டே சொன்னார், "எனது ஜாக்கிற்கு கண் தெரியாது. இன்னும் பலபேர் தன்னுடைய சேர்ந்து இழுக்கிறார்கள் என்று அவனை நம்ப வைப்பதற்குத்தான் அப்படி வேறு வேறு பெயர்களைச் சொன்னேன். இன்னும் சில பேர் அவனுடைய சேர்ந்து இழுக்கிறார்கள் என்று அவன் நம்பியதால்தான் அவனால் இந்தக் காரை வெளியே இழுக்க முடிந்தது".

ஒரு சாதாரண கோவேறு கழுதையான ஜாக், தன்னோடு சேர்ந்து மற்றவர்களும் இழுக்கிறார்கள் என்ற நம்பியதால்தான், அதனால் காரை சேற்றுப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டுவர முடிந்தது. நாமும் நம்முடைய வாழ்வில் எதை செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால் அதில் வெற்றிபெறுவோம் என்பது உறுதி.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எரிக்கோ நகரை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, பாதையோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பார்வையற்ற ஒருவர், இயேசு அவ்வழியாக வருகின்றார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என்பதற்காக, "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்துகிறார். அப்போது இயேசுவைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த கூட்டமோ, அவரைக் கத்தவேண்டாம் என்று அதட்டுகிறது. ஆனாலும் அந்த பார்வையற்ற மனிதர், இன்னும் உரக்கக் கத்தி, இயேசுவின் கவனத்தை ஈர்த்து கடைசியில் பார்வையும் பெறுகின்றார்.

இஸ்ரயேல் சமூகத்தைப் பொறுத்தளவில் பார்வையின்மையோ அல்லது பார்வைக் குறைபாடோ குணப்படுத்த முடியாத ஒன்றாகவே கருதப்பட்டது. எனவே, பார்வையற்றவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுத்து உண்ணவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டார்கள். நற்செய்தியில் வருகின்ற மனிதரும் அப்படித்தான் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றார். ஆனால் இவர் பிறவிக் குருடர் இல்லை, இடையில் பார்வையிழந்தவர் என்பது இவருடைய வார்த்தைகளில் இருந்து தெரியவருகிறது. தன்னுடைய வாழ்வில் எல்லாம் முடிந்துபோய்விட்டது, இனிமேலும் திரும்பப் பார்வை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று இவர் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில்தான், இயேசு இவர் இருக்கும் பகுதி வழியாக வருகின்றார்.

இயேசு செய்த அருமடையாளங்களைப் பற்றிக் கேட்டு, அவர்தான் மெசியா என நினைத்திருந்த அந்த பார்வையற்றவர், இயேசு அப்பக்கம் வருகின்றார் என்று கேள்விப்பட்டு, "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என உரக்கக் கத்துகின்றார். அவருடைய குரல்/கத்தல் இயேசுவின் காதுகளை எட்டுகிறது. இதனால் இயேசு அவரை அழைத்து, அவருடைய நம்பிக்கையைக் கண்டு, அவருக்கு நலமளிக்கின்றார். இங்கே பார்வையற்ற மனிதரின் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு நலமளிக்கின்றது.

நாம் பார்வையற்ற மனிதரைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை இறைவனிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், "நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று அவரிடத்தில் வேண்டுவோம், இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று

அந்த ஊரில் வானொலி நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அது வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியையும் நடந்தி வந்தது. அந்த நிகழ்ச்சி என்னவென்றால் மக்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அவர்களிடம் எழுதி அனுப்பலாம். அவர்கள் அந்த விண்ணப்பங்களுக்காக ஜெபிப்பார்கள். நிறைய நேரங்களில் அவர்கள் ஜெபித்த விண்ணப்பங்கள் இறைவனால் கேட்டப்பட்டதால், நிறையப் பேர் தங்களுடைய விண்ணப்பங்களை அவர்களுக்கு எழுதி அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஊரில் கடவுள் பக்தி மிகுந்த பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவள் வறுமையான ஒரு சூழ்நிலையில் இருந்தாள். அன்றைக்கு அவளுடைய வீட்டில் உணவு உண்பதற்கு ஒரு குண்டுமணி அரிசிகூட இல்லை. எனவே சிந்தனை வயப்பட்டவளாய், "எதற்கு நம்முடைய விண்ணப்பத்தை வானொலி நிலையத்திற்கு எழுதி அனுப்பக்கூடாது? என்று முடிவுசெய்து, தன்னுடைய விண்ணப்பத்தை வானொலி நிலையத்திற்கு நம்பிக்கையோடு எழுதி அனுப்பினாள். அவளது விண்ணப்பத்தை பெற்ற வானொலி நிலையத்தார் அவளுக்காக நம்பிக்கையோடு ஜெபித்தார்கள்.

அப்பொழுது அவர்களுடைய ஜெபத்தைக் கேட்ட அந்த ஊரில் இருந்த கடவுள் நம்பிக்கையற்ற ஒரு பணக்காரர் அந்தப் பெண்ணின் நிலையை ஏளனம் செய்ய விரும்பினார். எனவே அவர் தன்னுடைய பணியாளரை அழைத்து, ஒரு மாட்டிவண்டி நிறைய மளிகைச் சாமான்களையும், காய்கறிகளையும் நிரப்பி, அந்த பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு வரும்படியாகும், இதை யார் கொடுத்தனுப்பினார்கள் என்று அவள் கேட்டால், சாத்தான் கொடுத்தனுப்பியதாகச் சொல்" என்று கேட்டுக்கேட்டார். அந்த பணியாளரும் தன்னுடைய தலைவன் சொன்னதுபோன்று எல்லாவற்றையும் வண்டியில் நிரப்பி, அந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.

மாட்டு வண்டியைப் பார்த்ததும் அந்தப் பெண்மணி தன்னுடைய ஜெபத்தை இறைவன் கேட்டுவிட்டார் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு இறைவனைப் போற்றி புகழ்ந்தார். அப்பொழுது அந்த பணியாளர் இதுதான் சரியான தருணம் என நினைத்து அவளிடம், "இந்த பொருட்களையெல்லாம் யார் அனுப்பினார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவள் நிதானமாக, "தேவையில்லை. கடவுள் கட்டளையிட்டால் அதை சாத்தானாக இருந்தாலும் நிறைவேற்றவேண்டும் எனும்போது, இதைக் கொடுத்தனுப்பியவரைப் பற்றி நான் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?" என்றாள்.

கடவுள் எனக்குத் தருவார் என்ற அந்த பெண்ணின் நம்பிக்கை அவளது வறுமைநிலை நீங்கக் காரணமாக இருந்தது. இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இருந்தால், எத்தகைய இழிநிலையும் மாறும் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிய பயணத்தில் எரிக்கோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் ஆண்டவர் இயேசுதான் கடந்து செல்கிறார் என்று அறிந்து "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்துகிறார். மக்கள்கூட்டம் அவரை அமைதியாக இருக்கவேண்டும் என்று சொல்லியும், அவர் இன்னும் உரக்க "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்துகிறார். இதைக் கண்டு இயேசு அவருடைய நம்பிக்கைக்கு வெகுமதியாக அவருக்கு பார்வையை அளிக்கின்றார்.

பார்வையற்ற அந்த மனிதரின் நம்பிக்கைதான், அதுவும் ஆண்டவர் இயேசு தனக்கு நலமாளிப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவருக்கு நலமளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

நமது வாழ்வில் நாம் இறைவனிடம் எத்தகைய நம்பிக்கை வைத்து வாழ்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருமுறையோ அல்லது இருமுறையோ இறைவனிடம் வேண்டிவிட்டு, அந்த ஜெபம் கேட்கப்படவில்லை எனில், நாம் நமது நம்பிக்கையில் தளர்ந்துபோய்விடுகின்றோம். ஆனால் பார்வையற்ற அந்த மனிதர் மக்கள்கூட்டம் தன்னை அதட்டியபோதும், பேசாது இருக்கவேண்டும் என்று சொன்னபோதும் அவர் இடைவிடாது இயேசுவை நோக்கிக் கத்துகிறார். இறுதியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுகிறார். நமது வாழ்வில் இத்தகைய ஒரு பண்பினைக் கற்றுக்கொள்வோம்.

இறைவாக்கினர் எரேமியாப் புத்தகம் 17:7 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர், ஏனெனில், ஆண்டவரே அவர்களது நம்பிக்கை" என்று. ஆம், நாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது நாம் பேறுபெற்ற மக்களாகின்றோம்.

எனவே நாம் பார்வையற்ற அந்த மனிதரைப் போன்று இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்வோம். வாழ்வில் வரும் சோதனைகளை எல்லாம் முறியடித்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!