Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 32ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நீர் நம்பிக்கைக்கு உரியவர்.

திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8

அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள்.

எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 02 தெச 02: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 01-08

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார்.

அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

பின்பு அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."

பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இடைவிடாது- விடாமுயற்சியோடு - ஜெபிப்போம், இறையருள் பெறுவோம்

அந்த ஊரில் கடவுள் பக்தி மிகுந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பரம ஏழையாக இருந்தாலும், வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள், துன்பங்கள் வந்தாலும் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையில் மட்டும் மிக உறுதியாக இருந்தான். இதனால் கடவுளுக்கு அவனை மிகவே பிடித்திருந்தது.

ஒருநாள் இரவில் கடவுள் அவனுடைய கனவில் தோன்றி, "மகனே, உன்னுடைய பக்தியைக் கண்டு நான் மெச்சுகிறேன். அதனால் உனக்கு நான் ஒரு பரிசு தரப்போகிறேன். அதற்காக நீ ஒரு காரியம் செய்யவேண்டும்" என்றார். "என்ன காரியம் செய்யவேண்டும் சுவாமி, சொல்லுங்கள். உடனே செய்கிறேன்"என்றான் அவன். அதற்கு கடவுள், "உன்னுடைய வீட்டிற்குப் பின்னால் இருக்கும் கதவைத் தள்ளு, அதற்காக எவ்வளவு நாள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. அங்கே உனக்கான பரிசு காத்திருக்கிறது" என்றார். "ஓ அவ்வளவுதானா!, நாளைக்கே அதைச் செய்து முடிக்கிறேன்" என்றான். அதற்குள் அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான்.

அடுத்தநாள் காலை வேளையில், படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அவன் வீட்டுக்குப் பின்னால் இருந்த கதவை நோக்கி விரைந்து சென்றான். அந்த கதவு மிகவும் பழமையான ஒரு கதவாக இருந்தது. வீட்டுற்கு புதிதாய் குடிவந்தபோது அந்தக் கதவினைப் பார்த்த ஞாபகம். அதன்பிறகு அதைப் பார்த்ததே கிடையாது. இப்போதுதான் அதை மீண்டுமாகப் பார்த்தான். உடனே அவன் தன்னுடைய பலம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு அந்தக் கதவைத் தள்ளிப்பார்த்தான். ஹூஹூம் இம்மியளவுகூட கதவு நகரவில்லை. இன்னும் எவ்வளவோ முயற்சி செய்து தள்ளிப் பார்த்தான். அப்போதும் கதவு நகரவே இல்லை. சரி அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி தன்னுடைய வேலைக்குக் கிளம்பினான்.

அடுத்த நாள் வந்து கதவைத் தள்ளிப் பார்த்தும் கதவு நகரவே இல்லை. இப்படியாக ஒருவார காலம் அவன் கதவைத் தள்ளிப் பார்த்தான். அதனால் ஒருபயனும் நடைபெறவில்லை. இதனால் அவன், கடவுள் எங்கே இதைச் சொல்லியிருக்கப் போறார். இது ஏதோ மனப்பிரம்மையாக இருக்கும் சொல்லி தன்னுடைய முயற்சியைக் கைவிட்டுவிட்டு வழக்கம்போல் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கடவுள் மீண்டுமாக அவனுடைய கனவில் தோன்றி, "என்ன மகனே! உன்னைக் கதவைத் தொடர்ந்து தள்ளச் சொன்னேனே. ஆனால் நீயோ அதைப் பாதியில் விட்டுவிட்டாயே"என்று வருந்தினார். அதற்கு அவன், "சுவாமி எவ்வளவு நாள்தான் நான் கதவைத் தள்ளுவது?. ஏறக்குறைய ஒருவார காலம் கதவைத் தள்ளிப் பார்த்துவிட்டேன், ஆனால் கதவுதான் திறக்கவே இல்லை. அதனால்தான் என்னுடைய முயற்சியை விட்டுவிட்டேன்"என்றான்.

உடனே கடவுள் அவனிடம், "நான் உன்னிடம் கதவைத் தள்ளிக்கொண்டே இரு என்றுதானே சொன்னேன். அதைத் திறக்கவேண்டும் என்று சொல்லவில்லையே. ஒருவார காலம் கதவைத் தள்ளியும் ஒரு பயனும் இல்லை என்று வருத்தப்படுகிறாயே!. இப்போது உன்னுடைய கைகளையும், தோள்களையும் பார். அது எவ்வளவு முறுக்கேறி இருக்கிறது என்று உனக்குப் புரியும். இதுதான் இந்த ஒருவார காலத்தில் நீ அடைந்த பலன். இனிமேல் நீ உன்னுடைய முறுக்கேறிய கைகளையும், தோள்களையும் வைத்துக்கொண்டு கதவைத் திறந்து பார், அது உனக்கு எளிதாய் திறக்கும்"என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

அடுத்தநாள் காலையில் அவன் எழுந்ததும் வேகமாகச் சென்று, கதவை தன்னுடைய முழுபலனையும் கொண்டு தள்ளிப்பார்த்தான். இப்போது கதவு அவனுக்கு எளிதாய்த் திறந்தது. அவன் உள்ளே சென்றுபார்த்தபோது அங்கே ஒரு மரப்பெட்டி நிறைய ஏராளமான தங்கமும், பணமும் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அவன் தன்னுடைய வாழ்வையே மகிழ்ச்சிகரமானதாக மாற்றியமைத்தான்.

இடைவிடாது, விடாமுயற்சியியோடு ஒருசெயலைச் செய்கின்றபோது ஒருநாள் நமக்கு வெற்றி கைகூடும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் இடைவிடாது, மனந்தளராமல் ஜெபிக்கவேண்டும் என்று கற்பிக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும் என்ற உவமையை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு கூறும் இந்த உவமையில் வரும் கைம்பெண் மனந்தளராமல் நேர்மையற்ற நடுவரிடம் தன்னுடைய வழக்கைத் தீர்த்துவைக்கச் சொல்கிறார். ஒருகட்டத்தில் கைம்பெண்ணின் நச்சரிப்பு தாங்காமல் அவர் அவளுடைய வழக்கைத் தீர்த்துவைக்கிறார். இப்படி ஒரு நேர்மையற்ற தன்னிடம் மன்றாடும் ஒருவருக்கு நீதி வழங்கும்போது, கடவுள் தன்னைநோக்கி அல்லும், பகலும் மன்றாடும் ஒருவருக்கு நீதி வழங்காமல் போவாரோ என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

"வெற்றிக்கு இன்றியமையாதது விடாமுயற்சியன்றி வேறெந்தப் பண்புமல்ல. காரணம் அது எல்லாவற்றையும் வெல்கிறது. இயற்கை உட்பட"என்பார் கவிஞர் பா.விஜய்.

ஆகவே நாம் நம்முடைய வாழ்வில் எத்தனை சோதனை வந்தாலும் இறைவனிடம் இடைவிடாது, விடாமுயற்சியோடு மன்றாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மனந்தளராமல் இறைவனிடம் மன்றாடுவோம்!

ஒரு மனிதன் ஒரு நாள் இரவு தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சத்தம் கேட்டு விழித்தவன், அறை முழுவதும் தங்கநிற ஒளி பரவியிருப்பதைக் கண்டான். அவன்முன் கடவுள் தோன்றினார். கடவுள், "உனக்கொரு முக்கியமான வேலையைத் தர இருக்கிறேன். அதைச் சரியாகச் செய்வாயா?"என்று கேட்டார். மனிதன் அவர் முன் மண்டியிட்டு, "நீங்கள் சொல்வது எதுவாகினும் நான் செய்வேன்"என்றான்.

உடனே கடவுள் அவன் வீட்டின் முன்னிருந்த ஒரு பெரிய பாறையைக் காட்டி, "இந்தப் பாறையை நீ உன்னால் முடிந்தவரை தள்ளவேண்டும்" என்று கூறி மறைந்தார். அன்றிலிருந்து அவன் தினமும் கடமையுணர்ச்சியுடன், அந்தப் பாறையை முடிந்த அளவு தள்ளினான். தினமும் காலையிலிருந்து இரவு வரை தனது தோளை அந்த கரடு முரடான பாறையில் கொடுத்துத் தள்ளினான். இதனால் ஒவ்வொரு இரவும் அவன் படுக்கைக்குத் திரும்பும்போது அவனது உடலெல்லாம் வலிக்கும். மனம் சோர்விற்றிருக்கும். பாறை மட்டும் சிறிதுகூட அசைந்திருக்காது.

எவ்வித பலனுமின்றி நம் உழைப்பு வீணாகிறதே என்று மனம் புழுங்கினான். அவனது மனம் சந்தேகிக்கத் தொடங்கியதும் சாத்தான் இதுதான் சமயமென்று உள்ளே வந்தது. அது அவனிடம், "நீ இவ்வளவு கஷ்டப்பட்டும் எந்தப் பயனுமில்லையே. நீ ஏன் இந்தப் பணியைச் செய்து சாகவேண்டும்?. சும்மா செய்வதுபோல் நடி அது போதும்" என்றது. மனம் சலனமடைந்ததால் அவனும் அதுதான் சரியென்று எண்ணினான். ஆனாலும் அவன் நேர்மையாளன். அதனால் அவன் கடவுளிடமே நேராக இதைக் கூறிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். உடனே கடவுளை எண்ணி வேண்டினான்.

கடவுள் அவன் முன் தோன்றியவுடன், "ஐயனே! நான் எவ்வளவோ முயன்றும் என்னால் இந்தப் பாறையைக் கடுகளவு கூட நகர்த்த முடியவில்லை. நான் தோல்வியுற்றேன். என்னால் நீங்கள் கொடுத்த வேலையை முடிக்க முடியவில்லை. என்னை மன்னியுங்கள்"என்று புலம்பினான்.

கடவுள் கருணையுடன், "மனிதனே! நீ எனக்கு சேவை செய்ய வேண்டுமென்று கூறினேன். நீயும் அதற்கு ஒத்துக்கொண்டாய். இதைப் பாறையை உன் பலம்கொண்ட மட்டும் தள்ளவேண்டுமென்று கூறினேன். நீயும் செய்தாய். உன்னை நான் பாறையை நகர்த்த வேண்டுமென்று சொல்லவில்லை. தள்ளவேண்டுமென்றுதான் கூறினேன். நீயும் உமது கடமையை சரியாகத்தானே செய்திருக்கிறாய். பின் ஏன் உனக்கிந்த கலக்கம்?. இது வீண் முயற்சியென்று கலங்குகிறாயா? உனது தோள்களைப் பார். உறுதியாக ஆகியிருக்கின்றன. உனது மார்பு. இடுப்பு, கால்களெல்லாம் வலிமையாகியிருக்கின்றன. தொடர்ந்து தள்ளியதால் நீ மிகப்பெரிய பலசாலியாகியிருக்கிறாய். நீ நம்பிக்கை உள்ளவன். மன உறுதி படைத்தவன். இப்போது பலசாலியாகவுமிருக்கிறாய். உன்னால் இனி வாழ்வில் எதையும் வெற்றிகொள்ள இயலும். இப்போது உனக்கான நான் இந்தப் பாறையை நகர்த்துகிறேன்"என்று சொல்லி நகர்த்தினார். பாறை மிக எளிதாக நகர்ந்தது.

வாழ்வில் நாம் மேற்கொள்கின்ற எந்தக் காரியமாக இருந்தாலும் அதை மனந்தளராமல் செய்தால், ஒருநாள் வெற்றி கைகூடும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும், இந்தக் கதை மிகவும் அற்புதமானது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு நாம் மனந்தளராமல் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்காக கைம்பெண், நேர்மையற்ற நடுவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். யூத சமூகத்தில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. உவமையில் வருகின்ற பெண்ணோ, வெறும் பெண் மட்டும் கிடையாது, கைம்பெண் அதுவும் ஏழைக் கைம்பெண். அப்படிப்பட்டர் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நீதி பெறுவது என்பது ரொம்பவே இயலாத காரியம். அந்த நடுவர், கைம்பெண்ணின் வழக்கை தீர்த்து வைக்க லஞ்சம் கேட்டிருக்க வேண்டும். லஞ்சம் கொடுக்கின்ற அளவுக்கு கைம்பெண்ணின் பொருளாதார சூழல் ஒத்துவராமல் இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில்தான் அந்தப் கைம்பெண் தனக்குக் நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக நேர்மையற்ற நடுவரிடம் வேண்டுகிறார். கடைசியில் அந்த நடுவர் கைம்பெண்ணின் நச்சரிப்பு தாங்காமல் அவருக்கு நீதி வழங்குகின்றார்.

இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, 'நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தாரெனில், தம்மை நோக்கி அல்லும் பகலும் மன்றாடுவோருக்கு கடவுள் இரங்கமாட்டாரா?' என்று கேட்கின்றார். ஆண்டவராகிய கடவுள் தன்னை நோக்கி யாராரெல்லாம் மனந்தளராது மன்றாடுகிரார்களோ, அவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார் என்பது உறுதி.

ஆகவே, நாம் இறைவனிடத்தில் மனந்தளராது மன்றாடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!