Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                          15  நவம்பர் 2018  
                                                               பொதுக்காலம் 32ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஒனேசிமுவை அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20

அன்பிற்குரியவரே, உம் அன்பைக் குறித்து நான் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது.

எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.

முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்யவேண்டும் என்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்கு உரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்கு உரியவனாகிறான்!

எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். 'நானே அதற்கு ஈடு செய்வேன்' எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.

நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை.

ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 5a)
=================================================================================
 பல்லவி: யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டோர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9a ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், `இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது!"

பட்டணத்தில் குருத்துவத்திற்குப் படித்து வந்த மிகவும் துடிப்பான சகோதரர் ஒருவர், விடுமுறைக்கு தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அவரைத் தற்செயலாக கடைத்தெருவில் பார்த்த பங்குத்தந்தை அவரது நலம், படிப்பு எல்லாவற்றையும் கேட்டு விசாரித்துவிட்டு, வரும் ஞாயிறன்று பங்குக்கோவிலில் மறையுரை ஆற்றலாமா? என்று கேட்டார். தொடக்கத்தில் தயங்கிய சகோதரர், பங்குத்தந்தை கேட்கிறாரே என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்தார்.

குறிப்பட்ட நாளும் வந்தது. தகுந்த தயாரிப்போடு வந்திருந்த சகோதரர், நற்செய்தி வாசகம் முடிந்ததும் மக்களுக்கு முன்பாக வந்து, மறையுரை ஆற்றத் தொடங்கினார். அன்றைய நாளில் நற்செய்தி வாசகமானது, "மெசியாவின் வருகை" தொடர்பாக இருந்தது. எனவே அதைக் குறித்து அவர் மிகவும் உணர்ச்சி பொங்க போதிக்கத் தொடங்கினார். அவருடைய போதனைக் கேட்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். "இன்னாருடைய மகனா? எப்படியெல்லாம் பேசுகிறார்?" என்று வியந்து நின்றார்கள்.

"மெசியா வரப்போகிறார், வெகு விரைவாக வரப்போகப் போகிறார். அவருடைய வருகை மிக அண்மையில் உள்ளது. ஆகவே, மக்கள் யாவரும் அவருடைய வருகைக்குத் தயாராக இருக்கவேண்டும்" என்று போதித்துக்கொண்டிருந்தவருக்கு, திடிரென்று அவர் சொல்ல வந்தது மறந்துபோனது. இதனால் அவர் "மெசியா வரப்போகிறார், அவர் வெகு விரைவாக வரப்போகிறார்" என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லத் தொடங்கினார். ஒருகட்டத்தில் அவருக்கு தலைசுற்றவே, முன்னால் அமர்ந்திருந்த பாட்டியின் மீது அவர் விழுந்துவிட்டார். இதனால் சுற்றிலும் இருந்தவர்கள் பதறிப்போய், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை மயக்கம் தெளிய வைத்தனர்.

மயக்கம் தெளிந்த அவர், முன்னால் இருந்த பாட்டியிடம் "தெரியாமல் விழுந்துவிட்டேன் பாட்டி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்கு பாட்டி, "மெசியா வெகு விரைவில் வரப்போகிறார் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதைக் கேட்டாவது நான் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கலாம். கவனக்குறைவாக இருந்துவிட்டேன். தவறு என்மீதுதான்" என்றார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும் மெசியாவின் வருகை மிக அண்மையில் உள்ளது என்ற உண்மையை மிக அழுத்தமாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில், பரிசேயர்கள் இயேசுவிடம், "இறையாட்சி எப்போது வரும்?" என்று கேட்கிறார்கள். இயேசுவோ அவர்களிடம், "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்கின்றார்.

இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதில், நமக்கு ஒருசில செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. அதில் முதலாவது, இறையாட்சி என்பது புறக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல, அது நம்முடைய அகக் கண்களால் பார்க்கப்படவேண்டியது. இறையாட்சி நம்முடைய கண்களுக்குப் புலப்படும் முறையில் வரும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியல்ல, இறையாட்சி நம்முடைய கண்களுக்குப் புலப்படாத முறையில் வரும். ஆகவே, அதனை நாம் நம்முடைய அகக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும்.

இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இரண்டாவது செய்தி, இறையாட்சி எங்கோ அல்ல, இங்கே நம்மத்தியில் செயல்படுகின்றது என்பதாகும். பலரும் இந்த உண்மையை உணராமலே இருக்கிறார்கள். இறையாட்சி என்றால், விண்ணகத்தில்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அது நம்மத்தியில் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கின்றது, நாம் இறையாட்சியின் வல்லமையை உணராமல் இருக்கின்றோம் என்றுதான் தோன்றுகின்றது.

இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மூன்றாவது செய்தி, இறையாட்சி இந்த மண்ணில் மலர, நாம்தான் அதற்குக் கருவியாக இருந்து செயல்படவேண்டும் என்பதாகும். இந்த உலகத்தில் தன்னுடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் கொண்டுசெல்வதற்கு இயேசு எப்படி திருத்தூதர்களையும் சீடர்கள், இறையடியார்களையும் தேர்ந்தெடுத்தாரோ, அதுபோன்று இறையாட்சி இந்த மண்ணில் மலர்வதற்கு நம்மைக் கருவியாகத் தேர்ந்தேடுத்திருகின்றார். ஆகையால், நாம்தான் அவருடைய கருவியாக இருந்து செயல்படவேண்டும். இதில், "அவரோடு ஒத்துழைக்க மாட்டேன்" என்று சொல்லி ஓடிப்போன இறைவாக்கினர் யோனாவைப் போன்று நாம் நம்முடைய வழியில் செல்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.

உண்மை, அன்பு நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மன்னிப்பு போன்று விழுங்கியங்களை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்படும் இறையாட்சி இந்த மலர நாம் இறைவனின் கையில் ஒரு கருவியாக இருந்து செயல்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
இறையாட்சி - நற்செய்தி (லூக் 17:20-25)

'இறையாட்சி எப்போது வரும்?' என்று இயேசுவிடம் பரிசேயர்கள் கேட்க, 'கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது ... இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது' என்கிறார்.

'உங்கள் நடுவே' என்றால் 'பரிசேயர்கள் நடுவே' என்று இயேசு சொல்கிறாரா?

அல்லது

இறையாட்சி 'உங்கள் நடுவே' என்று ஒட்டுமொத்த உலகைச் சொல்கிறாரா?

வான்நோக்கிப் பார்க்கும் இறையாட்சி விடுத்து தான்நோக்கிப் பார்க்கும் - தன்னையும், தன்னைச் சுற்றியும் பார்க்கும் - இறையாட்சி நினைக்க அழைப்பு விடுக்கிறார் இயேசு.

இறையாட்சி நம் நடுவில் இருக்கிறது என்பதை எண்பிக்கும் விதமாக அமைகிறது இன்றைய முதல் வாசகம் (காண். பிலமோன் 7-20).

பிலமோனிடமிருந்து தப்பி வந்த அவரின் அடிமை ஒனேசிமுவைத் திரும்ப அவரிடம் அனுப்புகின்றார் பவுல். அப்படி அனுப்பும்போது அவர் ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அதில் உள்ள சில கூறுகளைப் பார்ப்போம். அக்கூறுகளில்தான் இறையாட்சி இருக்கிறது.

1. அன்பின் பெயரால்

இறையாட்சி என்ற வட்டத்தின் மையப்புள்ளி அன்பு. 'கட்டளை' அல்லது 'மேல்-கீழ்' பிரிவு மறைந்து, எங்கே 'வேண்டுகோள்' அல்லது சரிநிகர் நிலை வருகிறதோ அங்கே இறையாட்சி தொடங்குகிறது.

2. பயனற்றவர்கள் பயனுள்ளவர்கள் ஆகிறார்கள்

இன்று உறவுகள் பெரும்பாலும் பயன்பாட்டு நிலையில்தான் பார்க்கப்படுகின்றன. வயதான அருள்பணியாளர்கள் அல்லது அருள்சகோதரிகளைச் சந்திக்கும்போதெல்லாம், அல்லது நம் இல்லங்களில் வயதானவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த எண்ணம் என்னில் எழும். இவர்கள் பயனுள்ளவர்களாக இருந்தபோது எத்தனை பேர் இவர்களைத் தேடி வந்தார்கள்? பயன்பாடு குறைந்தவுடன் அவர்கள் சுமைகளாக ஆகிவிடுகிறார்கள். சுமையாகக் கருதப்பட்ட ஒனேசிமுவை பயனுள்ளவராக ஆக்குகின்றார் பவுல்.

3. உம்முடைய உடன்பாடு

அதாவது, அடுத்தவரின் உடன்பாடு இல்லாமல் செய்யப்படும் அனைத்தும் - அது அவருக்கு நன்மையே தந்தாலும் - காலப்போக்கில், சுமையாக மாறிவிடும். பிலமோனுக்கும் அதே நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் உடன்பாட்டை நாடுகிறார் பவுல்.

4. அடிமையாக அல்ல சகோதரனாக

இவ்வளவு நாள் இவன் அடிமையாக இருந்தான். ஆனால், நீர் பெற்றிருக்கிற நம்பிக்கையை இவனும் பெற்றிருக்கிறான். ஆக, நாம் எல்லாம் சகோதரர்கள்.

5. நான் ஈடு செய்வேன்
அடிமையின் கடனுக்குத் தன்னைப் பிணையாக்குகிறார் பவுல்.

6. எனக்குப் புத்துயிர்

பிலமோன் செய்யும் இந்த நற்செயலால் பவுல் புத்துயிர் பெறுவார்.

இவ்வாறாக, நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் நாம் கைக்கொள்ளும் மதிப்பீடுகளில் இருக்கிறது இறையாட்சி.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!