Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 32ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8,11-14

அன்பிற்குரியவரே, நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு. வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத் தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மன உறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல். அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு. இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.

அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு. நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு; நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு.

அப்பொழுது எதிரிகள் நம்மைப் பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள். ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  37: 3-4, 18,23. 27, 29 (பல்லவி: 39a)
=================================================================================
 பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வரும்.

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 29 நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா?

மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்"

மத்திய ஆப்ரிக்க நாடுகளில் மறைபோதகப் பணியை மிகச் சிறப்பான முறையில் செய்தவர் டேவிட் லிவிங்க்ஸ்டன் (1813 -1873). குறிப்பாக உகண்டா மற்றும் ஜைரே (Zaire) போன்ற இடங்களில் கிறிஸ்தவ விசுவாசம் தலைத்தோங்கி வளர்வதற்கு இவர் மேற்கொண்ட பணிகள்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒருசமயம் இவரிடத்தில் ஒருவர், "தந்தையே! நற்செய்தி அறிவிப்பிற்காக நீங்கள் செய்யும் இந்த தியாகத்தை வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது" என்று சொன்னார். அதற்கு டேவிட் லிவிங்க்ஸ்டனோ, "நான் என்ன பெரிதாகத் தியாகம் செய்துவிட்டேன். ஆண்டவர் இயேசு செய்த தியாகத்தில் ஒரு சதவீதம் செய்திருப்பேனா?... நான் செய்ததை தியாகம் என்று சொல்வதைவிடவும் கடமை என்று சொல்வதே சிறந்தது. ஏனென்றால், எனக்காக அவர் கொல்லப்பட்டார்; பாடுகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொண்டார். அப்படிப்பட்டவருடைய பணியைச் செய்வது, நான் செய்யவேண்டிய தலையாய கடமையல்லவா?" என்றார்.

ஆப்ரிக்கக் கண்டமே, கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்குக் காரணமாக இருந்த டேவிட் லிவிங்க்ஸ்டன், எந்தவொரு கர்வமும் இல்லாமல், நற்செய்தி வாசகத்தில் வருகின்ற பணியாளரைப் போன்று, "நான் கடமையைத்தானே செய்தேன்" என்று சொன்னது நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, 'பயனற்ற பணியாளர் உவமை'யைப் பற்றிப் பேசுகின்றார். ஆண்டவர் இயேசு இந்த உவமையின் வழியாக நமக்கு என்ன சொல்லவருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இயேசு இந்த உவமையைச் சொல்வதன் பின்னணி என்ன என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு நல்லது. இயேசுவின் சீடர்கள் அவரைப் பின்பற்றுவதால் என்ன கைம்மாறு கிடைக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். அத்தகைய பின்னணியில்தான் இயேசு இந்த உவமையைச் சொல்கின்றார்.

இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குச் சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குப் பணிசெய்யக் கூடிய பணியாளர்கள் என்பதாகும். ஒரு பணியாளருக்கு அல்லது அடிமைக்கு என்று எந்த உரிமையும் இருக்காது. அவர் தன் தலைவர் தனக்கு என்ன பணிக்கின்றாரோ அந்த வேலையைச் செய்தாக வேண்டும். மேலும் பணியாளர் அந்த வேலையைச் செய்ததற்காக தலைவர் ஒருபோதும் பாராட்டுவது இல்லை. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஒரு பணியாளரைப் போன்று எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டவருக்குப் பணிசெய்யவேண்டும் என்பதுதான் அவர் நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்பதாகும். இயேசு சொல்லக்கூடிய உவமையில் வருகின்ற பணியாளர், நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டேன், இத்தோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது என்று இருக்கவில்லை. மாறாக, தன்னுடைய தலைவர் சாப்பிடுகின்றபோது அவருக்குப் பணிவிடை செய்கின்றார். அதுவரைக்கும் அவர் சாப்பிடாமல் காத்திருக்கின்றார். இதுபோன்றுதான் நாம் ஒவ்வொருவரும், நம்முடைய பணிகளை நிறைவுசெய்துவிட்டாலும் ஆண்டவருக்காக, அவருடைய வருகைக்காகக் காத்திருக்கவேண்டும். பவுலடியார் இதைத்தான், "நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால் தக்க காலத்தில் அறுவடை செய்வோம். ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்திற்கு நன்மை செய்ய முன்வருவோம்" என்று கூறுவார் (கலா 6:9-10). ஆகவே, ஆண்டவருக்காக் காத்திருப்பதும் அவர் வரும்வரையில் மனந்தளராமல் நன்மை செய்வதும் தேவையானதாக இருக்கின்றது.

உவமையின் வழியாக, இயேசு சொல்லுகின்ற மூன்றாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு பணிசெய்ய வேண்டும் என்பதாகும். உவமையில் வருகின்ற பணியாளர், தான் செய்த பணிகள் அனைத்தையும் பெரிதாக அலட்டிக்கொண்டு செய்யவில்லை. மாறாக தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடுதான் செய்தார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், செய்கின்ற பணி எதுவாக இருந்தாலும் அதைத் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு செய்வதுதான் சிறப்பான ஒன்றாகும். இன்றைக்கு ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்து முடித்துவிட்டு, எல்லாம் என்னால்தான் ஆனது என்று வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கின்ற ஒருசில மனிதர்களைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்டவர்கள் 'நாமெல்லாம் இறைவனுடைய பணியாளர்கள்தான்' என்று உணர்வது எப்போது?

தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்" என்று (யாக் 4:10) இதுதான் உண்மை.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை தாழ்ச்சியோடும் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 என் கடன் பணிசெய்து கிடப்பதே

முன்பொரு காலத்தில் பிரான்சு தேசத்தில் துறவுமடம் ஒன்று இருந்தது. அந்த துறவு மடத்தில் இருந்த சகோதரர் லியோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவர் பெரிதாக எதையும் போதிக்கவுமில்லை, எழுதவுமில்லை. இருந்தாலும் அவருடைய எளிமையான வாழ்வே எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. அதனால் பல்வேறு இடங்களிருந்தும் மக்கள் வந்து, அவரை தரிசித்துவிட்டு அவருடைய ஆறுதலான மொழியைக் கேட்டுவிட்டுச் சென்றனர்.

ஒருமுறை அவரைப் பார்த்து, அவரிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இளந்துறவிகள் கூட்டம் ஒன்று நெடுந்தொலைவிலிருந்து கால்நடையாகவே துறவுமடத்திற்கு வந்தது. அது போக்குவரத்து வசதிகள் அவ்வளவு இல்லாத காலமாதலால், அவர்களுடைய பயணம் நீண்ட நாட்களுக்கு நீடித்தது.

இடையிடையே அவர்கள் தங்களுக்குள் பொறுப்புகளை யார் பகிர்ந்துகொள்வது என்ற விவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் "நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று ஒவ்வொருவரும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்ததால் அவர்களுக்குள் பெரிய குழப்பமே ஏற்பட்டது.

ஒருநாள் அந்த வழியாக வந்த துறவி ஒருவர், தானும் சகோதரர் லியோவைப் பார்க்கப் போவதாகச் சொல்லி, அவர்கள் குழுவில் சேர்ந்தார். அவர்கள் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் குறிப்பாக பயணத்திற்குத் தேவைப்படும் உணவுவகைகளை எல்லாம் சமைத்துத் தந்தார்; அவர்களுக்குப் பரிமாறினார; பாத்திரங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தினார். இவ்வாறு அந்த புதிய துறவி எல்லா வேலைகளையும், பொறுப்புகளையும் தானே முன்வந்து செய்தார். இதைப் பார்த்த ஒருசில துறவிகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.

ஓரிரு நாட்களிலே அவர்கள் எதை நோக்கிப் பயணப்பட்டார்களோ அந்த துறவுமடத்தை வந்து அடைந்தார்கள். அவர்கள் துறவுமடத்திற்குள் நுழைந்ததும், அங்கிருந்த முதிய துறவியிடம் "சகோதரர் லியோ எங்கிருக்கிறார்?, அவரைப் பார்ப்பதற்காக தூர தொலைவிலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம்" என்றார்கள். அதற்கு அந்த முதிய துறவி, "அவர் உங்கள் மத்தியில்தான் இருக்கிறார். இன்னும் நீங்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லையா?" என்று கேட்டார்கள். அவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்றார்கள். தங்களோடு வந்து, தங்களுக்குப் பணிவிடை புரிந்த அந்த புதிய துறவிதான் சகோதரர் லியோ எனப் புரிந்துகொண்டார்கள்.

அப்போது அந்த குழுவில் இருந்த இளந்துறவிகளுள் ஒருவர் சகோதரர் லியோவைப் பார்த்து, "நீங்கள்தான் சகோதரர் லியோ என்று எங்களிடம் ஏன் சொல்லவில்லை?, எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள், எதற்காக எங்களுக்குப் பணிவிடை செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு சகோதரர் லியோ, "எல்லோருக்கும் பணிவிடை செய்வது எனக்குப் பிடித்த காரியம் இதில் நான் பெருமகிழ்வு அடைகிறேன்" என்றார்.

சகோதரர் லியோவிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த அந்த இளந்துறவிகள் கடமையுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் பணிவிடை செய்துவாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு சென்றார்கள்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி தன்னுடைய சீடர்கள் அல்லது தன்னைப் பின்பற்றி நடப்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார். பணியாளர் என்று சொன்னால் அவருக்கு அவர் தன்னுடைய தலைவரின் விருபத்தின்படி நடக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கக்கூடாது. மேலும் பணியாளர் செய்த வேலைக்காக தலைவர் ஒருபோதும் அவரைப் பாராட்டுவதில்லை; அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில்லை. அதனைப் போன்றுதான் நாமும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் கடமையுணர்வோடு செய்யவேண்டும். இதுதான் ஆண்டவர் இயேசு நம்மிடம் எதிர்ப்பார்ப்பதாக இருக்கின்றது.

எவர் ஒருவர் அடுத்தவர் தம்மைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்கிறாரோ அவரால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. ஏனென்றால் மக்கள் எல்லா நேரமும் ஒருவரைப் புகழ்வதில்லை. பாராட்டுவதுமில்லை. இன்றைக்கு மக்களால் புகழப்படும் ஒருவர் நாளைக்கே தூற்றப்படலாம். ஆதலால் புகழுக்காகவோ, பாராட்டுக்காகவோ அல்லாமல் என் கடன் பணிசெய்து கிடப்பது என்று உணர்ந்து யார் செயல்படுகிறாரோ அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். நாம் அப்படிப்பட்ட மக்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.

இந்த உலகத்தில் பூக்கும் பூக்களோ அல்லது பாடும் குயில்களோ யாரும் தன்னை பாராட்டவேண்டும் என்று பூப்பதில்லை, பாடுவதில்லை. அவை போன்று நாமும் யாருடைய பாராட்டுக்காகவும் அல்லாமல், பணிசெய்வதுதான் என்னுடைய வாழ்வு என உணர்ந்து செயல்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!