Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 31ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8

சகோதரர் சகோதரிகளே, உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.

ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 3b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

காணாமற் போன ஆடு, காணாமற் போன காசு.

இன்றைக்கு காணாமல் போன மனிதர்கள் பலருண்டு. ஆட்கடத்தலை இன்று பத்திரிக்கைகள் அதிகம் பேசுகின்றன. நல்லாட்சிக்கு இது அறிகுறியா? என பத்திரிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி முறையான தகவல் பெற்று ஊழலை, லஞ்சத்தை, அக்கிரமத்தை வெளிக் கொணரும் துணிவு கொண்ட மாந்தர்கள் பலர் காணாமல் போகின்றார்கள் என்கிறது ஊடகங்கள்.

இப்படி மாந்தர்கள் காணாமல் போவது ஜனநாயக நாட்டிற்கு அழகா?

ஆடு, காசு காணாமற் போனாலே தேடும் நிலையென்றால், மாந்தர்கள் என்ன இவற்றை விட தரம் தாழ்ந்தா போனார்கள். என் உறவில் யாரும் காணாமற் போனால் தான் அதனுடைய அருமை எனக்கு புரியுமா? என் கையை சுட்டுக் கொண்டால் மாத்திரம் தான் சுடுபட்டதின் வேதனை தெரியுமா? உறவு ஒன்று காணாமற் போனால் குடும்பங்கள் படும் வேதனையை என்றைக்கு உணரப் போகின்றோம். இப்படி பலர் காணாமற் போகின்ற நிலை நாட்டின் நிலையானால் உண்மை வாய்மை எங்கு நிலைநாட்டப்படும் நம்முடைய கிறிஸ்தவத் தன்மையில் நாம் என்ன செய்திடப் போகின்றோம். பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கப் போகின்றோமா? இல்லை தவறு என அரசிற்கு குரல் கொடுக்கப் போகின்றோமா? தொடர்ந்தால் அரசினை மாற்றக் கூட தயங்க மாட்டோம் என சுழுரைக்கப் போகின்றோமா? இத்தகைய குடும்பத்தாருக்கு ஆறுதல் வழங்கிடுவது நமது கடமையே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மனமாற்றம்தான் கடவுளின் தூதர்களிடம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய எழுத்தாளர் ஜான் புன்யன் (John Bunyan) என்பவர். இவருடைய "Pilgrim's Progess" என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது. இதுவரைக்கும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

ஆனால் இவருடைய இளமைப் பருவமோ மிகவும் கேவலமாக இருந்தது. தவறான நண்பர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடவுளையும் மதிக்காமல், தன்னோடு வாழ்ந்த சக மனிதர்களையும் மதிக்காமல் கண்மூடித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் இவர் தன்னுடைய நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, "ஜான் புன்யன், ஜான் புன்யன்" என்றதொரு குரல்கேட்டது. அவர் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தபோது, "ஜான் புன்யன்! நீ நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து சொர்க்கம் செல்ல விரும்புகிறாயா?, அல்லது தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து நரகத்திற்கு செல்ல விரும்புகிறாயா?. எது நல்லது என்று நீயோ தீர்மானித்துக்கொள்" என்று சொல்லி அந்தக் குரல் மறைந்துபோனது.

அவர் மீண்டுமாக உற்றுநோக்கியபோது அங்கே இயேசு நின்றுகொண்டிருப்பது போன்று தெரிந்தது. அவருடைய முகம் மிகவும் வேதனை நிறைந்ததாகவும் இருந்தது. உடனே அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்தார். தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி அழுதார். இனிமேலும் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடாது என முடிவு செய்து புனித வாழ்க்கை வாழத் தொடங்கினர். அதன்பின் அவர் எழுதிய நூல்தான் மேலே குறிப்பிட்ட அந்த புத்தகம்.

நாம் நல்வழியில் நடக்கும்போது கடவுள் (கடவுளுடைய தூதர்களும்தான்) மகிழ்ச்சியடைகிறார். அதேநேரத்தில் நாம் மனம்போன போக்கில் வாழும்போது கடவுள் நம்மைக் குறித்து வேதனை அடைகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து 'காணாமல் போன ஆடு, மட்டும் காணமல் போன திராக்மா உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இந்த இரண்டு உவமைகளின் வழியாகவும் இயேசு நமக்கு உணர்த்தும் முதன்மையான செய்தி 'கடவுள் பாவிகளைத் தேடி வருகிறார்' என்பதுதான்.

மத்தேயு நற்செய்தி 9:13 ல் வாசிக்கின்றோம், "இயேசு நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தார்" என்று. அத்தகைய ஒரு கருத்து இங்கே நிறைவேறுவதை நாம் பார்க்கின்றோம்.

இயேசுவின் அன்பு, கரிசனையான பார்வை எல்லார்மீதும் குறிப்பாக சமூகத்தால் பாவி, குற்றவாளி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்மீது அதிகமாக இருந்தது. அதனால்தான் இயேசு அவர்களைத் தேடிச் சென்றார். அவர்களோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொண்டார். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மேலான அன்பைப் புரிந்துகொண்டு நடப்பதுதான் இயேசுவுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கின்றது.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டிய இரண்டு காரியங்களை மறந்துவிடக்கூடாது. ஒன்று கடவுளின் பேரன்பையும், இரக்கத்தையும் உணர்ந்துகொண்டு அவரிடம் திரும்பி வருவதாகும். விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப் பார்க்கும்போது கடவுள் தன்னுடைய மக்கள் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்பதையே விரும்புகிறார் என்று உணர்ந்து கொள்ளலாம்.

செக்கரியா புத்தகம் 9: 12 ல் வாசிக்கின்றோம், "நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே (பாவத்திற்கு அடிமையானவர்களும்தான்), உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள். இருமடங்கு நன்மைகளை நான் உங்களுக்குத் தருவேன் என்று இன்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று கடவுள் கூறுகின்றார். ஆகவே கடவுள் பாவ வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னுடைய மக்கள் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்றே விரும்புகின்றார். எனவே அவருடைய உள்ளக்கிடக்கையை உணர்ந்துகொண்டு அவரிடம் திரும்பி வருவோம். அப்போது நம்முடைய திரும்புதல் கடவுளுக்கும், அவருடைய தூதர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

இரண்டாவதாக நாம் செய்யவேண்டியது எல்லாம் 'பிறரை குற்றவாளிகள், பாவிகள்' என்று தீர்ப்பிடாமல் இருப்பதுதான். இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் பரிசேயர்களும், மறைநூல்களும் இயேசுவின் போதனையைக் கேட்க வந்த வரிதண்டுவோரைப் பாவிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இது ஒருவிதத்தில் தவறான ஒரு காரியமாகும்.

நம்மிடம் ஆயிரம் தவற்றை, குற்றங்குறைகளை வைத்துக்கொண்டு அடுத்தவரை குற்றவாளிகள், பாவிகள் என்று தீர்ப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?. அதனால்தான் இயேசு கூறுகிறார். "உன் கண்ணில் உள்ள மரக்கட்டையைக் கவனியாமல், அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பைக் கவனிப்பது ஏன்? என்று (மத் 7: 3).

எனவே பிறரைப் பாவிகள், குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் போக்கிலிருந்து நாம் விலகுவோம். நம்மீது அளவு கடந்த அன்பையும், இரக்கத்தையும் பொழியும் கடவுளிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 காணாமல் போனதை தேடிச் செல்லும் இயேசு

மலையடிவாரத்தில் இந்த அந்த குருகுலமே அன்றைக்கும் மிகவும் பரபரப்பானது. சீடர்கள் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இருக்காதா பின்னே? இத்தனை ஆண்டுகளாக தங்களுக்கு நற்போதனைகளை மட்டுமே கற்பித்து வந்த குருவை, திருட்டுப் பட்டம் சுமத்தி சிறையில் அடைத்துவிட்டார்கள் என்று அறிந்தால் எந்த சீடன்தான் பொறுத்துக் கொண்டு இருப்பான்?. குரு, அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டு, அரசனின் முன்பாக நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சீடர்கள் அனைவரும் அரண்மனைக்குச் சென்று தங்கள் குருவை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அங்கு விசாரித்ததில், குருவே தான்தான் இந்த குற்றத்தை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு விட்டதாகவும், அதனால்தான் சிறையில் அடைத்ததாகவும் பதில் அளிக்கப்பட்டது.

சீடர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. ஆறு மாதம் கழிந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த குரு, அடுத்த சில நாட்களிலேயே வேறு ஒரு குற்றத்திற்காக மீண்டும் சிறை சென்றார். இப்படி சின்னச் சின்ன குற்றங்களைச் செய்வதும், அதன் காரணமாக அடிக்கடி சிறைச்சாலைக்கு செல்வதுமாக இருந்தார். இதனால் அவரை மக்கள் அனைவரும் 'சிறைச்சாலை குரு' என்றே அழைக்கத் தொடங்கினர்.

குருவால், அவரது சீடர்கள் மனம் நொந்து போனார்கள். ஒரு முறை சிறையில் இருந்து வெளியே வந்த குருவிடம், "குருவே! உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள். எதுவாக இருந்தாலும் கொண்டு வந்து உங்களின் காலடியில் குவிக்கிறோம். எதற்காக இப்படித் திருடுகிறீர்கள்? அதுவும் போர்வை, குடை, பாதுகை என்று... வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்" என்றனர். ஆனால் சீடர்கள் இந்தக் கேள்வியை முன் வைக்கும் போதெல்லாம், குருவானவர் புன்னகைத்தபடியே அங்கிருந்து அகன்று விடுவார்.

காலங்கள் கடந்தன. குருவுக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து படுத்த படுக்கையாகிவிட்டார். ஒருநாள் அவரைச் சுற்றியிருந்த சீடர்கள், "இப்போதாவது சொல்லுங்கள். எதற்காக அடிக்கடி திருடிவிட்டு சிறைக்குச் சென்றீர்கள்?" என்றனர். "நீங்கள் அனைவரும் நாகரிக உலகில் வாழ்பவர்கள். உங்களுக்கு வழிகாட்ட என்னைப் போல் ஏராளமான குரு கிடைப்பார்கள். ஆனால் சிறையில் இருப்பவர்களுக்கு, உபதேசம் பெறுவதற்கோ, நல்வழி காட்டுவதற்கோ யாரும் இல்லை. அதனால்தான் அடிக்கடி சிறை சென்றேன். இப்போது அங்கு போய் பாருங்கள். பலரும் திருந்தி நல்வழிக்குத் திரும்பிவிட்டனர்" என்றார் குரு.

சிறைச்சாலையில் இருக்கக்கூடிய கைதிகளை மனம்திருப்புவதற்காக திருடர் பட்டத்தைச் சுமந்து வரும் தங்கள் குருவை நினைத்து பெருமைப் பட்ட சீடர்கள், 'இப்படியும் ஒரு குருவா?' என நினைத்து கண்ணீர் சொரிந்தார்கள்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னை காணாமல் போனதை அல்லது இழந்து போனதைத் தேடி செல்லும் நல்ல ஆயன் என்று எடுத்துரைக்கின்றார். இறைவனைப் பொறுத்தளவில் எல்லாரும் மீட்படைய வேண்டும், யாரும் அழிந்துபோகக்கூடாது. அதற்காக அவர் '99 நேர்மையாளர்களை' விட்டுவிட்டு வழிதவறிப் போன அல்லது காணாமல் போன ஒரு பாவியைத் தேடிச் செல்கின்றார். அவ்வாறு அவர் தேடிச் சென்று, கண்டடைக்கின்றபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். 'ஒரே ஒரு பாவிக்காக கடவுள் தொண்ணுற்று ஒன்பது நேர்மையாளர்களையும் விட்டுவிட்டுப் போவது நல்லதா?' என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுளைப் பொறுத்தளவில் ஒவ்வொருவரும் முக்கியம், இவர்தான் முக்கியம், அவர் தேவையல்ல என்பது கிடையாது. எல்லாரும் முக்கியம். அதனால்தான் வழிதவறிப் போன ஒரே ஒரு ஆட்டை/ பாவியைத் தேடிச் செல்கின்றார். அப்படியானால் 99 நேர்மையாளர்களின் கதி என்ன? என்று கேட்கலாம். இந்த உலகத்தில் கடவுளைத் தவிர வேறு யார் நல்லவராக இருக்க முடியும்? எல்லாரும் ஒருவிதத்தில் பாவிகள்தான், எல்லாரும் ஒரு விதத்தில் குற்றம் இழைத்தார்கள். ஆனால் என்ன, அவர்கள் மனம்மாறுவது கிடையாது. அவர்கள் மனமாறத் தயாராக இருந்தால், அவர்களும் கடவுளின் அன்பிற்குப் பாத்திரமாவார்கள் என்பது உறுதி.

ஆகவே, பாவத்தால் கடவுளை விட்டு தொலைவில் இருக்கின்ற நாம், அவருடைய அன்பை உணர்ந்தவர்களாய், அவர் நம்மைத் தேடிவருவதை உணர்ந்து, அவருடைய கைகளில் சரணாகதி அடைவோம். மனம்மாறி அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!