Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   07  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 31ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18

என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.

ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார். முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள்.

வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும். நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். அது போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 1 பேது 4: 14

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா?

இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?

எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா?

அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

உடைமையையெல்லாம் விட்டு விடாத எவரும் சீடனாக இருந்திடல் இயலாது.

உடைமையையெல்லாம் இன்று பிரதானமாக கருதும் காலம் இது. எனவே தான் இன்று நுகர்வு வெறி தலைவிரித்தாடுகின்றது. எதைப்பார்த்தாலும் பெற்று விட வேண்டும், எதையும் கழித்திட இயலாத நிலையையும் பார்க்கின்றோம். பொருள் சேர்க்க சேர்க்க இன்று அருள் இல்லாது போகின்றது. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது உண்மையே. ஆனால் அந்த பொருளே பிரதான இடம் பிடித்து, நம்மை அருள் பெற செய்யாது போகின்றது ஏன் நம்முடைய கவனத்தில் இல்லாது போகின்றது.

பொருளை பயன்படுத்தி தேவையில்லாத போது தூர எறிந்து விடுகின்ற மனோபாவம் நமதாகிட வேண்டும். ஆட்களை பயன்படுத்தி, தூர எறிகின்ற நிலை மாறி, அவர்களை நேசித்து, உறவினிலே உண்மையாய் இருந்திட முயன்றிட வேண்டும். இதுவே நம்மை அவருடைய சீடனாக்கிட இயலும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"யாராரெல்லாம் இயேசுவின் சீடர்?"

ஒரு கிராமத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவர் தனது சாந்தமான குணத்தாலும் தியானத்தாலும் கிராம மக்களைக் கவர்ந்திழுத்தார்; எல்லாருக்கும் நல்ல போதனைகளைத் தந்து ஆசிர்வதித்தார்; காசு, பணம் எல்லாம் அவர் தொடுவதே இல்லை; காணிக்கை என்ற பெயரில் அவருக்கு யாராவது பணம் கொடுத்தால், அவர் அதைத் திருப்பி அளித்துவிடுவார். அந்தளவுக்கு அவர் மக்களுக்கு பிடித்த ஒரு துறவியாக இருந்தார்.

இந்த சமயத்தில், அந்த கிராமத்தில் இருந்த பணக்காரன் ஒருவன் துறவியைப் பற்றி கேள்விப்பட்டான். அவன் மிகவும் கர்வம் மிக்கவன். இந்த உலகில் செல்வத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது என்பது அவனது அபிப்ராயம்!. எனவே இரண்டு சிறிய வைரக் கற்களை எடுத்துக்கொண்டு அந்தப் பணக்காரன் தன் பணியாட்கள் சிலருடன் துறவியைப் பார்க்கப் புறப்பட்டான்.

துறவி தங்கியிருந்த குடிலுக்கு அருகே ஒரு குளம் இருந்தது. குளத்தின் கரையில் ஒரு மரமும் இருந்தது. துறவி மரத்தினடியில் அமர்ந்திருந்தார். பணக்காரன் அவரை வணங்கி தான் கொண்டுவந்த இரண்டு வைரக்கற்களை ஒரு தட்டில் வைத்து காணிக்கையாகத் துறவியிடம் தந்தான். துறவி அந்த வைரைக் கற்களை எடுத்துப் பார்த்தார். அதை அவர் ஒரு சிறு கருங்கல் போல்தான் பார்த்தார். பின்னர் பணக்காரனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, இரண்டு வைரக்கல்லில் ஒரு வைரக்கல்லை குளத்தில் வீசி எறிந்தார். "க்ளங்' என்ற சத்தத்துடன் அது மூழ்கிப் போனது.

பணக்காரன் பதறிப்போனான். தன் பணியாட்களை நோக்கி, "அதைக் குளத்தில் இறங்கித் தேடுங்க, அது ரொம்ப விலை" என்றான். பணியாட்களும் குளத்தில் இறங்கித் தேடினார்கள். கிடைக்கவில்லை. பணக்காரனுக்குக் கவலையாகிவிட்டது. அவன் துறவியை நோக்கி, "அந்தக் கல் ரொம்ப விலை. அதை உங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கலாம்னு பார்த்தேன். எந்த இடத்தில் வீசினீங்க. கொஞ்சம் சொல்லுங்க. முயற்சி செஞ்சு தேடிப் பார்க்கலாம்" என்றான். உடனே துறவி, "அதோ! அந்த இடத்திலேதான்!" என்று மற்றொரு வைரக்கல்லையும் அதே இடத்தில் எறிந்து விட்டார்!

பணக்காரன் பதட்டமடைந்து, "என்ன இப்படி செஞ்சுட்டீங்க! அதோட அருமை உங்களுக்குத் தெரியலையே" என்றான். "அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அதைத்தான் எனக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டாயே" என்றார் துறவி. பணக்காரனால் எதுவும் பேசமுடியவில்லை. தன்னுடைய தோல்வியை உணர்ந்தவனாய் வீடு திரும்பினான்.

எல்லாவற்றையும் துறந்து வாழும் ஒரு துறவிக்கு வைரக்கல்லும் சாதாரண கல்தான் என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர் யார்? அல்லது தன்னுடைய சீடர் யார்? என்பதற்கான விளக்கத்தை மிகத் தெளிவாக தருகின்றார். இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று ஒருசில நெறிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் வைத்திருக்கின்றது. அந்த விதத்தில் இயேசுவும் தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் ஒருசில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று வரையறை விதிக்கின்றார்.

தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர் கடைப்பிடிக்கவேண்டிய முதலாவது நெறிமுறையாக இயேசு சொல்வது: தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், உயிர் இவை யாவற்றையும்விட தன்னை மேலாகக் கருதுபவராக இருக்கவேண்டும். தன்னை மேலாகக் கருதாமல் உறவுகளையோ, பணத்தையோ, பொருளையோ மேலாகக் கருதுகின்ற ஒருவரால் தன்னுடைய சீடராக இருக்க முடியாது என்பதுதான் இயேசு முன் வைக்கின்ற நிபந்தனையாக இருக்கின்றது.

இயேசுவின் சீடராக இருப்பதற்கான இரண்டாவது நிபந்தனை, தம் சிலுவையை சுமந்து செல்பவராக இருக்கவேண்டும். சீடத்துவ வாழ்வு பிரச்சனைகள் இல்லாத வாழ்வு அல்ல, அது அதிகமான பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்த வாழ்வு. அப்படிப்பட்ட வாழ்வில் ஒருவர் கட்டாயம் சிலுவையைச் சுமக்க நேரிடும். ஆகவே, அத்தகைய சிலுவையை ஏற்றுக்கொள்ள முன்வருபவர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்க முடியும்.

தன்னுடைய சீடராக இருக்க, இயேசு முன்வைக்கின்ற மூன்றாவது நிபந்தனை, திட்டமிடுதலில் சிறந்திருக்கவேண்டும் என்பதாகும். எடுத்துக்காட்டாக ஒரு கோபுரம் கட்டுகிறவனோ, ஒரு நாட்டோடு போர்தொடுக்கச் செல்கின்ற சரியான திட்டமிடுதலோடு செல்கின்றான். அப்படியிருக்கும்போது இவை எல்லாவற்றையும் விட மேலான, சீடத்துவ வாழ்வில் ஈடுபடுகின்ற ஒருவர், சரியான திட்டமிடுதல் இல்லாமல் செயல்பட்டால் அதை என்னவென்று சொல்வது?.

ஆகவே, இயேசுவின் சீடராக மாறுவதற்கு எல்லாவற்றையும் விட இயேசுவை மேலாகக் கருதுவோம், அவர் பொருட்டு சிலுவைகளைத் தாங்கிக்கொள்வோம், திட்டமிட்டு செயல்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!