Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 31ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.

மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 131: 1. 2. 3)
=================================================================================
 பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, " நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

என்னுடைய சகோதரி அயல் நாட்டிலே பணியாற்றி வருபவரை, அழைத்து கேட்டேன்,

என்ன பணி தரப்பட்டுள்ளது என்று. உடனே அற்புதமாக சொன்னார். கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு பணி செய்கின்றேன், இது எனக்கு மனநிறைவை தருகின்றது என்று.

கைம்மாறு செய்ய இயலாதவர்கள் யார் என்பதனை நாம் அறிந்திருக்கின்றோம்.

ஏழைகள், வறியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஊனமானவர்கள், பல நிலைகளில் வளர்ச்சியில்லாதவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போய்க் கொண்டு இருக்கும்.

மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும் இது பவுல் அடிகளாரின் அழைப்பு.

நற்செய்தியும் கூறுகின்றது, நேர்மையாளர்கள் உயிர்த்தெழும் போது, கைம்மாறு கிடைக்கும் என்று.

உலக புகழை, பெருமையை தேடாமல், இறைவனின் கைம்மாறை நிலைவாழ்வாக பெற முன்னெடுப்போம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

எது உண்மையான விருந்து?

உடுமலைப்பேட்டையைச் சார்ந்தவர் திருவாளர் பால முருகன். இவர் உடுமலைப்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் பேருந்திலும் நடந்தும் செல்லும்போது ஆதரவற்ற பலர் எச்சில் இலைகளிலிருந்து கிடைக்கின்ற உணவையும் குப்பை மேடுகளில் தூக்கி வீசிப்பட்ட உணவையும் உண்பதைப் பார்த்தார்.

இது பால முருகனின் உள்ளத்தை ஏதோ செய்தது. அவர் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தார். எனவே அவர் தன்னுடைய இல்லத்திலே உணவு சமைத்து, அதை உடுமலைப் பேட்டை பேருந்து நிலையம், பழனி செல்லும் சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திர சாலை என்று நாலா பக்கத்திலும் இருந்த ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் இருபது பேருக்கு மட்டுமே உணவு கொடுத்து வந்த பால முருகன், இன்றைக்கு 120 க்கும் மேல் உணவு கொடுத்துக்கொண்டு வருகின்றார்.

இவருடைய இந்த சேவையைப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றைக் கொடுத்து உதவி வருகிறார்கள். யாராவது இவரிடம், " உங்களுடைய இந்த சேவை உங்களோடு முடிந்துவிடுமா?" என்று கேட்டால், " இல்லை இல்லை, நான் செய்துவருகின்ற இந்தப் பணியை என்னுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் தொடர்ந்து செய்வார்கள்" என்பார். அந்தளவுக்கு அர்ப்பண உள்ளத்தோடு ஆதவரற்ற மக்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு கொடுத்துக்கொண்டு வருகின்ற திருவாளர் பால முருகன் நம்முடைய பாராட்டிற்கு உரியவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம், " நீர் பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, உம் சகோதர சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்போது அதுவே உமக்குக் கைமாறாகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்கின்றார்.

இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் நம்முடைய வாழ்விற்கான ஒருசில பாடங்கள் அடங்கியிருக்கின்றன. அவை என்னென்ன இன்று இப்போது பார்ப்போம். பெரும்பாலான நேரங்களில் நாம் நடத்தக்கூடிய சுபகாரியங்கள், அதிலும் குறிப்பாக கொடுக்கப்படுகின்ற விருந்துகள் நம்முடைய " வீண்பெருமையைப் பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. இத்தனை பேருக்கு விருந்து கொடுத்தேன், அதில் இன்னார் இன்னார் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்று தம்பட்ட அடிப்பதாகவே இருக்கின்றன நாம் கொடுக்கின்ற விருந்துகள். இத்தகைய விருந்துகளால் ஒருவருக்குக் கைம்மாறு கிடைக்கவே கிடைக்காது என்று இயேசு மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.

மேற்சொன்னதன்படி நடந்துகொள்கின்றபோது ஒருவருக்கு கைம்மாறு கிடையாது எனச் சொல்லும் இயேசு, பின் எதுதான் ஒருவருக்கு கைம்மாறு கிடைக்கச் செய்யும் என்று என்பதற்கு ஆதரவற்றவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் கொடுக்கக்கூடிய விருந்து தான் ஒருவருக்குக் கைம்மாறு பெற்றுத் தரும் என்கின்றார்.

இந்த உலகத்தில் இருக்கின்ற பலர், தாங்கள் விருந்துகொடுக்கின்றபோது ஏழைகளையோ, அனாதைகளையோ, உடல் ஊனமுற்றவர்களையோ நினைத்துப் பார்ப்பது கூட கிடையாது. " அவர்களை ஏன் நினைக்கவேண்டும், அவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்கு விருந்தளிப்பதால் மட்டும் நம்முடைய பேரும் புகழவும் உயர்ந்துவிடுமா என்ன? என்பது போலே நடந்துகொள்கின்றார்கள். ஏழைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் விருந்துகொடுப்பதால் இந்த மண்ணுலகில் வேண்டுமானால் கைம்மாறு கிடைக்காமல் போகலாம், ஆனால் விண்ணகத்தில் அதற்கான கைம்மாறு நிச்சயம் உண்டு.

இறுதித் தீர்ப்பின்போது, ஆண்டவர் தன்முன்னால் இருக்கின்ற மக்கள் கூட்டத்தைப் பார்த்து கேட்கின்ற முதல்கேள்வி, " நான் பசியாய் இருந்தேன், நீ எனக்கு உணவு கொடுத்தாயா?" என்பதுதான். உணவு கொடுத்தவர்களுக்கு விண்ணகமும், அதனைக் கொடுக்காதவர்களுக்கு நரகமும் கிடைக்கின்றது. ஆகையால், ஒருவருக்கு வாழ்வும் தாழ்வும் அவர் பணக்காரருக்கு எத்தன முறை உணவும் விருந்தும் கொடுத்தார் என்பதைப் பொறுத்து அல்ல, மாறாக உணவின்றித் தவித்த ஏழைக்கு எத்தனை முறை உணவு கொடுத்தார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

ஆகவே, நாம் இந்த மண்ணகத்தில் கிடைக்கின்ற கைம்மாறுகாக வீண் ஆடம்பரங்களில் ஈடுபடாமல், விண்ணகத்தில் கிடைக்கின்ற கைம்மாறுக்காக ஏழைகளுக்கு உணவு கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 நாம் தரும் விருந்து யாருக்கு?

அன்னைத் தெரசாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது. ஒருநாள் அன்னைத் தெரசாவைப் பார்ப்பதற்காக ஒரு புதுமணத் தம்பதியினர் வந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை அன்னையிடம் கொடுத்து, அதை அனாதைக் குழந்தைகளுக்கு உணவிடப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

உடனே அன்னை அவர்களிடம், " இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் திருமணத்திற்கு முன்பாக, " யாருக்கும் திருமண விருந்து அளிக்கவேண்டாம். மாறாக அப்பணத்தை அனாதை குழந்தைகளுக்கு உணவிடப் பயன்படுத்துவோம் என முடிவு செய்தோம். அப்படி வந்ததுதான் இந்தப் பணம்" என்றார்கள்.

அதற்கு அன்னை மீண்டுமாக, "இந்த நல்ல காரியத்தைச் செய்வதன் நோக்கம் என்ன?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், "நாங்கள் இருவரும் ஒருவர் மற்றவரை முழுமையாக அன்புசெய்கிறோம். எனவே அந்த அன்பின் வெளிப்பாடாக ஒரு தியாகச் செயலை செய்ய நினைத்தோம். அதன் வெளிப்பாடுதான் இது" என்று மிகத் தெளிவாக பதிலளித்தார்கள்.

இதைக்கேட்ட அன்னைத் தெரசா மிகவும் ஆச்சரியப்பட்டார் அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடைந்தார். ஏனென்றால் அந்த புதுமனத் தம்பதியினர் இந்து மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்கக்கூடிய ஒரு பிராமண குடுமபத்தைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களே இத்தகைய ஓர் இரக்கச் செயலைச் செய்ததுதான் அன்னையின் வியப்புக்குக் காரணமாக இருந்தது.

விருந்து என்று சொன்னால், தனக்குத் தெரிந்த அத்தனை மக்களையும் அழைத்து, அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது என்ற மரபினை உடைத்து, விருந்துக்கான பணத்தை அனாதைகளுக்கு கொடுக்க முன்வந்த அந்த புதுமணத் தம்பதியினரின் செயல் உண்மையில் நமது பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தம்மை விருந்துக்கு அழைத்தவர்களைப் பார்த்து, " நீர் பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டைவீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர்" என்றார்.

வழக்கமாக நாம் விருந்து அளிக்கின்றபோது வசதி படைத்தவர்களை, பணக்காரர்களை அழைத்துத்தான் விருந்துகொடுக்கிறோம். இதன் உள்நோக்கம் நமது அந்தஸ்தை, பணத்திமிரை உலகிற்க்குக் காட்டுவதற்கு அன்றி, வேறொன்றுமில்லை. ஆண்டவர் இயேசுவோ, நாம் விருந்தளிக்கின்றபோது ஏழைகளையும், அனாதைகளையும் அழைத்து விருந்தளிக்கச் சொல்கிறார். காரணம் ஏழைகளால் நமக்கு மீண்டுமாக உணவளிக்க முடியாது அதேநேரத்தில் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் நாம் தரும் விருந்துக்கான பலன், இந்த மண்ணுலகில் கிடையாது. மாறாக விண்ணுலகில் கிடைக்கும் என்பதே ஆண்டவர் இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

உணவளிப்பது - விருந்தளிப்பது - என்பது சாதாரண ஒரு காரியம் கிடையாது. அது மிக உயர்வாகப் போற்றிப் பாராட்டவேண்டிய ஒரு பண்பு. தமிழ் இலக்கியத்தில் வரும் புறநானுற்றில் " உண்டிகொடுத்தோர் (உணவு கொடுத்தோர்) உயிர் கொடுத்தோருக்குச் சமமாக வைத்துப் போற்றப்படுகிறார்கள். ஆகவே நாம் ஓர் ஏழைக்குத் தரும் உணவு உயிர்கொடுப்பதற்குச் சமமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

விவிலியம்கூட இறைவன் நம் அனைவருக்கும் விருந்தளிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. எசாயா புத்தகம் 25:6 ல் வாசிக்கின்றோம், " படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும்; பழரச பானங்களும்; கொழுத்த இறைச்சித் துண்டுகளும்; வடிகட்டி பக்குவப் படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்" என்று. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஐந்தாயிரம் பேருக்கும், அதன்பிறகு நான்காயிரம் பேருக்கும் உணவளிக்கிறார்.

கொரிந்து திருச்சபையில் பணக்காரர்கள் தங்களிடம் இருந்த உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்ளாமல், தாங்கள் மட்டுமே உண்டு வாழ்வதை பவுலடியார் மிக வன்மையாகக் கண்டிக்கிறார் ( 1கொரி 11: 20- 22).

ஆகவே இறைவன் விருந்தளிக்கிறார், அதுவும் எல்லா மக்களுக்கும் விருந்தளிகிறார் என்பதை உணர்ந்து, அவரைப் போன்று நாமும் எல்லா மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும். அதேநேரத்தில் வறியவர்களுக்கு உணவளிக்காமல் நாம் மட்டுமே உண்டுகொழுத்து வாழ்வு பாவம் என உணர்ந்து வாழவேண்டும். அப்போதுதான் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற முடியும்.

எனவே நமது விருந்துகளில் ஏழைகளையும், அனாதைகளையும் பற்றி நினைத்து பார்த்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
கைம்மாறு

இயேசு இன்னும் விருந்து நடக்கும் இடத்தில்தான் இருக்கிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் (லூக் 14:1,7-11) விருந்தினர்களிடம் பேசிய இயேசு, இன்றைய நற்செய்திப் பகுதியில் விருந்துக்கு அழைத்தவரிடம் பேசுகின்றார்.

இன்றைய விருந்துகள் தங்களின் பொருளை இழந்துகொண்டே வருகின்றன என்பது கண்கூடு. 'என்னால் எவ்வளவு முடியும் பார்!' என்று மற்றவரைக் கூப்பிட்டுக் காட்டுவதாகவும், விருந்திற்கு வருபவர்களும், 'என்னிடமும் நிறைய உள்ளது' என்று காட்டுவது போலவும் இருக்கிறது. வருகின்ற விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அனுப்புவதோடு அல்லாமல், இப்போது 'ரிட்டர்ன்' கிஃப்ட் என்ற ஒன்றும் பிரசித்தியாக உள்ளது. அதாவது, வருகின்ற விருந்தினர்களின் பிரசன்னத்தையும், அவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புக்களையும் திரும்பச் செலுத்தும்விதமாக இப்போது ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிறோம். இதன் பொருள் என்ன? 'நானும் உனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீயும் எனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீ கொடுத்ததை நான் உனக்கு கை மாற்றிவிட்டேன்' என்பதுதான்.

இவ்வாறாக, ஒருவர் கொடுத்ததை நாம் நம் கைகளால் வாங்கி, அதே கைகளில் வேறொன்றைக் கொடுத்து விடுகிறோம். இதுதான் கைம்மாறு.

கிராமங்களில் கடன் வாங்குவதை, 'கைமாத்து வாங்குவது' என்று சொல்வார்கள். ஆக, கைம்மாறு செய்யாமல் இருக்கும்போது ஒருவர் கடன்பட்டவராகவே இருக்கிறார்.

தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், 'விருந்துக்கு யாரை அழைக்க வேண்டும்?' என அறிவுறுத்துகின்றார் இயேசு. நண்பர்களையும், சகோதர, சகோதரிகளையும், உறவினர்களையும், செல்வம் படைத்த அண்டை வீட்டாரையும் அழைத்தால் அவர்கள் திரும்ப அழைத்து கைம்மாறு செய்துவிடுவார்கள். ஆக, கைம்மாறு செய்ய முடியாத ஏழைகள், உடல் ஊனமுற்றவர்கள், கால் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள் அழைக்கப்பட்டால் அவர்களால் கைம்மாறு செய்ய முடியாது. ஆனால், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக கைம்மாறு செய்வார். எப்போது? மறுவுலகில். பல நேரங்களில் அதை அவர் இவ்வுலகிலேயே செய்துவிடுவார்.

இங்கே, விருந்து கொடுப்பவரை மனிதர் நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார் இயேசு.

திரும்ப விருந்து கொடுக்க முடிபவர்களை நாம் விருந்துக்கு அழைக்கும்போது நாம் மனிதர் நிலையில் இருக்கிறோம்.

திரும்ப விருந்து கொடுக்க முடியாதவர்களை நாம் அழைக்கும்போது நாம் கடவுள் நிலையில் இருக்கிறோம்.

மேலும், கடவுள் செய்யும் செயல்களுக்கு நாம் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, அடுத்தவர்கள் நமக்கு கைம்மாறு செய்ய முடியாத நிலையில் நாமும் கடவுளாகத்தான் இருக்கிறோம்.

இதையே திருவள்ளுவரும்,

'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு' (குறள் 211) என்கிறார்.

நம் மேல் பொழியும் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்ய இயலாது. அம்மழை நம்மிடம் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை.

இதையொட்டி, இன்றைய முதல் வாசகத்தில் (பிலி 2:1-4) பவுலடியாரும், 'நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்' என்கிறார். தன்மையம் கைம்மாறு கருதும். பிறர்மையம் கருதாது.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!