Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   03  நவம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26

சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.

ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன்.

உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.

எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 42: 1. 2. 4ab (பல்லவி: 2a)
=================================================================================
 பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? பல்லவி

4யb மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 11: 29ab)

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: " ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.

நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

பெருமை தேடும் உலகம் இது.

எல்லா இடங்களிலும் முதல் இடம் தேடும் உலகம் இது.

என்ன பெற்றுக் கொண்டது உலகம் இது. முதல் இருக்கை தேடி தேடி மனிதத்தை தொலைத்து நிற்கின்றது. முதல் இருக்கை தேடி இருக்கைக்காக சண்டையிட்டு மற்றவாகளை மாண்பிழக்கச் செய்து, தான் அமர்ந்து, நிரந்தரமில்லாத இந்த உலகினிலே அவர்களும் மற்றொருவரால் புறந்தள்ளப்படுகின்ற நிலைத் தான் உருவாகின்றது.

இறைவாக்கு கற்றுத் தரும் பாடத்தை பெற்று வாழ்வாக்குவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தாழ்ச்சியே உயர்வு தரும்

அந்தப் பள்ளிக்கூடத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களில் மோகன்தான் நன்கு படிக்கும் மாணவன். அவன் வகுப்பில் நடக்கும் அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் வாங்கி வந்தான். அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது. சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது. மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் " எல்லோரும் நன்கு படித்து மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்கவேண்டும்" என்றார். அதனால் மோகனுக்கு தலைக்கனம் இன்னும் அதிகமாகியது. கர்வமும், தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது அவனது ரேங்க் 10 ஐ தாண்டியிருந்தது ஆசிரியர் அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, இந்த தடவை முதல் மதிப்பெண் எடுத்த சீனு சொன்னான். " சார் நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம். ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை" என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் " மோகன், நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது, தாழ்சியோடும், பணிவோடும் வாழவேண்டும் புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்" என்றார். மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்" என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ, அகம்பாவமோ கொள்ளக்கூடாது. மாறாக நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும் அதோடு மட்டுமட்டுமல்லாமல் நாம் பெற்ற கொடை, திறமைகள் யாவும் இறைவன் நமக்களித்த பரிசு என்ற மனநிலையில் தாழ்ச்சியோடு வாழவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விருந்தொன்றுக்கு சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த விருந்தினர்கள் ஒருசிலர் முதன்மையான இருக்கையில் அமர்வதை பார்த்தார். உடனே அவர் அவர்களிடம், " ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடம், " இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்" என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியிருக்கும்.

நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், " நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்" எனச் சொல்லும்போது உங்களுடன் பந்தியில் அமர்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமையடைவீர்கள். இவ்வாறு தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்கிறார்.

மனிதர்களாகிய நாம் எப்போதும் முதன்மையான இடங்களை, முதன்மையான பதவிகளை வகிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதில் ஒன்றும் தவறில்லை. நாம் முதன்மையான இடங்களை வகிக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மிடத்தில் ஒருவிதமான ஆணவத்தை ஏற்படுத்துகிறது. அது பிறரை தம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ண வைக்கிறது. அதனால்தான் ஆண்டவர் இயேசு நம்மையே தாழ்த்தி வாழச் சொல்கிறார்.

நாம் அனைவரும் தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று சொன்ன இயேசு கிறிஸ்து தாழ்ச்சிக்கு முன்னுதாரணமாக அவரே தாழ்ச்சியுடன் வாழ்கின்றார். பவுலடியார்தான் இதைத்தான் " கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" என்று கூறுகின்றார் (பிலி 2:6-11).

ஆகவே இயேசு கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார், அதனால் கடவுளால் உயர்த்தப்பட்டார். நாமும் தாழ்ச்சியோடு வாழ்கின்றபோது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பதை இதன்வழியாக நாம் உணர்ந்துகொள்ளலாம்.

" பணிவு - தாழ்ச்சி - அடக்கம் - இல்லையேல் மனித குலம் இருக்க முடியாது" என்பார் ஜான் புக்கன் என்ற அறிஞர்.

ஆகையால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆணவத்தையும், அகங்காரத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 ஆணவமோ அழிவு தரும்; தாழ்ச்சிதான் உயர்வு தரும்!

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பண்ணை நிலம் ஒன்றும் இருந்தது. அதில் அவர் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற பிராணிகளை எல்லாம் வளர்ந்துவந்தார். மற்றவைகளை எல்லாம் பண்ணையிலே வைத்திருக்க, நாயை மட்டும் தன்னுடைய வீட்டிற்குள் வர அனுமதித்தார்.

இது நாயின் மனதில் ஒருவிதமான ஆணவத்தை ஏற்படுத்தியது. எனவே ஆடு, மாடு, கோழியைப் பார்த்து, " இந்த வீட்டில் நான்தான் பெரியவன்" என்பது போல் எல்லாரையும் பார்த்து குரைக்கத் தொடங்கியது. ஆனால் ஆடும் ஆடும் கோழியும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்த நாய் " நம்முடைய மதிப்பு இவைகளுக்குச் தெரியவில்லை" என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டு காட்டுப் பக்கம் போனது.

காட்டில் மான் ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் பயந்துபோன மான், ஏதோ புதுவகையான கொடிய மிருகம் போலும் என நினைத்துக்கொண்டு, அங்கிருந்து தலைதெறிக்க ஓடிப்போனது. இதனால் நாயினுடைய மனதில் " நம்முடைய பண்ணையிலிருகின்ற ஜீவன்களுக்கு நம்முடைய மதிப்புத் தெரியாவிட்டாலும் இதற்கு நன்றாகவே தெரிகின்றது. அதனால்தான் இந்த மான் இப்படி பயந்து ஓடுகின்றது" என நினைத்துக் கொண்டது. தொடர்ந்து அது காட்டிற்குள் நடந்து சென்றது. அங்கே ஒரு புல்வெளி இருந்தது. அதில் சிங்கம் ஒன்று இளைப்பாறிக்கொண்டிருந்தது. இதற்கு நம்முடைய மதிப்பு தெரிகிறதா... பார்ப்போம் என்று அதற்கு முன்பாகப் போய் நாய் குரைத்தது. சிறுதுநேரம் அமைதியாக இருந்த சிங்கம், ஒரே பாய்ச்சலில் நாயின் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்றுபோட்டது.

நான்தான் பெரியவன், எல்லாரும் எனக்கு மதிப்பளிக்கவேண்டும் என்ற அலைபவர்களின் பாடு, கடைசியில் இப்படித்தான் முடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் தலைவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அவ்வாறு செல்லும்போது, விருந்தினர்கள் முதன்மையான இடங்களில் அமர்வதற்கு போட்டி போடுவதைப் பார்க்கின்றார். உடனே இயேசு அவர்களுக்கு அறிவுரை கூறத் தொடங்குகின்றார்.

பொதுவாக மனிதர்கள், " மற்றவர் தம்மை மதிக்கவேண்டும், அவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டும்" என்றே நினைப்பார்கள். திருமண விருந்துகளில்கூட இதேநிலைதான். அதனால்தான் திருமண விருந்துகளுக்குப் போகிறவர்கள் முதனமையான இருக்கைகளில் அமர்கிறார்கள். இயேசுவின் காலத்திலும் இதே " கூத்து" தான் நடந்தது. எனவேதான் இயேசு திருமண விருந்துக்கு வந்தவர்களிடம், " உங்களை யாராவது திருமண விருந்துக்கு அழைத்தால், முதன்மையான இடத்தைப் போய் பிடித்துக்கொள்ளாதீர்கள், ஒருவேளை உங்களை அழைத்த அவர், உங்களைவிடப் பெரியவர் ஒருவரை அழைத்திருக்கலாம், அத்தகைய நிலையில் அவர் உங்களிடம் வந்து, " இவருக்கு இந்த இடத்தைக் கொடுங்கள்" என்று சொன்னால் அது உங்களுக்கு அவமானமாக இருக்கும். மாறாக, உங்களை யாராவது திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், நீங்கள் போய் கடைசி இடத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களை விருந்துக்கு அழைத்தவர் உங்களிடம் வந்து, " ஏன் இங்கே அமர்ந்துவிட்டீர்கள், முதன்மையான இடத்திற்கு வாருங்கள்" என்று சொன்னால், அது எல்லாருக்கும் முன்பாக பெருமையாக இருக்கும்" என்று சொல்கின்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு, தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோரோ உயர்த்தப்படுவர்" என்கின்றார். இயேசு கூருகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று, யாராரெல்லாம் உள்ளத்தில் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் இருக்கிறார்களோ, அவர்கள் தாழ்த்தப் படுவார்கள் என்பதாகும். இரண்டு, யாராரெல்லாம் உள்ளத்தில் தாழ்ச்சியோடு இருக்கிறார்களோ, அவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பதாகும். தூய அகுஸ்தினார் ஒருமுறை இவ்வாறு குறிப்பட்டார், "ஆணவம் வானதூதரை (லூசிபரை) சாத்தானாக்கியது. மாறாக தாழ்ச்சியோ மனிதர்களை வானதூதர்கள் ஆக்கும்" என்று. நாம் தாழ்ச்சி நிறைந்த உள்ளதோடு வாழ்ந்து வானதூதர்கள் ஆகப்போகிறோமா? அல்லது இதற்கு மாறாகச் செயல்படப்போகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருச்சபை ஏழு தலையாய பாவங்களைப் பட்டியலிடும்போது, ஆணவம்தான் முதலாவது வருகின்றது. மற்றவை பின்வருபவை ஆகும்: கோபம், பேராசை, பொறாமை, பெருந்தீனி, கட்டுப்பாடற்ற பாலுணர்வு, சிலைவழிபாடு. எனவே, இத்தகைய கொடும்பாவத்தை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றுவது நல்லது. ஏனெனில் மேன்மையடைய தாழ்ச்சியே வழி.

ஆகவே, நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற ஆணவத்தை அகற்றி, தாழ்ச்சியைக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!