|
|
31 மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
5 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப்
பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9
அந்நாள்களில்
ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர்
"செங்கடல் சாலை" வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு
மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப்
பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து
கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான
இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர். உடனே
ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை
கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள்
மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும்
உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி
நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக
மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு
ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில்
இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார். அவ்வாறே
மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில்
பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப்
பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 102: 1-2. 15-17. 18-20 (பல்லவி: திபா 102:1)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!
1
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம்
வருவதாக!
2
நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது
செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில்
விரைவாய் எனக்குப் பதிலளியும்! - பல்லவி
15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர்
யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம்
மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின்
மன்றாட்டை அவமதியார். - பல்லவி
18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும்
மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர்
விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;
சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (யோவா 8: 28)
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, 'இருக்கிறவர் நானே' என்பதை
அறிந்துகொள்வீர்கள்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, "இருக்கிறவர் நானே' என்பதை
அறிந்துகொள்வீர்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30
அக்காலத்தில்
இயேசு பரிசேயர்களை நோக்கி, "நான் போனபின் நீங்கள் என்னைத்
தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது.
நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார். யூதர்கள், "நான்
போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது" என்று சொல்கிறாரே,
ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?" என்று
பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் கீழிருந்து
வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச்
சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.
ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம்
சொன்னேன். "இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் நம்பாவிடில்
நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.
அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம் கேட்டார்கள். அவர், "நான்
யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப்
பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால்
என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து
கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார். தந்தையைப்
பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், "நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு,
"இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை
கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து
கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர்
என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு
உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார். அவர் இவற்றைச்
சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எண்ணிக்கை 21: 4-9
"அடைக்கலம் தரும் திருச்சிலுவை"
நிகழ்வு
பழங்காலத்து இஸ்ரயேலில் "அடைக்கல நகர்கள்" என்று ஆறு நகர்கள்
இருந்தனவாம். இந்த ஆறு நகர்களுக்குள்ளும் அடைக்கலம் என்று
நுழைகின்ற ஒருவரை எப்படிப்பட்ட மனிதராலும் எதிரியாலும் ஒன்றுசெய்ய
முடியாதாம்.
இந்த ஆறு அடைக்கல நகர்களைப் பற்றிச் சொல்லப்படுகின்ற இன்னொரு
முக்கியமான செய்தி, இந்நகர்களுக்குச் செல்லக்கூடிய பாதைகள் எப்பொழுதும்
நல்ல முறையில் பராமரிக்கப்படுமாம். காரணம் அடைக்கலம் வேண்டி ஓடி
வருகின்ற ஒருவர், பாதை சரியாக இல்லாத பட்சத்தில் எதிரிகளிடம்
மாட்டிக்கொண்டுவிடுவார் என்பதாலேயே, இதற்கு இரபிகள் தனிக்கவனம்
எடுத்துக்கொண்டு பாதைகளைப் பராமரிப்பார்களாம்.
எப்படி அடைக்கல நகர்களைத் தேடி வருகின்ற ஒருவர் எதிரியிடமிருந்து
காப்பாற்றப்பட்டரோ, அப்படி பாவம் என்ற எதிரியிடமிருந்து நம்மைக்
காத்துக்கொண்டு, நமக்கு அடைக்கலமாக இருக்கின்றது திருச்சிலுவை.
ஆம், திருச்சிலுவையிடம் அல்லது திருச்சிலுவையில் அறையப்பட்டு,
மூன்றாம் உயிர்த்தெழுந்த இயேசுவிடம் அடைக்கலம் புகுவோர், அவரை
உற்றுநோக்குவோர் வாழ்வினைப் பெற்றுக்கொள்வர் என்பது உறுதி. இன்றைய
முதல் வாசகத்தில் திருச்சிலுவையின் "முன்னோடியாக" இருக்கும்
வெண்கலப் பாம்பைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தல்
எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், இஸ்ரயேல்
மக்கள், ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகவேண்டிய நிலை ஏற்பட்டதால்,
பொறுமையிழந்து, "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து
கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவும் இல்லை தண்ணீரும் இல்லை" என்று
ஆண்டவருக்கும் அவருடைய அடியாருமான மோசேக்கும் எதிராக
முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து, அடைந்த துரயங்களைச்
சொல்லி மாளாது. அப்படிப்பட்ட நிலையில் இருந்த இஸ்ரயேல் மக்கள்மீது
ஆண்டவராகிய கடவுள் பரிவுகொண்டு, அவர்களை மீட்டு பாலும் தேனும்
பொழியக்கூடிய கானான் நாட்டை நோக்கி அழைத்துச் சென்றார்.
வழியில் அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் உணவு சரியில்லை... தண்ணீர்
கிடைக்கவில்லை என்று ஆண்டவருக்கு எதிராக முணுமுணுக்கின்றார்கள்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய செய்தி, ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு
அளிக்கவிருந்த கானான் நாட்டை மறந்துவிட்டு, வெறும் உணவுக்காக
அவர்கள் முணுமுணுத்ததுதான்.
பல நேரங்களில் நாமும்கூட இந்த இஸ்ரயேல் மக்களைப் போன்று அற்பப்
பொருள்களுக்காக சண்டைபோட்டு, வாழ்வைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். இது மிகவும் கசப்பான உண்மை. இஸ்ரயேல்
மக்கள் அத்தனை நாள்களும் ஆண்டவர் தங்களுக்குச் செய்த உதவியை
மறந்து, அவருக்கு எதிராக முணுமுணுத்ததால், ஆண்டவர் அவர்கள் நடுவில்
கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி, அவர்களைத் தண்டிக்கின்றார்.
அடைக்கலம் தரும் ஆண்டவரின் திருச்சிலுவை
மக்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கடிக்கப்பட்டு, இறந்துபோனதைத்
தொடர்ந்து, மோசே, ஆண்டவரிடம் மக்களுக்காகப் பரிந்து பேச, ஆண்டவர்
அவரிடம் வெண்கலப் பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்தச்
சொல்லி, அதைப் பார்க்கும் மனிதன் உயிர் பிழைப்பான் என்கின்றார்.
மோசேயும் அவ்வாறே செய்ய கொள்ளிவாய்ப் பாம்புகளால் கடிபட்டோர்
உயிர் பிழைக்கின்றார்கள்.
இந்த நிகழ்வைக் குறித்துப் பின்னாளில் இயேசு பேசுகின்றபொழுது
(யோவா 3: 14ff), "பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது
போல, மானிடமகனும் உயிர்த்தப்படவேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை
கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" என்று கூறுவார். ஆம்,
நமக்கு அடைக்கலமும் நிலவாழ்வினையும் தரும் திருச்சிலுவையின்
மீது அறையப்பட்டு, மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின்
மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அது மிகவும் இன்றியமையாத செயலாக
இருக்கின்றது.
இன்றைக்குப் பலர் ஆண்டவர் செய்த நன்மைகளை மறந்துவிட்டு, அவரிடம்
நம்பிக்கை இல்லாமலேயே இருக்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் இறைவன்
தருகின்ற வாழ்வினை இழந்து நிற்கின்றார்கள். ஆகையால், நாம் இயேசுவின்
நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த மக்களாக வாழ முற்படுவோம்.
சிந்தனை
"நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்
பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன்" (கலா 6: 14) என்பார்
புனித பவுல். ஆம், இயேசுவின் சிலுவையே நாம் பெருமை பாராட்டக்கூடிய
ஒன்றாக இருக்கின்றது. காரணம், அதுதான் நமக்கு அடைக்கலமும் எல்லாமுமாக
இருக்கின்றது. ஆகையால், சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்த ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 8: 21-30
நம்பாவிட்டால் பாவிகளாகவே சாவீர்கள்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள்
ஆஸ்திரேலியா சென்றார்கள். அங்கு அவர்கள் ஒரு வித்தியாசமான உயிரினத்தைக்
கண்டார்கள். வாத்தைப் போன்று இருந்த அந்த உயிரினம்
முட்டையிட்டும், அதேநேரத்தில் பாலூட்டியாகவும் இருந்தது.
இந்த அரியவகை உயிரினத்தைப் பார்த்த இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்
மிகவும் வியந்து நின்றார்கள். இதை அவர்கள் தங்களுடைய
நாட்டிற்குச் திரும்பிச் சென்று, அங்கிருந்த மக்களிடம் சொன்னபோது,
யாரும் நம்பவில்லை; மாறாக, "அது எப்படி ஓர் உயிரினம் முட்டை இட்டு,
பாலும் ஊட்டும்" என்று நகைத்தார்கள்.
இது நடந்து சில மாதங்கள் கழித்து, மீண்டுமாக அந்த இங்கிலாந்து
நாட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியா சென்றார்கள். இந்த
முறையும் அவர்கள் முன்பு கண்ட அந்த அரியவகை உயிரினத்தைக் கண்டார்கள்.
இது குறித்து அவர்கள் தங்களுடைய நாட்டில் உள்ள மக்களிடம் சொல்லவேண்டும்
என்பதற்காக அந்த உயிரினத்தின் உடலிலிருந்து விழுந்த ஓர் இறகை
எடுத்து வைத்துக்கொண்டார்கள். ஆஸ்திரேலியாவில் வந்த வேலை
முடிந்ததும், தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று,
அங்கிருந்தவர்களிடம் அந்த அரியவகை உயிரினத்தின் உடலிலிருந்து
விழுந்த இறகைக் காட்டி, அது குறித்துப் பேசினார்கள். அப்பொழுதும்கூட
அந்த மக்கள் அவர்கள் சொன்னதை நம்பவேவில்லை. இதை நினைத்து ஆராய்ச்சியாளர்கள்
மிகவும் நொந்துகொண்டார்கள்.
ஆம், சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எதையும் நம்புவதே
கிடையாது. இப்படிப்பட்டவர்கள் நிலை மிகவும் பரிதாபமானது என்பதைத்
தவிர வேறு என்ன சொல்லமுடியும்! நற்செய்தியில் இயேசுவுக்கும்
அவரை நம்பாத பரிசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கின்றது.
அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாத பரிசேயர்கள்
நற்செய்தி இயேசு, "நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள்.
நான் போகுமிடத்திற்கு உங்களால் வர முடியாது..." என்கின்றார்.
இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்ட பரிசேயர்கள், "...ஒருவேளை தற்கொலை
செய்துகொள்ளப்போகிறாரோ" என்று பேசுகின்றார்கள். இயேசு அவர்களிடத்தில்
சொன்னதை அவர்கள் புரிந்திருப்பார்களா என்பது மிகப்பெரிய
கேள்விகுறிதான். ஏனென்றால், அவர்கள் இயேசு சொன்னதைக்
காதுகொடுத்துக் கேட்கவில்லை. புனித பவுல் உரோமையருக்கு எழுதிய
மடலில் இவ்வாறு சொல்வார்: "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை
உண்டாகும்." (உரோ 10: 17). இயேசு அறிவித்த வார்த்தைகளைப் பரிசேயர்கள்
செவிகொடுத்துக் கேட்கவே இல்லை. அதனாலேயே அவர்களுக்கு இயேசுவின்மீது
நம்பிக்கை ஏற்படாமல், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இயேசுவை நம்பாவிட்டால் பாவிகளாகவே சாகவேண்டும்
பரிசேயர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனதால், அவர்கள்
பாவிகளாகவே சாகவேண்டும் என்று இயேசு கூறுகின்றார். இயேசுவை நம்பாவிட்டால்
பாவிகளாகத் தான் சாகவேண்டுமா? என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆம்,
இயேசு வாழ்வின் ஊற்றாக இருந்தார் (யோவா 5:26); அவருடைய
வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுப்பனவாக இருந்தன. அப்படியிருக்கின்ற
பட்சத்தையும் அவரையும் அவருடைய வார்த்தைகளையும் நம்பாமல் போகிறபொழுது
நாம் பாவிகளாகத்தானே சாகவேண்டும்! இதைத்தான் இயேசு பரிசேயர்களைப்
பார்த்துக் கூறுகின்றார். அப்படியானால் இயேசு தருகின்ற
வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு
வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கும் அதன்மூலம் அவர் தருகின்ற
வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கும் எவையெல்லாம் தடையாக இருக்கின்றன
என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு
பரிசேயர்களைப் பார்த்து, "நீங்கள் கீழிலிருந்து வந்தவர்கள்;
நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்" என்று குறிப்பிடுவார். ஆம்,
நம்முடைய ஊனியல்புகள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவரிடத்தில் நம்பிக்கை
கொள்ளவும் தடைகளாக இருக்கின்றன. இதைத்தான் புனித பவுல்
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், "மனித இயல்பை உடைய
ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை" (1கொரி
2: 14) என்று கூறுகின்றார்.
ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற ஊனியல்புகளைக் களையவேண்டும்.
அது மட்டுமல்லாமல், ஆண்டவர் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் அவர் தருகின்ற வாழ்வைப் பெற முடியும். இயேசுவின்
நம்பிக்கை கொண்டு வாழத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்"
(யோவா 3:15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவிடம்
நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|