|
|
28 மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 4 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல்
இருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20
"ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன்.
பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக்
கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள்
எனக்கு எதிராய், "மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின்
நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்"
என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.
படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும்
இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை
நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: திபா 7:1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
1
என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத்
துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2
இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக்
கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். - பல்லவி
8b
ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9
பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை
நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்;
நீதி அருளும் கடவுள். - பல்லவி
10
கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11
கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப்
பொறுத்துக்கொள்ளாத இறைவன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 8: 15)
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன
உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53
அக்காலத்தில்
யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்டு, "வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.
வேறு சிலர், "மெசியா இவரே" என்றனர். மற்றும் சிலர்,
"கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும்
அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா
மறைநூல் கூறுகிறது?" என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே
பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால்
யாரும் அவரைத் தொடவில்லை.
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள்
அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், "ஏன்
அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?" என்று கேட்டார்கள். காவலர்
மறுமொழியாக, "அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர்.
பரிசேயர் அவர்களைப் பார்த்து, "நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்"
என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு
ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், "ஒருவரது
வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத்
தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, "நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி
ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர்
யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்" என்றார்கள். அவர்கள்
ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 11: 18-20
"வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்"
சிந்தனை
பெருநகரத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ஒருநாள் தன் சொந்த ஊருக்கு
வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தான் பிறந்த மண்ணில்
கால் வைத்ததும், அவருடைய உள்ளத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
வீட்டில் ஓரிரு நாள்கள் இருந்த அவர், தன்னுடைய பால்ய நண்பனின்
நினைவு வந்ததும், அவனுடைய வீட்டிற்குப் போகத் திட்டமிட்டார்.
அவரது பால்ய நண்பன் உயிரோடு இல்லாவிட்டாலும், அவனுடைய வீட்டில்
உள்ளவர்களிடம் பேசிவிட்டு வரலாம் என்று அவர் அவனுடைய
வீட்டிற்குச் சென்றார். அங்கு நண்பனின் மகன் அவரை நல்லமுறையில்
கவனித்து, விருந்து உபசரித்தான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையிலேயே பெரியவர் நண்பனின் மகனிடம்,
"தம்பி! உன்னுடைய வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது?"
என்றார். உடனே அவன், "அதை ஏன் கேட்கிறீர்கள்...! என்னுடைய
வாழ்க்கை பெரிய போராட்டமாக இருக்கின்றது!" என்று வருத்தத்தோடு
சொன்னான். "உன்னுடைய தந்தைதான் உனது தேவைக்கு மிகுதியாகச்
சொத்துச் சேர்த்து வைத்திருக்கின்றாரே...! பிறகு எதற்கு இவ்வளவு
விரக்தியாகப் பேசுகின்றாய்...?" என்று பெரியவர் கேட்டதற்கு அவன்,
"பணம் இருந்தால் மட்டும் நிம்மதி கிடைத்துவிடுமா...?" என்றான்.
"அப்படியா தம்பி! நாளைய நாளில் உன்னைப் பிரச்சனையே இல்லாத ஓர்
இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போகிறேன்... அங்கு நீ இருந்தால்
உனக்குப் பிரச்சனையே இருக்காது" என்றார் பெரியவர். அவனும் அதற்குச்
சரியென்று சொல்லிவிட்டு, மறுநாள் காலை, பெரியவர்
கூட்டிக்கொண்டு போன இடத்திற்குப் போனான்.
அவர் கூட்டிக்கொண்டு போன இடமோ, ஊருக்கு வெளியே இருந்த கல்லறைத்தோட்டம்.
அதைப் பார்த்துவிட்டு அவன் பெரியவரிடம், "என்னப்பா! பிரச்சனையே
இல்லாத இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறேன் என்று
சொல்லிவிட்டு, இப்படிக் கல்லறைத்தோட்டத்திற்குக்
கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றீர்களே!" என்று ஏமாற்றத்தோடு
கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், "இந்த இடம்தான் பிரச்சனையே
இல்லாத இடம்... இங்கிருக்கின்ற கல்லறைகளில் இருக்கின்றவர்கள்தான்
பிரச்சனை இல்லாத மனிதர்கள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டுப்
பெரியவர் தொடர்ந்து அவனிடம் பேசினார்: "மனிதராகப் பிறந்தால் பிரச்சனை
இருந்துகொண்டுதான் இருக்கும். நீ ஆண்டவர்மீது உன்னுடைய நம்பிக்கையை
வைத்து வாழ்ந்தாய் எனில், உன்னுடைய பிரச்சனைகளெல்லாம் பறந்து
போய்விடும்." பெரியவர் இவ்வாறு சொன்னத்தில் இருந்த உண்மையை உணர்ந்தவாய்
அவன் மனநிம்மதி அடைந்தான்.
ஆம். யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவது போல், உலகில் நமக்குத்
துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனினும் இயேசு உலகை
வெற்றிக்கொண்டுவிட்டார் என்று துணிவோடு இருந்தால், நம்முடைய
வாழ்வில் வரும் எப்படிப்பட்ட சவாலையும் துணிவோடு எதிர்கொள்ளலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, மக்கள் தனக்கெதிராகச்
சூழ்ச்சி செய்வதைக் குறித்து, ஆண்டவரிடம் வேதனையோடு தனது மனக்குமுறலை
எடுத்துக் கூறுகின்றார். ஆண்டவர் அவருடைய மனக்குமுறலுக்கு எப்படிப்
பதிலளித்தார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
எரேமியாவிற்கு எதிராக மக்கள் சூழ்ச்சி செய்தல்
எருசலேமை ஆண்டுவந்த யோசியா மன்னன் தன்னுடைய ஆட்சியின் பதினெட்டாம்
ஆண்டில் எருசலேம் திருக்கோயிலைப் பழுது பார்க்கத் தொடங்கியபொழுது,
திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தான் (2 அர 22). இதைக்கொண்டு அவன்
சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினான். குறிப்பாக பிற தெய்வ
வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்தெறிந்தான். இதற்கு உறுதுணையாக இருந்தவர்
இறைவாக்கினர் எரேமியா. எனவே, மக்களுடைய சினம் இறைவாக்கினர் எரேமியாவின்
பக்கம் திரும்புகின்றது. அவர்கள் எரேமியாவை முன்னிட்டு,
"மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை
அகற்றிவிடுவோம்" என்று பேசிக்கொள்கின்றார்கள். இதைத் தொடர்ந்துதான்
இறைவாக்கினர் எரேமியா தன்னுடைய வேதனையை, வழக்கை ஆண்டவரிடம் எடுத்துக்கூறுகின்றார்.
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று
இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள், அவருடைய
தலைமுறையே மண்ணில் இருக்காத வண்ணம் கூண்டோடு அழிக்க நினைத்தார்கள்;
ஆனால், ஆண்டவரோ அவரை மூலைக்கல்லாக (திபா 118: 22)
மாற்றுகின்றார். இது இறைவாக்கினர் எரேமியாவிற்கு மட்டுமல்ல,
இறைவழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் பொருந்தும். இறைவழியில்
நடக்கக்கூடியவர்களைக் கயவர்கள் இந்த உலகத்தை விட்டு
அகற்றவேண்டும் என்று நினைக்கலாம்; ஆனால், ஆண்டவர் தம்
அடியார்களை மங்காப் புகழோடு வாழச் செய்திடுவார். அதுதான்
ஆண்டவர் தன்னுடைய அடியார்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய
கொடையாகும்.
ஆகையால், நாம் இறைவழியில் நடக்கின்ற பொழுது பிரச்சனைகளும்
எதிர்ப்புகளும் வருகின்றனவே என எண்ணாமல், ஆண்டவர்மீது
நம்பிக்கை வைத்து, தொடர்ந்து முன்னேறிச் சென்று, அவருடைய
அன்புக்குரிய மக்களாவோம்.
சிந்தனை
"சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" (திபா 23:
4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால் நாம் ஆண்டவர்
நம்மோடு இருக்கின்றார் என்ற உறுதியான நம்பிக்கையோடு வாழ்வில்
எதிர்வரும் இடர்களையும் சவால்களையும் துணிவுடன் எதிர்த்து
நின்று, எப்பொழுதும் ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 7: 40-53
இயேசுவைப் போன்று எவரும் என்றுமே பேசியதில்லை
நிகழ்வு
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று கிறிஸ்தவப் பெரியவர் ஒருவர்
வேலை நிமித்தமாக சிற்றூரிலிருந்து நகரத்திற்குச்
சென்றிருந்தார். வந்த வேலை முடிந்ததும், அவர் பக்கத்தில்
இருந்த ஒரு கோயிலுக்குச் சென்றார். அவர் கோயிலுக்கு உள்ளே
சென்றபோதுதான் திருப்பலி தொடங்கியிருந்தது. அதனால் அவர்
திருப்பலி முடிந்ததும் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்
என்று திருப்பலியில் கலந்துகொண்டார்.
மறையுரை நேரத்தில் குருவானவர் குரலை உயர்த்தி உயர்த்திப்
பேசினார். அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக்
கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவர். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்
சொல்வார்... அதை அப்படியே வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லலாம்
என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவருக்கு
கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
திருப்பலி முடிந்ததும் பெரியவருக்குப் பக்கத்தில்
அமர்ந்திருந்த இன்னொருவர் அவரிடம், "ஐயா! திருப்பலியில்
குருவானவரின் மறையுரை எப்படி இருந்தது?" என்று கேட்டார்.
அதற்குப் பெரியவர், "இடி இடித்தது; மின்னல் வெட்டியது;
காற்றுகூட அடித்தது; ஆனால் மழை மட்டும் கடைசி வரைக்கும்
பெய்யவே இல்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச்
சென்றுவிட்டார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்குப்
பலருடைய உரைகள் உரைகளாகவே இல்லை என்பதுதான் வேதனை கடந்த உண்மை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தியில், தலைமைக்
குருக்கள், பரிசேயார்களால் இயேசுவைப் பிடித்து வர அனுப்பப்பட்ட
காவலர்கள் இயேசுவைப் பற்றிச் சொல்லக்கூடிய "அவரைப் போல எவரும்
என்றுமே பேசியதில்லை" என்ற வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு
உரியனவாக இருக்கின்றன. இந்த வார்த்தைகளைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு குறித்து மக்கள் நடுவில் பிளவு ஏற்படல்
இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகத்தின்
தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசு,
"எனக்குத் தந்தையைத் தெரியும். நான் அவரிடமிருந்தே
வருகின்றேன்" என்று சொன்ன வார்த்தைகள் யூதர்கள் நடுவில்
அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. அதனால் ஒருசிலர் "வரவேண்டிய
இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றும் (இச 18: 15-18) "மெசியா
இவரே" என்றும் (மீக் 5:2) பேசிக்கொள்கின்றார்கள். இன்னும்
சிலர், "கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்...?" என்றும்
(நற்செய்தியில் இறுதியில் கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர்
யாரும் தோன்றியதில்லை என்றும்) பேசிக்கொள்கின்றார்கள்.
மக்கள் இயேசுவைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டது, நமக்கு முன்
ஒருசில உண்மைகளை எடுத்து வைக்கின்றன. அவை என்னவெனில், இயேசு
யூதர்கள் பேசிக்கொண்டதுபோல் கலிலேயாவிலிருந்து அல்ல, தாவீதின்
ஊரான பெத்லகேமிலிருந்து வந்தார் (லூக் 2: 4-11). அடுத்ததாக,
இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்காகவும்
பேரொளியாய் வந்தார் (எசா 9: 1-2). நிறைவாக, கலிலேயாவிலிருந்து
அல்லது நாசரேத்திலிருந்து மெசியா- நல்லது எதுவும் வருமா? என்ற
பேச்சு மக்கள் நடுவில் இருந்தது (யோவா 1:46). ஆனால்,
இறைவாக்கினர் யோனாவும் (2 அர 14: 25), இறைவாக்கினர் எலியாவும்
(1 அர 17: 1) கலிலேயாவைச் சார்ந்தவர்கள் என்பது உண்மையாக
இருந்து. இவ்வாறு இருக்க, எந்த உண்மையையும் முழுமையாகத்
தெரிந்துகொள்ளாமல், யூதர்கள் பேசியது வேடிக்கையாக
இருக்கின்றது. இதுவே அவர்கள் நடுவில் பிளவு ஏற்படக் காரணமாக
அமைந்துவிடுகின்றது.
இச்செய்தி அதிகாரத்திலிருந்த தலைமைக் குருக்களும்
பரிசேயர்களுக்கும் தெரியவர, அவர்கள் இயேசுவைப் பிடித்து வர
காவலர்களை அனுப்பி வைக்கின்றார்கள்.
இயேசுவின் வல்லமை நிரந்த பேச்சு
இயேசுவைப் பிடித்துவர தலைமைக் குருக்களும் பரிசேயர்களும்
அனுப்பி வைத்த காவலர்களால் இயேசுவைப் பிடிக்க முடியவில்லை.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "அவரைப் போல எவரும் என்றுமே
பேசியதில்லை" என்பதாகும். ஆம், இயேசு தூய ஆவியாரின் வல்லமையால்
ஆட்கொள்ளப்பட்டவராய், அதிகாரத்தோடு பேசினார் (மத் 7:29).
அதனால்தான் அவருடைய பேச்சைக் கேட்டு மலைத்துப் போன, காவலர்கள்
தங்களை அனுப்பி வைத்தவர்களிடம், அவரைப் போல எவரும் என்று
பேசியதில்லை என்கின்றார்.
இயேசு, யூதர்கள் நினைத்தது போன்று கலிலேயாவிலிருந்து வரவில்லை.
தந்தையிடமிருந்து வந்தார். அதனாலேயே அவருடைய பேச்சு
எல்லாராலும் வியக்கத் தக்கதாக இருந்தது. இந்த உண்மையை
உணர்ந்தவர்களாய் நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து,
அவருடைய வாழ்வுதரும் வார்த்தைகளின் படி வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"நான் கூறும் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன"
(யோவா 6: 63) என்பார் இயேசு. ஆகையால், நாம் நமக்கு வாழ்வு
தரும் ஆவியைக் கொடுக்கின்ற இயேசுவின் வார்த்தைகளை நம்பி
ஏற்றுக்கொண்டு, அவற்றின் படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|