|
|
27 மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 4 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22
இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு
சொல்லிக்கொண்டார்கள்: "நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்;
ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை
எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக்
கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.
கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்;
ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.
அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப்
பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர்
வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை.
இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற
பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச்
செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக்
கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.
அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு
என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால்,
அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை
விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும்,
வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம்.
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள்
வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.
இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள்.
அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.
அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய
வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப்
பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: திபா 34:18a)
=================================================================================
பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர்,
அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை
அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி
18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த
நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும்
ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி
20
அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள்
ஒன்றும் முறிபடாது.
22
ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்
புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 4b)
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்
வாழ்வர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும்
வரவில்லை.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-2, 10, 25-30
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி
தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள்
திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர்
வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார். எருசலேம் நகரத்தவர் சிலர்,
"இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப்
பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே!
ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து
கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது
யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார்
என்பது நமக்குத் தெரியுமே" என்று பேசிக்கொண்டனர். ஆகவே
கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில்,
"நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத்
தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர்.
அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து
வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும்
அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
சாலமோனின் ஞானம் 2: 1a, 12-22
"நீதிமான்களைத் தாக்கப் பதுங்கி இருப்போம்"
நிகழ்வு
ஸ்பெயின் நாட்டில் குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் யாருக்கு
அஞ்சாமல் ஆண்டவரின் வார்த்தையை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.
இதற்கிடையில் அந்நாட்டில் உள்ளாட்டுப் போர் வெடித்தது. அதில்
கலகக்காரர்கள் குருவானவரைப் பிடித்துக் கொடூரமாகச் சித்திரவதை
செய்து, அவருடைய இரண்டு கைகளை இறுகக் கட்டி, தூக்கில் போட இழுத்துச்
சென்றார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், "நீங்கள் என்னைத்
தூக்கில் போடுங்கள், பரவாயில்லை. அதற்கு முன்னதாக என்னுடைய கைகளில்
கட்டப்பட்டிருக்கின்ற கயிற்றை அவிழ்த்துவிடுங்கள். நான் உங்களுக்கு
ஆசி வழங்கவேண்டும்" என்றார்.
இதைக் கேட்டுக் கடுப்பான அங்கிருந்த கலகக்கார்களில் ஒருவன் வேகமாக
ஓடிவந்து, "இப்பொழுது நான் உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப்போகிறேன்.
அப்பொழுது நீ என்ன செய்கின்றாய் என்று பார்க்கின்றேன்" என்று
சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த வாளை எடுத்து, அவருடைய இரண்டு கைகளையும்
வெட்டினான். வெட்டப்பட்ட குருவானவரின் இரண்டு கைகளோ ஓர் ஓராமாய்ப்
போய் விழுந்தன. அப்படியிருந்த நிலையிலும் அவர் அங்கிருந்தவர்களுக்கு
ஆசி வழங்கினார்.
இதற்குப் பின்பு கலகக்காரர்கள் அவரைத் தூக்கில் போட்டார்கள்.
அவரோ வெட்டப்பட்ட தன்னுடைய இரண்டு கைளையும் மேலே தூக்கியவாறு
அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டே உயிர்துறந்தார்.
ஒரு நீதிமானாய், கடவுளின் அன்புப் பிள்ளையாய், இயேசுவைப்
போன்று தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு ஆசி வழங்கக்கூடியவராய்
விளங்கிய இந்தக் குருவானவருக்கு நேர்ந்த நிலை போன்று, எத்தனையோ
குருக்களுக்கும் இறையடியார்களுக்கும் இறைவழியில் நடக்கக்கூடியவர்களுக்கும்
கொடுமைகளும் தாக்குதல்களும் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய முதல் வாசகம் இறையடியார்களுக்கு எதிராக இறைநம்பிக்கையில்லாதவர்கள்
எப்படிச் சூழ்ச்சி செய்கின்றார்கள் என்பதைக் குறித்து எடுத்துச்
சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்த்துவிட்டு, இறையடியார்களாக வாழ்வது எப்படி என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நீதிமான்களின் வாழ்க்கை
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
இறைப்பற்றில்லாதவர்கள், இறைவன்மீது பற்றுக்கொண்டவர்களை
வீழ்த்துவதற்கு எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கின்றார்கள் என்பதைக்
குறித்து வாசிக்கின்றோம்.
நீதிமான்கள் தங்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றார்கள்
என்றும் தங்களுடைய செயல்களை அவர்கள் எதிர்க்கின்றார்கள் என்றும்
நற்பயிற்சியை மீறிய குற்றங்களைத் தங்கள்மீது சுமத்துகிறார்கள்
என்றும் இறைப்பற்றில்லாதவர்கள் சொல்லிக்கொண்டு, நீதிமான்களை
வீழ்த்துவதற்காகத் திட்டம் தீட்டுகின்றார்கள். இங்கு குறிப்பிடப்படும்
"நீதிமான்கள்" என்பதை இறைவாக்கினர்களோடும் அதிலும் குறிப்பாக
இயேசுவோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும்
பொருளுள்ளதாக இருக்கும். ஆம், இயேசு செய்த ஒவ்வொரு செயலும் அதிகார
வர்க்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இன்னும்
சொல்லப்போனால், இயேசு எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்துவந்தவர்களை
விரட்டியடித்த நிகழ்வு அதிகார வர்கத்திற்கு பெரிய சாட்டையாகவே
இருந்திருக்கும். இதனாலேயே அவர்கள் இயேசுவைக் கொல்லத்
துணிகிறார்கள்.
கடவுளின் பிள்ளைகளாகும் நீதிமான்கள்
இறைப்பற்றில்லாதவர்கள், நீதிமான்களை நோக்கி வைக்கக்கூடிய இன்னொரு
குற்றச்சாட்டு, "அவர்கள் கடவுளைத் தங்கள் தந்தை என்றும் தாங்கள்
அவருடைய மக்கள் என்றும் சொல்லிக்கொள்கின்றார்கள்" என்பதாகும்.
இது அப்படியே இயேசுவோடு பொருந்திப்போவதாக இருக்கின்றது.
ஆம், இயேசுவைக் குறித்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள்
முன்வைத்த குற்றச்சாற்று, "இவன் கடவுளைப் பழிக்கின்றான்" (மத்
26: 65) என்பாகும். இயேசு தன்னை இறைமகன் என்றார். (இறைமகன் என்பதை
இறைமகன் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை!).
இதைப் பிடிக்காத, புரிந்துகொள்ள இயலாத பரிசேயர்கள், இயேசு இறைவனை
பழித்துரைக்கின்றான் என்று சொல்லி அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
நீதிமான்களுக்குக் கைம்மாறு தரும் ஆண்டவர்
இறைப்பற்றில்லாதவர்களால் நீதிமாங்களுக்குத் துன்பம் இருந்தாலும்,
ஆறுதலான செய்தி ஒன்று இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் சொல்லப்படுகின்றது.
அதுதான் தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்பதாகும். இறைப்பற்றில்லாதவர்களால்
இறைவழியில் நடக்கின்றவர்களுக்குத் தொடர்ந்து துன்பம் வந்தாலும்,
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து ஒருவர் தூய வழியில் நடந்தால்,
அதற்கான கைம்மாறு கிடைக்கும் என்பது உறுதி.
ஆகையால், நாம் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் இறைவனுக்கு உகந்த
நேரிய வழியில் நடப்போம். அதன்வழியாக அவருடைய அன்பு மக்களாவோம்.
சிந்தனை
"நீதி வெள்ளமெனப் பாய்ந்து வருக! நேர்மை வற்றாத ஆறாகப்
பாய்ந்து வருக" (ஆமோ 5: 24) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால்,
நாம் கடவுளுக்கு மிகவும் விருப்பமான நீதியையும் நேர்மையையும்
நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 7: 1,2,10, 25-30
தெரியாததைத் தெரிந்தவர்கள் போல்
காட்டிக்கொள்ளும் மனிதர்கள்
நிகழ்வு
ஒருமுறை மிகப்பெரிய அறிஞரான பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக்
கூட்டத்திற்குச் சென்றார். அப்படிச் செல்லும்பொழுது தன்னுடைய
பேரனையும் தன்னோடு அவர் கூட்டிச் சென்றார்.
இலக்கியக் கூட்டத்தில் பேசியவர் பிரஞ்சு மொழியில் பேசினார். பிரஞ்சு
மொழி பெஞ்சமின் பிராங்கிளினுக்கு கொஞ்சம்கூடத் தெரியாது. இருந்தாலும்
அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அதே கூட்டத்தில் இருந்த, தனக்கு
மிகவும் அறிமுகமான பெளலர் என்ற பெண்மணி கையைத் தட்டியபோதெல்லாம்,
அவரைப் பார்த்து இவரும் கையைத் தட்டினார்.
இலக்கியக் கூட்டம் முடிந்து பெஞ்சமின் பிராங்கிளினும் அவருடைய
பேரனும் வெளியே வந்தார்கள். பேரனுக்கு பிரஞ்சு மொழி நன்றாகத்
தெரியும். அதனால் அவன் பெஞ்சமின் பிராங்கிளினிடம், "தாத்தா!
கூட்டத்தில் பேசியவர் உங்களைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஏன்
மற்றவர்களை விட நீங்கள் சத்தமாகக் கைகளைத் தட்டினீர்கள்...?"
என்று கேட்டான். அவரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்பொழுதுதான் அவர், தெரியாததைத் தெரிந்துபோல் காட்டிக்கொள்வது
எவ்வளவு பெரிய முட்டாள்தான் என்று நொந்துகொண்டார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வருகின்ற பெஞ்சமின் பிராங்கிளினைப்
போன்று, இன்றைக்கும்கூட பலர் தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல்
காட்டிக்கொள்வதைக் காணமுடிகின்றது. இது உண்மையிலேயே மிகப்பெரிய
அபத்தம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நற்செய்தி வாசகத்தில்
எருசலேம் நகரத்தவர் சிலர் இயேசுவைப் பற்றி எதுவும் தெரியாமல்,
அவரைத் தெரிந்தது போல் பேசிக்கொள்கின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு சொல்லும் பதில் என்னவாக
இருக்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
கூடார விழாவிற்குச் செல்லும் இயேசு
நற்செய்தியில் இயேசு எருசலேமில் நிகழவிருந்த கூடார
விழாவிற்குச் செல்வதாக வாசிக்கின்றோம். யூதர்கள் கொண்டாடிய
கூடார விழாவானது, பாஸ்கா விழாவிற்கு ஆறு மாதங்கள் கழித்து
வரும். இவ்விழா செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில்
கொண்டாடப்படும். இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து
வாக்களிப்பட்ட கானான் நாட்டிற்குக் கடந்து வந்தபொழுது,
கூடாரங்களில் வாழ்ந்தார்கள் (லேவி 23:43) என்பதை நினைவுகூரும்
வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா நேரத்தில் மக்கள்
அறுவடையை எல்லாம் முடித்துவிட்டு, எருசலேமிற்கு வந்து
சேர்வார்கள். எனவே, எருசலேமில் கூட்டம் மிகுதியாக இருக்கும்.
இப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு எருசலேமிற்கு வருகின்றார்;
ஆனால், மறைவாய் வருகின்றார்.
இயேசுவைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பேசும் மக்கள்
அண்மையில் நிகழவிருந்த கூடார விழாவிற்கு வரும் இயேசு,
வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்த பார்த்துவிட்டு, எருசலேம்
நகரத்தவர் சிலர், "...ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள்
உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ...? ஆனால் மெசியா வருவது
யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து
வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே!" என்று
பேசிக்கொள்கின்றார்கள்.
எருசலேம் நகரத்தவர் இவ்வாறு பேசிக்கொள்வதில் இரண்டு செய்திகள்
இருக்கின்றன. ஒன்று, மெசியா எங்கிருந்து வருவார் என்பது
யாருக்கும் தெரியாது என்பதாகும். யூதர்கள் நடுவில், மெசியா
வருவது யாருக்கும் தெரியாமல் என்ற ஒரு கருத்து இருந்தது.
இதற்கான குறிப்புகளை திருஅவையால் அங்கீகரிக்கப்படாத முதல்
ஏனோக்கு நூல் (1 ஏனோ 48: 6) மற்றும் நான்காம் எஸ்ரா நூலில் (4
எஸ் 1:33ff) காணலாம். இதனாலேயே எருசலேம் நகரத்தவர் மெசியா
எங்கிருந்து வருவார் என யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்
என்று பேசிக்கொள்கின்றார்.
எருசலேம் நகரத்தவர் பேசிக்கொண்டதில் இருக்கும் இரண்டாவது
செய்தி, இவர்கள் இயேசுவைப் பற்றி முழுமையாகத்
தெரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டதாகும். இவர்கள் இயேசுவைக்
கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சார்ந்தவராக மட்டுமே
அறிந்திருந்தார்கள். இயேசு தாவீதின் ஊரான பெத்லகேமில்
பிறந்தவர் என்பதையும், அவர் தந்தையிடமிருந்து வந்தவர்
என்பதையும் அறியாதிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் இயேசு,
நான் தந்தையிடமிருந்து வந்தவன் என்று கூறுகின்றார்.
தந்தையிடமிருந்து வந்த இயேசு
எருசலேம் நகரத்தவர் அறியாமையில் பேசியபொழுது, இயேசு
அவர்களிடம், தான் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன குறித்து
விளக்கமளிக்கின்றார். இதைக் கேட்ட அவர்கள் உண்மையை
ஏற்றுக்கொள்ள விரும்பாமல், பிடிக்க முயல்கின்றார்கள். பலர்
நேரங்களில் நாமும் இந்த மக்களைப் போன்று உண்மையை அறியாமல்,
அறிந்தவர்களைப் போன்று காட்டிக்கொள்கின்றோம். இது மிகப்பெரிய
அபத்தம் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆகவே, நாம் உண்மையை, இறைவனை, இயேசுவை அறிந்துகொள்வதற்குத் தூய
ஆவியார் நமக்கு வழிகாட்ட அவரிடத்தில் வேண்டுவோம். உண்மையை,
இயேசுவை அறிந்தபின் அவர் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"ஆண்டவரே! ஒளியை நோக்கி வழிநடத்தியருளும்" என்று வேண்டினார்
புனித ஜான் ஹென்றி நியூமன். நாமும் இறைவனிடம் அவ்வாறே வேண்டி,
ஞானி ஒளி பெற்று, இயேசுவை அறிந்து, அவர் வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|