|
|
26 மார்ச் 2020 |
|
|
தவக்காலம் 4 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும்
எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:
7-14
அந்நாள்களில்
சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப்
போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக்
கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து
இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை
வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு,
"இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள்
இவையே" என்று கூறிக்கொள்கிறார்கள்" என்றார். மேலும் ஆண்டவர்
மோசேயிடம், "இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள
மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல்
மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ
பேரினமாக்குவேன்" என்றார்.
அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே,
மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து
நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம்
மூள்வது ஏன்? "மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து
அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக்
கூட்டிச் சென்றார்" என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்?
உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத்
தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும்
ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை
விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு
முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும்
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு
அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும்
தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக
அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 106: 19-20.
21-22. 23 (பல்லவி: திபா 106:4a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!
19
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்;
வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20
தங்கள் "மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச்
செய்துகொண்டனர். - பல்லவி
21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை
மறந்தனர்;
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில்
அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி
23
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால்
தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல்
நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 3: 16)
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு
கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும்
மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
5: 31-47
அக்காலத்தில்
இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: "என்னைப்பற்றி நானே சான்று
பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர
வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று
செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள்
கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும்
சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே
இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள்
சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான்
பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து
முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.
நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான
சான்றாகும். "என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக்
கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை;
ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக
நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து
பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.
வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத்
தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால்
வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர்
தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து
பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?
தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன்
நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள்
எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள்
மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில்
அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள்
நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?"
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
விடுதலைப் பயணம் 32: 7-14
மன்னிக்கும் இறைவன்
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் வயதான குருவானவர்
ஒருவர் பங்குத்தந்தையாக இருந்தார். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக
பெண்ணொருவர் வந்தார். அவர் ஒருகாலத்தில் மிகவும் பாவியாக
வாழ்ந்துவந்தவர். அப்படிப்பட்டவர் பங்குத்தந்தையின் அறிவுரையால்
தொடப்பட்டு, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு
மாறியிருந்தார்.
அவர் பங்குத்தந்தையிடம், "சுவாமி! கடந்த காலத்தில் நான் செய்த
பாவத்தையெல்லாம் இறைவன் மன்னித்திருப்பாரா? இல்லை அதனை
நினைவில் வைத்திருப்பாரா...? தயவுசெய்து சொல்லுங்கள்... இல்லையென்றால்
என் மண்டையே வெடித்திருக்கும் போலிருக்கின்றது" என்றார். உடனே
அந்த வயதான பங்குத்தந்தை, "ஒருவேளை இப்பொழுது இயேசு உன்னிடத்தில்
பேசுகின்றார் என்றால், அவர் உன்னிடம் "உன்னுடைய வேலையைப்
பார்த்துக்கொண்டு போ" என்றுதான் சொல்வார்" என்றார்.
வந்திருந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் பங்குத்தந்தையை மேலும்
கீழும் பார்த்தார். அப்பொழுது பங்குத்தந்தை அவரிடம்,
"ஆண்டவராகிய கடவுள் உன்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து, அவற்றையெல்லாம்
ஆழ்கடலில் அமிழ்த்திவிட்டார். மட்டுமல்லாது, "இங்கு மீன்பிடிக்கக்கூடாது"
என்றொரு பலகையையும் அந்தக் கடலுக்கு முன்பு வைத்துவிட்டார். அப்படியிருக்கும்பொழுது
நீ உன்னுடைய பழைய பாவத்தையே நினைத்துக்கொண்டிருந்தால் அல்லது
மீன்பிடிக்கக்கூடாது என்று பலகை வைக்கப்பட்ட பிறகும் அங்கு
மீன்பிடித்துக் கொண்டிருந்தால், "போய் உன் வேலையைப் பார்" என்று
சொல்லாமல் வேறு என்ன சொல்வார்?" என்றார்.
இதைக் கேட்ட அந்தப் பெண்மணி, "இறைவன் உண்மையிலேயே தன்னுடைய பாவத்தை
மன்னித்துவிட்டார்" என்ற மகிழ்ச்சியில் மனநிம்மதியோடு தன்னுடைய
வீட்டிற்குச் சென்றார்.
ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றார்; மன்னிப்பதோடு
மட்டுமல்லாமல் அவற்றை மறக்கவும் செய்கின்றார். இன்றைய முதல் வாசகம்
இறைவனின் மன்னிக்கின்ற குணத்தை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டதனம்
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
மோசே இறைவனோடு சீனாய் மலையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மலைக்குக்
கீழிலிருந்த இஸ்ரயேல் மக்களோ, மோசேக்கு என்னவாயிற்றோ என்று
பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, அதை வழிபடத் தொடங்குகின்றார்கள்.
மட்டுமல்லாமல், அந்தக் கன்றுக்குட்டியே தங்களை எகிப்திலிருந்து
மீட்டுவந்ததாகச் சொல்லிக்கொள்கின்றார்கள்.
ஆண்டவராகிய கடவுள் தன் ஊழியன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களிடம்,
"நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து
நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்; என்னைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 1-3) என்று
சொல்லியிருந்தார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உண்மையாக இருந்திருந்தால்
அல்லது அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருந்திருந்தால், பொன்னாலான
கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டிருக்கக்கூடாது; ஆனால், அவர்களோ
பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபடத் தொடங்கினார்கள்.
இதன்மூலம் அவர்கள் ஆண்டவருக்கு உண்மையில்லாதவர்களாகவும் நன்றிமறந்தவர்களாகவும்
ஆனார்கள். இதனால் கடவுளின் சினம் அவர்கள்மேல் பொங்கி எழுகின்றது;
அவர் இஸ்ரயேல் மக்களை அழித்தொழிக்கப்போவதாகச் சொல்கின்றார்.
ஆண்டவரின் மன்னிக்கும் குணம்
தனக்கு உண்மையில்லாமலும் நன்றியுணர்வு இல்லாதவர்களாகவும்
மாறிப்போன இஸ்ரயேல் மக்கள்மீது, ஆண்டவரின் சினம் பொங்கி எழுந்தபொழுது,
மோசே இஸ்ரயேல் மக்களுக்காக அவரிடம் பரிந்துபேசுகின்றார். ஆம்,
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக்
குறிப்பிட்டு, தந்தைக் கடவுளிடம், "தந்தையே இவர்களை மன்னியும்"
என்று சொன்னதுபோல, இஸ்ரயேல் மக்கள் செய்த குற்றங்களை மன்னிக்குமாறு
மோசே ஆண்டவரிடம் கெஞ்சிக் மன்றாடுகின்றார்.
மோசே இறைவனிடம் இவ்வாறு மன்றாடுகின்றபொழுது, இரண்டு கருத்துகளைச்
சொல்லி மன்றாடுகின்றார். ஒன்று, கடவுள் இஸ்ரயேல் மக்களை பாலைநிலத்தில்
கொன்றுபோட்டுவிட்டால், பிற இனத்தவர் அவரைப் பற்றி தவறாகப் பேசுவர்
என்பதையும், இரண்டு, கடவுள் ஆபிரகாமிற்கும் ஈசாக்கிற்கும்
கொடுத்த வாக்குறுதியையும் சொல்லி மன்றாடுகின்றார். இந்த இரண்டு
கருத்துகளையும் முன்வைத்து, மோசே இறைவனிடம் மன்றாடியதும், இறைவன்
இஸ்ரயேல் குற்றங்களை மன்னித்து, அவர்களை ஒன்றும் செய்யாமல்
விடுகின்றார்.
இங்கு நாம் நம்முடைய கொள்ளவேண்டிய செய்திகள் இரண்டு. ஒன்று, இறைவனுக்கு
எப்பொழுதும் நாம் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும். இரண்டு,
இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
இந்த இரண்டையும் நாம் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து
வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்த்து, ஒருவேளை நாம் அப்படியில்லாமல்
என்றால், நம்முடைய வழியிலிருந்து திருந்தி இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும்
நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம்.
சிந்தனை
"அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை
மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்"
(மீக் 7: 19) என்பார் மீக்கா இறைவாக்கினர். ஆகையால், நம்மீது
இரக்கம் கொள்கின்ற, நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்ற ஆண்டவருக்கு
நன்றியுள்ளவர்களாக, அவருடைய வழியில் நடக்கின்றவர்களாக
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 5: 31-47
இயேசுவை இறைமகன் ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்கள்
நிகழ்வு
ஓர் அரங்கில் கருத்தமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்தமர்வில் பேசுவதற்காகச் சிறப்புப் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.
கடவுள்மீது நம்பிக்கையில்லாத அவர் பேசும்போது, இடையிடையே
கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் தீமைகளையும்
பேசினார். எல்லாவற்றையும் பேசிமுடித்தபின்பு, அரங்கில் இருந்தவர்களைப்
பார்த்து, "ஏதாவது கேள்வி இருந்தால் கேட்கலாம்" என்றார்.
உடனே அரங்கில் இருந்து ஒருவர் எழுந்து மேடையில் ஏறினார். அவர்
ஒரு பெரிய குடிகாரராக இருந்து, பின் மனம்மாறி, கிறிஸ்தவ மதத்தில்
சேர்ந்தவர். அவர் தன்னிடத்தில் இருந்த ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து,
அதன் தோலை மெல்ல உரிக்கத் தொடங்கினார். அவரைக் கண்ட பேச்சாளருக்குக்
கடுமையாகச் சினம் வந்தது. பேச்சாளர் அந்த மனிதரிடம், "கேள்வி
கேட்கச் சொன்னால், இப்படி ஆரஞ்சுப் பழத்தை உரித்துக்கொண்டிருக்கின்றீரே!
உமக்கு என்ன பிரச்சனை?" என்றார். அப்பொழுதும் அந்த மனிதர் எதுவும்
பேசாமல் ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.
ஒருவழியாக ஆரஞ்சுப் பழத்தை உரித்து முடித்ததும், அந்த மனிதர்
பேச்சாளரைப் பார்த்து, "இந்த ஆரஞ்சுப் பழம் இனிக்குமா?
புளிக்குமா?" என்றார். பேச்சாளருக்குத் தாங்க முடியாத சினம் வந்தது.
"நீ பெரிய முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்... ஆரஞ்சுப் பழத்தைச்
சுவைத்துப் பார்க்காமல் அது இனிக்குமா? புளிக்குமா? என்று எப்படிச்
சொல்லமுடியும்?" என்று கத்தினார் பேச்சாளர். இதற்கு அந்த மனிதர்
அவரிடம், "நீங்கள் பேசினீர்களே இதுதான் சரியான பேச்சு. எப்படி
ஆரஞ்சுப் பழத்தைச் சுவைத்துப் பார்க்காமல், அது இனிப்பா,
புளிப்பா என்று சொல்ல முடியாதோ, அப்படி இயேசுவைப் பற்றி எதுவும்
தெரிந்துகொள்ளாமல், அவர் இப்படி, அவர் தோற்றுவித்த மதம் இப்படி
என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது மிகப்பெரிய
முட்டாள்தனம். ஒரு காலத்தில் நான் கிறிஸ்துவைப் பற்றி எதுவும்
தெரியாமல் குடித்துக் குடித்து வாழ்க்கையைச் சீரழித்துக்
கொண்டிருந்தேன். என்றைக்கு கிறிஸ்துவைக் குறித்து அறிய வந்தேனோ,
அன்றைக்கே என்னுடைய வாழ்க்கை மாறிப்போனது" என்றார்.
ஆம், ஒன்றைக் குறித்து அல்லது முழுமையாக அறிந்துகொள்ளாமல் அதை,
அவரை விமர்சிப்பது மிகப்பெரிய முட்டாள்தான். அதைத்தான் மேலே உள்ள
நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக்
குறித்து எதுவும் தெரியாமல், அவர் கடவுளைத் தந்தை என்று சொன்னதற்காக
யூதர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றார்கள். இந்த நிகழ்வு
நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தான் இறைமகன் என்பதற்கு இயேசு தரும் சான்றுகள்
பொதுவாக யூதர்கள் ஒருவர் தரும் சான்றினை ஏற்றுக்கொள்வதில்லை (இச
17: 6; 19: 15) இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ சொன்னால்தான்
அதை நம்புவார்கள். இங்கு இயேசு தான் இறைமகன் என்பதைப் பல்வேறு
சான்றுகளின் வழியாக விளக்குகின்றார்.
முதலாவதாக இயேசு தரும் சான்று திருமுழுக்கு யோவான்.
திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து சான்று பகர்ந்தார்
(யோவா 1: 6-8). மட்டுமல்லாமல், அவர் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி
(யோவா 1: 29) என்று சுட்டிக்காட்டினார். இயேசு தரும் இரண்டாவது
சான்று தந்தைக் கடவுள். தந்தைக் கடவுள் இயேசுவை, "இவரே என் அன்பார்ந்த
மைந்தர்" (மத் 3:17; 17:5) என்றார். இயேசு தரும் மூன்றாவது
சான்று மறைநூல். மறைநூலும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்தது.
இயேசுதரும் நான்காவது சான்று மோசே. மோசேயும் இயேசுவைப் பற்றிச்
சான்று பகர்ந்தார் (எண் 21: 9; 24: 17).
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் செயல்கள் அவர் இறைமகன்
என்று சான்று பகர்ந்தன. எதில் எதையும் யூதர்கள் நம்பாமல், இயேசுவை
ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கின்றது. பல நேரங்களில்
நாமும் கூட பல்வேறு சான்றுகள் இருந்தும், இயேசுவை ஏற்றுக்கொள்ளவும்
அவர்மீது நம்பிக்கை வைக்கவும் தயங்குகின்றோம். ஆகையால், நம்முடைய
வாழ்வின் அச்சாரமாக இருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து
வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்;
அவரும் கடவுளோடு இணைந்திருக்கின்றார்" (1 யோவா 4: 15) என்பார்
புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என்று நம்பி, அறிக்கையிடுவோம்.
அதன்வழியாக இறைவனோடு ஒன்றித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|