Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   24 மார்ச் 2020  
    தவக்காலம் 4 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12

அந்நாள்களில்

வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7) mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.
1
கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
2
ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. - பல்லவி

4
ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
5
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

7
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
8
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (திபா 51: 12a, 14a)

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16


யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார். "ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள். அவர் மறுமொழியாக, "என்னை நலமாக்கியவரே "உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்று என்னிடம் கூறினார்" என்றார். " "படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்று உம்மிடம் கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 47: 1-9, 12

"தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது"

நிகழ்வு

அது ஓர் இசைக் கச்சேரி அரங்கேறும் அரங்கம். அந்த அரங்கில் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய நிக்கோலோ பகானினி தன்னுடைய கையில் கிட்டாரை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவர் கிட்டாரை வாசிக்கத் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே அதிலிருந்த ஒரு கம்பி அறுந்துபோனது. கிட்டாரை அவர் தொடர்ந்து வாசித்தார். இன்னொரு கம்பியும் அறுந்துவிழுந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். அதையெல்லாம் அவர் பொருள்படுத்தாமல் கிட்டாரைத் தொடர்ந்து வாசித்தார். மூன்றாவது கம்பியும் அழுந்துவிழுந்தது. அதைப் பார்த்துவிட்டு அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து.

அப்பொழுது பகானினி அவர்களிடம், "இந்தக் கிட்டாரில் இருந்த மூன்று கம்பிகள் போனால் என்ன...? இன்னும் ஒரு கம்பி இருக்கின்றதே...! இதை வைத்து நான் என்ன செய்கின்றேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்!" என்று சொல்லிவிட்டு அந்த ஒற்றைக் கம்பியைக் கொண்டு வாசிக்கத் தொடங்கினார். நேரம் செல்ல செல்ல, அந்த ஒற்றைக் கம்பியைக் கொண்டு பகானினி மீட்டிய இசையைக் கேட்டு அரங்கமே மெய்ம்மறந்து போனது.

ஆம், மிகச்சிறந்த இசைக் கலைஞராகிய நிக்கோலோ பகானினியால் கிட்டாரில் இருந்த ஒற்றைக் கம்பியைக் கொண்டு மிக அற்புதமான இசையை வழங்கமுடிந்தது. ஆண்டவர் நினைத்தால், ஒன்றுமில்லாமையிலிருந்தும் கூட வாழ்வையும் அருளையும் நமக்கு வழங்க முடியும். இன்றைய முதல் வாசகத்தில் திருக்கோயிலிருந்து எங்கும் வழிந்தோடும் தண்ணீரைக் குறித்துப் பேசுகின்றது. இந்தத் தண்ணீர் நமக்கு உணர்ந்தும் செய்தியென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தண்ணீர் வாழ்வின் அடையாளம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், திருக்கோயிலின் வாயிற்படியின் கீழிலிருந்து வருகின்ற தண்ணீர் கிழக்கு நோக்கிப் பாய்வதைக் குறித்துப் பேசுகின்றது. பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் வறண்ட நிலங்கள் அல்லது பாலை நிலங்கள் மிகுதியான உண்டு. இப்பகுதிகளில் தண்ணீர் என்பது ஒரு வரம். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய முதல் வாசகத்தில், திருக்கோயிலிருந்து வரும் தண்ணீர் கிழக்குப் பக்கமாய்ப் பாய்ந்து, இருமருங்கிலும் உள்ள மரங்களைச் செழித்தோங்கச் செய்கின்றது என்பது, ஆண்டவர் வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கின்றார் என்ற உண்மையை எடுத்துரைப்பாக இருக்கின்றது.

இங்கு நாம் இன்னோர் உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், திருக்கோயிலிருந்து வருகின்ற தண்ணீர் கிழக்குப் பக்கமாய்ப் பாய்கின்றது என்பதாகும். கிழக்குப் பக்கத்தில்தான் யோர்தான் ஆறும் சாக்கடலும் இருக்கின்றன. யோர்தான் ஆறு வளம்தரும் ஓர் ஆறாக இருக்கையில், சாக்கடலோ பெயருக்கு ஏற்றவாறு உயிர்கள் எதுவும் வாழமுடியாத ஓர் இடமாக இருந்தது, இருக்கின்றது. இந்நிலையில் திருக்கோயிலிருந்து புறப்படும் தண்ணீர் ஆறாக ஓடி, சாக்கடலில் சேரும்பொழுது அது எல்லா உயிர்களும் வாழக்கூடிய இடமாக மாறும் என்கின்றது இறைவார்த்தை. இவ்வாறு ஆண்டவரிடமிருந்து புறப்படும் தண்ணீர், அவருடைய அருள், இரக்கம் வாழ்வளிப்பவன இருக்கின்றன என்று கூறுகின்றது இறைவாக்கினர் எசேக்கியேல் நூல்.

ஆண்டவரால் மட்டுமே வாழ்வளிக்கும் தண்ணீரைத் தரமுடியும்

திருக்கோயிலிருந்து தோன்றும் தண்ணீர் எப்படி எல்லா உயிர்களுக்கும் வாழ்வளிப்பதாக இருக்கின்றதோ, அதுபோன்று உயிரளிக்கும் தண்ணீரை அளிக்கும் ஆண்டவர் வாழ்வளிப்பவராக இருக்கின்றார். யோவான் நற்செய்தி நான்காம் அதிகாரத்தில் இடம்பெறும் இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையே நடக்கின்ற உரையாடல், இயேசு வாழ்வளிக்கும் தண்ணீரை, நிலைவாழ்வை வழங்குபவர் (யோவா 4: 14). என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது.

அப்படியானால், இயேசு தருகின்ற வாழ்வளிக்கும் தண்ணீரை அல்லது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பது நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாக இருக்கின்றது. இதற்கான பதிலை நாம் யோவான் நற்செய்தியிலேயே கண்டுகொண்டலாம். ஆம், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்பொழுது நிலைவாழ்வைக் கொடையாகப் பெற்றுக்கொள்ள முடியும் (யோவா 6: 35).

ஆகையால், நாம் இயேசு அளிக்கின்ற, அவரால் மட்டுமே அளிக்கக்கூடிய நிலைவாழ்வை, வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற, அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

சிந்தனை

"அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்"" (எரே 17: 13) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் நமக்கு வாழ்வளிக்கும் நீரூற்றாக ஆண்டவரை இஸ்ரயேல் மக்களைப் போன்று புறக்கணியாமல், அவர்மீது நம்பிக்கை கொண்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 5: 1-3a, 5-16

"இனிப் பாவம் செய்யாதீர்"

நிகழ்வு

குருவானவர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய போதனைகளில் அடிக்கடி பாவத்தைக் குறித்தும் பாவத்திற்குக் கிடைக்கும் தண்டனையைக் குறித்தும், அதனால் பாவம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் போதித்து வந்தார்.

இவருடைய போதனையைத் தொடர்ந்து கேட்டு வந்த பெரியவர் ஒருவர் இவரிடத்தில் சென்று, "சுவாமி! உங்களுடைய போதனைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன; ஆனால், நீங்கள் அடிக்கடி பாவத்தைக் குறித்துப் போதிப்பதால், பாவம் செய்வது குறைவதற்குப் பதில், பெருகிவிடுமோ என்று அச்சமாக இருக்கின்றது. பேசமால் பாவத்தைக் குறித்துப் போதிப்பதை நிறுத்திவிடுங்கள். பாவமும் குறைந்துவிடும்" என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானவர் மெல்லப் பேசத் தொடங்கினார்: "ஐயா! உங்களுக்கு ஒரு நோய் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் ஒரு பேச்சுக்குத்தான். அதைப் பற்றி நீங்கள் யாரிடத்திலும் பேசாமல், மருத்துவரிடமும் காட்டாமல், அப்படியே உங்களுக்குள் வைத்திருந்தால், அந்த நோய் உங்களை விட்டு நீங்கிவிடுமா...? நீங்காதுதானே! உங்களிடம் இருக்கின்ற நோய் உங்களை விட்டு நீங்கவேண்டும் என்றால், அதை நீங்கள் மருத்துவரிடம் காட்டவேண்டும். அப்பொழுதான் அந்த நோய் உங்களை விட்டு நீங்கும். அதுபோன்றுதான் பாவமும். பாவத்தைக் குறித்துப் பேசாமல் இருந்துவிட்டால்மட்டும் பாவம் குறைந்துவிடாது அல்லது பாவம் இந்த உலகத்தை விட்டு நீங்கிவிடாது. பாவத்தைக் குறித்துப் பேசவேண்டும். அதுகுறித்த விளக்கத்தைச் சொல்லி, மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கவேண்டும். அப்பொழுதான் பாவம் குறையும்; பாவம் இந்த உலகத்தை விட்டு நீங்கும்."

குருவானவர் கொடுத்த இந்த விளக்கத்தைக் கேட்டு பெரியவர் வாயடைத்து நின்றார். அப்பொழுதுதான் அவர் பாவத்தைக் குறித்துப் பேசுவதன், போதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

ஆம், பாவம் குறித்த விழிப்புணர்வையும் பாவம் செய்யக்கூடாது என்ற அழைப்பினையும் மக்களுக்குத் தரவேண்டும். அது மிகவும் முக்கியமானது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த மனிதரை நலப்படுத்திய பின்பு, "இனிப் பாவம் செய்யாதீர்" என்று சொல்கின்றார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளுக்குப் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முடக்குவாதமுற்றவரின் விருப்பத்தோடு இயேசு அவரை நலப்படுத்துதல்

யூதர்கள் பாஸ்காப் பெருவிழா, பெந்தக்கோஸ்துப் பெருவிழா மற்றும் கூடாரப் பெருவிழா என்று மூன்று பெருவிழாக்களைக் கொண்டாடுவார்கள். இப்பெருவிழாக்களில் கலந்துகொள்வதற்கு யூதர்கள், அதிலும் குறிப்பாக பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வோர் ஆணும் எருசலேமுக்கு வருவர்; இயேசுவும் எருசலேமிற்கு வருகின்றார். அப்பொழுதுதான் பெத்சதா குளத்தருகே முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவர் இருப்பதைக் கண்டு இயேசு அவரிடம், "நலம்பெற விரும்புகிறீரா?" என்று கேட்கின்றார். அவரும் தன்னுடைய விரும்பத்தைத் தெரிவிக்கவே, இயேசு அவருக்கு நலமளிக்கின்றார்.

இயேசுவால் அந்த மனிதரை, அவருடைய விருப்பமின்றி நலப்படுத்த முடியும் என்றாலும், அவருடைய விருப்பத்தைக் கேட்டறிந்த பின்பே இயேசு அவரை நலப்படுத்துகின்றார். இந்நிகழ்வு கடவுள் நம்முடைய விருப்பத்திற்கு, சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றார் என்ற உண்மையை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது.

பாவம் செய்யாதீர் என்று அறிவுறுத்துதல்

இயேசு அந்த மனிதரை நலப்படுத்திய பின்பு, மீண்டுமாக அவரைச் சந்திக்கின்றபொழுது, "இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்கிறார். யூதர்கள் நடுவில் ஒருவருக்கு வரும் நோய்க்கும் பாவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது (யோவா 9:3) என்ற நம்பிக்கை இருந்தது. இயேசு அந்த நம்பிக்கையைச் சீர்குழைக்காமல், இதைவிடக் கேடானது எதுவும் நிகழாமல் இருக்கப் பாவம் செய்யாதீர் என்று அவரிடம் கூறுகின்றார்.

ஆம், நாம் பாவம் செய்கின்றபொழுது, கடவுளை விட்டு வெகுதொலைவு செல்கின்றோம். இதனால் கடவுளின் அருளையும் ஆசியையும் இழக்கின்றோம். கடவுளின் ஆசியை இழக்கின்றபோது, நமக்குக் கேடானதுதானே நடக்கும்! அதனால்தான் இயேசு பாவம் செய்யதீர் என்று அந்த மனிதரைப் பார்த்துச் சொல்கின்றார். ஆகையால், கடவுளின் ஆசி நமக்குத் தொடர்ந்து கிடைக்க, பாவத்தைத் தவிர்த்து அவருடைய வழியில் எப்பொழுதும் நடப்போம்.

சிந்தனை

"பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு" (உரோ 6: 23) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பாவம் செய்து, இறந்துவிடாமல் அல்லது அருள் வாழ்வை இழந்து விடாமல், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!