Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   21 மார்ச் 2020  
    தவக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

"வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே6:6) Mp3
=================================================================================

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

18
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19ab
அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (திபா 95: 8)

"உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்" என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில்

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்."

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார்."

இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 ஓசேயா 6: 1-6

"இரக்கத்தை விரும்பும் இறைவன்"

நிகழ்வு

ஒரு நகரில் நீதிபதி ஒருவர் இருந்தார். கிறிஸ்தவரான அவர் மக்களுக்கு நேர்மையான வழியில் தீர்ப்புகளை வழங்கி வந்தார். இதனால் மக்கள் நடுவில் அவருக்குப் பெயரும் புகழும் மிகுந்த செல்வாக்கும் பெருகின.

ஒருநாள் அவரிடத்தில் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டவன் வேறு யாருமல்ல, அவருடைய பால்ய நண்பன். அவன் செய்த குற்றம் ஒருவரிடமிருந்து பெரும் தொகையைத் திருடியது. நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களுக்குத் தெரியும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றவன் நீதிபதியின் பால்ய நண்பன் என்று. ஆகையால், அவர்கள் நீதிபதி திருடனாக மாறியிருக்கின்ற அவருடைய நண்பனுக்கு என்ன தீர்ப்பளிக்கப் போகிறார் என்று ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கத் தொடங்கினார்: "இவர் செய்த திருட்டுக் குற்றத்திற்காக இவனுக்கு இலட்ச ரூபாய் அபராதமாக விதிக்கின்றேன்." இதைக் கேட்டுக்கொண்டிருந்த யாவரும் அப்படியே அதிர்ந்துபோனார்கள். "என்னடா இவர்! குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் தன்னுடைய நண்பர் என்பதால், இவர் அவருக்குக் குறைவான தொகையை அபராதமாக விதிப்பார் என்று நினைத்தால், இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்திருக்கின்றாரே!" என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரோடு பேசத் தொடங்கினார்கள்.

இந்த ஆச்சரியம் நடந்தேறிய சிறிதுநேரத்திற்குள் இன்னோர் ஆச்சரியமும் நடந்தேறியது. ஆம், நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு இலட்ச ரூபாய் அபராதம் விதித்ததும், தன்னுடைய இருக்கையிலிருந்து கீழே இறங்கி, அங்கிருந்த அலுவலரிடம், தன்னுடைய சட்டைப் பையிலிருந்து இலட்ச ரூபாயை எடுத்துக்கொடுத்து, "இதை குற்றம் சுமத்தப்பட்டவரின் சார்பாகத் தருகின்றேன்" என்றார். இதைப் பார்த்துவிட்டு, "இப்படி ஒரு நேர்மையும் இரக்கமும் உள்ள நீதிபதியா!" என்று அங்கிருந்தவர்கள் வியந்து நின்றார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற நீதிபதியைப் போன்றுதான் ஆண்டவரும் நீதியும் இரக்கமும் உள்ளவர். அப்படிப்பட்டவர் தன்னுடைய மக்களிடமிருந்து நீதியையும் இரக்கத்தையுமே எதிர்பார்க்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர், "உண்மையாகவே நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் விரும்புகின்றேன்" என்று கூறுகின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்களின் போலித்தனம்

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறைவாக்கினர் ஓசேயா இஸ்ரயேல் மக்களின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். "ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (ஓசே 14:1) என்று ஓசேயா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களும் அவருடைய அழைப்பினை ஏற்று ஆண்டவரிடம் திரும்பி வந்தார்கள்; ஆனால் அது உண்மையான மனம் திரும்புதலாக இல்லாமல், போலியானதாக இருந்தது. குறிப்பாக அவர்களுடைய அன்பு காலை நேர மேகம் போன்றும் கதிரவனைக் கண்ட பனிபோன்றும் இருந்தது. மட்டுமல்லாமல், அவர்கள் வெளிப்பார்வைக்குத்தான் நோன்பிருந்தார்களே ஒழிய, தங்களோடு இருந்த எளியவர்களையும் வறியவர்களையும் நசுக்கின்றார்கள் (எசா 58). இதனால் இறைவாக்கினர் ஓசேயா வழியாக ஆண்டவர், "எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது" என்று கூறுகின்றார்.

இரக்கத்தை விரும்பும் இறைவன்

இஸ்ரயேல் மக்களின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கிய இறைவாக்கினர் ஓசேயா, உண்மையில் இறைவன் எதை விரும்புகின்றார் என்பதை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார். ஆம், இறைவன் பலியை அல்ல இரக்கத்தையும் எரிபலிகளை விட தன்னை அறியும் அறிவையே விரும்புகின்றார் இதுதான் இறைவாக்கினர் ஓசேயா எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கின்றது. இவர் எடுத்துரைக்கும் இச்செய்தி திருவிவிலியத்தின் பல இடங்களிலும் பிரதிபலிக்கின்றது (ஆமோ 5: 21-24; மத் 23: 23-28; யாக் 1: 26-27).

இறைவன் இரக்கத்தையே விரும்புகின்றார் எனில் நம்முடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் நம்முடைய வாழ்க்கை வழிபாட்டோடு நின்றுவிடுவது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இரக்கத்தையும் அன்பையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழக்கைதான் இறைவனுக்கு உகந்தது. அதுவே இறைவன் விரும்புவது.

சிந்தனை

"நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?" (மீகா 6:8) என்பார் இறைவாக்கினர் மீக்கா. ஆகையால், ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற நேர்மையையும் இரக்கத்தையும் தாழ்ச்சியையும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். நம்மிடம் இருக்கின்ற போலித்தனங்களைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 18: 9-14

"தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்"

நிகழ்வு

துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் சீடர்களிடத்தில், "ஆன்மிகப் பயணத்தில் ஒருவருடைய வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கின்றது?" என்று கேட்டார்.

உடனே ஒருவர், "பணம்" என்றார். இன்னொருவர், "தீய நாட்டம்" என்றார். மற்றொருவர், "உலகப் போக்கிலான வாழ்க்கை" என்றார். இப்படி ஒவ்வொரு சீடரும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு அமர்ந்த பிறகு, துறவி அவர்களிடம் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: "ஒருவருடைய ஆன்மிகப் பயணத்தில், அவருடைய வளர்ச்சிக்கு நீங்கள் சொன்னவை எல்லாம் ஏதோவொரு விதத்தில் தடையாக இருந்தாலும், அவருடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது "தான் என்ற ஆணவம்"தான். அது மட்டும் ஒருவரிடத்தில் இருந்தால், அவரால் ஆன்மிகப் பயணத்தில் முன்னேறவே முடியாது."

ஆம், தான் என்ற ஆணவம் ஒருவருடைய ஆன்மிக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நின்றுகொண்டு வேண்டிய பரிசேயர்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறைவனிடம் எத்தகைய மனநிலையோடு வேண்டவேண்டும் என்ற செய்தியை வலியுறுத்திக்கூறுகின்றார். இந்த நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் (லூக் 18: 1-8) இறைவனிடம் மனம்தளராது மன்றாடவேண்டும் என்ற செய்தியை இயேசு வலியுறுத்திக்கூறுவார். இன்றைய நற்செய்தியிலோ எத்தகைய மனநிலையோடு இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார். ஆண்டவர் இயேசு இந்த உண்மையை விளக்கிச் சொல்ல ஓர் உவமையைச் சொல்கின்றார். அதுதான் பரிசேயர், வரிதண்டுபவர் உவமை.

இயேசு சொல்லும் இந்த உவமையில் வருகின்ற பரிசேயர், நின்றுகொண்டு இறைவனிடம் வேண்டியதாக நற்செய்தியில் வாசிக்கின்றோம். இறைவனுடைய அருளையும் இரக்கத்தையும் வேண்டுகின்ற ஒருவர், இறைவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவேண்டும்; ஆனால், பரிசேயரோ நின்றுகொண்டு வேண்டுகின்றார். இதுவே அவர் இறைவனுடைய அருளையும் இரக்கத்தையும் பெற முடியாமல் செய்துவிடுகின்றது. பரிசேயர் இறைவனுக்கு முன்பாக நின்றுகொண்டு மட்டும் வேண்டவில்லை; இறைவேண்டல் என்ற பெயரில் மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டும் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டும் இருந்தார்.

ஆம், பரிசேயருடைய இறைவேண்டலில், இறைவேண்டலுக்கான எந்தவொரு கூறும் இல்லை. மாறாக தன்னைப் பற்றிய தப்பட்டமும் மற்றவர்களைப் பற்றிய குறையுமே இருந்தன. இதனால்தான் அவருடைய வேண்டுதல் இறைவனுக்கு ஏற்றதாக இல்லை.

அண்ணார்ந்து பார்க்கத் துணியாமல் வேண்டிய வரிதாண்டுபவர்

இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற இரண்டாவது மனிதர் வரிதண்டுபவர். இவரைப் போன்றவர்கள், தங்களை நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொண்ட பரிசேயர்களின் இகழ்ச்சிக்கு உள்ளானவர்கள். இப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோயிலுக்கு வந்து, இறைவனிடம் வேண்டுகின்றார்.

இவர் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்று சொல்லி மன்றாடுகின்றார். இவர் வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாததும் இவர் சொல்லும் வார்த்தைகளும் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. உண்மையில், இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று உணர்கின்ற ஒருவரால்தான் இப்படி நடந்துகொள்ளவும் மன்றாடவும் முடியும். இவர் இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தார். அதனால்தான் இவர் வானத்தை அண்ணார்ந்து பார்க்காமலும் தன்னைப் பாவி என்று உணர்ந்தும் மன்றாடினார்.
தாழ்ச்சியுடையோர் வீழ்ச்சியடையார்

இயேசு பரிசேயர் மற்றும் வரிதண்டுவோருடைய உவமையைச் சொல்லிவிட்டு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்" என்று முடிக்கின்றார். ஆம், தான் என்ற ஆணவத்தோடு இறைவனிடம் வேண்டிய பரிசேயர் இறைவனுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்ப வில்லை; கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று வேண்டிய வரிதண்டுபவரே, கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகின்றார். அப்படியானால், ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம் இருக்கின்ற தாழ்ச்சி என்ற பண்பே காரணமாக இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆம், தாழ்ச்சியே எல்லாப் பண்புகளுக்கும் தாய். அத்தகைய உயரிய பண்பை நாம் நம்முடைய உள்ளத்தில் தாங்கி வாழ்வோம்.

சிந்தனை

"தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்" (சீஞா 35:17) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம் இறைவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக்கொண்டு வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!