|
|
20
மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
3 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே' என்று
இனி சொல்லமாட்டோம்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 2-10
ஆண்டவர் கூறியது:
இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன்
தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம்
திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: "தீவினை அனைத்தையும் அகற்றியருளும்,
நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை
உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்;
குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை
நோக்கி, "எங்கள் கடவுளே!" என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன்
உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்"எனச் சொல்லுங்கள்.
அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல்
உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.
நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்;
லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள்
விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல்
அவன் நறுமணம் பரப்புவான்.
அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்;
கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள்.
லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல்
எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச்
செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு
மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.
ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு
உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள்
நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;
மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 81: 5c-7a. 7bc-8. 9-10ab. 13,16 (பல்லவி: 10,8a)
Mp3
=================================================================================
பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச்
செவிகொடுங்கள்.
5c
நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
6
தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று
விடுதலை பெற்றன.
7a
துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை
விடுவித்தேன். - பல்லவி
7bc
இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி
கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.
8
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை
விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால்,
எவ்வளவு நலமாயிருக்கும்! - பல்லவி
9
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய
தெய்வத்தைத் தொழலாகாது.
10ab
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர்
நானே. - பல்லவி
13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான்
காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
16
உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத்
தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 17)
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார்
ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, "அனைத்திலும்
முதன்மையான கட்டளை எது?"என்று கேட்டார். அதற்கு இயேசு, "
"இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன்
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும்
உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்பது முதன்மையான
கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும்
அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை
வேறு எதுவும் இல்லை"என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே;
அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே.
அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு
செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம்
அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது"
என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர்
இறையாட்சியினின்று தொலையில் இல்லை"என்றார். அதன்பின் எவரும்
அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஓசேயா 14: 1 -9
"உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா"
நிகழ்வு
அது ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பு. அதில் மறைக்கல்வி ஆசிரியர்
மாணவர்களிடம் ஒப்புரவு அருளடையாளத்தை எப்படி மேற்கொள்ளவேண்டும்
என்பதை விரிவாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசி முடித்தபின்,
தான் பேசியது மாணவர்களுக்குப் புரிந்திருக்கின்றதா என்பதைத்
தெரிந்துகொள்வதற்காக, "மாணவச் செல்வங்களே! ஒப்புரவு அருளடையாளத்தை
அதாவது பாவ மன்னிப்புப் பெற முதலில் என்ன செய்யவேண்டும்?"என்று
கேட்டார்.
சிறிதுநேரம் மாணவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
திடீரென்று ஒரு மாணவன் எழுந்து, "பாவ மன்னிப்புப் பெறவேண்டும்
என்றால், முதலில் பாவம் செய்யவேண்டும்"என்று சொல்லி அமர்ந்துகொண்டான்.
ஆசிரியர் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார்.
சிறுவன் சொன்ன பதில் வேடிக்கையாக இருந்தாலும், பாவ மன்னிப்புப்
பெற பாவம் செய்யவேண்டும் என்ற கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், பாவம் செய்து கடவுளை
விட்டு விலகிச் சென்ற இஸ்ரயேல் மக்கள், கடவுளிடம் திரும்பி வருமாறு
இறைவாக்கினர் ஓசேயா அழைப்புத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளை விட்டு விலகிச் சென்ற இஸ்ரயேல் மக்கள்
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
இறைவாக்கினர் ஓசேயா, இஸ்ரயேல் மக்களை ஆண்டவரிடம் திரும்பி வருமாறு
அழைப்பு விடுக்கின்றார். அவர் ஏன் இஸ்ரயேல் மக்களை ஆண்டவரிடம்
திரும்பிவரவேண்டும் என்ற அழைப்பு விடுக்கின்றார் என்கிற கேள்வி
நமக்குள் எழலாம்.
இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளாம் யாவே கடவுள்மீது நம்பிக்கை
வைக்காமல், கைவினைப் பொருள்களான பிற தெய்வத்தின்மீது நம்பிக்கை
வைத்தார்கள்; வணங்கினார்கள். மட்டுமல்லாமல், அவையே தங்களுக்குக்
கடவுள் என்று சொல்லிக்கொண்டார்கள். இதனைப் பிரமாணிக்கமின்மை என்றுதான்
சொல்லவேண்டும். ஏனென்றால், எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த
இஸ்ரயேல் மக்களை ஆண்டவர்தான் விடுத்து, பாலும் தேனும் பொழியக்கூடிய
கானான் நாட்டில் குடியமர்த்தினார். அப்படியிருக்கும்பொழுது, இஸ்ரயேல்
மக்கள் ஆண்டவருக்கு உண்மையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால்,
அவர்கள் உண்மையாக இல்லை. அதனால்தான் இறைவாக்கினர் ஓசேயா அவர்களை
ஆண்டவரிடம் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.
இஸ்ரயேல் கடவுளிடம் திரும்பி வர அழைப்பு
இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம் திரும்பி வரவேண்டும் என்று அழைப்பு
விடுத்த இறைவாக்கினர் ஓசேயா, அவர்கள் பாவ அறிக்கை செய்யவேண்டும்
அல்லது தங்களுடைய குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட வேண்டும்
என்று சொல்கின்றார். எப்படிப்பட்ட பாவ அறிக்கையை என்பதை இன்றைய
முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். "தீவினை அனைத்தையும்
அகற்றியருளும்; நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; குதிரைமேல் நாங்கள்
ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, "எங்கள் கடவுளே"
என்று இனிச் செல்லமாட்டோம்"என்பது போன்ற பாவ அறிக்கையை இஸ்ரயேல்
மக்கள் இறைவனிடம் சமர்பிக்கவேண்டும் என்று இறைவாக்கினர் ஓசேயா
அவர்களிடம் கூறுகின்றார். அவர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
குற்றங்களை மன்னிக்கின்ற கடவுள்
இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து, அவற்றை ஆண்டவரிடம்
அறிக்கையிட்டபொழுது, அவர் அவர்களுடைய குற்றங்களை மன்னிக்கத் தயாராக
இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி, இறைவனுடைய
மன்னிக்கும் அன்பிற்குச் சான்றாக இருக்கின்றது. "நான் அவர்களுடைய
பற்றுறுதியின்மையை நலமாக்குவேன். அவர்கள் மேல் உளமார அன்பு
கூர்வேன். இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்"
என்பன போன்ற வார்த்தைகளெல்லாம், இறைவன் இஸ்ரயேல் மக்கள்மீது அன்புகொண்டிருந்தார்;
அவர் அவர்கள் தங்களது குற்றங்களை உணர்ந்து, அவரிடம்
திரும்பிபொழுது, அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருந்தார்
என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
ஆம், நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, ஆண்டவரிம் திரும்பி
வருகின்றபொழுது, அவர் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றவராக இருக்கின்றார்
(1யோவா 1: 9). எனவே, நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்தவர்களாய்,
அவற்றிற்காக மனம்வருந்தி ஆண்டவரிடம் திரும்பி வருவோம். அதன்
வழியாக அவருடைய அன்புக்குரிய மக்களாவோம்.
சிந்தனை
"அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய
பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்" (எபி 8: 12) என்கிறார் ஆண்டவர்.
ஆகையால், நம்முடைய தீச்செயல்களையும் குற்றங்களையும் மன்னிக்கின்ற
ஆண்டவரிடம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து திரும்பி வருவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 12: 28-34
முதன்மையான கட்டளை
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் மாவீரன் நெப்போலியன். இவர்
யாரையும் மதிப்பதே கிடையாது; ஆனால், இங்கிலாந்து நாட்டைச்
சார்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர்மீது தனி மதிப்புக்
கொண்டிருந்தார்.
இது குறித்து ஒருசிலர் மாவீரன் நெப்போலியனிடம், "யாரையும் மதிக்காத
நீங்கள், எதிரிநாட்டு மருத்துவர் ஜென்னர்மீது மட்டும் தனி மதிப்புக்
கொண்டிருக்கின்றீர்களே...! அது எப்படி...?"என்று கேட்டார்கள்.
அதற்கு நெப்போலியன் அவர்களிடம், "ஒரு மன்னருக்கு அழகு, அவர்
போரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பது. அவரால்
கொன்றுகுவிக்கப்பட்ட மனிதர்களைக் காப்பாற்ற முடியாது; ஆனால்,
மருத்துவர் ஜென்னரோ, கொள்ளைநோயால் மக்கள் இறக்காத வண்ணம் மருந்து
கண்டுபிடித்திருக்கின்றார். இறைவன்மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும்
கொண்டவரான மருத்துவர் ஜென்னர், கொள்ளைநோயால் மக்கள் இறக்காது
இருக்க மருந்து கண்டுபிடித்திருக்கின்றார் என்றால், அவர் மக்கள்மீது
மிகுந்த அன்பு கொண்டிருக்கவேண்டும். அதனால்தான் அவரால்
கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இறக்காமல் இருக்க, மருந்து
கண்டு பிடிக்க முடிந்திருக்கின்றது. அதனாலேயே அவர்மீது எனக்குத்
தனிமதிப்பு இருக்கின்றது"என்றார்.
இறைவன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மருத்துவர் ஜென்னர்,
மனிதர்கள்மீதும் மிகுந்த அன்புகொண்டிருந்தார். அந்த அன்புதான்
அவரைக் கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத் தூண்டியது. இன்றைய
நற்செய்தி வாசகம் இறைவனையும் அதற்கு இணையாக மனிதர்களையும் அன்பு
செய்யவேண்டும் என்றோர் அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முதன்மையான கட்டளை எது?
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர்,
"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?"என்று கேட்கின்றார். இயேசுவிடம்
இக்கேள்வியைக் கேட்கின்றவர், சாதாரண ஒரு யூதர் அல்லர்; மறைநூல்
அறிஞர். அப்படியானால், அவர் மறைநூலைக் குறித்து நன்கு அறிந்தவர்
என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருந்தும் அவர் ஏன் இயேசுவிடம்
இப்படியொரு கேள்வியைக் கேட்கவேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயேசுவை எப்படியாவது
சிக்கலில் மாட்டிவிடவேண்டும். இரண்டு, இயேசுவின் பார்வையில் எது
முதன்மையான கட்டளை எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.
மக்கள் நடுவில் இயேசு அடைந்துவந்த புகழையும் செல்வாக்கையும்
கண்டு பொறாமைப்பட்ட பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்
இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும்... அவருக்கு
அவப்பெயரை உண்டாக்கவேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான
கேள்விகளைக் கேட்டார்கள். அதில் ஒன்றுதான் இன்றைய
நற்செய்தியில் கேட்கப்பட்ட கேள்வி. மாற்கு நற்செய்தி மறைநூல்
அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது; ஆனால், மத்தேயு
நற்செய்தியில் பரிசேயர்களிடம் இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர்
இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது (மத் 22: 34-35).
அப்படியானால், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேள்வி
கேட்பதன்மூலமாக அவரைச் சிக்க வைக்க நினைத்தார் என்று
உறுதியாகச் சொல்லலாம்.
அடுத்ததாக, பரிசேயர்கள் நடுவில் எது முதன்மையான கட்டளை என்பது
தொடர்பாக அடிக்கடி விவாதம் நடக்கும். இந்நிலையில் மக்களால்
மதிக்கப்பட்ட இயேசு, முதன்மையான கட்டளை என்று எதைச்
சொல்கின்றார் என்று தெரிந்துகொள்வதாக, அவர்கள் மறைநூல் அறிஞரை
அனுப்பி, கேள்வியைக் கேட்கின்றார்கள்.
இறையன்பும் பிறரன்புமே ஒருவரை இறையாட்சிக்கு உட்படுத்தும்
முதன்மையான கட்டளை எது என மறைநூல் அறிஞர் தன்னிடம் கேள்வியைக்
கேட்டதும், இயேசு இணைச்சட்ட நூல் 6: 4 யையும் லேவியர் நூல் 19:
18 யையும் இணைத்து இறையன்பும் பிறரன்புமே முதன்மையான கட்டளை
என்றும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணையான கட்டளை என்றும்
சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதும், அவரிடம் கேள்வி
மறைநூல் அறிஞர், இயேசு சொன்னதை ஆமோதித்துவிட்டு, இறையன்பும்
பிறரன்பும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானவை என்று
கூறுகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், நீர்
இறையாட்சியினின்று தொலையில் இல்லை.
ஆம், கடவுளையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்கின்ற ஒருவர்
இறையாட்சிக்கு மிக நெருக்கமாகவும், ஏன், இறையாட்சிக்கு
உட்படுபவராகவும் இருக்கின்றார் என்று உண்மை. எனவே, நாம்
கடவுளையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும்
முழுமையாய் அன்புசெய்யக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!"
(எபே 3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இறைவனை,
அடுத்திருப்பவரை அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|