|
|
18
மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
3 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே!
கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி
ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய
ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.
நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும்
உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும்
நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி
நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய்
விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில்
இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.
நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு
உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்
கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை
உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும்
முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும்
மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள்
வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள்
பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக்
கூறுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)
Mp3
=================================================================================
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள
உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும்
விரைவாய்ச் செல்கின்றது.
16
அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல்
உறைபனியைத் தூவுகின்றார். - பல்லவி
19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 63c, 68c)
ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக்
கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ
நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன்
திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு
புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே
மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர் எனக் கருதப்படுவார்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இணைச்சட்டம் 4: 1,5-9
எது ஞானமும் ஆற்றலும் கொண்ட மக்களினம்?
நிகழ்வு
ஒருமுறை ஒரு தந்தையும் மகனும் நகரில் இருந்த நெருங்கிய உறவினர்
ஒருவரைப் பார்க்கச் சென்றார்கள். இதற்கு முன்பாக அவர்கள் இருவரும்
அந்த மனிதரைப் பார்த்தே கிடையாது. அப்படியிருந்தும் அவர்கள் இருவரும்
ஏதோவோர் நம்பிக்கையில் அவரைப் பார்க்கச் சென்றார்கள்.
பகல் முழுவதும் தேடிப்பார்த்தார்கள், கிடைக்கவேயில்லை.
மாலைவேளையில், பேருந்துநிலையத்தில் அவர்கள் இருவரும்
நின்றுகொண்டிருக்கும்பொழுது, ஒருவர் வேகவேகமாக வந்து பேருந்து
ஒன்றில் ஏறி அமர்ந்தார். அவரைப் பார்த்த மறுநொடி தந்தை தன் மகனிடம்,
"மகனே! நாம் இருவரும் பார்க்க வந்த மனிதரைப்
பார்த்துவிட்டேன்... அதோ இருக்கின்றாரே..., அவர்தான் நாம் தேடிவந்த
மனிதர்" என்றார். "எதை வைத்து, அவர்தான் நாம் தேடி வந்த மனிதர்
என்று சொல்கிறீர்கள்?" என்று மகன் தன் தந்தையைப் பார்த்துக்
கேட்டதற்கு அவர், "மகனே! அவருடைய நடை அவருடைய தந்தையின் நடையைப்
போன்று இருக்கின்றது. அவருடைய முகச் சாயலும்கூட அவருடைய தந்தையின்
முகச் சாயலை ஒத்திருக்கின்றது. அதனால்தான் சொல்கின்றேன். அவர்தான்
நாம் தேடிவந்த மனிதர் என்று" என்றார்.
பின்னர் அவர்கள் இருவரும் பேருந்தில் அமர்ந்திருந்த அந்த மனிதரிடம்
சென்று, "நீங்கள் இன்னாரா?" என்ற கேட்க, அவரும் ஆம் என்று
சொல்ல, அங்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.
ஆம், ஒருவருடைய முகச் சாயலும் அவருடைய நடையும் அவர் இன்னாருடைய
மகன் என்று எப்படி அடையாளப்படுத்துகின்றதோ, அப்படி ஒருவருடைய
வாழ்க்கை அவர் இறைவனுடைய மகனா? இல்லையா/ என்பதை அடையாளபடுத்துவதாக
இருக்கின்றது. இன்றைய முதல் வாசகம் கடவுள் மக்களாக இருக்க அல்லது
ஞானமும் ஆற்றலும்கொண்ட மக்களினமாக இருக்க என்ன செய்யவேண்டும்
என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் நியமங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
மோசே இஸ்ரயேல் மக்களிடம், கடவுளின் நியமங்களையும் முறைமைகளையும்
கடைப்பிடித்து வாழவேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துப்
பேசுகின்றார்.
இஸ்ரேயல் மக்கள் ஏன் இறைவனின் நியமங்களையும் முறைமைகளையும் கடைப்பிடித்து
வாழவேண்டும்? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் லேவியர் நூல்
26:12 ல் இடம்பெறுகின்றது: "நானே உங்கள் கடவுள்! நீங்கள் என்
மக்கள்!." ஆம், இஸ்ரயேல் மக்கள் இறைவனால் தனிப்பட்ட முறையில்
தேர்ந்துகொள்ளப்பட்டதால், அவர்கள் அவருடைய நியமங்களையும்
முறைமைகளையும் கடைப்பிடித்து வாழவேண்டியது கட்டாயமாக இருந்தது.
அப்படி அவர்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும் பட்சத்தில்
அவர்கள் வாக்களிப்பட்ட கானான் நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
என்பது மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
இஸ்ரயேல் மட்டுமல்ல, நாம்கூட இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழ்கின்ற பட்சத்தில், நாமும் இறைவனின் அன்பு மக்களாவோம்; அவர்
தருகின்ற அருளைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
கடவுளின் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றபொழுதுதான் ஞானமும் அறிவாற்றலுமுள்ள
மக்களாக மாறமுடியும்
கடவுளின் நியமங்களையும் அவருடைய முறைமைகளையும் கடைப்பித்தால்
அவர் அளிக்கும் ஆசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப்
பார்த்தோம். இப்பொழுது இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில்
இடம்பெறும் இன்னொரு முக்கியமான கருத்தினைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்போம்.
மோசே இஸ்ரயேல் மக்களிடம், நீங்கள் கடவுளின் நியமங்களையும்
முறைமைகளையும் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, மற்ற இனத்தவர்
உங்களைப் பார்த்துப் பார்த்து. நீங்கள் ஞானமும் அறிவாற்றலும்
கொண்ட மக்களினம் என்று சொல்வார்கள் என்று கூறுகின்றார். கடவுளின்
நியமங்களும் முறைமைகளும் சாதாரணமானவை அல்ல; அவை பாதைக்கு விளக்காக
இருப்பவை (திபா 119: 105) அப்படிப்பட்ட நியமனங்களின் படியும்
முறைமைகளின் படியும் நடக்கின்றபொழுது ஒரு மக்களினம் ஞானமும் அறிவார்ந்த
மக்களினமாகத்தான் இருக்கும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும்
கிடையாது.
மனிதர்களுடைய வழிமுறைகளும் நெறிமுறைகளும்தான் ஒருவருடைய
வாழ்வைச் சீரழிக்கும்; ஆனால், ஆண்டவருடைய வழிமுறைகளும் அவருடைய
நியமங்களும் முறைமைகளும் என்றைக்குமே வாழ்வளிப்பவையாகவே இருக்கும்.
அத்தகைய நியமங்கள் மற்றும் முறைமைகளின் படி நாம் நடக்கின்றபொழுது
எப்பொழுதும் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாகத்தான் இருப்போம்.
சிந்தனை
"உம் ஒழுங்குமுறைகள் வியக்குரியவை. ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து
வருகின்றேன்" (திபா 119: 129) என்பார் திருப்பாடல் ஆசிரியர்.
ஆகையால், நாம் கடவுளின் நியமங்களையும் முறைமைகளையும் கடைப்பிடித்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 17-19
விண்ணரசில் யார் பெரியவர்?
நிகழ்வு
காந்தியடிகள் சுதேச இயக்கத் தொடங்கி, உள்ளாட்டுப் பொருள்களையே
மக்கள் வாங்கவேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருந்த நேரம் அது.
அப்பொழுது சபர்மதி ஆசிரமத்தில் இருந்த காந்தியடிகளின்
துணைவியார் கஸ்தூரிபாய்க்குக் காலில் காயம் ஏற்பட்டு, இரத்தம்
வழிந்தோடத் தொடங்கியது.
உடனே அவர், ஆசிரமத்தில் இருந்த பணிப்பெண்ணிடம், "காலில் கட்டுப்போடுவதற்கு
ஒரு துணியைக் கொண்டு வா" என்றா. அந்தப் பணிப்பெண் ஓடிச் சென்று
"மில்துணியைக்" கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்க மறுத்த கஸ்தூரிபாய்,
"வெளிநாட்டவரின் தயாரிப்பான இந்த மில் துணி வேண்டாம். நம்முடைய
நாட்டவரின் தயாரிப்பான கதர்த் துணியைக் கொண்டு வா" என்றார்.
"அம்மா! கதர்த் துணியை காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால்
உறுத்தும். மில் துணிதான் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டுவதற்கு
ஏற்றது" என்றார் அந்தப் பணிப்பெண்.
பதிலுக்குக் கஸ்தூரி பாய் அந்தப் பணிப்பெண்ணிடம், "காயத்தில்
கதர்த் துணியை வைத்துக் கட்டினால் உறுத்தத்தான் செய்யும்! அதற்காக
காந்தியடிகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறிச் செயல்பட
முடியுமா...?" என்றார். பணிப்பெண்ணோ வேறு எதுவும் பேசாமல், அவர்
கேட்ட கதர்த் துணியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
கதர்த் துணியை காயத்தில் வைத்துக் கட்டுவது உறுத்துவதாக இருந்தாலும்,
காந்தியடிகளின் கொள்கைகளை மீறக்கூடாது என்று செயல்பட்ட, கஸ்தூரிபாய்
நமக்கு கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இறைவார்த்தையும்
ஆண்டவரின் திருச்சட்டமும் கூட கடைப்பிடித்து வாழ்வதற்குச் சற்றுக்
கடினமானவையான இருந்தாலும், அவற்றின் படி நடக்கின்றபொழுது விண்ணரசில்
மிகப்பெரியவர்கள் ஆவோம் என்கிறது இன்றைய இறைவார்த்தை. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தவரா?
இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் இறைப்பணியைச் செய்தபொழுது, பரிசேயர்களும்
அவர்களைச் சார்ந்தவர்களும் அவர்மீது வைத்த குற்றச்சாற்று,
"இயேசு ஓய்வுநாள் சட்டத்தையும் மூதாதையர் மரபையும்
மீறுகின்றார்" என்பதுதான். உண்மையில் இயேசு ஓய்வுநாள் சட்டத்திற்கும்
அல்லது திருச்சட்டத்திற்கும் இறைவாக்குகளுக்கும் புதிய பொருள்
தந்தாரே ஒழிய, அவற்றை மீறவில்லை. அப்படியானால் பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் திருச்சட்ட அறிஞர்கள், இயேசு சட்டத்தையும்
மூதாதையர் மரபையும் மீறிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார்களே...
அவையெல்லாம் என்ன என்று நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம்.
இயேசு மீறியதெல்லாம் அறிவுக்கு ஒவ்வாத பரிசேயச் சட்டங்கள் அன்றி,
ஆண்டவரின் திருச்சட்டங்கள் அல்ல. அதனால்தான் இயேசு இன்றைய நற்செய்தி
வாசகத்தில், "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே
வந்தேன்" என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு திருச்சட்டம் மற்றும்
இறைவாக்கு நூல்களின் மையமான அன்பைப் போதித்ததோடு
மட்டுமல்லாமல், அதைத் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினார்
என்பது உறுதியாகின்றது.
கட்டளைகளைக் கடைபிடித்துக் கற்பிக்கின்றவர் விண்ணரசில்
பெரியவர்
திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுகின்றேன்
என்றும் கடைப்பிடிக்கின்றேன் என்றும் சொன்ன இயேசு, தன்னைப்
பின்பற்றி வருகின்ற சீடர்களும் அவ்வாறு கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழவேண்டும் என்று செய்தியை இயேசு இன்றைய
நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் கூறுகின்றார்.
ஆம், ஒருவர் இயேசுவின் சீடராக இருக்கின்றார் எனில், அவர்
இயேசுவின் போதனையைக் கேட்பதாலோ அல்லது இயேசுவின் போதனையை
மற்றவர்களுக்குப் போதிப்பதாலோ மட்டும் இயேசுவின் சீடராக
இருந்துவிட முடியும். அவர் இயேசுவின் போதனையைக்
கடைப்பிடிக்கவேண்டும். ஒருவேளை அவர் இயேசுவின் போதனையை
மக்களுக்குக் கற்பிக்கின்றார் எனில், அதனைக் கடைப்பிடித்துக்
கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் இயேசுவின் சீடராக
இருக்கமுடியும்; விண்ணரசில் பெரியவராகவும் இருக்கமுடியும்.
இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராகவும் இருக்கமுடியாது;
விண்ணரசில் பெரியவராக அல்ல, சிறியவராகத்தான் இருக்க முடியும்.
இதில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போல், "கடவுளின்
வார்த்தை உயிருள்ளது" (எபி 4: 12). ஆகையால், நாம் ஆண்டவரின்
வார்த்தைகளையும் அவருடைய அன்புக் கட்டளையையும் கடைப்பிடித்து,
விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
"இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை
ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் அதன்படி நடக்கிறவர்களாவும் இருங்கள்"
(யாக் 1: 22) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம்
வாழ்வளிக்கும் ஆண்டவரின் கட்டளைகளை, இறைவார்த்தையைக் கேட்டு,
அதன்படி நடப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|