Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14 மார்ச் 2020  
    தவக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: திபா103:8a) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 15: 18)

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" என்று அவரிடம் சொல்வேன்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32


அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

"ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், "என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, "முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, "இதெல்லாம் என்ன?" என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், "உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்" என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், "பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!" என்றார்.

அதற்குத் தந்தை, "மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மீக்கா 7: 14-15, 18-20

"அவர் பேரன்பு காட்டுவதில் விரும்பமுடையவர்"

நிகழ்வு

கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த புனித ஆசிர்வாதப்பர் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார்.

ஒருநாள் இவர் காட்டு வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது மார்டின் என்ற துறவியைக் கண்டார். அவர் தன்னைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, தன்னையே துன்புறுத்திக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன ஆசிர்வாதப்பர், "உங்களுக்கு என்ன ஆயிற்று...? ஏன் இப்படி உங்களையே நீங்கள் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு துன்புறுத்திக்கொண்டிருக்கின்றீர்கள்..." என்றார். அதற்கு மார்டின் என்ற அந்தத் துறவி, "நான் துறவற வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்; ஆனால், எனக்குள் இருக்கின்ற தீய நாட்டம், என்னை உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றது. நான் பாவியாக இருக்கின்றேன் என்பதால்தான் எனக்கு இப்படியெல்லாம் எண்ணம் ஏற்படுகின்றது. அதனால்தான் நான் என்னைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு என்னை நானே துன்புறுத்திக்கொண்டிருக்கின்றேன்" என்றார்.

"நீங்கள் உங்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, துன்புறுத்துவதால் மட்டும் தீய நாட்டம் உங்களை விட்டுப் போகாது. உங்களைச் சங்கிலியால் அல்ல, இயேசுவின் அன்பால் பிணைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்குத் தீய நாட்டமே வராது. ஏனெனில் இயேசுவின் அன்பு உங்களிடமிருக்கும் பாவத்தை முற்றிலுமாகப் போக்கிவிடும்" என்றார் புனித ஆசிர்வாதப்பர்.

ஆம், நாம் நம்மை ஆண்டவருடைய அன்பில் பிணைத்துக்கொள்கின்றபொழுது, நம்மிடமிருந்து தீய நாட்டமும் பாவமும் முற்றிலுமாக நீங்கிவிடும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. இன்றைய முதல் வாசகத்தில் பேரன்பு மிக்க ஆண்டவரும் இஸ்ரயேல் மக்கள் மன்னிப்பு வேண்டி நிற்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்கள் இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாடுதல்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது, பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின் சொந்த நாட்டிற்குத் திரும்பிய யூதேயா மக்களின் நிலைமையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

இறைவாக்கினர் மீக்கா, இறைவாக்கினர்களான எசாயா மற்றும் ஓபதியாவின் சமகாலத்தவர். இவர் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின் சொந்த நாட்டிற்குத் திரும்பிய மக்களின் நிலைமையை ஆண்டவரிடம் எடுத்துரைக்கின்றார். மக்கள் ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் போனதால்தான் பாபிலோனுக்கு நாடுகடந்தப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கி.மு. 537 ஆம் ஆண்டு தங்களுடைய நாட்டிற்குத் திரும்பி வந்தார்கள். அவர்கள் திரும்பி வந்த நேரத்தில் பிற இனத்து மக்கள் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். இதனால் மக்கள் அனைவரும் இறைவனிடம், தங்களுடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்றும் தங்கள்மீது அவர் இரக்கம் காட்டவேண்டும் என்றும் தங்களை வழிநடந்த வேண்டும் என்றும் மன்றாடுகின்றார்கள்.

இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கி எழுப்பிய இந்த மன்றாட்டுகளுக்கு இறைவன் செவிசாய்த்தாரா? அவர்கள்மீது அவர் இரக்கம் காட்டினாரா? என்பன குறித்து தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்கள்மீது தன் பேரன்பை வெளிப்படுத்தும் இறைவன்

மக்கள் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டபிறகு இறைவன் அவர்களுடைய குற்றங்களை மன்னிப்பவராக இருக்கின்றார். காரணம், இறைவன் தன்னுடைய சினத்தில் நிலைத்திராதவராக, குற்றங்களை மன்னிக்கின்றவராக, எல்லாவற்றுக்கும் மேலாக பேரன்பை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கின்றார். இறைவன் தான் பேரன்பு கொண்டவர் என்பதன் அடையாளமாக இருப்பதுதான் இயேசு இந்த மண்ணுலகிற்கு வந்தது. இதைப் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் அழுகுபடக் கூறுவார், "நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். " (உரோ 5:8).

ஆம். நாம் பாவிகளாக இருக்கும்பொழுதே கடவுள் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, தம் அன்பை எடுத்துக் காட்டினார். அப்படிப்பட்ட பேரன்பு கொண்ட இறைவனிடம் நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரிடம் திரும்பி வந்து, அவரோடு ஒன்றிணைவதே சாலச் சிறந்த ஒரு செயலாகும். நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, பேரன்பு கொண்ட இறைவனோடு ஒன்றிணையத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு" (திபா 108); 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், பேரன்பு மிக்க ஆண்டவரிடம் இஸ்ரயேல் மக்களைப் போன்று நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, திரும்பி வருவோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 15: 1-3, 11-32

மன்னிக்கும் அன்பு இறைவன்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஆயன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். தாயில்லாத பிள்ளை என்பதால், அவன் அவளுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்து வந்தான். மேலும் தான் ஆடு மேய்க்கச் செல்கின்றபொழுது, தன்னோடு தன் மகளையும் கூட்டிக்கொண்டு போனான். ஆடுகளை மேய்க்கின்றபொழுது அவன் எழுப்புகின்ற ஒலி அவனுடைய மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவன் அதை அடிக்கடி எழுப்பி அவளை மகிழ்ச்சிப்படுத்தி வந்தான்.

ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. ஆயனுடைய மகள் வளர்ந்து பெரியவள் ஆனாள். அதனால் உயர் படிப்புப் படிப்பதற்காக தொலைதூரத்திலிருந்த பட்டணத்திற்குச் சென்றாள். பட்டணத்திற்கு சென்ற புதிதில் அவள் அடிக்கடி தன் தந்தைக்கு கடிதம் எழுதி வந்தாள். அவளுடைய தந்தையும் அந்தத் கடிதத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நாள்கள் செல்லச் செல்ல, மகளிடமிருந்து கடிதம் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் தந்தை மிகவும் மனவேதனை அடையத் தொடங்கினார். இதற்கிடையில் பட்டணத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவன் ஆயனிடத்தில், "உங்களுடைய மகள், தவறான நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மிகவும் கெட்டுப்போய்விட்டாள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். இதைக் கேட்டு அவர் இன்னும் வேதனையடைந்தார். இதனால் அவர் பட்டணத்திற்குச் சென்று, தன்னுடைய மகளை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்துவேண்டும் என்று முடிவுசெய்தார்.

மறுநாள் அவர் பட்டணத்தில் தன் மகள் படித்து வந்த கல்லூரிக்குச் சென்றார். அங்கு சென்று அவர் தன் மகளைக் குறித்து விசாரித்துப் பார்த்தபொழுது, அவருடைய மகள் கல்லூரிக்கு வருவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகின்றன செய்தியை அறிந்தார். "இளைஞன் சொன்னது உண்மையாக இருக்குமோ" என்கிற பதைபதைப்பில் அவர் அந்தப் பட்டணம் முழுவதும் தேடித் பார்த்தார். அப்படித் தேடும்பொழுது ஆடு மேய்க்கின்றபொழுது எழுப்புகின்ற தன் மகளுக்குப் பிடித்த ஒலியை எழுப்பிக்கொண்டே தேடினார். பட்டணத்தில் இருந்தவர்களெல்லாம் அவரை ஒருமாதிரிப் பார்த்தார்கள். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தேடினார்.

மாலைவேளையில், பட்டணத்திற்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த பகுதியில், தன் குரலை எழுப்பிக்கொண்டு அவர் தேடும்பொழுது, ஒரு பாழடைந்த கட்டத்திற்குள்ளிருந்து "இது மிகவும் பழக்கப்பட்ட குரல் போன்றல்லவா இருக்கின்றது" என்று ஓர் இளம்பெண் வெளியே வந்தாள். அவள் வேறு யாருயல்ல. அந்த ஆயனுடைய மகள். அவள் தன்னுடைய தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று, அவரைக் கட்டியணைத்துக்கொண்டு, "அப்பா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் மிகப்பெரிய பாவியாகிவிட்டேன்" என்று கண்ணீர் விட்டு அழுதாள். தந்தையா, "மகளே! நீ எனக்குக் கிடைத்ததே போதும்" என்று சொல்லி அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டாள்.

தவற்றை உணந்த மகளை எப்படி அந்தத் தந்தை மன்னித்து ஏற்றுக்கொண்டாரோ, அப்படி நம்முடைய விண்ணகத்தந்தை, நாம் நம்முடைய தவற்றை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருகின்றபொழுது மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார் என்ற செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனம்திருந்தியவர்களை மன்னிக்கும் இறைவன்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "ஊதாரி மைந்தன்" உவமையைச் சொல்கின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்ததும், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் கைகளைத் தட்டிக் கடவுளுக்கு நன்றி சொல்லியதாக ஒரு மரபு உண்டு. காரணம் மக்கள் அதுவரைக்கும் கடவுளை, தவறு செய்கின்றவர்களைத் தண்டிப்பவராக... ஒரு நீதிபதியா இருப்பார் என்றுதான் நினைத்தார்கள். இயேசு, கடவுளை குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவராக, அன்பு காட்டுகின்றவராகச் சொன்னதும்தான் மக்கள் தங்கள் கைகளைத் தட்டி நன்றி சொன்னார்கள்.

ஆம், இந்த உவமையில் வருகின்ற தந்தை தான் உயிரோடு இருக்கின்றபொழுதே, இளைய மகன் சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்து தருமாறு கேட்கின்றபொழுதும், பின் அவன் சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாக வாழ்ந்து இழந்துவிட்டு, தவற்றை உணர்ந்து திருந்தி வருகின்றபொழுதும் அவனை மன்னிப்பவராகவும் அவன்மீதும் அன்பு செலுத்துபவராகவும் இருக்கின்றார். இவ்வாறு அவர் மன்னிப்பின், அன்பின் உருவாய் இருக்கின்றார்.

மன்னிக்க மறுக்கும் மனிதர்கள்

உவமையில் வருகின்ற தந்தை விண்ணகத்தந்தை மன்னிக்கின்றவராக, அன்பின் உருவாக இருக்கின்றபொழுது, மூத்த சகோதரனோ, இளையவனை மன்னிக்க மறுப்பவனாகவும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவனாக இருக்கின்றான். இயேசு, மூத்த சகோதரனை பரிசேயர்களை முன்னிறுத்திப் பேசியிருந்தாலும், அது சிலசமயங்களில் தவறு செய்து, பின் திருந்தி வருகின்றவர்களை மன்னிக்கத் தயங்குகின்ற நம்மைக் குறிப்பதாக இருக்கின்றது. ஆம். ஆண்டவராக கடவுள் நம்மை அளவில்லாத வகையில் மன்னித்து, அன்பு செய்கின்றபொழுது, நாமும் நம்மோடு இருப்பவர்கள் செய்கின்ற தவறுகளை மன்னித்து, அன்பு செய்வதுதான் நல்லது.

சிந்தனை

"நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா!" (மத் 18: 33) என்று இயேசு சொல்லும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் அரசர் சொல்வார். ஆகையால், நாம் விண்ணகத் தந்தையைப் போன்று ஒருவர் மற்றவரை மன்னித்து அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!