|
|
13
மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
2 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ வருகிறான் கனவின் மன்னன்!
வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4,
12-13a, 17b-28a
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை
மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு
அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய்
நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன்
பேச இயலவில்லை.
அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை
மேய்க்கச் சென்றனர். இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; உன் சகோதரர்கள்
செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்
என்றார். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக்
கண்டுபிடித்தார்.
தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர்
வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவர் சகோதரர்கள் ஒருவர்
ஒருவரை நோக்கி, இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக்
கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு
அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள்
என்ன ஆகும் என்று பார்ப்போம் என்றனர்.
ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும்
எண்ணத்தில் அவர்களை நோக்கி, நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்
என்றார். ரூபன் அவர்களை நோக்கி, அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள்.
அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள்.
அவன் மீது கை வைக்காதீர்கள் என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள்
கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம்
சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.
யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த
அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில்
தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.
பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள்
கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின்
வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும்,
வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச்
சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி,
நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு
என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன்
மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம்
சொந்தச் சதையுமாய் இருக்கிறான் என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.
ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில்,
குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது
வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக்
கொண்டு சென்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: திபா 105:5a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
16
நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை
முறித்துவிட்டார்.
17
அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர்
அடிமையாக விற்கப்பட்டார். - பல்லவி
18
அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம்
கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19
காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை
அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. - பல்லவி
20
மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர்
அவருக்கு விடுதலை அளித்தார்;
21
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம்
பொறுப்பாளராக ஏற்படுத்தினார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 3: 16)
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு
கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள்,
நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 21: 33-43, 45-46
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக்
கூறியது: மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர்
ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில்
பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு
தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு
நெடும் பயணம் மேற்கொண்டார்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர
வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத்
தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப்
பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்;
ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட
மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே
அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர்
நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், இவன்தான்
சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்;
அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் என்று தங்களிடையே
பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து,
திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை
என்ன செய்வார்? என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்;
உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும்
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு
விடுவார் என்றார்கள். இயேசு அவர்களிடம், கட்டுவோர் புறக்கணித்த
கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது;
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! என்று நீங்கள் மறைநூலில்
ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி
அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார்
அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது,
தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள்
அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர்
என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தொடக்கநூல் 37: 3-4, 12-13a, 17b-28
யோசேப்பின்மீது பொறாமைகொண்ட அவருடைய சகோதரர்கள்
நிகழ்வு
இத்தாலியில் தோன்றிய மிகப்பெரிய ஓவியரான லியோனார்டோ
டாவின்சியைப் பற்றிச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
இத்தாலியில் இருந்த ஆலோசகர்களில் சிலர் பிளாரன்ஸ் நகரில்
புதிதாகத் தாங்கள் கட்டியிருந்த மண்டபத்திற்குள் ஓவியம் வரைவதற்காக
லியோனார்டோ டாவின்சியிடமிருந்து மாதிரிப் படத்தை வரைந்து தருமாறு
கேட்டார்கள். அவரும் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மாதிரிப்
படத்தை வரைந்து தந்தார்.
இதற்கிடையில் அந்த ஆலோசகர்களில் ஒருவர் மற்றவர்களிடம், எனக்கு
மைக்கேல் ஆஞ்சலோ என்ற ஓர் இளம்வயது ஓவியரைத் தெரியும். மிக அற்புதமாக
ஓவியங்களை வரையக்கூடிய அவரிடமிருந்தும் நாம் மண்டபத்திற்குள்
வரைவதற்கான மாதிரிப்படத்தை கேட்டு வாங்குவோம். யார் வரைந்து தருகின்ற
மாதிரிப்படம் நன்றாக இருக்கின்றதோ, அவரையே மண்டபத்திற்குள் ஓவியத்தை
வரையச் சொல்வோம் என்றார். இதற்கு மற்ற ஆலோசகர்களும் சம்மதம்
தெரிவிக்கவே, இருவரிடமிருந்தும் மாதிரிப் படங்கள் வாங்கப்பட்டன.
முதலில் லியோனார்டோ டாவின்சி வரைந்து தந்த மாதிரிப்படத்தை
வாங்கிப் பார்த்த ஆலோசகர்கள், லியோனார்டோ டாவின்சி என்றால்
லியோனார்டோ டாவின்சிதான். எவ்வளவு அற்புதமாக மாதிரிப்படத்தை வரைந்து
தந்திருக்கின்றார்! என்று அவரை வியந்து பாராட்டினார்கள். பின்னர்
அவர்கள் அனைவரும் மைக்கேல் ஆஞ்சலோ வரைந்து தந்த மாதிரிப்படத்தைப்
பார்த்தார்கள். அதைப் பார்த்ததும் அவர்கள், என்ன ஒரு கைவண்ணம்...!
என்ன ஓர் அழகு...! இவரையே நாம் மண்டபத்திற்குள் ஓவியம் வரையச்
சொல்வோம் என்றார்கள். இறுதியில் ஓர் ஆலோசகர் இப்படிச் சொல்லி
முடித்தார். லியோனார்டோ டாவின்சிக்கு வயதாகின்றது அல்லவா...!
எத்தனை நாள்களுக்குத்தான் நாம் அவரையே நம்பியிருப்பது...!
புதிய ஆள்களுக்கு வாய்ப்பளிப்போம்!
இச்செய்தி லியோனார்டோ டாவின்சியின் செவிகளை எட்டியது. இதன்பிறகு
அவருக்குள் அவரை அறியாமலேயே மைக்கேல் ஆஞ்சலோவின்மீது பொறாமை ஏற்பட்டது.
அது அவரை வருத்தத்திலும் கவலையிலும் ஆழ்த்தி, அவரை உடல்
சோர்ந்து போகச் செய்தது.
ஆம், ஒருவருக்குள் இருக்கும் பொறாமை என்ற தீயகுணம், அவரை
முற்றிலும் சாய்த்துவிடும் என்பதற்கு லியோனார்டோ டாவின்சி ஒரு
நல்ல எடுத்துக்காட்டு. இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபின் புதல்வர்களில்
ஒருவரான யோசேப்பை, அவருடைய சகோதரர்கள் அவர்மீது கொண்ட
பொறாமையினால் கொல்ல முயல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இதற்குப்
பின்பு என்ன நடந்தது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
பொறாமையினால் தன் சகோதரரையும் கொல்லத் துணிதல்
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
யோசேப்பை அவருடைய மற்ற சகோதர்கள் கொல்ல முயல்வதைக் குறித்து
வாசிக்கின்றோம். இதற்கென்ன காரணம் என்று சிந்தித்துப்
பார்த்தோமெனில், இரண்டு காரணங்கள் நமக்கு முன்னால் வரும். ஒன்று,
யோசேப்பின் தந்தையான யாக்கோபு, யோசேப்பை மற்ற எல்லாரையும் விட
மிகுதியாக அன்பு செய்தது. இரண்டு, யோசேப்பு தன் கனவில் கதிரவனும்
நிலவும் பதினொரு விண்மீன்களும் அவரை வணங்குவதாச் சொன்னது (தொநூ
37: 9). இந்த இரண்டு காரணங்கள்தான் யோசேப்பின் சகோதரர்கள் அவரைக்
கொல்ல முயன்றதற்கு அடிப்படையாக அமைகின்றன. ஆனால், அவர்களில்
மூத்தவனான ரூபன் யோசேப்பைக் கொல்லவேண்டாம் என்றதாலும் யூதா அவரை
மிதியானிடம் விற்றுவிடுவோம் என்று சொன்னதாலும், யோசேப்பு உயிர்
தப்புகின்றார்; மிதியானியரிடம் விலைக்கு விற்கப்படுகின்றார்.
தீயதையும் நல்லதாக்கிய கடவுள்
திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார்: கட்டுவோர் புறக்கணித்த
கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. (திபா 118: 22) ஆம்,
தன்னுடைய சகோதரர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட யோசேப்பு,
பின்னாளில் பார்வோனின் அரசபையில் மிக உயர்ந்த நிலையை அடைந்து,
எந்த சகோதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டாரோ, அவர்களுக்கே பஞ்ச
காலத்தில் உணவளிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஆம், பொறாமையோடு செயல்படும்
மற்றவர்களால் நாம் புறக்கணிக்கப்படலாம்; ஆனால், கடவுள்
யோசேப்புக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்ததைப் போன்று, நமக்கும்
ஒரு திட்டத்தை வைத்திருப்பார். ஆகையால், நாம் கடவுளின் கைகளில்
நம்மையே ஒப்புக்கொடுத்து, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து
நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக
வேண்டுமென்று துடிக்கிறார். ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர்
அறியார் (நீமொ 28:22) என்கிறது நீதிமொழி நூல். ஆகையால், நம்மை
அழிவுக்கு இட்டுச் செல்லும் பொறாமை என்ற தீய குணத்தை நாம் நம்முடைய
உள்ளத்திலிருந்து அகற்றி, அடுத்தவர்களைக் குறித்து உயர்ந்த எண்ணத்தோடு
வாழ்ந்து, உன்னதரின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 21: 33-43, 45-46
பலன் தருவோம்; பயன்பெறுவோம்
நிகழ்வு
இந்தி மொழியில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்த். ஒருமுறை
இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்படியிருந்தும் இவர்
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு இவருடைய
மனைவி இவரிடம், உங்களுக்குத்தான் உடல்நிலை சரியில்லையே...!
பிறகு எதற்கு இப்படித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்...?
கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளலாமே...! என்றார்.
இதற்கு இவர், ஒரு விளக்கின் கடமை எல்லாருக்கும் ஒளிகொடுப்பது.
அந்த விளக்கு தன்னிடத்தில் எண்ணெயும் திரியும் இருக்கும் வரைக்கும்
ஒளி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதுபோன்றுதான் நானும்.
நான் என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரை நல்ல கருத்துகளை இந்தச்
சமூகத்திற்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் என்றார்.
ஆம். ஒரு விளக்கின் கடமை ஒளிகொடுப்பது... ஓர் எழுத்தாளின் கடமை
எழுதிக்கொண்டிருப்பது. இதுபோன்று இந்த மண்ணுலகத்தில் பிறந்த ஒவ்வொருவரின்
கடமை பயனுள்ள வாழ்க்கை வாழ்வது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்
ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப்
பேசுகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமை நமக்கு என்ன
செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
பலன்தராமல் போன இஸ்ரயேல் மக்கள்
இயேசு சொல்லும் கொடிய குத்தகைக்காரர் உவமையில் பல கதாப்பாத்திரங்கள்
இடம்பெறுகின்றன. இதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்
யாரைக் குறிப்பிடுகின்றது என்பதை முதலில் தெரிந்துகொள்வது நல்லது.
உவமையில் வருகின்ற நிலக்கிழார் கடவுள்; திராட்சைத் தோட்டமோ
இஸ்ரயேல் மக்கள்; கொடிய குத்தகைக்காரர்கள் இஸ்ரயேலில் இருந்த
சமயத் தலைவர்கள்; நிலக்கிழார் அனுப்பி வைக்கும் பணியாளர்கள் -
இறைவாக்கினர்கள் மற்றும் குருக்கள்; நிலக்கிழாரின் மகன் இயேசு;
வேறு தோட்டத் தொழிலளர்கள் பிற இனத்தார். இவைதான் இயேசு
சொல்லும் உவமையில் இடம்பெறுகின்ற கதாப்பாத்திரங்கள் ஆகும்.
ஒரு நிலக்கிழாரிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு
எடுத்திருப்பவர் அறுவடையின்போது, அதற்குரிய தொகையைக்
கொடுக்கவேண்டும். அதுதான் முறை. இங்கு நிலக்கிழார் தன்னுடைய
திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்களிடம்
குத்தகைப் பணத்தை வாங்கிவருமாறு பணியாளர்களை அனுப்பி
வைக்கின்றார். அவ்வாறு அனுப்பப்பட்ட சிலரை குத்தகைக்காரர்கள்
நையப்புடைத்தார்கள் (எரே 26: 7-11, 38: 1-28); சிலரைக் கல்லால்
எறிகிறார்கள் (2 குறி 24: 21). சிலரைக் கொலை செய்கிறார்கள்
(மத் 14: 1-12). பணியாளர்களைத் தான் இப்படிச்
செய்துவிட்டார்கள்... மகனை அவர்களிடம் அனுப்பிப் பார்ப்போம்
என்று நிலக்கிழார் அவர்களிடம் தன் மகனை அனுப்பி
வைக்கின்றபொழுது, இவன்தான் சொத்துக்குரியவன்; இவைக்
கொன்றுவிட்டால் சொத்து நமக்குரியதாகிவிடும் என்று அவரை
அவர்கள் வெளியே தள்ளிக் போடுகின்றார்கள். இதனால்
சினம்கொள்கின்ற நிலக்கிழார் அந்தக் கொடிய குத்தகைக்காரர்களை
அகற்றிவிட்டு, அவர்களிடமிருந்து திராட்சைத் தோட்டத்தைப்
பிடுங்கி, உரிய பலன்கொடுக்கும் வோறொரு மக்களினத்திடத்தில்
தருகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட விதமாய்த்
தேர்ந்துதெடுத்து, அவர்கள் வளமான வாழ்க்கை வாழ எவ்வளவோ
நன்மைகளைச் செய்தார். அப்படியிருந்தும் அவர்கள் உரிய
பலன்தராமல் போனதால், இறையாட்சி அவர்களிடமிருந்து
பறிக்கப்பட்டு, அதற்குரிய பலன் கொடுக்கும் மக்களிடம்
கொடுக்கப்பட்டது.
பிற இனத்தார் இறையாட்சிக்கு உட்படுதல்
உவமையின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய, உரிய காலத்தில்
தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத்
தொழிளார்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு
விடுவார் என்ற வார்த்தைகள், யோவான் நற்செய்தியில் வரும்
கனிகொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார் (யோவா
15: 2) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துபவனாக
இருக்கின்றன.
ஆம், மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கனிதரக்கூடிய வாழ்க்கை
வாழவேண்டும். அதுதான் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கும்.
யூதர்கள் கனிதரும் வாழ்க்கை வாழவில்லை. அதனால்தான்
அவர்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்பட்டு, பிற இனத்து மக்கள்
அதில் உட்படும் நிலை ஏற்பட்டது. நாம் கனிதரும் வாழ்க்கை வாழ
அழைக்கப்பட்டிருக்கின்றோம். அப்படி நாம் வாழாத பட்சத்தில்,
நம்மிடமிருந்தும் வாழ்வு பறிக்கப்படும் என்பது உறுதி.
சிந்தனை
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்;
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி
வழங்குங்கள்; கைம்பெண்களுகாக வழக்காடுங்கள் (எசா 1: 17)
என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் யாருக்கும்
பயனில்லாத வாழ்க்கை வாழ்வதை விடுத்து, பிறருக்குப் பயன்தரும்
அல்லது கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|