Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   11 மார்ச் 2020  
    தவக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் "வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்" என்றனர்.

ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 31: 4-5. 13. 14-15 (பல்லவி: 16b) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
4அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். - பல்லவி

13பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். - பல்லவி

14ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; "நீரே என் கடவுள்" என்று சொன்னேன்.
15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 8: 12)

"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

அக்காலத்தில்

இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" என்று அவர்களிடம் கூறினார்.

பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். "உமக்கு என்ன வேண்டும்?" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார். அதற்கு இயேசு, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, "ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்" என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எரேமியா 18: 18-20

"ஆண்டவரே, என்னைக் கவனியும்"

நிகழ்வு

ஒருமுறை மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களை முன்னேறிப் போகச் சொல்லிவிட்டு, நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினான். நெப்போலியனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து முன்னேறிச் சென்ற படைவீரர்கள், ஓரிடத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

அப்பொழுது படைவீரர்களில் ஒருசிலர், "இப்பிரச்சனையை நம்மால் சமாளிக்க முடியாது. இதற்கான தீர்வினை நாம் நம் தலைவரிடம்தான் கேட்டாகவேண்டும். வாருங்கள் நாம் அவரிடமே கேட்போம்" என்றார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த வேறுசில படைவீரர்கள், "தலைவர் தூங்கிக்கொண்டிருப்பார். தூக்கத்திலிருக்கின்ற அவரை நாம் எழுப்பிவிட்டால், அது நமக்குப் பெரிய வினையாய் முடியும்" என்றார்கள். "நமக்கு வினையாக முடிந்தாலும் பரவாயில்லை. இந்தப் பிரச்சனைக்கான தீர்வினை நாம் நம் தலைவரிடம் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் வாருங்கள் நாம் அவரிடமே கேட்போம்" என்று முன்னாள் பேசிய படைவீரர்கள் சொல்ல, எல்லாரும் நெப்போலியன் தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்கள்.

அவர்கள் அனைவரும் நெப்போலியன் தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றுபொழுது, அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நெப்போலியன் தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த ஒரு மேசையில் ஒரு தாள் இருந்தது. அதில் எந்தெந்தப் பிரச்னையை எப்படி எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் படைவீரர்கள், "நம்முடைய தலைவர் நம்மைச் சும்மா போகச் சொல்லவில்லை. பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் சொல்லிவிட்டுத்தான் போகச் சொல்லியிருக்கின்றார்" என்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.

கடவுளும்கூட, ஒருவரைத் தன்னுடைய பணிக்கென அழைத்திருக்கின்றார் என்றால், அவரை அப்படியே விட்டுவிடுவதில்லை. மாறாக, அவருக்குத் தன்னுடைய ஆற்றலையும் வல்லமையையும் உடனிருப்பதையும் தந்து வலுவூட்டுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், மக்கள் தனக்கெதிராக மக்கள் சூழ்ச்சி செய்கின்றார்கள் என்று எரேமியா இறைவாக்கினர் முறையிடுகின்றார். இதற்கு ஆண்டவரின் மறுமொழி என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராகச் சூழ்ச்சி

இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களிடம், "உங்கள் தீய வழியிலிருந்து திரும்புகள். உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்" (எரே 18: 11) என்று சொல்லிவந்தார். மக்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு, தங்களுடைய தீய வழியை விட்டு விலகி, நல்வழியில் நடந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொன்ன எரேமியாவைக் கொல்லத் துணிந்தார்கள். இதனால் அவர் ஆண்டவரிடம், "ஆண்டவரே என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும்" என்று முறையிடுகின்றார்.

ஆண்டவர் இயேசுவுக்கு எப்படி பரிசேயர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருந்தனவோ (லூக் 23: 1-7) அப்படி இறைவாக்கினர் எரேமியாவிற்கும் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமாய் இருந்தன (எரே 11: 18-23, 12: 1-5, 15: 10-18, 17: 14-18, 20: 7-18). இத்தகைய சூழ்நிலையில் இறைவாக்கினர் எரேமியாவிற்கு வந்த பிரச்சனைகளும் அவற்றுக்கு ஆண்டவரின் மறுமொழியையும் நமக்கு செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இவ்வுலகில் துன்பம் இருந்தாலும், ஆண்டவரின் துணை எப்பொழுதும் உண்டு

யோவான் நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுவார்: "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவோடு இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டு விட்டேன்." (யோவா 16: 33). இவ்வுலகப் போக்கின் படி வாழாமல், இறைவழியில் நடந்தால், இயேசு சொல்வதுபோல துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் இறையடியார்களுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும். இறைவாக்கினர் எரேமியா தன்னுடைய வாழ்வில் பல்வேறு துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தாலும், "உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்" (எரே 1: 19) என்று ஆண்டவர் அவருக்குத் தொடக்கத்தில் சொன்ன வார்த்தைகள்தான் நம்பிக்கையூட்டுவனவாக இருந்திருக்கும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

இன்றைக்கும்கூட நாம் இறைவழியில் நடக்கின்றபொழுதும் இறைப்பணியைச் செய்கின்றபொழுதும் எதிர்ப்புகளும் துன்பங்களும் வரத்தான் செய்யும். இத்தகைய வேளைகளில் நாம், நம்மை விடுவிக்க இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்வது மிகவும் நல்லது.

சிந்தனை

"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்" (மத் 28: 20) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துகின்ற இறைவன் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, வாழ்வில் வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
மத்தேயு 20: 17-28

பதவிக்கு ஆசைப்பட்ட சீடர்கள்

நிகழ்வு


திருக்குறளைப் பரப்பும் பெரும்பணியைச் செய்துவந்த அவினாசிலிங்கமும் காந்தியத்தை முழுமூச்சாகக் கடைப்பிடித்து வந்த சுப்பராமனும் தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்ட வேதரத்தினமும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த மூன்று நண்பர்களில் ஒருவரான சுப்பராமனுக்கு அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமியிடமிருந்து தமது அரசபையில் கல்வி மற்றும் சுகாதாரப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. உடனே அவர், "இந்தப் பொறுப்பிற்கு நான் பொருத்தமானவர் கிடையாது; என்னை விட என் நண்பர் அவினாசிலிங்கமே பொருத்தமானவர்" என்று அவரைக் கைகாட்டினார்.

அவினாசிலிங்கமோ, "என்னை விட வேதரத்தினம்தான் மிகவும் பொருத்தமானவர்" என்று அவரைச் சுட்டிக்காட்டினர். அவர் சுப்பராமனைச் சுட்டிக்காட்டினர். இப்படி இவர்கள் மூவரும் தனக்குப் பதவி வேண்டாம்... அடுத்தவருக்குக் கொடுங்கள் என்று பேசிக்கொண்தைக் கேட்ட, முதல்வர் ஓமந்தூர் இராமசாமி மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு அவர், பதவியை ஒருவருக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பதால், அந்தப் பதவியை அவினாசிலிங்கத்திற்குப் கொடுத்தார்.

பதவிக்கு ஆசைப்படாத இந்த மூன்று நண்பர்களும் நமது கவனத்திற்கு உரியவர்களாக இருக்கின்றார். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் உயர் பதிவிகளுக்கு ஆசைப்பட்டு வாக்குவாதம் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம் பாடுகளைக் குறித்து அறிவித்த இயேசு

ஆண்டவர் இயேசு தன் சீடர்களோடு எருசலேமிற்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அவர்களிடம் அவர் தன் பாடுகளைக் குறித்து எடுத்துக்கூறுகின்றார். "இயேசு தன் பாடுகளைக் குறித்துக் கூறுகின்றாரே...! அது குறித்து ஏதாவது கேட்கலாமே...!" என்று சீடர்கள் நினைக்கவில்லை. மாறாக, தங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசு மறுவுலக வாழ்க்கையைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடர்களோ இவ்வுலக வாழ்க்கையைக் குறித்தும் உயர்பதவிகளை வகிப்பதைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். "அவர்களுடைய பிரச்சனை அவர்களுக்கு" என்று வேடிக்கையாகச் சொல்வார்களே! அதுதான் இயேசுவின் சீடர்களைப் பொருத்தமட்டில் நடக்கின்றது.

பதவிக்கு ஆசைப்பட்ட இயேசுவின் சீடர்கள்

இயேசு தன் பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில். யோவான் மற்றும் யாக்கோபின் தாய் இயேசுவிடம், நீர் ஆட்சிபுரியும்பொழுது என் மக்களாகிய இவர்களுள் ஒருவன் உம்முடைய வலப்புறமும் இன்னொருவன் உம்முடைய இடப்புறமும் அமரச் செய்யும் என்று ஒரு வேண்டுகோளை வைக்கின்றார். இயேசு அவரிடத்தில் என்ன மறுமொழி கூறுகினார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன், அவர் யார் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

யோவான் மற்றும் யாக்கோபின் தாயார், இயேசுவைத் தொடக்கத்திலிருந்து, அவர் கல்வாரி மலையில் சிலுவையில் அறியப்பட்டதுவரை அவரைப் பின்பற்றி வந்தவர் (மத் 27: 56). மேலும் இவர் இயேசுவின் தாய் மரியாவின் சகோதரியாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இப்படியிருக்கையில் இவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அரசராய் வருவார்... அப்பொழுது அவருடைய அரசபையில் தங்களுடைய இரண்டு மகன்களுக்கும் வலப்புறமும் இடப்புறமும் இடம்வேண்டும் என்று கேட்கின்றார். இவர் இவ்வாறு கேட்டதும் இயேசு, நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா...? என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது என்னுடைய செயல் அல்ல... என்று கூறுகின்றார்.

"நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று இயேசு அவர்களைப் பார்த்துக் கேட்டது, அவர் அடையப்போகும் பாடுகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. இயேசு அடைந்த துன்பத்தை பின்னாளில் யாக்கோபும் (திப 12:2) யோவானும் (திவெ 1:9) அடைந்தார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருள்வதுதான் இறைவனின் கையில் இருக்கின்றது இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

அதிகாரம் என்பது அடக்கி ஆள அல்ல, அன்புப்பணி செய்ய

யோவான் மற்றும் யாக்கோபின் தாயார் இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் வைக்க, அதற்கு இயேசு தக்க மறுமொழிகூறியதைத் தொடர்ந்து, மற்ற சீடர்கள் அந்த இரண்டு சகோதர்களுக்கு எதிராகச் சினம் கொள்கின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் தொண்டராக இருக்கட்டும்; முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர் பணியாளராக இருக்கட்டும் என்று கூறுகின்றார். இயேசுவைப் பொறுத்தளவில் அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கு அல்ல, அன்புப் பணி செய்யவே. அதைத்தான் தன் வாழ்வின் மூலம் இயேசு வெளிப்படுத்தினார். ஆகவே, நாம் இயேசு வாழ்ந்து காட்டிய முன்மாதிரியைப் பின்பற்றி, அதிகாரத்தை அன்பு செலுத்தப் பயன்படுத்துவோம்.

சிந்தனை

"கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்" (எபே 5: 21) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அடுத்தவர்மீது அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், ஒருவருக்கொருவர் பணிந்திருப்போம். ஒருவர் மற்றவருக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!