|
|
09
மார்ச் 2020 |
|
|
தவக்காலம்
2 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-10
என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது
அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர்
செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு
காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்;
பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும்
நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள்,
தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய
உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை.
என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது
அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும்,
இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச்
செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும்
உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.
ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும்
தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப்
பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும்
மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள்
கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம்
திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 79: 8,9. 11. 13 (பல்லவி: திபா 103:10a)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 79: 8,9. 11. 13 (பல்லவி: திபா 103:10a)
பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.
8எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம்
எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.
- பல்லவி
9எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு
எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை
விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி
11சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத்
தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. - பல்லவி
13அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்
என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை
எடுத்துரைப்போம். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (யோவா 6: 63b, 68b)
ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக்
கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய்
இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர்
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும்
தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம்
செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக
மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச்
சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும்
அளக்கப்படும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தானியேல் 9: 4b-11a
"நாங்கள் பாவம் செய்தோம்; வழிதவறி நடந்தோம்"
நிகழ்வு
மிகப் பழமையான நகரம் ட்ராய். இந்நகருகென்று ஒரு சிறப்பு உண்டு.
அது என்னவெனில், இந்த நகருக்குள் நுழையவோ, நகரை விட்டு வெளியே
செல்லவோ ஒரே ஒரு வழி மட்டும்தான் உண்டு. வேறு வழியில் செல்லவோ,
நுழையவோ முடியவே முடியாது.
பாவத்தில் சிக்குண்டு கிடக்கின்ற நாம் வாழ்வடைவதற்கும் ஒரே ஒரு
வழிதான் இருக்கின்றது. அதுதான் "மனமாற்றம்" என்ற வழியாகும். ஆண்டவர்
இயேசு கல்வாரி மலையில் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி, நமக்கெல்லாம்
மீட்பை வழங்கினார். அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டு, நம்முடைய
பாவங்களை அறிக்கையிட்டு, மனமாறி அவருடைய வழியில் நடந்தால், அவர்தரும்
வாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
இறைவாக்கினர் தானியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம், நாம் நம்முடைய குற்றங்களை இறைவனின் அறிக்கையிட்டு, மனம்மாறிப்
புதிய வாழ்க்கையை வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பாவத்தை அறிக்கையிடுதல்
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில்,
இஸ்ரயேல் மக்கள் சார்பாக இறைவாக்கினர் தானியேல் பாவ அறிக்கையை
சமர்பிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட விதமாய்த்
தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பாலும் தேனும் பொழியக்கூடிய
கானான் நாட்டை வழங்கினார். மட்டுமல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்த
பல்வேறு இறைவாக்கினர்களையும் இறையடியார்களையும் அவர்கள் நடுவில்
அனுப்பி வைத்தார்; ஆனால், இஸ்ரயேல் மக்களோ உண்மைக் கடவுளை மறந்து,
வேற்று தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். மேலும் அவர்கள் நடுவில்
கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட இறைவாக்கினர்களைத் தங்களுடைய மனம்போல்
நடத்தினார்கள். இதனாலேயே இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.
இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த இத்தகைய தவறுகளை எல்லாம்
அவர் முன் எடுத்துவைக்கும் இறைவாக்கினர் தானியேல் மன்னிப்புக்
கேட்டு நிற்கின்றார். இறைவன் அவர்களுடைய தவறுகளை மன்னித்தாரா?
அல்லது அவர் என்ன செய்தார்? என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப்
பார்ப்போம்.
இரக்கமும் மன்னிப்பும் உள்ள இறைவன்
இறைவாக்கினர் தானியேல், இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுகளை இறைவன்
முன்பாக எடுத்து வைத்து, மன்னிப்புக் கேட்டபொழுது, அவர் மன்னித்தார்
என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் தானியேலே இன்றைய முதல் வாசகத்தில்
குறிப்பிடுவதுபோல இறைவன் இரக்கமும் மன்னிப்பு உள்ளவராக இருக்கின்றார்.
ஒருவேளை இறைவன் நாம் செய்த குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பார்
எனில், யாரும் நிலைத்துநிற்க முடியாது (திபா 130: 3). இது இஸ்ரயேல்
மக்களுக்கும் பொருந்தும். இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பதால்தான்
நம்மால் நிலைத்து நிற்க முடிகின்றது.
இங்கு நாம் ஒரு செய்தியை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது
என்னவெனில், இறைவனிடமிருந்து நாம் மன்னிப்பையும் அதன் வழியாக
வாழ்வையும் பெறவேண்டுமெனில், செய்த குற்றங்களை உணர்ந்து, பாவ
அறிக்கை செய்வது கட்டாயமாக இருக்கின்றது. இறைவாக்கினர்
தானியேல் இஸ்ரயேல் மக்கள் செய்த குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டார்.
அதனால் ஆண்டவர் அவர்களுடைய குற்றங்களை மன்னித்து, ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறெனில், நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவற்றை இறைவனிடம்
அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டிநிற்கின்றபொழுது, அவர் நம்முடைய
குற்றங்களை மன்னிப்பார் என்பது உறுதி.
கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்மீது பேரன்பு காட்டிவரும் இறைவன்
நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவற்றை இறைவனிடம் அறிக்கையிட்டு
மன்னிப்புக் கேட்கின்றபொழுது, அவர் நம்முடைய குற்றங்களை எல்லாம்
மன்னிப்பார் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது
நாம் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற இன்னொரு முக்கியமான
செய்தியையும் சிந்தித்துப் பார்ப்போம். அது என்னவெனில், இறைவன்
தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்குத் தன்னுடைய பேரன்பையைக்
காட்டி வருகின்றார் என்பதாகும்.
செய்த குற்றத்தை உணர்ந்து, அதை ஆண்டவரிடம் அறிக்கையிடுவவதால்
மட்டும் ஆண்டவரிடமிருந்து அருளையும் இரக்கத்தையும் பேரன்பையும்
பெற்றுவிட முடியாது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் அவருடைய பேரன்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, நாம் செய்த குற்றங்களை உணர்ந்து, அவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு,
அவருடைய மன்னிப்பைப் பெறுவோம். தொடர்ந்து அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடித்து அவருடைய அன்புக்குரிய மக்களாவோம்.
சிந்தனை
"என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (விப 20:6) என்பார்
ஆண்டவர். ஆகையால், நாம் செய்த குற்றத்தை உணர்ந்து, அவற்றை அவரிடம்
அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்போம். அதோடு அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா: 36-38
"...நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்"
நிகழ்வு
திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்வையே புரட்டிப் போட்ட நிகழ்வு இது.
பிரான்சிஸிக்கு பதினேழு நடக்கும்பொழுது, அவர் படித்து வந்த பள்ளியிலிருந்து
பியுனோஸ் ஐரெஸ் என்ற இடத்திக்கு இன்பச் சுற்றுலா செல்வதாகத்
திட்டமிட்டிருந்தார்கள். பிரான்சிஸும் அதில் கலந்துகொள்வதாக இருந்தார்.
இதற்கிடையில் பிரான்சிஸ் ஒரு மாணவியை உயிருக்குயிராகக் காதலித்து
வந்தார். சுற்றுலாவின்போது, அவர் தனது காதலை அந்த மாணவியிடம்
சொல்லலாம் என்று முடிவு செய்திருந்தார்.
சுற்றுலா செல்வதற்கான நாளும் வந்தது. பிரான்சிஸ்
சுற்றுலாவிற்கு வேண்டிய பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, பள்ளியை
நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். இடையில் ஒரு திருக்கோயில் இருந்தது.
அதில் சிறிதுநேரம் இறைவனிடம் வேண்டிவிட்டுச் சென்றால் நன்றாக
இருக்கும் என்று பிரான்சிஸிற்குத் தோன்றவே, அவர் அந்தத்
திருக்கோயிலுக்குள் சென்றார். அவர் உள்ளே சென்றநேரம், ஓர் அருள்பணியாளர்
இருக்கக்கண்டார். அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் செய்தால் நன்றாக
இருக்கும் என்று பிரான்சிஸிற்குத் தோன்றவே, அவர் அந்த அருள்பணியாளரிடம்
ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொண்டார்..
பிரான்சிஸ் மேற்கொண்ட இந்த ஒப்புரவு அருளடையாளம், அவருடைய உள்ளத்தில்
மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆம். இதற்குப் பின்பு
அவர் தன் நண்பர்களோடு சுற்றுலாக செல்லும் எண்ணத்தைக்
கைவிட்டார்; கூடவே, தன் காதலியிடம் காதலைச் சொல்வதையும்
கைவிட்டார். மாறாக, சேசுசபையில் சேர்ந்து குருவாகி, ஆயராகி,
அதன்பின் கர்தினாலாகி, திருத்தந்தையாகி ஆண்டவர் தன்மீது
இரக்கம் காட்டியதை நினைவு கூரும் வகையில், "ஆண்டவர் என்மீது
இரக்கம் காட்டினார்; நானும் மற்றவர்களுக்கு இரக்கம்
காட்டுவதற்கான வழியைத் தேர்ந்தெடுத்தேன்" என்பதைக் குறிக்கும்
வகையில் ஒரு விருது வாக்கை எடுத்துக் கொண்டார்.
ஆம், ஆண்டவர் பிரான்சிஸின்மீது இரக்கம்கொண்டார். அதனால்தான்
யாரோ ஒரு பெண்ணை மணமுடிப்பதற்குப் பதிலாக, குருவாகித்
திருத்தந்தையானார். இன்றைய நற்செய்தி வாசகம், நாம் நம்
விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்
என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இரக்கத்தோடு இருப்போர் அடுத்தவரைத் தீர்ப்பிடுவதில்லை
லூக்கா நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகம் இரக்கம் மன்னிப்பு, தீர்ப்பிடுதல் கூடாது, கொடுத்தல்
போன்று பல கருத்துகளின் தொகுப்பாக இருக்கின்றது. ஆனாலும்
இவற்றையெல்லாம் இரக்கம் என்ற நூலானது இணைப்பதாக இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து, விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய்
இருக்கவேண்டும் என்று கூறுகின்றார் என்றால், அதற்கு நாம்
அடுத்தவரைத் தீர்ப்பிடாமல், அடுத்தவர் செய்யக்கூடிய தவறுகளை
மன்னிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இன்றைக்குப்
பெரும்பாலானவர்களிடத்தில் இருக்கின்ற மிகப்பெரிய குறை,
அடுத்தவரைக் குறித்துத் தவறாகத் தீர்ப்பிடுவதுதான்.
ஒருவரிடத்தில் உண்மையிலேயே இரக்கமும் மன்னிக்கின்ற குணமும்
இருந்தால், அவர் அடுத்தவரைக் குறித்துத்
தீர்ப்பிட்டுக்கொண்டிருக்கமாட்டார். மாறாக, ஆண்டவர் இயேசுவைப்
போன்று விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிடம்
இரக்கம்காட்டியதுபோல, இரக்ககம் காட்டுபவராகத்தான் இருப்பார்.
இரக்கத்தோடு இருப்பவர் தேவையில் உள்ளவருக்குக் கொடுப்பார்
அடுத்தவராக ஒருவர் விண்ணகத்தந்தையைப் போன்று இரக்கமுடையவராக
இருக்கவேண்டும் என்றால், அதற்கு அவர் தன்னிடத்தில் இருப்பதை,
ஏன் தன்னையே பிறருக்குக் கொடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும்.
இன்றைக்குப் பலருக்குக் கொடுக்கக்கூடிய மனமே கிடையாது.
எல்லாவற்றையும் வாங்கி வாங்கி தன்னையும் தன்னுடைய வீட்டையும்
நிறைத்துக்கொள்ளக்கூடியவர்கள், மற்றவர்களுகுக் கொடுக்கவேண்டும்
என்றால், மிகவும் யோசிக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள்
"பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை" (திப 20: 35) என்ற
இறைவார்த்தையைத் தங்களுடைய உள்ளத்தில் பதிய வைத்து வாழ்வது
நல்லது.
ஆண்டவர் இயேசு இரக்கமே வடிவாய் இருந்தார். அதனால்தான் அவர்
இந்த மானுட மீட்புக்காகத் தந்தையே கொடுத்தார். நாம்
இரக்கமுடையவராய் இருக்கின்றோம் என்றால், நம்மிடம் இருப்பதைக்
கொடுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். "கொடுக்காமல் அன்பு
செய்யலாம்; ஆனால் அன்பு செய்யாமல் கொடுக்க முடியாது" என்று
சொல்வர். இதுவே இரக்கத்திற்கும் பொருந்தும். ஆம், கொடுக்காமல்
இரக்கம் கொள்ளலாம்; ஆனால், இரக்கமில்லாமல் கொடுக்கவே முடியாது.
ஆகையால், நாம் நம்முடைய விண்ணகத் தந்தையைப் போன்று
இரக்கமுள்ளவர்களாக இருக்க, நம்மிடம் இருப்பதை, ஏன் நம்மையே
கொடுக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்.
இரக்கமே தீர்ப்பை வெல்லும்" (யாக் 2: 13) என்பார் புனித
யாக்கோபு. ஆகையால், நாம் தீர்ப்பிட்டுக்கொண்டும் கொடுக்காமலும்
இருந்து இரக்கமற்றவர்களாய் இல்லாமல், விண்ணகத் தந்தையைப்
போன்று இரக்கமுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|